இலத்தீன் இலக்கியம்
ilattīṉ ilakkiyam
இலத்தீன் இலக்கியம் என்பது கிமு.
இலத்தீன் இலக்கியம் என்பது கிமு. 7–ஆம் நூற்றாண்டில் உரோமாபுரியின் மொழியாக அமைந்து, வளர்ச்சியுற்று, உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றாய் விளங்கிய இலத்தீன் மொழியிலமைந்த இலக்கியங்களைக் குறிக்கிறது. உரோமாபுரி வளர்ச்சியடைந்த காலத்தில் பாதுகாப்பினை முன்னிட்டுப் பல்வேறு கிளை மொழி பேசும் மக்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டது. இதனையொட்டி அங்கு வழங்கிய இலத்தீன் மொழியும் முழுவளர்ச்சி பெற்றது. உரோமானியரின் அரசியல் மேலாண்மை, இலத்தீன் மொழியின் கலை, இலக்கியப் பெருமைகள் ஆகியவற்றாலேயே பிறநாட்டினர் இதனைத் தங்கள் மொழியாக ஏற்றுக் கொண்டனர். தங்கள் மொழியினை எக்காலத்திலும் எவர்மீதும் திணிக்காத முறையிலமைந்த உரோமானியரின் மொழிக் கொள்கையும் இம்மொழி வளர்ச்சிக்கான காரணங்களுள் ஒன்றாகும் என்பார் எர்னசுடு புல்கிராம் என்னும் அறிஞர்.
உரோமானியப் பேரரசின் தொடக்க காலத்தில் இலத்தீன் மொழி பேச்சுமொழியாக மட்டுமே இருந்தது. கிரேக்க மொழியில் இருந்ததைப் போன்ற கலை, இலக்கியச் செல்வங்கள் இலத்தீன் மொழியிலும் உருவாக வேண்டும் என்ற நினைப்புடன் கிரீசிலிருந்து புலவர்களையும் அறிஞர்களையும் உரோமாபுரிக்குக் கொணர்ந்தனர். போர்களில் வெற்றி அடைந்தபோது பொன்னையும் பொருளையும் திறையாகக் கேட்காமல் நூல் நிலையங்களைத் திறையாகக் கேட்டனர். கலை, இலக்கிய வளம் குறித்து உரோமானியர் கொண்டிருந்த இவ்வேட்கையினால் கிரேக்க மொழியின் சொற்களும் கிரேக்கரின் பழக்க வழக்கங்களும் உரோமானியரிடையே மிகுதியாகக் கலந்தன. இலத்தீன் இலக்கிய வரலாற்றைக் குடியரசுக் காலம், அகசுடசுக் காலம், பேரரசுக் காலம் என்னும் மூன்று பெரும் பகுப்புகளில் இலக்கிய வரலாற்றாசிரியர் அடக்குகின்றனர்.
குடியரசுக் காலம்
கி.மு. 240 முதல் 27 வரையுள்ள காலப்பகுதி குடியரசுக் காலம் எனப்படுகிறது. கி.மு. 146 வரை உரோமாபுரி பல்வேறு போர்களில் ஈடுபட்டு வலிமை வாய்ந்த பேரரசாக உருவாகிக் கொண்டிருந்தது. எனினும், உள்நாட்டுப் போர்கள் வகுப்புவாதக் கலவரங்களால் உரோமாபுரியின் சமூக வாழ்க்கை அமைதி குறைந்ததாகவே காணப்பட்டது. மேலோட்டமான பார்வைக்கு இது ஒரு குடியரசாகத் தோன்றினாலும், உண்மையில் இது செல்வர்களாலும் நிலப்பிரபுக்களாலும்தான் ஆளப்பட்டு வந்தது. இந்தக் கால கட்டத்தில் நாடகம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், அங்கத நூல்கள், தத்துவ நூல்கள், சொற்பொழிவுக் கலை நூல்கள், வரலாற்று நூல்கள் என்ற இலத்தீனின் இலக்கிய வளம் பெருகியது. இவற்றுள் அங்கத இலக்கியம் தவிர பிற அனைத்தும் கிரேக்க இலக்கியத்தின் தழுவல்களாகவே அமைந்தன.
தொடக்ககால் இலத்தீன் இலக்கிய ஆசிரியர்களுள் உலூசியசு இலிவியசு ஆண்ட்ரோனிக்கசு (Lucius Livius Andronicus), ஞாகசு நீவியசு (Gnacus Naevius), குவிண்டசு என்னியக (Quintus Ennius) என்னும் மூவரும் மூன்று வளர்ச்சி நிலைகளைக் காட்டுபவர்களாக அமைகின்றனர். இவர்கள் மூவருமே நாடக ஆசிரியர்கள், கிரேக்கரான இலிலியசு ஆண்ட்ரோனிக்கசு உரோமாபுரிக்கு ஒரு கைதியாகக் கொண்டு வரப்பட்டார். கி.மு. 272–இல் இவர் ‘ஒடிசி’ காப்பியத்தை இலத்தீனில் மொழிபெயர்த்தார். இலத்தீன் மொழியில் முதல் இலக்கியப் படைப்பாக இது கருதப்படுகிறது. கி.மு. 240–இல் ‘லுடி’, ‘ரோமனி’ என்ற நாடகங்களையும் படைத்த இவர் இலத்தீன் மொழியின் முதல் நாடகாசிரியராகவும். காப்பிய, நாடகத் தந்தையாகவும் கருதப்படுகிறார்.
இலத்தீன் மொழியின் இரண்டாம் நாடக ஆசிரியராகவும் கவிஞராகவும் மதிக்கப்படுகின்ற நீவியசு ஏறத்தாழ 41 நாடகங்கள் எழுதியுள்ளார். எனினும், இவையனைத்தும் இன்று கிடைக்கவில்லை. ‘பெல்லம் போனிகம்’ என்ற காப்பியத்தையும் இவர் படைத்துள்ளார். இதில் ஓமரின் காப்பிய உத்திகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. ‘சைபீரியன் இலியதம்’ என்னும் காப்பியமும் இவரால் பாடப்பெற்றது.
