இலாரியே, சர்வில்பிரிடு
ilāriyē, carvilpiriṭu
என்பார் பிரெஞ்சுக் கனடியர்; கனடாவின் தலைமை அமைச்சராக கி.பி.
என்பார் பிரெஞ்சுக் கனடியர்; கனடாவின் தலைமை அமைச்சராக கி.பி. 1896 முதல் 1911 வரை பதவி வகித்தனர். இவர் பாராளுமன்றத்தில் 45 ஆண்டுகள் உறுப்பினராய்த் திகழ்ந்தார்; முற்போக்குக் கட்சியின் (Liberal Party) தலைவராக 32 ஆண்டுகள் விளங்கினார்.
பிரெஞ்சு மொழி பேசும் கனடியர்களையும் ஆங்கில மொழி பேசும் கனடியர்களையும் இணைக்க இவர் அரும்பாடுபட்டார். ஆங்கிலப் பேரரசிடமிருந்து கனடா விடுதலைபெற வேண்டுமாயின் அந்நாடு இங்கிலாந்துடன் நெருங்கிய உறவினை வைத்துக்கொள்ளக்கூடாது என்னும் கருத்தினை உருவாக்கியவரும் இவரே இலாகியே (Laurier, Sir Wilfrid) கனடாவின் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் கனடா செல்வச் செழிப்பில் கனடா பற்றிய திளைத்து விளங்கியது. மேற்குக் கனடா பற்றிய சிக்கல் 1905–ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தபோது ஆல்பர்ட்டா (Alberta), சசுகட்சுவான் (Saskatchuwan) என்னும் இரு புதிய மேலை பிரெய்ரி மாநிலங்கள் உருவாயின.
இவர் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் தங்குதடையின்றித் தெளிவாகப் பேசவல்லவர்; கனடா நாட்டுத் தலைசிறந்த பேச்சாளர் என்று புகழ்பெற்றவர்.
இவர் கி.பி. 1841–ஆம் ஆண்டு கனடா நாட்டின் குயுபெக்கு மாநிலத்திலுள்ள செயிண்ட்டு இலின் (St. Lin) என்னும் சிற்றூரில் பிறந்தார். செயிண்ட்டு இலின் அக்காலத்தில் இலாரென் டைடிசு (Laurentides) எனக் குறிப்பிடப்படுகிறது. இவர்தம் மூதாதையர்கள் பிரான்சிலுள்ள நார்மண்டியிலிருந்து கனடா வந்தவர்கள். அவர்களுள் ஒருவரான பால் டி சாமிடே (Paul de Chomedey) என்பவர் கி.பி. 1642–இல் மாண்ட்ரியால் நகரை உருவாக்கினார். அவர் ஒரு படைவீரர்.
இவர் அன்னையாரின் பெயர் மேரி மார்சல் மார்ட்டினே (Marie Marcelle Martineau Laurier). இவர் ஆறு வயதுக் குழந்தையாக இருந்த போது இவர் தாயார் காலமானார். கரோலுசு இலாரியே (Carolus Laurier) இவர் தந்தையார். அவர் அடிலெய்ன் ஈதியர் (Adelaine Ethier) என்பவரைப் பின்னர் மணந்துகொண்டார்.
கரோலுசு இலாரியே ஒரு குடியானவர்; முற்போக்குக் கருத்துடைய இவர், தம் மகனை ஆங்கிலக் குடும்பமொன்றில் சேர்த்து ஆங்கில மொழியையும் ஆங்கில வாழ்க்கை வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்தார். குயுபெக்கிலிருந்து பிரெஞ்சுக்கனடியக் கல்லூரியொன்றில் இலாரியே கல்வி கற்றார். பொது மேடைப் பேச்சுக்கலையில் தேர்ந்தவரான இவர், அங்குப் பட்டிமன்றம் (Debating Society) ஒன்றையும் நிறுவினார்.
மாண்ட்ரியாலிலிருந்த மெக்கில் (Megill) பல்கலைக் கழகத்தில் இவர் சட்டம் பயின்று, கி.பி. 1864–ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
இவர் மாண்ட்ரியாலில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் கி.பி. 1866–இல் நுரையீரல் நோய்வாய்ப்பட்டார். நண்பர் ஒருவரின் கருத்துப்படி, குயுபெக்கில் அர்த்தபாசுகாவில்லி (Arthabaskaville) என்னும் புதிய குடியிருப்பொன்றில் தம் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். இங்கு இவர் புகழ்பெற்ற வழக்குரைஞராகப் போற்றப்பட்டார்.
