வட அமெரிக்கக் கண்டத்தின் மெக்சிகோப் பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு செவ்விந்திய மரபு. அசுதெக்குகள் நாடோடிகனாக, கி.பி. 12–ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்தார்கள். கி.பி. 1248–ஆம் ஆண்டு மெக்சிகோவின் வளமிக்க பகுதிக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அங்கிருந்த பிறிதொகு பழங்குடியின் கூலிப்படையினராய்ச் சேர்ந்த அசுதெக்குகள் (Aztecs) பின்னர் நன்கு தேர்ச்சிபெற்ற வீரர்களாகித் தங்களது வல்லமையை நிலை நாட்டினார்கள். கி.பி. 1345 – ஆம் ஆண்டு தெக்சுகோகோ (Texcoco) ஏரிக்கரையினைச் சுற்றி இருந்த சதுப்பு நிலங்களை அழித்து ஒரு புதிய நகரினை உருவாக்கினார்கள். அந்நகரினைச் சுற்றி நாணல் வேலிகளை அமைத்தார்கள். தெனோசிடிட்லான் (Tenochtitlan) என்று அந்நகரம் பெயர்பெற்றது. அக்காலத்தில் மெக்சிகோ பகுதியில் சிறப்பான ஐந்து நகரங்கள் அமைந்திருந்தன. அவற்றுள் தெனோசிடிட்லான் அசுதெக்கு அரசின் தலைநகரமாக விளங்கிற்று. அசுதெக்குப் பேரரசு அசுதெக்குகளின் அரசியல் தலைவர் அரசா எனப்பட்டார். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொண்டார். பல்வேறு அரண்மனைகளையும் ஏறக்குறைய 2000 பணியாட்களையும் அவர் கொண்டிருந்தார். பல அதிகாரங்களைத் தம் விருப்பம் போல் பெற்றிருந்தும், அரசர் தாமே செயற்படும் உரிமையினை இழந்திருந்தார். அரசரைத் தேர்ந்தெடுக்கவும் கருத்துரை வழங்கவும் அவருக்கு உதவியாக மேலாண்மை மன்றம் ஒன்று இருந்தது. இராணுவ அமைப்பு அசுதெக்கு அரசின் பிறிதொரு சிறப்பு ஆகும். பெருங்குடி மக்கள் பலர் இராணுவத் தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் பணியாற்றினர். பெருங்குடி மக்கள், பொதுமக்கள், ஊழியர்கள், அடிமைகள் என நான்கு பிரிவுகளாக அசுதெக்குகள் பிரிந்திருந்தார்கள். பெருங்குடிமக்களும் பொது மக்களும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். பெருங்குடி மக்களின் நிலங்களில் வேலை செய்வோர் ஊழியர் எனப்பட்டனர். போர்க் கைதிகளாக வந்தோர் அடிமைகள் எனப்பட்டனர். அடிமைகள் உடைமைகளாகக் கருதப்பட்டார்கள். அசுதெக்குகள் தம்முடைய ஆண் குழந்தைகளுக்கு 15 வயது வரை வீட்டில் கல்வி கற்றுக் கொடுத்தார்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் படைக்கலப் பயிற்சியோ சமயம் பற்றிய கருத்துகளோ கற்றுத் தரப்பட்டன. பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே கவனித்து வந்தார்கள். ஆண்களே குடும்பத் தலைவர்களாயிருந்தார்கள். பலதார மணம் பெருங்குடி மக்களிடம் நிலவி வந்தது. மணவிலக்குச் செய்தல், மறுமணம் செய்தல் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கங்களாம். பருத்தி ஆடைகளையே உயர் வகுப்பினர் அணிந்தனர். ஏழைகள் நாரினால் செய்யப்பட்ட ஆடைகளை உடுத்தினர். பெண்டிர் கைகளில்லா மேல்சட்டையையும் பாவாடையையும் உடுத்தினர். உயர்ந்த வகுப்பினர் பல அணிகலன்களை அணிந்து வாழ்ந்தனர். நாணல் தட்டிகளால் ஆன குடிசைகளில் அசுதெக்குகள் வாழ்ந்தனர். உயர் வகுப்பினர் கல் வீடுகளில் வசித்து வந்தனர். சாம்பல் அல்லது சிவந்த மஞ்சள் நிறமுடைய மட்பாண்டங்களை இவர்கள் பயன்படுத்தினார்கள். அசுதெக்குகள் தங்கள் பொழுதைச் சமய விழாக்களில் கழித்தார்கள். இயற்கையை வழிபட்ட இவர்களின் முதன்மைத் தெய்வம் சூரியன், கடவுளுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இவர்களிடம் மிகுந்த அளவில் காணப்பட்டது. இரண்டாம் மொன்ட்சுமா அரசர் (Montezuma) காலத்தில் ஏறக் குறைய 20,000 அடிமைகள் நரபலியிடப்பட்டனர். சமய குருமார் பெரிதும் மதிக்கப்பட்டனர். விதியை நம்பிய இம்மக்கள், போரிட்டு, அடிமைகளைக் கொண்டு வந்து நரபலி இடுவதே இறைவனுக்குத் தாம் செய்யும் தொண்டு எனக் கருதினர். அசுதெக்குகளின் ஆண்டுக் குறிப்பேடு 52 ஆண்டுகளைக் கொண்டது. அவரை, மிளகு, மக்காச்சோளம், புகையிலை, தக்காளி போன்றவை இவர்கள் உற்பத்தி செய்த வேளாண்மைப் பொருள்களாகும். அசுதெக்குகள் உழவுக் கருவிகளைக் கற்களினாலேயே செய்தார்கள். நாணய முறை பற்றி இவர்கள் அறியமாட்டார்கள். பொருள்கள் பண்டமாற்று முறையில் பெறப்பட்டன. நகரங்களில் அடிக்கடி சந்தைகளைக் கூட்டினர். தெலாடிலோல்கா (Tlatelolco) என்னும் இடத்தில் மிகப் பெரிய சந்தையொன்று நடந்தது. ஏறக் குறைய 60,000 மக்கள் இச்சந்தையில் கூடுவர். அசுதெக்குகள் குதிரைகளின் பயன்களை அறியவில்லை. கால்நடையாகவும் நீர்வழியாகவும் இவர்கள் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்குச் சென்றார்கள். இவர்களின் மொழி செவ்விந்திய மொழிகளுள் ஒன்றாகும். நாகுதல் (Nahutal) அல்லது அசுதெக் டானோன் (Aztec - Tanoan) என இம்மொழி குறிக்கப்பட்டது. சித்திர வடிவ எழுத்து முறையை இவர்கள் அறிந்திருந்தார்கள். அசுதெக்கு ஆண்டுக் குறிப்பேடு அசுதெக்குகளின் கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு கல்லினால் செய்யப்பட்ட வட்டவடிவமான ஆண்டுக் குறிப்பேடாகும். இந்தக்கல், மிகுந்த வேலைப்பாடுடன் சூரியக் கடவுளின் முக அமைப்பை நடுவில் பெற்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லின் குறுக்களவு 3.7மீ. அசுதெக்குகளின் வாய் மொழி இலக்கியங்கள் செய்யுள்களையும் மரபுக் கதைகளையும் கொண்டுள்ளன. இசைக் கருவிகளை இயக்குவதிலும் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள். கே.இரா.