மூன்றாமவரான என்னியசு துன்பியல் நாடகங்கள், இன்பியல் நாடகங்கள், திட்பவுரைகள் (Epigrams), நீதி நூல்கள் போன்ற இலக்கிய வகைகளைப் படைத்தார். இவர்தம் படைப்புகளுள் சில பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. இவையனைத்தும் கிரேக்க இலக்கிய வடிவங்களை முன்மாதிரியாகக் கொண்டவை. இவருடைய படைப்புகளுள் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுவது ‘அன்னல்கள்’ (Annals) என்ற பெயரிலமைந்த வரலாற்றுக் காவியமாகும். சில பகுதிகள் மட்டும் கிடைத்துள்ள இக்காப்பியத்தில் கிரேக்கக் காப்பிய வடிவத்தைக் கையாண்டு உரோமானிய உள்ளடக்கத்தையும் உணர்வையும் பாடியிருக்கிறார். உரோமானியரின் ஓமராகத் தம்மைக் கருதிக் கொண்டவர் இவர். உரோமானியரின் தேசியக் காப்பியமாக இது நிகழ்ந்தது, மேனாட்டின் முதல் முழு இலக்கியவாதி என்று இவர் புகழப்படுகிறார்.
மேற்காட்டப்பெற்ற மூவருடன் தைதசு மேக்கியசு பிளாட்டசு (Titus Maccius Platus) என்பாரும் சேர்த்துக் கருதப்படுகிறார். இவர் ஏறத்தாழ 45 நாடகங்கள் எழுதியிருக்கிறார். கிரேக்க நாடகாசிரியரான மெனந்தரின் நாடகங்களை இவர் மிகுதியாகப் பின்பற்றியிருக்கிறார். இவருடைய நாடகங்கள் ஆள் மாறாட்ட அடிப்படை, சூழ்ச்சி அடிப்படை, குணச் சித்திர அடிப்படை, கண்டுகொள்வகை என்ற நான்கு வகையினவாக அமைந்துள்ளன.
இவருடைய நாடகங்களில் கிரேக்க உரோமானியக் கூறுகளின் கலப்பு, செறிவான கதைப்பின்னல், எளிய புலப்பாட்டுத்தன்மை மிக்க நடை ஆகியவை பொதுக்கூறுகளாகக் காணப்படுகின்றன.
மேற்காட்டப்பெற்ற நான்கு புலவர்களுடன் இலத்தீன் இலக்கியத்தின் தொடக்கப்பகுதி அமைகிறது. கிரேக்க இலக்கியத்தைப் பின்பற்றி இலக்கியத் தோற்றம், இலக்கிய வகைமைகள், விரிவடைதல், புதிய இலக்கிய வகைகளை (உரோமானியருக்கே உரிய) உருவாக்குதலும் கிரேக்க இலக்கிய மரபை இலத்தீனுடன் இணைத்தலும், எளியநடை வளர்ச்சி ஆகிய நான்கு நிலைகளைக் காட்டுவனவாக இவர்களின் படைப்புகள் அமைந்துள்ளன.
மேற்கூறப்பெற்ற நால்வரையும் அடுத்துத் தோன்றிய பப்ளியசு தெரன்சியசு ஆபர் (Publius Terentius Afer) என்னும் நாடகாசிரியர் நாடக இலக்கிய வகையில் ஒரு மாற்றத்தை உருவாக்கினார். இவர் பல நாடகங்கள் படைத்தார். ‘ஆண்ட்ரோசுப் பெண்கள்’ (The Women of Andros), ‘சுய தண்டனையாளன்’ (The Self Tormentor), ‘யூனிச்சு போர்மியோ’, ‘சகோதரர்கள்’, ‘மாமியார்’ என்பன அவை. நிச்சயமில்லாத திருமணம் இவர்தம் நாடகங்களின் கருவாக அமைகின்றது. உரையாடல் மூலம் கதைமாந்தர் பண்பை விளக்கும் முறையை இவர் பின்பற்றினார். இவருக்கு முந்திய நாடகாசிரியர்களை விடவும் இவர் மிகுதியான தத்துவ நோக்குடையவராகக் காணப்படுகிறார். எளிய தூயநடையை இவர் பயன்படுத்தியது இலத்தீன் இலக்கிய வளர்ச்சியில் ஒரு மைல் கல். கிரேக்கப் பண்பாட்டுக் கூறுகளை மிகுதியாகப் பரப்ப வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்ட சிசிப்பியோ ஆபிரிகானசு குழுவினருள் தெரன்சியசும் ஒருவர். எனவே, மெனந்தரின் தத்துவங்களை இவர் தம் படைப்புகளில் மிகுதியாகத் தழுவினார். பொது மக்களுக்குக் கூறப்படுவனவாக அல்லாமல் ஓரளவு கல்வியறிவுடையவர்களுக்கே கூறப்படுவனவாக இவர் படைப்புகள் அமைந்தன. இவர் ‘ஆர்கனேடிகா’ என்ற கிரேக்கக் காப்பியத்தை இலத்தீனில் மொழி பெயர்த்திருக்கிறார்.
துன்பியல் நாடகங்கள் எழுதியவர்களுள் பசுவியசு (Pacuvias) குறிப்பிடத்தக்கவர். இவர் ‘அடிமை ஓரெசுடு’, ‘இலியோனா’, ‘நிபத்ரா’ போன்ற நாடகங்களைப் படைத்தார். நாடகச் சூழலைத் திறம்பட உருவாக்குதல், ஆற்றல்மிக்க சொல்லாட்சி, தத்துவ நோக்கு ஆகியவை இவர்தம் நாடகங்களின் தனித் தன்மைகள்.
கிரேக்க நாடகாசிரியரான அக்கியசு (L. Accius) என்பவர் யூரிப்பிடிசின் நாடகங்களைத் தழுவித் துன்பியல் நாடகங்கள் படைத்தவர் (கி.மு. 140).
