தமிழ்நாட்டைச் சார்ந்த கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ளதொரு வட்டமாகும்; உடுமலைப்பேட்டை என்னும் நகரம் இவ்வட்டத்தின் தலைநகராகவும் அமைந்துள்ளது. பழங்காலத்தில் உடுமலைப்பேட்டை கொங்கு மண்டலத்தில் இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மூணாறு அருகில் அமராவதி ஆறு உற்பத்தியாகி இந்நகரின் வழியாகப் பாய்கிறது. சிறிய பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி அரசு மிகுதியான பரப்பில் வேளாண்மை செய்ய வழிவகை செய்துள்ளது. உடுமலைப் பேட்டைக்கு ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணை 1953–இல் தொடங்கப்பெற்று 1957–இல் கட்டி முடிக்கப்பெற்றது. இவ்வணையில் தேங்கும் நீர் உடுமலைப்பேட்டை வட்டத்திற்கும் பயன்படுகிறது. இவ்வூரின் அண்மையில் ‘திருமூர்த்தித் தேக்கம்’ என்னும் சிற்றணையொன்றும் கட்டப்பட்டுள்ளது. பரம்பிக்குளத் தலைமைக் கால்வாயும் உடுமலைப்பேட்டைக்குப் பயன்படுகிறது. உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள காடுகள் குறிப்பிடத்தக்கவை. இந்நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகுதியாகப் பருத்தி விளைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளையொட்டி இந்நகரம் அமைந்துள்ளதால் இது நல்வாழ்வுக்கேற்ற தட்டவெப்பநிலையைக் கொண்டுள்ளது. இங்கு வாழும் கொல்லர்கள் திறமை மிக்கவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இந்நகரின் மக்கள் தொகை 54,804 (1981).