இவர் கி.பி. 1868–மே 13–ஆம் நாள் மாண்ட்ரியாவைச் சார்ந்த சோ இலாபாண்டெயின் (Zoe Lafontaine) என்பவரை மணந்து கொண்டார். இவர் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்கும் வரையில் இவர்கள் அர்த்தபாசுகாவில்லியிலேயே வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குக் குழந்தை இல்லை.
குயுபெக்குச் சட்டமன்றத்தின் உறுப்பினராக, முற்போக்குக் கட்சியின் சார்பாக இலாரியே கி.பி. 1871–ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர்க் குயுபெக்கிலிருந்த துருமாண்டு–அர்த்தபாசுகா (Drummond Artha–baska) என்னும் தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் இவருடைய முதற் சொற்பொழிவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கனடாவின் தலைமை அமைச்சராகவிருந்த அலெக்சாந்தர் மக்கன்சி (Alexander Mackenzie) என்பார் இலாரியேவைத் தம்முடைய அமைச்சரவையில் சேருமாறு அழைப்புவிடுத்தார். உள்நாட்டு வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்ற இவர், ஓராண்டுக்காலம் கூட அப்பொறுப்பினை வகிக்கவில்லை. ஏனெனில், முற்போக்குக் கட்சி கி.பி. 1878–ஆம் ஆண்டுத் தேர்தலில் தோற்று விட்டது. அடுத்த 18 ஆண்டுகள் இவர் எதிர்க்கட்சி உறுப்பினராக மக்களவையில் இருந்தார். அலெக்சாந்தர் மக்கன்சியை அடுத்து எட்வர்டு பிளேக்கு (Edword Blake) என்பார் முற்போக்குக் கட்சியின் தலைவரானார். இலாரியே அவருடைய உறுதுணைவராகக் குயுபெக்கு அணியினரின் தலைவரானார்.
சசுகட்சுவான் கலகத்தில் பிரெஞ்சுக் கனடியர்களுக்கும் ஆங்கிலக் கனடியர்களுக்குமிடையே சிக்கல் மூண்டது. இரியல் (Riel) என்பார் பிரெஞ்சுக்கனடியர்களின் தலைவராக இக்கலகத்திற்குத் தலைமை தாங்கினார். அவரை மாவீரன் என்று அவர்கள் புகழ்ந்து போற்றினர். ஆனால், ஆங்கிலக் கனடியர்கள் அவரை நாட்டுத்துரோகி என்றும், அவர் கழுவேற்றப்படல்வேண்டும் என்றும் கோரினர். அப்போது தலைமை அமைச்சராயிருந்த சர்.சான்.ஏ. மாக்டொனால்டு என்பார் ஆங்கிலக் கனடியரின் கருத்தையே ஏற்றுக் கொண்டமையால் இரியல் தூக்கிலிடப்பட்டார்.
பிரெஞ்சுக் கனடியர்கள் இரியல் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து மாண்ட்ரியாலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இலாரியேயும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டார். பிளேக்கும் இவருடன் சேர்ந்து கொண்டார். எனினும், குயுபெக்கிற்கு வெளியில் வாழ்ந்த முற்போக்குக் கட்சியினரே தம் தலைவர்களைப் பின்பற்ற மறுத்துவிட்டனர். அவர்களை எதிர்த்த பழைமைப் பற்றாளர் கட்சியினர் கி.பி. 1887–ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்றார்கள். முற்போக்குக் கட்சி மும்முறை தொடர்ந்து தோல்வியுற்றமையால், பிளேக்கு அக்கட்சியின் தலைமைப் பதவியை விட்டுவிலகினார். இலாரியே கி.பி. 1887–சூன் மாதம் 7–ஆம் நாள் முற்போக்கும் கட்சியின் தலைவரானார்.