அங்கத நூல்கள்
இலத்தீன் மொழியின் தனிச் சிறப்புடைய இலக்கிய வகை அங்கதம், அங்கத இலக்கியத் தந்தை எனப்படும் உலுசிலியசு (Gaius Lucilius) இனத்தீனில் மிகுதியான அங்கத நூல்களை எழுதியவர் ஆவர். இவர் 30 நூல்கள் படைத்திருப்பினும் இப்போது கிடைப்பன 1300 வரிகள் மட்டுமே. இவர் தம் நூல்களுக்கு ‘அறவுரைகள்’ என்ற பொருள்படும்படி, ‘செர்மோன்’ என்று பெயரிட்டார். பொதுவான சமூகத் தீமைகளைக் கண்டிக்கும் முறையிலும் பொது மக்களுக்குக் கூறும் முறையிலும் இவர் பாடல்கள் அமைந்திருக்கின்றன.
தத்துவ நூல்கள்
கி.மு. முதல் நூற்றாண்டில் உரோமானியக் குடியாட்சி முறையில் சரிவும், புலப்பாட்டு நெறிக் கலையில் வளர்ச்சியும் ஏற்பட்டன. இந்நிலை கவிதைக் கலையின் போக்கில் தனது முத்திரையைப் பதித்தது.
இக்காலகட்டத்தில் சிசரோ ‘பெனோமினா’ என்ற நூலை மொழி பெயர்த்தார். இந்நூலின் தாக்கம் உலுக்கிரீசியசு (Titus Lucretius Carus) என்பார் எழுதிய ‘பொருள்களின் இயற்கை’ என்ற நூலிலும் காணப்பட்டது. மொத்தம் 7415 வரிகளையுடைய இந்நூலில் அணுக்கொள்கை, ஆன்மா, சமயம், நீதி போன்றவற்றைப் பற்றிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. எம்பெடோக்கிளிசு (Empedocles), எபிகூரசு (Epicurus) போன்ற கிரேக்கத் தத்துவவாதிகளின் தாக்கம் இந்நூலில் காணப்படுகிறது.
தன்னுணர்ச்சிப் பாடல்கள்
கி.மு. 48–31 கால கட்டத்தில்–உலுக்கிரீசியசின் ‘பொருள்களின் இயற்கை’ எழுதப்பட்ட காலத்திலேயே உருவாகி வந்த புதிய தலைமுறைக் கவிஞர்கள் கவிதையின் போக்கு மாறுவதற்குக் காரணமாக இருந்தனர். மிகவும் செறிவான ஒழுங்கான வடிவமைப்பினைப் பெற்ற கவிதைகளை எழுதவும், இவ்வகையில் கிரேக்க மாதிரிகளைப் பின்பற்றவும் இவர்கள் முனைந்தனர். இலிசினியசு கல்வசு (Licinius Calvus), எல்வியசு சின்னா (Helvius Cinna – 157 B.C.), பியூரியசு பிபாகுலசு (M. Furius Bibaculus), மெம்மியசு (C. Memmius), கார்னிபிகசு (Q. Cornificus), வலேரியசு சாட்டோ (Valerius Cato), வலேரியசு காட்டுலசு (C. Valerius Cattulus) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் வலேரியசு காட்டுலசின் கவிதைகள் மட்டுமே மிகுதியாகக் கிடைத்திருக்கின்றன.
காட்டுலசு
கிரேக்கக் கவிதைகளின் தாக்கத்திற்கு அதிகமாக ஆட்பட்டவர். இவருடைய படைப்புகளுள் 160 கவிதைகள் கிடைத்துள்ளன. ஒரு குறுங்காப்பியம், ஐந்து கையறுநிலைப் பாடல்கள், இரண்டு திருமணக் கவிதைகள் ஆகியனவும் அவற்றுள் அடங்கும். காதல், நலம்புனைந்துரைத்தல், கையறுநிலை ஆகியவை இவர் தம் பாடல்களின் பாடுபொருள்களாகும். தன்னுணர்ச்சிப்பா வடிவத்தில் புதுமை புகுத்திய இவர் இலத்தீனின் முப்பெரும் தன்னுணர்ச்சிப் பாவலர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
சொற்பொழிவுக் கலை
சிசரோவின் ‘புருட்டசு’ நூலிலிருந்து அக்காலத்துச் சொற்பொழிவுக் கலை பற்றி மிகுதியாக அறிந்துகொள்ள முடிகிறது. இலத்தீன் சொற்பொழிவாளர்களுள் போர்சியசு சாடோ (Porcius Cato), டி. கிராச்சசு (Ti. Gracchus), சி. கிராச்சசு (C. Gracchus), எம். அமிலியசுகாரசு (E. Aemilius Scaurus), சி. தைட்டசு (C. Titus) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சிசரோவின் இளமைக்காலத்தில் அவருடன் தொடர்பு கொண்டிருந்த அண்டோனியசு (M. Antonius), இலிசினியசு கிராசசு (L. Licinius Crassus) ஆகியோரும் இப்பட்டியலில் அடங்குவர். சொற்பொழிவுகளை நூலாக வெளியிடும் வழக்கம் போர்சியசு சாடோவினால் கொண்டுவரப்பட்டது.
சிசரோ (கி.மு. 106–43)
சொற்பொழிவுக்கலை, அரசியல், ஒழுக்க நெறிமுறைகள், இறையியல் கொள்கைகள் ஆகிய பல்வேறு பொருள்கள் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். கடித வடிவிலும் உரையாடல் வடிவிலும் இவர் எழுதிய நூல்கள் கலைப்படைப்புகள் என்ற வகையிலும் வரலாற்று மூலங்கள் என்ற வகையிலும் சிறப்புடையனவாக இன்றளவும் கருதப்படுகின்றன. இவருடைய சொற்பொழிவுகள் தொகுக்கப்பெற்ற நூல்களாக வெளிவந்தன.
சிசரோவின் படைப்புகளில் மிக உன்னத நடையமைப்பினைக் காணலாம்.
