தொல்காப்பியம் முதல் இலக்கண விளக்கம் வரையுள்ள நூல்களிற் காணப்படும் இலக்கண நுணுக்கங்கள் சிலவற்றைத் தொகுத்துணர்த்தும் நூலாகும். இலக்கண நுணுக்கங்களைத் தொகுத்துணர்த்துவதால் இலக்கணக் கொத்து எனப்பெயர் சூட்டியதாக இதன் ஆசிரியர் சாமிநாத தேசிகரே உரைத்துள்ளார். இந்நூல் எழுந்த காலம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். இதுவரை இலக்கண ஆய்வு நூல் ஒன்று கூடத் தோன்றவில்லை. இக்குறையைப் போக்க எழுந்த முதல் ஆய்வுநூல் இது; வடமொழியும் தென்மொழியுமாகிய இருமொழியிலக்கண ஒப்பீட்டு நூலாகும். இதன் குறிக்கோல் தென்றமிழ் நாட்டில் வழங்கும் ஆரியமும் தமிழுமாகிய இரு மொழிகளுக்கும் இலக்கண வகையிற் சில வேறுபாடுகள் இருப்பினும் குறியீடுகள், சொல் இலக்கணம், பாகுபாடுகள், தொகையும் தொடருமாகிய மொழிநடை, பொருளமைதி முதலான பலவகையில் இம்மொழிகள் ஒரு நோக்குடையனவே என்பதையும், பெயரளவில் காணப்படும் வேறுபாடு மொழி வேறுபாட்டால் அமைந்தனவே என்பதையும் சுட்டிக்காட்டி, ‘இலக்கணம் ஒன்றே’ என்பதை நிறுவுகிறது. நூல் எழுந்த காலம், அதன் மொழியமைப்பு, கருதுகோள் ஆகிய இவற்றைக் கவனியாமலே உரையாசிரியர்கள் தத்தம் காலச்சூழலுக்கும் கருத்து வளர்ச்சிக்கும் ஏற்ப உரை எழுதினர். இலக்கிய ஆட்சிகளை எடுத்துக்காட்டினார். அதனால், கருத்து மாற்றங்களும் தவறுகளும் புகுந்தன. நூலாசிரியனே உரையும் உதாரணங்களும் பின்னணியான ஆதரவு இலக்கியங்களும் இவை இவைதாம் என்று காட்டிவிட்டால் அத்தகைய பெருந்தவறு நிகழாதே என்று கருதி, இந்நூலாசிரியரே உரையையும் எழுதினார். இது கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய முயற்சி. வடமொழியில் தோன்றிய சத்த சாத்திரம் எனப்படும் வியாகரண நூல் சொல்லிலக்கணம் ஒன்றையே கூறுவதுபோல, இந்நூலும் சொல்லிலக்கணம் பற்றிய ஆய்வுக் குறிப்புகளையே தொகுத்த அளிக்கிறது என்பர் சிலர். சொல்லுக்கு முதல் எழுத்தாதலானும், சொற்கள் பொருட்பாகுபாடுகளைத் தாங்கியே இயங்குவதாலும், இப்பொருட்கோட்டை செய்யுளேயாதலானும், அவை அணிபெற அமைக்க வேண்டிய சூழலாலும் ஐந்திலக்கண ஆய்வு நுணுக்கங்களையும் ஆங்காங்குச் சொல்லிச் செல்வ- தையும் காணலாம். ஆகவே, இலக்கணக் கொத்தும் அதன் உரையும் ஐந்திலக்கண ஆய்வுப் பெட்டகமுமாகிறது என்பதை இடையிடையே காணும் இலக்கணங்கள் காட்டும். பகுப்பும் அமைப்பும் இந்நூல் பாயிரம், வேற்றுமையியல், வினையியல், ஒழிப்பியல் என்ற நான்கு பகுப்புகளையுடையது. பாயிரப்பகுதி சிறப்புப் பாயிரமும் நூற்பாயிரமுமாக இரு வகையால் உணர்த்தப் பெறுகிறது. சிறப்புப் பாயிரம் எவ்வெந் நூல்களையும் உரைகளையும் துணையாகக் கொண்டு, உலக வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலுமாக அரிய விதிகளும் இலக்கணக் குறியீடுகளும் தொகுக்கப்பெற்றன என்பதையும், ஆசிரியரின் கல்வித் தரத்தையும் வரலாற்றையும் சுருக்கிச் சொல்கிறது. இந்நூலுக்குப் புறமாக–புறவுரையாக இருந்து நூலையே சிறப்பித்தலின் இதனை இயற்றியவர், ஆசிரியரின் மாணாக்கராகிய சங்கர நமச்சிவாயப் புலவராக இருக்கலாம் என்று, ‘தன்’ மாணாக்கன் ...... பாயிரம் இயம்புதல் கடனாதலின் கருதலாம். வடநூல் மரபு நூலாசிரியனே பாயிரமும் சொல்லுதல் உண்டு ஆதலின் நூலாசிரியரே நூலுக்குப் புறவுரையாக இதனைச் செய்தார் எனலும் ஆம். அடுத்தது வணக்கமும் அதிகாரமும் கூறும் நூற்பாயிரமாகும். இது இந்நூலுக்கு முகமாகவே அமைந்துள்ளது. இப்பகுதி கடவுள் வணக்கம், ஞான குரு, மொழியாசிரியர்கள் வணக்கம் கூறுவதால் இவருடைய தமிழ் ஆசிரியர் திருநெல்வேலி மயிலேறும் பெருமாள் பிள்ளை என்பதும், வடமொழியாசிரியர் செப்பறைப் பதிவாழ் சிவப்பிராமணர் கனகசபாபதிக் குருக்கள் என்பதும் அறியக் கிடக்கின்றன. இது அகப்பாயிரமேயாதலால் ஆசிரியர் செய்ததேயாகும். அடுத்தது அவையடக்கம் இது இருமொழிக் கண்ணும் உள்ள இலக்கண நூல்களிடையே காணப் பெறும் பலவகையான வேறுபாடுகள், உரையாசிரியர்கள் நூலமைதியையும், நூற்போக்கையும், நூல் எழுந்த காலச்சூழலின் நடையையும், பொருளமைதியையும் நோக்காமல், தத்தமக்கு உகந்த வண்ணம் உரை செய்வதால் விளையும் ஒருவரையறையின்றி ஒருவிதிக்குப் பல பெயரும், பல விதிக்கு ஒரு பெயரும் ஆக அவரவரும் முக்குணவசத்தால் முறை மறந்து அறைதலும், அவத்தை வயப்பட்டு அறியாமல் உரைத்தலும். விதிவசத்தால் தடுமாறிச் சொல்லுதலும் முதலான பல குறைகள் நேருகின்றன என்பதை எடுத்துக்காட்டிக் குறைகள் அனைத்தையும் தொகுத்துச் சொல்ல தம்மால் இயலவில்லை; ஒருசிலவற்றையே சிறுவர்களுக்காகச் சொல்கிறேன். தம்முரையில் இலக்கிய எடுத்துக்காட்டுகள் குறைவு. உலக வழக்குத்தான் மிகுதி. இது தமிழறிவு ஒன்றுமேயுடையாரையும் இருமொழியிலக்கணப் புலமை உடையராக்கும் என ஆசிரியர் கூறுவதாக முடிகிறது. அவையடக்கம் ஒருவரியிலிருந்தாலும், நூல் எழுச்சிக்குக் காரணமும் இன்றியமையாமையும் பலவரிகளால் காட்டப்பெற்றுள்ளன. அடுத்து, இந்நூலை ஊன்றியதற்குரிய பத்துக் கருவிகள் கூறப்படுகின்றன. பின்பு இந்நூலுக்கும் பிற நூல்களுக்கும் பொதுவான பத்துப் பத்துக் கருவிகள் கூறப்படுகின்றன. சிறப்பிற் சிறப்பாகத் தமக்கு விளங்காத பகுதிகளைத் தவறு என்று சாதிக்கிற சிறுபிள்ளைத்தனத்தை ஓட்ட ‘விளங்காதவற்றைப் பலமுறை ஆய்ந்து சிந்தித்துப்படி; பல்காற் பழகினும் தெரியாவுளவேல் தொல்காப்பியத் திருவள்ளுவர் கோவையார் மூன்றினும் முழங்கும்; ஆண்டினும் இலையேல் வடமொழி வெளிபெற வழங்கும்’ என்று ஆசிரியர் அறிவுரை வழங்கியுள்ளார். அடுத்து, படிக்கும் மாணவர், படிப்பிக்கும் ஆசிரியர் தகுதியும் தன்னடக்கமும் இலராயின் அதனால் நேரும் கேடுகளை விரித்துரைக்கிறது. இந்நூல் இயற்றியதன் காரணத்தையும் இதனைப் பயிலுதற்குரியார் தகுதிகளையும் விரித்துப் பன்னிரண்டு நூற்பாக்களால் பாயிரம் நிறைவெய்துகிறது. 1. வேற்றுமையியலில் வேற்றுமைகள் இத்தனை என்பதும், காரக இலக்கணமும், மூவகை வேற்றுமைகளும், இவற்றில் உருபுகள் நிலையும், இடவுருபுக்கு மட்டும் சிறப்பு விதிகள் சிலவும் உருபு அல்லனவும் உருபுகள் போலத் தோன்றுவன சிலவும், வேற்றுமை என்பது எவ்வெற்றிற்குப் பெயராதல் கூடும்? ஏன்? என்பதும், உருபினை ஏற்ற சொல்லும் நோக்கிய சொல்லும் எங்ஙனம் பல பொருள்படுகின்றன என்பதும், வேற்றுமையும் உருபும், உருபும் பொருளும், உருபுகள் தோன்றும் இடமும் ஆகிய பதின்மூன்று வேற்றுமைக்குப் பொதுவான இலக்கணங்கள் உணர்த்தப் பெறுகின்றன. 2. முறையே எழுவாய் வேற்றுமை உருபு பற்றிய நுணுக்கங்களும், சொல்லுருபுகளும், வினைமுதல் தோன்றும் இடங்களும், இரண்டு வினைமுதலையுடைய ஒருவினைச் சொல்லும், மூவகை வினை முதல்களும், கூறிப் புறனடையும் சொல்லி எழுவாய் வேற்றுமை எனப்படும் வினை முதலைப் பற்றிய குறிப்புகளை விதந்து கூறி விளக்குகிறது. பின்னர் விளியை ஒரு நூற்பாவாற் கூறி, முறையே இரண்டு முதல் ஏழீறான ஆறு வேற்றுமைகளுக்கும் அவற்றின் பொருள்களுக்கும் இலக்கணமும் புறனடையும் கூறி முடிக்கிறது. பிறகு வினைமுதல், செயப்படுபொருள், கருவி, கொள்வோன், நீக்கம், குறை, இடம் ஆகிய இப்பொருள்களில் தம் உருபேயன்றிப் பல உருபுகள் பெறுதலையும் அவ்வுருபுகளின் பொருள் தரும் வரையறைகளையும் கூறுகிறது. அடுத்து எழுவாய், செயப்படுபொருள், மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய உருபுகள் தத்தம் பொருளையன்றி மயங்கி வேறு வேற்றுமையின் பொருள் தருதலைக் கூறுகிறது. பின்னர் உருபும் பொருளும் மயங்கி வருதலும், உருபுகள் தடுமாறி வருதலும் கூறப்பட்டுள்ளன. இறுதியாக உருபு நோக்கிய சொல் மூவகைப்படுதலையும் பல பொருள்படுதலையும் கூறிப் புறனடையுடன் இவ்வியல் முற்றுகிறது. ஆக வேற்றுமையும், உருபும், அவைகாட்டும் பொருளுமாகிய முத்திற வேறுபாட்டால் வேற்றுமையின் இலக்கணம் பலதிறப்படுதலை இரு மொழிகளிலும் உள்ள நிலைகளைக் கொண்டு 52 நூற்பாவால் விளக்குவது வேற்றுமையியல். இதில் ஏனைய தமிழ் இலக்கணங்களில் காண இயலாத இரண்டு குறியீடுகள் வடமொழியிலிருந்து தமிழிலக்கணத்திற்குக் கொண்டுவரப் பெறுகின்றன. ஒன்று ‘காரகம்’, மற்றொன்று ‘குறை’, இவையிரண்டுமே தமிழ் வழக்கிலும் நடைமுறையிலும் உள என்பதை இவை காட்டும் மேற்கோளே சொல்கின்றன. ஆயினும், இலக்கணம் இயல்பாகவே அமைந்திருந்தும் பெயரில்லாத தனிக்குறையிருந்தது. வடமொழியிலிருந்து கொணர்ந்து அதனை மொழி பெயர்த்துத் தமிழுக்காக்கித் தமிழினை வளர்த்தது இந்நூலும் உரையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. காரகம் எழுவாய், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு வேற்றுமைகள் வினையைக் கொண்டு முடியுமாயின் அவை காரகம் எனப் பெயர் பெறும் என்பது வடநூன்மரபு. அதனை அப்படியே தமிழ்வழக்கிலும் பொருத்திப் பார்த்துப் புதுமையையும் பழமையையும் கலக்கச் செய்தனர். விளி, குறையிரண்டையும் விட்ட வேற்றுமைகள் வினையான் முடிவது காரகம் என்பர். ஒரே செய்யுளில் அமைத்து எடுத்துக்காட்டுச் செய்யுளும் காட்டுவர். அதில் எழுவாய் முதல் எல்லா வேற்றுமைகளும் வினை கொண்டு முடிவதைக் காணலாம். ஆறாம் வேற்றுமையும் ஓரிரு இடங்களில் வினை கொண்டு முடிந்து தமிழுக்கு உதவியாகிறது. இது அரிய வழக்கு. எழுத்திகாரம் என்பது எழுத்தினது அதிகரித்தலையுடையது–வினை கொண்டு முடிந்தது என்று சிவஞான சுவாமிகள் தம் முதற்சூத்திர விருத்தியில் குறிப்பிடுள்ளார். எல்லைப்பொருட்டாகிய இன்னுருபும், ஆறனுருபாகிய அது என்னும் உருபும் பெயர் கொள்ளுமாதலின் அவற்றிற்குக் காரகம் எனப் பெயர் சூட்டியதால் விளையும் நன்மைகளை விலக்கிலர். அங்ஙனமே ஆறாம் வேற்றுமைக்குக் குறை என்ற பெயரைக் கொணர்ந்து கூட்டி கி.பி. 17–ஆம் நூற்றாண்டு முதல் தமிழிலும் வழங்க வைக்கிறது இந்நூல். ஆறாம் வேற்றுமைக்குக் குறையென்னும் பெயர் வேறு தமிழிலக்கணங்களில் யாண்டும் வழங்கவில்லை. வடமொழிப் பாணினீய வியாகரணத்தில் குறையெனப் பொருள்படும் சொல்லால் ஆறாம் வேற்றுமை குறிக்கப்படுவது கொண்டு, குறை என்று இதன் பெயர் அமைந்திருக்கலாம். இங்ஙனமே ஏனைய வேற்றுமைகளுக்குப் பொருள் கூறும் போது கூறப்படும் பொருள்களின் வகைக்கும், கொண்டு முடியும் வினைகளின் வேறுபாட்டிற்கும். வேற்றுமை கொள்ளும் பொருள்களின் இயல்புக்கும் ஏற்ப வேற்றுமைப் பொருளை விரித்து வகுப்பது இலக்கணக் கொத்து. இலக்கணக்கொத்து கூறும் வேற்றுமைப் பொருள்களும் அதன் வகைகளும் உலக வழக்கிலுள்ள தொடர்களிலிருந்தே காணப்பெற்றனவாயினும், செய்யுள் மரபிற்கும் பொருந்த இருக்கின்றமையால் இவர் தொகுக்கும் முறையும் இடஞ்சுட்டி எடுத்துக்காட்டும் முறையும் மிக நுணுக்கமானவை; இன்றியமையாதவை; இருமொழியிலும் ஒத்த உணர்வை உண்டாக்குபவை. வினையியல் வினை எனப்படுவன பொருளின் புடைபெயர்ச்சியை உணர்த்தும் சொற்களேயாதலானும் பொருள்களைச் சார்ந்தே வேற்றுமைகளுக்குச் செயப்படுபொருள், கிழமை, இடம் முதலான பொருள்கள் அறியப்படுதலானும் வேற்றுமைகள் அனைத்தும் பெயரும், பெயரது விகாரமுமே யாதலானும் வேற்றுமையியலை யடுத்து வினையியல் அமைந்துள்ளது. வினை புடைபெயர்ச்சியை யுணர்த்தும் முதனிலைகளையன்றிப் பெயர், இடை, உரிச்சொற்களையும் அடியாகக் கொண்டு பிறக்கும். வினைகள் தனிவினை, தொடர்வினை என இருவகைப்படும். நட, வா, போ, இரு முதலியன தனிவினைகள். தனிவினை என்றால் விகுகி, இடைநிலை முதலியவற்றோடு புணராது வினைப்பகுதி மட்டும் தனித்திருப்பதாம். தொடர்வினையாவது வினைப்பகுதிகளும் பெயர், இடை, உரிச்சொற்கள், விகுதி முதலியவற்றோடு இணைந்தேயியங்குவதாம். திணை, பால், எண், இடங்களையும் உணர நிற்பதாம். மொழிகளைத் தனிமொழி, தொடர்மொழி என்பது போல வினைகளையும் சொல்லலாம் என ஒருமரபைப் புனைவர். அளி, எடு, கொடு, இடி முதலான தனிவினைகளே தொழிற்பெயர்விகுதி, முற்று, பெயரெச்ச வினை, எச்ச விகுதிகளோடு கூடித் தொழிற்பெயர், வினை முற்று, வினையெச்சம் பெயரெச்சம் முதலான வினை வேறுபாடுகள் அனைத்துமாதலுண்டு. இவை போன்ற வியத்தகு நுணுக்கங்கள் பல. ‘வேண்டும்’, ‘தகும்’, ‘படும்’ என்பன மூன்றையும் பற்றி உரையாசிரியர்கள் எச்சமாயும், முற்றாயும், இவற்றிற்குப் பொதுவாகிய செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினையாகவும் கருதி ஆங்காங்குத் தெளிவின்றி கூறிப்போயினராக, இந்நூலாசிரியர் மிக எளிமையில், ‘செய்வினை ஆஅதும் என்னும் அவர்’, ‘ஒளிமாழ்கும் செய்வினை ஓஒதல் வேண்டும்’ என்ற குறட்பாவில், அவர் ...... வேண்டும். அங்ஙனமே ‘யான் போகல் வேண்டும்’ ‘நீ உணர்தல் வேண்டும்’ என்ற வழக்காற்றைப் பாருங்கள்! வேண்டும் தகும் படும் என்பன பல்லோர்படர்க்கை. முன்னிலை தன்மையிற் செல்லாதாகும் செய்யும் என்முற்றே என்ற மரபுக்கு மாறி வந்திருக்கின்றனவே! ஆதலால், அவை செய்யுமென் முற்றாதல் யாங்ஙனம்? என்ற முடிபையும், இவை மூன்றுமே தேற்றப் பொருளவாய் ‘வேண்டுவது’, ‘தக்கது’, ‘படுவது’ எனத் தொழிற் பெயராய் நிற்கும் என்று ஐய முடிச்சை யவிழ்த்துத் இலக்கணக் கொள்கையை நீக்குகிறது. இங்ஙனமே ‘வேறு’ ‘இல்லை’, ‘உண்டு’ என்பவற்றின் விளக்கமும் ஆகும். தொல்காப்பியனார் ‘இன்மைசெப்பல்’, ‘வேறு’ என்பனவற்றைப் பொதுவினை என்றனர் (சொல். 224). அவர் காலத்தில் ‘உண்டு’ என்பது ஒன்றன்பால் வினையாக இருந்தது. பிற்காலத்தில் அது பொது வினையாயிற்று. அங்ஙனமே தொல்காப்பியனார் காலத்து உயர்திணைப் பொதுக்குறிப்பு வினையும் படர்க்கைக்கே வந்த வியங்கோளும் பிற்காலத்தில் பொதுவினையாயின. இவையனைத்தையும் நுனித்துக் கண்ட இந்நூலாசிரியர் ‘வேறு இல்லை’ முதலான பத்தினையும் பொதுவினை என்றார். இங்ஙனம் காலந்தோறும் இலக்கியப் பரப்பில் வழக்கால் மாறும் இலக்கண நுணுக்கங்களையும் மாற்றங்களையும் கண்டு காட்டியுள்ளார். வினைகள் மனம், மொழி, மெய், அறிவு ஆகிய நான்கன் அசைவாலும் அசைவின்மையாலும் பல்வகையால் நல்வினை, தீவினை, வேறுவினைகளாகி இத்தகைய மூவகை வினைகளும் அறிந்தும், அறியாமலும், அறிவற்ற நிலையிலும் செய்யப்படுவதாலும் மூவகைப்பட்டு, நல்வினையாவன சில தீவினை எனப்பட்டும், தீவினை எனப்படுவன சில நல்வினைப்பட்டும், பல இலக்கணங்களைப் பெற்றுவரும் என்பர். இவ்வேறுபாடுகள் அனைத்தும் மெய்ப்பொருளியலறிவும் புராண இலக்கியங்களும் தந்தவை. இவற்றாலும் இலக்கண வேறுபாடு என்பதைக் கண்டு காட்டிய பெருமை இந்நூலாசிரியரையே சேரும். த.ச.