அடுத்துவந்த தேர்தலின் இலாரியே மாக்டொனால்டிடம் தோற்று விட்டார். மாக்டொனால்டு கி.பி. 1891–ஆம் ஆண்டு காலமானார். அடுத்த ஐந்தாண்டுகளில் பழைமைப் பற்றாளக் கட்சி மக்களின் ஆதரவை இழக்கலாயிற்று. இவ்வாண்டுகளில் இக்கட்சியைச் சேர்ந்த நால்வர் தலைமை அமைச்சர்களானார்கள். மனிடோபா பள்ளிபற்றி நடைபெற்ற (Manitoba School Issue) கருத்துவேறுபாடுகளின் அடிப்படையில் நிகழ்ந்த அடுத்த தேர்தலில் முற்போக்குக் கட்சியினர் வென்றனர்.
வில்பிரிடு இலாரியே தம் 54–ஆம் வயதில் கனடா நாட்டின் தலைமை அமைச்சராக கி.பி. 1896–ஆம் ஆண்டு சூலை மாதம் 11–ஆம் நாள் பதவியேற்றார். பழைமைப் பற்றாளர் (Conservative) கட்சியைச் சார்ந்த சர் சார்லசு தப்பர் (Sir Charles Tupper) என்பாரை அடுத்து, இலாரியே தலைமை அமைச்சரானார். மனிடோபா பள்ளி மொழிச்சிக்கலும் ஒருவாறு தீர்க்கப்பட்டது.
இலாரியே தலைமை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் நடந்த இரு சிறப்பான நடவடிக்கைகளால் கனடாவின் செல்வவளம் பெருக வழிபிறந்தது. முதலாவது வெளிநாடுகளிலிருந்து இருபது இலட்சம் பேர் கனடாவுக்கு வரவழைக்கப்பட்டுப் பிரெய்ரி மாநிலங்களில் குடியேற்றப்பட்டனர். இவர் கோதுமையை விளைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருஞ் செல்வத்தைப் பெற வழிவகுத்தார். இரண்டாவது, வட கனடா இருப்புப் பாதையையும் கிராண்டு டிரங்கு பசிபிக்கு இருப்புப்பாதையையும் (Grand Trunk Pacific Railways) அமைக்க இவர் அரசு பெரும் உதவி செய்ததால் கோதுமையை ஏற்றிச் செல்ல வழி ஏற்பட்டது. இவ்விரு நடவடிக்கைகளினாலும் கனடா செல்வம் கொழிக்கும் சீரிய நாடாக மாறியது. முற்போக்குக் கட்சியினர் தொடர்ந்து மும்முறை தேர்தலில் வெற்றிபெற்றனர். விக்டோரியா அரசியார் இலாரியேவுக்கு விருது வழங்கி, கி.பி. 1897–ஆம் ஆண்டில் பாராட்டினார்.
செல்வச் செழிப்பு பிரெஞ்சு, ஆங்கிலக் கனடியர்களிடையே இருந்த கசப்புணர்வைக் குறைத்ததெனலாம். ஆனால், கனடா அரசு 1905–ஆம் ஆண்டில் சசுகட்சுவான், ஆல்பர்ட்டா என்னும் பெயரில் இரு புது மாநிலங்களை உருவாக்கியது. இவ்விரு மாநிலங்களும் மனிடோபாவுக்கும் பிரிட்டிசு கொலம் பியாவுக்கும் இடைப்பட்டிருந்தன. இலாரியே இப்புதிய மாநிலங்களில் உரோமானியக் கத்தோலிக்கப் பள்ளிமுறையை அமைத்திட அனுமதித்தார். சமயம், கல்வி ஆகியவை குறித்து மீண்டுமொரு புயல் கிளம்பியபோதிலும் அதுவிரைவில் தணிந்துவிட்டது.
இதனிடையில் கனடாவுக்கும் பிரிட்டனுக்குமிடையே இருந்த உறவுமுறையில் தொல்லை ஏற்பட்டது. இதிலும் பிரெஞ்சுக் கனடியர்களும் ஆங்கிலக் கனடியர்களும் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தார்கள். பிரிட்டன் போரில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், கனடா எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துச் சிக்கல் தோன்றியது.