வரலாறு
உரோமாபுரியின் தொடக்க காலத்தில் வரலாற்றாசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள் கிரேக்க மொழியில் எழுதினர். பேபியசு பிக்டர் (Q. Fabius Pictor கி.மு. 216), சின்சியசு அலிமண்டசு (L. Cincius Alimentus), போசுதுமியசு அல்பினசு (Postumius Albinus கி.மு. 151), அசிலியசு (C. Acilius) ஆகியோர் கிரேக்க மொழியில் வரலாற்று நூல்கள் எழுதினர். கிராச்சிய காலகட்டத்தில்தான் (Gracchian Era) வரலாற்று நூல்கள் இலத்தீனில் மொழிபெயர்க்கப் பெற்றன.
கடந்த கால வரலாறே பெரிதும் எழுதப்பெற்றதெனினும் சமகால வரலாற்றை (Historiae) எழுதுவதிலும் இக்கால கட்டத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்கள் ஆர்வம் காட்டினர். பழைய வரலாற்றைப் பற்றி எழுதியவர்களுள் குவாடிரிகாரியசு (Quadrigarius), அண்டியாசு (Valenius Antias) ஆகியோரும் சமகால வரலாற்றாசிரியர்களாக கொர்னேலியசு (L. Cornelius Sisenna கி.மு. 118–67) முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
சூலியசு சீசர் (கி.மு. 100–44)
இலத்தீன் வரலாற்றாசிரியர்களுள் முதன்மையான இடத்தைப் பெறுபவர். தமது அரசியல் வாழ்க்கையில் இலக்கியத்தை ஒரு பிரச்சாரக் கருவியாகவே இவர் பயன்படுத்தி வந்தார். இவர்தம் நூல்களுள் ‘உள்நாட்டுப்போர் பற்றிய கருத்துகள்’, ‘கல் (Gall) படையெடுப்புப் பற்றி’ ஆகியன குறிப்பிடத்தக்கன.
சல்லசுடு (கி.மு. 86–34)
முழுமையான வரலாற்றாசிரியர்; கலைப்படைப்பினை உருவாக்கும் உணர்வுடன் இவர் வரலாற்று நூல்களை எழுதியதாகக் குறிப்பிடுவர். துசிடைட்டசினைப் பின்பற்றும் பாணி இவருடைய படைப்புகளில் காணப்படுகிறது. ‘சுகார்த்தாப் போர் பற்றி ...’, ‘வரலாறு’ ஆகிய இவர்தம் நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
வற்றோ (கி.மு. 116–27)
அங்கதக் கவிஞராகவும் வரலாற்றாசிரியராகவும் திகழ்ந்தவர். 600 அல்லது 700 நூல்கள் இவர் படைத்தார் என்று கூறப்படுகின்றதெனினும் அவை முழுவதும் கிடைக்கவில்லை. இலத்தீன் மொழியையும் நாட்டினையும் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்களும், ‘மெனிப்பியன் அங்கதம்’ என்ற நூலின் சில பகுதிகளும் மட்டுமே கிடைத்துள்ளன. நெபோசு (Cornellius Nepos கி.மு. 99–24), பாம்போனியசு அட்டிகசு (T. Pomponius Atticus கி.மு. 109–32) ஆகியோர் சில வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளனர்.
அகசுதசு காலம் (கி.மு. 27–கி.பி. 14)
சூலியசு சீசரின் இறப்பு உரோமாபுரியில் உள்நாட்டுப் போர்களுக்கும் அரசியல் குழப்பங்களுக்கும் வித்திட்டது. இந்நிலையில் கி.மு. 27–இல் உரோமாபுரியில் குடியரசினை நிறுவப் போவதாக ஆக்டேவியசு சீசர் அறிவித்தார். எனினும், சாகும்வரை ஒரு பேரரசனாகவே அவர் இருந்தார். நாட்டில் அமைதியை நிறுவியதுடன் பல்வேறு சீர்திருத்தங்களையும் புகுத்தினார். பிறநாடுகள் சிலவற்றையும் உரோமாபுரியுடன் இணைத்தார். இதனால், இவருக்கு ‘அகசுடசு’ என்று பட்டப் பெயரும் கிடைத்தது. நாட்டில் நிலவிய அமைதிமிக்க சூழ்நிலையினால் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டது. முழுநேர எழுத்துப் பணியில் ஈடுபடுதல் மரியாதைக்குரிய பணியாகவும் கருதப்பட்டது. கடந்த காலத்தின் பெருமைகள் உணரப்படவும் சிறப்பான எதிர்காலம் பற்றிய நம்பிக்கை வளரவும் வாய்ப்பேற்பட்டது. அமைதியும் ஓய்வும் மிக்க இந்தக் காலகட்டத்தில் இலக்கியப் படைப்புமுறைகள், உத்திகள் பெருகவும் முதன்மை பெறவும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
கவிதை வடிவம் இந்தக் காலகட்டத்தின் முதன்மையான இலக்கிய வடிவமாயிற்று. அரசியல் முரண்பாடுகள் குறைந்தமையினால் பேச்சுக்கலையின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது. காப்பியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கையறுநிலைப் பாடல்கள் போன்றவை இக்கால கட்டத்தில் செழித்த இலக்கிய வகைகள். இந்தக் காலத்து இலக்கியங்கள் அனைத்திலும் மன்னனைப் புகழ்ந்துரைப்பது ஒரு பொதுக் கூறாகக் காணப்படுகிறது.
மாசினாசு, வலேரியசு மெசலா, அசினியசு போல்லியோ போன்றோர் இலக்கியப் படைப்பில் ஈடுபட்டிருந்தனர். அரசவைப் பாடல்கள் (Court Poetry) என்ற மன்னனின் செயல்களைப் புகழ்ந்துரைக்கும் பாடல்கள் பல இந்தக் காலகட்டத்தில் தோன்றின. அகசுடசு காலத்தில் உரைநடை மிகுதியான வளர்ச்சியை அடையவில்லை. ஒருசில நூல்கள் எழுதப்பட்டன. விட்ருவியசு போலியோ (Vitruvius Pollio) என்னும் இராணுவப் பொறியியலாளரால் ஒரு நூல் எழுதப்பட்டது. கேசியசு செருவரசு (Cassius Serverus), இலபினசு (Labienus) ஆகியோர் இந்தக் காலகட்டத்தின் சொற்பொழிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். அன்னியசு செனெகா (L. Annaeus Seneca) சொற்பொழிவுக்கலை பற்றி ஒரு நூல் எழுதினார். துன்பியல் நாடகங்கள் அசினியசு போல்லியோ (Asinius Pollio) என்பவரால் எழுதப்பட்டன.
வலேரியசு மெசலா (M. Valerius Messala) அறிவியல், தத்துவம், பழமையான மரபுகள் பற்றிய ஆய்வு ஆகிய துறைகளில் ஈடுபட்டிருந்தார்.
காப்பியம்
வெர்சில் (கி.மு. 70–19)
இலத்தீன் மொழியின் தலைசிறந்த காப்பியப் புலவர்களுள் ஒருவர். இவருடைய ‘ஏனியிடு’ (Aeneid) காப்பியம் ஓமரின் காப்பிய முறையைப் பின்பற்றியமைத்தது. உரோமானியப் பேரரசின் சிறப்பான வரலாற்றுப் பின்னணியைக் கூறும் முறையில் இக்காப்பிய நோக்கம் அமைகிறது.
கவிஞர் வெர்சில் ஒரு காப்பியப் புலவராகவே உலகில் கருதப்படினும் அவர் தொடக்க காலத்தில் பாடியவை–அவருக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த ‘எகலோகசு’ (Ecologues) என்ற முல்லைநிலப் பாடல்களாகும். பின்னர்ப் பாடியது நீதிநூல் பாணியில் அமைந்த சியார்சிக்சு, (Georgics) என்ற குறு முல்லைப்பாடல். ‘சியார்சிக்சு’ப் பாடல் நாட்டுப்பற்றை ஊட்டும் வகையிலும் ஆக்டேவியசு மன்னனைப் புகழும் வகையிலும் பிரச்சாரப்பாடல் போலத் தோன்றினாலும் சிறந்த கலைப்படைப்பாகத் திகழ்கிறது. எளிய கிராம வாழ்க்கையை மிகுதியாகப் புகழும் அமைப்பு இதில் காணப்படுகிறது.
தன்னுணர்ச்சிப் பாடல்கள்
ஓரேசு (கி.மு. 65–8) அங்கதப் பாடல்கள் பாடியுள்ளார். அவற்றை இவர் ‘செர்மோன்’கள் என்றழைத்தார். ‘எபோட்சு’ என்ற தலைப்பில் 17 பாடல்கள் பாடியுள்ளார். போற்றிப் பாடல்கள் (Odes) 103 பாடியுள்ளார். இவை மட்டுமல்லாமல் விழாக்காலங்களில் பாடுவதற்குரிய பாடல்கள் (Jubilee Hymns), கவிதையியல் பற்றிய நூல் ஒன்று, கடித வடிவில் அமைந்த கவிதையியல் பற்றிய நூல்கள் இரண்டு ஆகியவை இவர்தம் படைப்புகள்.
ஒரு தத்துவவாதி என்ற முறையில் வரன்முறையான சிந்தனைகள் ஓரேசின் நூல்களில் காணப்படவில்லை. எளிய கிராம வாழ்க்கையைப் போற்றுதல் இவர் தம் படைப்புகளின் பொதுப் பண்பாகும். பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களை இவர் கையாண்டிருப்பினும் அவையனைத்திலும் அங்கதக் கூறு கலந்து நிற்கிறது.
கையறுநிலைப் பாடல்கள்
கிரேக்க, இலத்தீன் இலக்கியங்களில் கையறுநிலை என்பது பாடுபொருளால் பெயர் பெறாமல் ‘எலிசியாக்கு’ என்ற யாப்பமைதியினால் பெற்ற பெயராகக் காணப்படுகிறது. இலத்தீன் மொழியில் கார்னிலியசு கல்லசு (Cornellius Gallus) கையறுநிலைப்பாடல் வகையைத் தொடங்கி வைத்தார். திபுல்லசு, புரொபெர்டியசு, ஓவிடு போன்றோர் கையறுநிலைப் பாடல் பாடியவர்களாகக் காணப்படுகின்றனர்.
திபுல்லசு (கி.மு. 54–18)
நான்கு நூல்கள் படைத்திருக்கிறார், ‘தெலியா’, ‘நெமசிசு’ என்பன இவர் தம் நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.
புரொபெர்டியசு (கி.மு. 50–16)
சிந்தியா என்ற பெண் மீது கொண்ட காதலைப் பற்றிப் பாடியனவாகப் பல பாடல்கள் அமைந்திருக்கின்றன. தனித் தன்மைகள் மிக்க கவிஞரான இவர் நான்கு அல்லது ஐந்து நூல்கள் பாடியிருக்கிறார். சமயச்சடங்குகள், இடப்பெயர்கள், ஆக்டியம் போர், உரோமானியச் சீமாட்டி ஒருத்தியின் இறப்பு ஆகியவை இவர்தம் பாடல்களின் பாடுபொருள்கள்.
ஓவிடு (கி.மு. 43 – கி.பி. 17)
காப்பியம், தன்னுணர்ச்சிப்பா, நாடகம் போன்ற இலக்கிய வகைகளைப் படைத்தவர். ‘காதல்’, ‘காதல் கலை’, ‘காதல் பரிகாரம்’, ‘தலைவியர்’ போன்ற காதல் கரு அமைந்த பாடல்களையும், ‘மாற்றங்கள்’ என்னும் பொருள்படும் காப்பியம் ஒன்றையும் படைத்துள்ளார். இக்காப்பியம் இவர் படைப்புகளுள் தலை சிறந்ததாகக் கருதப்படுகிறது. அகசுடசு சீசரால் நாடு கடத்தப்பெற்றுத் தோமி என்ற இடத்தில் ஒன்பதாண்டுகள் வாழ்ந்தபோது ‘உரோமானியக் காலண்டர்’, ‘இபிசு’, ‘துன்பப் பாடல்கள்’, ‘கருங்கடலிலிருந்து கடிதங்கள்’ போன்ற நூல்களைப் படைத்தார். ஆழமான பார்வை, உளவியல் நோக்கு, சரளமான நடை ஆகியவற்றின் அடிப்படையில் ஓவிட்டின் கவிதைகள் மிகவும் போற்றப்படுகின்றன.
இலிவி (கி.மு. 59 – கி.பி. 17)
தம் வாழ்க்கையின் பெரும்பகுதியை வரலாறு எழுதுவதிலேயே கழித்தார். உரோமாபுரி நிறுவப்பெற்ற காலத்திலிருந்து கி.பி 9 வரை உள்ள வரலாற்றைக் கூறுகின்ற ‘அன்னல்கள்’ என்ற நூலை எழுதினார். உரோமாபுரியின் பெருமைகளைக் கற்போர் மனம் மகிழுமாறு எடுத்துரைப்பது இந்நூல். இவரது வரலாற்று நூலில் ஒரு கவிஞனின் உள்ளத்தைக் காணமுடிகிறது. அசினியசு போல்லியோ என்பாரும் இக்காலப் பகுதியில் வாழ்ந்த வரலாற்றாசிரியராவார்.
பேரரசுக் காலம் (கி.பி. 14–476)
அகசுதசு சீசரின் காலத்திற்குப்பின் உரோமானியப் பேரரசின் நிலை குன்றத் தொடங்கியது. பின்வந்த பல மன்னர்கள் சர்வாதிகாரிகளாகத் திகழ்ந்தனர். மார்கசு அரேலியசு (Marcus Aurelius) காலத்திற்குப்பின் நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் நிலைகள் மிகக் கீழான நிலையை அடைந்தன. பிறநாட்டினர் படையெடுப்பு, உரோமாபுரி நகரம் எரிந்தமை போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கு ஏற்ற வகையில் இலக்கிய நிலையும் அமைந்தது.
கி.பி. 14 முதல் உள்ள காலகட்டத்தை இலக்கிய வரலாற்றாசிரியர்கள் சிலர் பேரரசுக் காலம், அகசுதசுக்குப் பிந்திய காலம் என்று குறிப்பிடுவர். சிலர் இக்காலகட்டத்தை இரண்டாகப் பகுத்து கி.பி. 14 முதல் 117 வரையுள்ள காலத்தை ‘வெள்ளிக் காலம்’ என்றும், கி.பி. 117க்குப் பிந்திய காலத்தைப் ‘பிற்காலம்’ என்றும் குறிப்பிடுவர். இக்காலகட்டத்தில் உரைநடைகள் மிகுதியாகத் தோன்றின. சொற்பொழிவுக்கலை, கடிதம், வரலாறு, வாழ்க்கை வரலாறு, கதைகள் போன்ற பல்வேறு இலக்கிய வகைகளும் உரைநடையிலேயே எழுதப்பெற்றன. சிற்சில கவிதை நூல்களும் தோன்றின. இலக்கியப் படைப்புகள் மிகுதியாகத் தோன்றினாலும் மக்களின் தேசீய வாழ்க்கையில் அவை மையமான இடத்தைப் பெறவில்லை.
துன்பியல் நாடகங்கள்
செனெகா (Lucius Annaeus Senaca), கி.மு. 3 – கி.பி. 65) நீரோ மன்னனுக்கு ஆசிரியராக இருந்தவர். இவர் ஒன்பது துன்பியல் நாடகங்கள் எழுதியுள்ளார். அவை அனைத்தும் கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் மறு வடிவங்களாக உள்ளன. ‘பைத்தியக்கார எர்குலசு’, ‘திராய் நகரத்துப் பெண்கள்’, ‘பொனீசியப் பெண்கள்’, ‘மிடியா’ ‘பேட்ரா’ ஆகிய நாடகங்கள் யூரிப்பிடிசு என்னும் கிரேக்க நாடகாசிரியரின் நாடகங்களை அதே தலைப்புகளுடன் தழுவியவை. கிரேக்க நாடகாசிரியரான சோபாக்கிளிசின் நாடகத்தைத் தழுவி ‘ஓடிப்பசு’ என்ற நாடகத்தையும், ‘அக்குமன்மான்’, ‘தியெசுடசு’ ‘ஒடெவில் எர்குலசு’ என்ற நாடகங்களையும் இவர் படைத்துள்ளார். இந்நாடகங்கள் படிப்பதற்காக அல்லாமல் பொது இடங்களில் நடித்துக்காட்டுவதற்காக எழுதப்பட்டவை.
செனெக்கா தத்துவம் தொடர்பான நூல்கள் பலவற்றை உரைநடையில் எழுதியுள்ளார். உரையாடல் அமைப்பில் பத்து நூல்கள், ஒழுக்க நெறிமுறைகள் பற்றிக் கடித வடிவில் இரண்டு நூல்கள், நீதி நூல்கள், இயற்கை அறிவியல் நூல்கள், அங்கத நூல்கள் ஆகியவற்றையும் இவர் படைத்திருக்கிறார்.
அங்கத நூல்கள்
இக்கால கட்டத்தில் ஓரளவுக்குத் தனித்தன்மையைக் காத்துக் கொண்ட இலக்கிய வகையாக அங்கதம் திகழ்கிறது. காலத்து அங்கத இலக்கியங்கள் பெரிதும் பேச்சுமொழி நடையையே கொண்டிருந்தன. பெட்ரோனியசு, மார்சியசு, பெர்சியசு, சூவெனல் ஆகிய அங்கதக் கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
பெட்ரோனியசு
(கி.பி. 65) நீரோ மன்னனின் காலத்தவர். இவர் கவிதை இடைவிரவிய உரைநடையிலமைந்த கதைநூல் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்நூல் கவிதை, சொற்பொழிவுக்கலை ஆகியவற்றின் வீழ்ச்சி, உரோமானிய உள்நாட்டுப் போர் ஆகியவற்றைப் பற்றி அங்கத முறையில் எடுத்துரைக்கிறது.
பெர்சியசு பிளாக்கசு (கி.பி. 34–62) ஆறு அங்கத நூல்கள் யாத்துள்ளார்.
மார்சியல் (கி.பி. 40–102)
கையறுநிலைப் பாடல் தொகுதி ஒன்றை வெளியிட்டார். 1200 திட்பவுரைகள் (Epigrams) கொண்ட நூல் ஒன்றும் படைத்தார்.
சூவனெல் (கி.பி. 60–140)
16 அங்கத நூல்கள் எழுதியுள்ளார். இவர் தம்காலத்திய சமூகக் கொடுமைகள், அப்போதைய அமைச்சர்கள், போர் வீரர்களின் தீய நடத்தைகள் போன்றவற்றைக் கிண்டல் செய்து பாடியிருக்கிறார். அணி செய்யப் பெறாத உண்மைகளை அப்பட்டமாக எடுத்துரைப்பதே கலையின் நோக்கம் என்பது இவரது கோட்பாடு.
காப்பியம்
பேரரசுக் காலத்துக் காப்பியங்களில் வெர்சிலின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது. வெர்சிலை அடுத்துக் குறிப்பிடத்தக்க காப்பியக் கவிஞர் சிலியசு இத்தாலிகசு, இரண்டாம் பெனிசியன் போரை மையமாக வைத்து ‘மியூனிகா’ என்ற காப்பியம் படைத்தார்.
உலுகான் (கி.பி. 39–65)
நீரோ மன்னனின் காலத்தவர். இவர் ‘பார்சலியா (Pharsalia) அல்லது உள்நாட்டுப்போர்’ என்ற சமகால வரலாற்றுக் காப்பி- யத்தைப் படைத்தார். இவர் ‘பெல்லம் சிவிலி’ என்ற காப்பியமும் யாத்தார்.
இந்த காலத்தவரான வலேரியசு பிளாக்கசு என்பார் கிரேக்கக் கவிஞரான அப்பலோனியசின் ‘ஆர்கனேடிகா’ காப்பியத்தைப் பின்பற்றி அதே பெயரில் தம் காப்பியத்தை யாத்தார்.
இசுதேசியசு
(கி.பி. 40–96) தெபிசை எதிர்த்த எழுவரைப்பற்றித் ‘திபெய்ட்டு’ என்ற காப்பியமும், ‘அக்கிலசு’ என்ற காப்பியமும் படைத்தார். மேலும், ஓர் அடிமையின் இறப்பு, உலுகானின் பிறந்த நாள் ஆகிய பாடுபொருள்களை வைத்துச் சூழ்நிலைக் கவிதைகள் (Occasional Poems) பலவற்றை ஐந்து நூல்களாகப் படைத்தார்.
இவரது காலகட்டத்தில் ஓமரின் இலியது காப்பிய மொழிபெயர்ப்பாக ‘இலியசு வேட்டினா’ என்ற காப்பியமும் தோன்றியது.
கி.பி. 2–ஆம் நூற்றாண்டில் குவிண்டியக கார்டியசு எழுதிய ‘அலெக்சாண்டர்’, கி.பி. 3–ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘சுவன்கசு’ ஆகியனவும் இவ்வகையில் நினைக்கத்தக்கன.
இயற்கை வரலாறு
மூத்த பிளினி
(கி.பி. 23–79) ‘இயற்கை வரலாறு’ என்ற மிகப் பெரிய நூல் ஒன்று (37 தொகுதிகள்) எழுதினார். வரலாறு, இலக்கணம், சொற்பொழிவுக் கலை ஆகிய பல்வேறு துறைகளிலும் இவர் தொண்டாற்றியுள்ளார்.
முல்லைப் பாடல்கள்
நீரோ மன்னனின் காலத்தவரான கல்பூர்னியசு சிகுலசு (Calpurniis Siculus) என்பார் ‘யூகலாக்சு’ (Eclogues) எனப்படும் முல்லைப் பாடல்களைப் பாடினார். இவரைத் தொடர்ந்து நெமிசியனசு (Namisianus) என்பவரும் முல்லைப் பாடல்கள் யாத்தார்.
கடிதங்கள்
இளைய பிளினி
(கி.பி. 62–113) திறனாய்வாளரான குவிண்டிலியனிடம் பயின்றவர். உரோமானியர்களின் வாழ்க்கைமுறைகளை விளக்கும் வகையில் ‘கடிதங்கள்’ என்ற தலைப்பில் இவர் 9 நூல்கள் படைத்தார். இவை சிசரோவின் கடிதங்களை முன்மாதிரியாகக் கொண்டவை. நீதிமன்ற நிகழ்ச்சிகள், இலக்கியம், புவியியல், சமகாலத்து நிகழ்ச்சிகள் என்றவாறு ஒவ்வொரு கடிதமும் ஒரு பொருள் பற்றியமைந்தது.
இலக்கிய வரலாறு
குவிண்டிலியன்
(கி.பி. 30–95) ஆசிரியராகவும் வழக்குரைஞராகவும் திறனாய்வாளராகவும் இலக்கிய வரலாற்றாசிரியராகவும் திகழ்ந்தார். ‘பேச்சாளராகப் பயிற்சி பெறல்’ என்ற பொருளில் 12 நூல்கள் எழுதினார்.
வரலாறு, வாழ்க்கை வரலாறு
தசிட்டசு (கி.பி. 55–117) ‘சொற்பொழிவுக்கலை பற்றிய உரையாடல்’ என்ற நூலில் தம் காலத்திய சொற்பொழிவுக்கலையின் போக்குகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ‘அக்ரிகோலா’ (Agricola) என்ற வாழ்க்கை வரலாற்று நூலையும் ‘செருமனி’ (Germany) என்ற மக்கள் வரலாற்று நூலையும், ‘வரலாறு’ (Histories) என்ற உரோமானிய வரலாற்று நூலையும் இவர் படைத்திருக்கிறார். எதனையும் அதிகார முறையில் கூறும் தன்மை இவர்தம் நூல்களில் காணப்படுகிறது.
கிரெமுடியசு கார்டசு (A. Cremutius Cordus), வெல்லியசு படெர்குலசு (C. Veilius Paterculus) ஆகியோரும் இக்கால கட்டத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்களே.
சூடோனியசு
(கி.பி. 75–140) சிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர். இவர் ‘சீசர்களின் வாழ்க்கை’, ‘உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை’ என்ற நூல்களின் ஆசிரியர். முதல் நூலில் சூலியசு சீசர் முதல் தொமிட்டியன் வரையுள்ள மன்னர்களின் வாழ்க்கை வரலாறும், இரண்டாம் நூலில் தெரன்சு ஓரேசு போன்ற புலவர்களின் வாழ்க்கை வரலாறும் கூறப்பட்டுள்ளன.
பிற
இரெம்மியசு பாலெமொன் (Remmius palaemon) ‘ஆர்சு கிராமட்டிகா’ என்ற இலக்கண நூலொன்றை யாத்தார். இதே கால கட்டத்தில் சூனியசு மாடரேட்டசு (Junius Moderatus) என்பார் வேளாண்மை பற்றியும், சூலியசு பிராண்ட்டியசு (Julius Frontius) என்பார் நீர்ப்பங்கீடு பற்றியும், கார்னிலியசு செல்சசு (A. Cornelius Gelsus) என்பார் கலைக்களஞ்சியம் ஒன்றையும் எழுதினர்.
உரைநடை
அபிலியசு (கி.பி. 125) உரைநடை நூல்கள் பல எழுதியவர். இவர் ‘மாற்றங்கள்’ (Transformations), ‘பேச்சாற்றலின் மலர்கள்’ (Flowers of Eloquence), ‘பிளோட்டோவின் கொள்கைகள்’ ‘இவ்வுலகைப் பற்றி ...’ ஆகிய நூல்களைப் படைத்தார்.
பேரரசுக் காலகட்டத்தின் பிற்பகுதியில் கி.பி. 117க்குப் பின் இலத்தீன் இலக்கியப் போக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்ததை விடவும் இலக்கிய வட்டம் பரந்துபட்ட நிலையை அடைந்தது. இந்தக் காலப் புலவர்கள் அகசுடசு காலத்து இலக்கியங்களில் மாதிரி வடிவங்களைத் தேடினர். செவ்வியற் காலத்திற்கு முந்திய காலத்து இலக்கியங்களை நோக்கித் திரும்புதல் இந்தக் காலகட்டத்தின் பொது உணர்ச்சியாகக் காணப்பட்டது.
கிறித்தவ எழுத்தாளர்கள்
மிகுதியாகக் கிறித்தவ இலக்கியங்கள் கி.பி. 2–ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றின. தொடக்ககாலத் கிறித்தவ இலக்கிய ஆசிரியர்கள் என்ற முறையில் மினுசியசு பெலிக்சு (Miuncius Felix), தெர்டுலியன் (Tertullian). புனித சைப்ரியன் (St. Cyprian), இலாக்டாண்ட்டியசு (Lactantius) போன்றோர் காணப்படுகின்றனர். மிக்க சிறப்பு வாய்ந்தவர்களாகப் புனித செரோம் (St. Jerome 340–420 A.D.), புனித அகசுடின் (St. Augustine 354–430 A.D.), பேதியசு (Baethius 475–525 A.D.) போன்றோர் காணப்படுகின்றனர். இந்தக் காலகட்டத்தில் கிறித்தவ எழுத்தாளர்கள் இலத்தீன் இலக்கியத் தொடர்ச்சியைப் பேணி வந்தனர்.
புனித செரோம் பல கிறித்தவ முனிவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கடித இலக்கியம், கிறித்தவ இலக்கியத்தின் சுருக்கமான வரலாறு, உரைகள் போன்றவற்றைப் படைத்துள்ளார். புனித அகசுட்டினும் இதேபோல் பல நூல்களைப் படைத்தார்.
கி.பி. நான்காம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தில் மாக்ரோபியசு தியோடோசியசு (Macrobius Theodosius 400 A.D.), அம்மியனசு மார்சில்லினசு (Ammianus Marcellinus), சுல்பிகசு செவரசு (Sllpicus Severes), பாலசு ஓரோசியசு (Paulus Orosius) போன்றோரின் சில இலக்கிய நூல்களும் வரலாற்று நூல்களும் தோன்றின. அலியசு தோனதசு (Aelius Donatus) இக்காலகட்டத்தின் தலைசிறந்த இலக்கண நூலாசிரியர்.
ஆப்டேடியனசு போர்பிரியசு (Optatianus Porfyrius 326–3350), மாக்னசு அசோனியசு (Magnus Ausonius), கிளாடியக கிளாடியனசு (Claudius Claudianus), ஔரேலியசு புருடெண்டியசு (Aurelius–Prudentius 404 A.D.), உருட்டிலியசு கிளாடியசு (Rutilius Claudius), ஔரேலியசு அகசுட்டினசு (Aurellius Agustinus 354–430 A.D.), சொல்லியசு அப்போலினரிசு (Sollius Apollinaris), புளோசியசு அமிலியசு (Blossius Acmilius Dracontius 484–496) ஆகியோர் குறிப்பிடத் தகுந்த கலை, இலக்கியப் படைப்பாளிகளாகத் திகழ்ந்தனர். ம.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 333)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vkaaxvwz/
தமிழ்“இலத்தீன் இலக்கியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vkaaxvwz/APA
Oliyon Research. (2026). இலத்தீன் இலக்கியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vkaaxvwz/MLA
"இலத்தீன் இலக்கியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vkaaxvwz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment