புறப்பொருள் துறைகளுள் ஒன்று. ‘ஒருங்கிருத்தல்’ என்பது இதன் சொற்பொருளாகும். இரண்டு அரசர்கள் தோழமை உணர்வோடு ஒருங்கிருக்கும்போது அவர்களைச் சிறப்பித்துப் பாடுவது உடனிலை என்னும் துறையின் பாற்படும் என்பது புறநானூற்றுச் செய்யுள் ஒன்றின் (புறம் – 58, அடிக்குறிப்பு) அடிக்குறிப்பினால் அறியப்படுகிறது. இத்துறை புறப்பொருள் திணைகளுள் ஒன்றான பாடாண்டிணையின் துறைகளுள் ஒன்றாக அப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புறநானூற்றுப் பாடல் சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தபோது, காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரால் பாடப்பட்டது. அவர் அப்பாடலில் இரண்டு அரசர்களையும் சிறப்பித்து, அவர்கள் பலராமனும் கண்ணனும் போல் விளங்கினர் என்று பாராட்டியுள்ளார். மேலும், அவர்கள் இன்று போலவே என்றும் வாழ வேண்டும். என்பதனை, ‘இன்றே போல்க நும்புணர்ச்சி’ எனக்கூறி வாழ்த்தியுள்ளார் (புறம். 58: 14–16; 28). இப்பாடலுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் ‘இருவரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இது உடனிலை ஆயிற்று’ என்று துறை விளக்கம் செய்துள்ளார். அப்புறப் பாடலுக்குத் திணை துறை வகுத்த பெருமக்கள் அதனைப் பாடாண்டிணை, உடனிலைத் துறையில் அடக்கியுள்ளனர். தொல்காப்பியப் பாடாண்டிணையில் உடனிலை என ஒரு துறை இடம் பெறவில்லை. அவ்வாறே, பின்னர்த் தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலை விளக்கும் பாடாண்டிணையிலும் உடனிலைத் துறை இடம்பெறவில்லை. இவற்றைக் காணுமிடத்து, புறநானூற்றுப் பாடல்களுக்குத் திணை துறை வகுத்தோர். காலத்தால் முற்பட்ட அகத்தியம், தொல்காப்பியம், பிற்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களையேயன்றி, அவர்கள் காலத்திலங்கிய வேறு புறப்பொருள் இலக்கண நூலையும் பின்பற்றியுள்ளனர் என்பது புலனாகிறது.