பிரிட்டிசுக் குடியேற்றப் பகுதிகளின் செயலராக இருந்த சோசப்பு சேம்பர்லேன் (Joseph Chamberlain) என்பார் கி.பி. 1897–இல் பிரிட்டிசுப் பேரரசிலுள்ள அனைத்து உறுப்பு நாடுகளிடையேயும் நெருங்கிய பொருளாதார உறவு இருக்கவேண்டுமென்னும் கருத்தை வெளியிட்டார். பிரிட்டிசுப் பொருள்களின் மீது விதிக்கப்பெற்றிருந்த சுங்கவரியை அவ்வாண்டில் குறைப்பதென இலாரியேயின் அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், பிரிட்டனையும் பிரிட்டிசுக் குடியேற்றப் பகுதிகளையும் ஒரே பொருளாதார அமைப்பின்கீழ்க் கொணரும் முறையை இலாரியே எதிர்த்தார். பிரிட்டிசுப் பேரரசு ஒரே பொருளாதார அடிப்படையில் இயங்க வேண்டும் என்னும் கருத்துக்கு கி.பி. 1897, 1902, 1907, 1911 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நான்கு பேரரசு மாநாடுகளிலும் (Imperial Conferences) தம் எதிர்ப்பினைத் தொடர்ந்து இவர் தெரிவித்து வந்தார்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்த போயர் (Boers) களுடன் பிரிட்டன் கி.பி. 1899–ஆம் ஆண்டில் போருக்குச் சென்றது. ஆங்கிலக் கனடியர்கள் கனடா நாடு பிரிட்டனை ஆதரித்து அதற்கு உறுதுணை நிற்கப் படைகளை அனுப்பவேண்டும் என்று கூறினர். ஆனால், பிரெஞ்சுக் கனடியர்கள் உதவி கொடுக்கக் கூடாதென எதிர்த்தனர். பெரும்பாலான மக்கள் கொண்ட கருத்தின் அடிப்படையில் இலாரியே ஆப்பிரிக்காவுக்குப் படைகளை அனுப்பினார். பிரெஞ்சுக் கனடியர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அமைச்சரவையில் தமக்கு அடுத்த நிலையில் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்த என்றி பவுரசா (Henri Bourassa) என்பவர்கூட, இக்கொள்கையை எதிர்த்துக் கலகம் செய்தார். இத்தருணத்திலிருந்து பிரெஞ்சுக் கனடியர்களும் ஆங்கிலக் கனடியர்களும் பிரிட்டிசுப் பேரரசில் கனடாவின் செயற்பாடு குறித்து இருவிதமான கருத்துகளைக் கொண்டவராய்ப் பிரித்த வாழலாயினர்.
செருமனியுடன் போரில் இறங்கவேண்டிய அச்சுறுத்தல் 1910–ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு ஏற்பட்டது. போர் மூண்டால் பிரிட்டனுக்கு உதவவேண்டும் என்னும் நோக்குடன் கனடானின் கப்பற்படையைத் திரட்டுவது என்று இலாரியே முடிவு செய்தார். கனடாப் பாராளுமன்றம் ‘கப்பற்படைப்பணி மசோதா’ (Naval Service Bill) என்னும் சட்ட முன் வரைவினை ஏற்றுக்கொண்டது. ஆனால், இதைக் கனடியர்களுள் பலர் எதிர்த்தனர். பிரெஞ்சுக் கனடியர்களுள் சிலர் இலாரியேயை ‘ஆங்கில ஆதரவாளர்’ என்றும், ஆங்கிலக் கனடியர்களுள் சிலர் ‘பிரெஞ்சு ஆதரவாளர்’ என்றும், எண்ணினர்.
அமெரிக்க ஐக்கிய நாடு 1911–ஆம் ஆண்டில் கனடாவிற்கு ஒருசில வாணிக ஒப்பந்தங்களை வழங்கியது. இலாரியே அவற்றை ஏற்றுக்கொண்டார். இவ்வொப்பந்தங்கள் இருநாடுகளுக்கும் இணையான வாய்ப்புகளை நல்கின. ஆனால், கனடியர்களுள் பலர் இவ்வாய்ப்புகளால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் செல்வாக்குப் பெருகும் என்று அஞ்சினார்கள். அலாசுகாவுடன் 1903–இல் செய்துகொண்ட உடன்படிக்கையையும் பலர் வெறுத்தனர். இவற்றின் விளைவாக 1911 செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில் முற்போக்குக் கட்சி தோல்வியுற்றது. புவரசா (Bourassa)வே இலாரியேவுக்கு எதிராகப் பழைமைப் பற்றாளர் கட்சிக்கு ஆதரவு நல்கி அவரைத் தோற்கடிக்கக் காரணமானார். இராபர்ட்டு எல். போர்டன் (Robert L. Borden) என்பார் பழைமைப் பற்றாளர் கட்சியின் தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.
வில்பிரிடு இலாரியே தம்முடைய எஞ்சிய ஆண்டுகளில் முற்போக்குக் கட்சியின் தலைவராகவே தொடர்ந்து பணியாற்றினார். முதல் உலகப் போர் 1914–ஆம் ஆண்டில் மூண்டபோது, பிரிட்டனுக்குப் போரில் உதவப் பழைமையாளர் கட்சிக்கு இலாரியே ஆதரவு நல்கினார். முதல் உலகப்போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கனடாவின் தலைமை அமைச்சர் ஆண்களின் கட்டாய இராணுவச் சேவையைக் கொண்டுவர முடிவுசெய்தார். அத்துடன் பழைமைப் பற்றாளர் கட்சியும் முற்போக்குக் கட்சியும் இணைந்து இம்முடிவை ஏற்றுக்கொண்டால் நல்லதெனக் கண்ட போர்டன், இலாரியேயையும் அமைச்சராகச் சேர வற்புறுத்தினார். ஆனால், இலாரியே ஏற்க மறுத்து விட்டார். குவிபெக்குப் பகுதியில் தம் செல்வாக்குப் பறிபோய்விடும் என்ற அச்சத்தால்தான் இலாரியே இம்முடிவுக்கு வந்தார். பவுரசாவும் அவர் தம் துணைவர்களும் கட்டாய இராணுவச் சேவையைக் கடுமையாக எதிர்த்தனர். இலாரியேயின் ஆங்கிலக் கனடியத் துணைவர்களும், இவரைவிட்டு விலகிப் போர்டனுடன் இணைந்துகொண்டனர். குயுபெக்கில் இவர் நலத்தைவிடத் தேசிய நலனில் மிக்க அக்கறை காட்டவில்லை என்று ஆங்கிலக் கனடியர்களும் இலாரியேயை எதிர்த்தனர்.
ஆங்கிலக் கனடியர்களும் 1917–திசம்பரில் போர்டனின் ஐக்கிய அரசுக் கோரிக்கையை ஏற்றுப் பெருமளவில் வாக்களித்தனர். போர்டன் பதவியில் நீடித்தார். ஆனால், பிரெஞ்சுக் கனடியர்களுள் பெரும்பாலோர் ஐக்கிய அரசையும் கட்டாய இராணுவச் சேவையையும் எதிர்த்து வாக்களித்தனர்.
ஆங்கிலக் கனடியர்களுக்கும் பிரெஞ்சுக் கனடியர்களுக்குமிடையே தோன்றிய இப்பிரிவினையால் இலாரியே பெரும் வருத்தமுற்றார். பாராளுமன்றத்தில் நுழைந்த நாளிலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக இவ்விரு குழுக்களையும் இணைக்க இவர் அரும்பாடுபட்டும் பயன் ஏற்படவில்லை. ஆனால், இவ்விரு குழுக்களையும் வி.எல். மக்கன்சிகிங்கு (V.L. Mackenzie King) என்பார் இணைத்துப் புகழ் பெற்றார். எனினும், இவ்விணைப்பு இலாரியே 1919–இல் காலமான பின்னர்த் தான் ஏற்பட்டது.
இவர் 1919–ஆம் ஆண்டில் காலமானார். இவர் மனைவி 1921–ஆம் ஆண்டில் காலமானார். இலாரியேயின் வீட்டைக் கனடா அரசு அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது. இலாரியேயின் பிறந்த ஊரான புனித இலின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய சின்னமாக இன்றும் கருதப்படுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 377)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtw9t37p/
தமிழ்“இலாரியே, சர்வில்பிரிடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vtw9t37p/APA
Oliyon Research. (2026). இலாரியே, சர்வில்பிரிடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vtw9t37p/MLA
"இலாரியே, சர்வில்பிரிடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vtw9t37p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment