இராணுவ ஆல்பா
irāṇuva ālpā
இராணுவ ஆல்பா என்பது முதலாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் இராணுவத்தில் பல்வேறு பதவிகளுக்கான அதிகாரிகளையும் படைவீரர்களையும் தேர்வு செய்யும் பொருட்டு அமெரிக்க உளவியல் வல்லுநர்களால் அமைக்கப்பட்ட உளவியல் சோதனைகளைக் குறிக்கும்.
இராணுவ ஆல்பா என்பது முதலாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் இராணுவத்தில் பல்வேறு பதவிகளுக்கான அதிகாரிகளையும் படைவீரர்களையும் தேர்வு செய்யும் பொருட்டு அமெரிக்க உளவியல் வல்லுநர்களால் அமைக்கப்பட்ட உளவியல் சோதனைகளைக் குறிக்கும். இச்சோதனை பகுத்தாய்ந்தறிதல், கட்டளை- களை நிறைவேற்றும் ஆற்றல், கணிதம், செய்தி ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை மதிப்பீடு செய்யப் பயன்பட்டது. இராணுவ ஆல்பாச் (Army Alpha) சோதனைகளை உளவியலார்கள் அமைத்தவுடன் அவற்றின் நம்பகத் தன்மையையும் ஏற்புடைமையையும் சோதித்து அறிந்து கொள்வதற்காக, அவற்றை முன்னரே போரில் பல பொறுப்பான பணிகளைச் செய்த வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கொடுத்தனர். அவர்கள் இச்சோதனைகளில் அதிகப் புள்ளிகளை எடுத்தனர். இச்சோதனை விளைவுகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. இச்சோதனைகள் குழுவினருக்கும் கொடுக்கப்பட்டுப் பயனுள்ளனவாக அறியப்பட்ட காரணத்தால், இவை மற்றத் துறையினராலும் பயன்படுத்தப்பட்டன. கல்வி நிலையங்கள், தொழிலகங்கள் போன்றவை இராணுவ ஆல்பாச் சோதனைகளைத் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டன. கல்வி நிலையங்களில் மாணவர்கள் இச்சோதனைகளின் அடிப்படையில் விரைவாகக் கற்கும் குழந்தைகள், மெதுவாகக் கற்கும் குழந்தைகள் எனத் தரப்படுத்தப்பட்டனர். அமெரிக்கக் கல்விக்கழகம் தர்சுடன் (Thurstone, L.L.) என்பவரைக் கல்வி நிலையங்களில் நுழைவுத் தேர்வுக்குப் பயன்படுத்தக் கூடிய சோதனைகளை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. பல ஆண்டுகள் வரையில் இச்சோதனைகள் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுடன் பயன்படுத்தப்பட்டு வந்தன. நாளடைவில் கல்வித் துறையில் தனிப்பட்ட சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆல்பாச் சோதனைகள் கல்வியறிவுடன் தொடர்புடைய திறன்களை மட்டுமே மதிப்பீடு செய்தன. இயற்கைத் திறன்களும் நாட்டங்களும் இவற்றால் மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆல்பாச் சோதனைகளுள் சில சோதனை முடிவுகள், ஆட்படுநரின் கல்வித் தேர்ச்சியினையும் அவர்கள் அடைந்த திறன்களின் அளவையும் எடுத்துக்காட்டின. வரைபடம் இதனை விளக்கும். ஆனால், உளவியல் சோதனைகள் ஆட்படுநரின் இயற்கைத் திறன்களையும் உள்ளார்ந்த ஆற்றல்களையும் மதிப்பிடல் வேண்டும் என்னும் அடிப்படை உளவியல் விதிக்கு மாறாக ஆல்பாச் சோதனைகள் அமைந்திருந்தன. ‘நுண்ணறிவு’, ‘திறமை’ போன்ற கலைச் சொற்கள் உளவியலில் தனிப்பட்ட பொருளுடையன. இக்காரணங்களினால் இராணுவ ஆல்பா, இராணுவத்தினருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் இராணுவ ஆல்பாச் சோதனைகள் பல மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டுப் புதிய சோதனைகளாக உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வப்பொழுது புதிய சோதனைகள் சேர்க்கப்பட்டுத் தரப்படுத்தப்படுகின்றன. போர் விமானியைத் தேர்ந்தெடுப்பதற்குத் தனிப்பட்ட சோதனைகள் உள்ளன. நுண்ணறிவு பற்றி இசுபியர்மன் கொண்ட பொதுக்கருத்துகள் மாற்றம் அடைந்து ‘சூழமைவுக்கு ஏற்ற நுண்ணறிவு’ என்ற கருத்துப் பரவலாயிற்று. இதன் விளைவாக இக்காலத்தில் இராணுவ உளவியல் சோதனைகள் தனித்துறையாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய இராணுவ உளவியல் சோதனைகள், முப்படைத் துறையினர்களால் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. இவை பல சோதனைகள் அடங்கிய அடுக்குகளாக (Battery) அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பொறுப்புகளை ஏற்க வேண்டிய அதிகாரிகளுக்கு ஏற்ற பல வகைப்பட்ட சோதனைகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பல சோதனைகள் நிலைமைச் சோதனைகளாகவும் குழுத்திட்டச் (Group planning) சோதனைகளாகவும் இருக்கின்றன. விமானப்படையினருக்கான சோதனைகள் உயர்நிலை அதிகாரிகளால் தரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய விமானப்படையின் தேர்வு வாரியம் (Air Force Staff Selection Board) மைசூரில் இயங்குகிறது. இங்கு விமானப்படையினர், பல்வேறு சோதனைகள் நிகழ்த்தப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இராணுவ ஆல்பாச் சோதனையிலிருந்து சில பகுதிகள் எடுத்துக்காட்டாக இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இராணுவ ஆல்பாச் சோதனை (பண்பாட்டுச் சமநிலைப்படுத்தப்பட்டது) பின் வருவதாகும்.
அ) 55½ கிலோ மரத்தூளின் விலை ரூ. 33 ஆனால் 31 கிலோ மரத்தூளின் விலை என்ன?
ஆ) உந்துவண்டியை நிறுத்துவதைக் காட்டிலும் இரயில் வண்டியை நிறுத்துவது கடினமானது. ஏனெனில் இரயில் வண்டி
அ. நீளமானது
ஆ. கனமானது
இ. அதன் நிறுத்திகள் நன்கு இயங்குவதில்லை.
இ) கொடுக்கப்பட்டுள்ள இணைச் சொற்கள் ஒரே பொருளைக் கொடுப்பதாயின் நேர் என்னும் சொல்லின் கீழ்க்கோடிட்டுக் காட்டுக. எதிர்மறைப் பொருளைக் கொடுப்பதாயின் எதிர் என்னும் சொல்லின் கீழ்க் கோடிட்டுக் காட்டுக.
ஈ) கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு ஒரு சொற்றொடர் அமைத்தபின் அச்சொற்றொடரின் பொருள் உண்மையினை எடுத்துரைப்பதாயின் மெய் என்னும் சொல்லின் கீழ்க்கோடிட்டுக் காட்டுக. உண்மையன்று என்றால் பொய் என்னும் சொல்லின் கீழ்க்கோடிட்டுக் காட்டுக.
மக்களுக்கு செருக்கு பகைவர் இருப்பின் இருப்பர் அதிகம், மெய் பொய்; தவறுவதில்லை இல்லாதவர் ஒரு பொழுதும் கவனம், மெய் பொய்; விளக்குகின்றன செயல்கள் மனிதனின் பண்புகளை அவன்; மெய் பொய்.
2) விடையைக் கோடிட்ட இடத்தில் எழுதிக்காட்டுக. பந்து வீச்சு ——— விளையாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
::அ. கால்பந்து ஆ. தென்னிசு இ. பூப்பந்து ஈ. கிரிக்கெட்டு
கல்வித்தகுதி குறைந்தவர்களுக்காகச் சில சோதனைகள் அமைக்கப்பட்டன. அவை இராணுவ பீட்டாச் சோதனைகள் (Army Beta Tests) எனப்பட்டன. இராணுவத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது இச்சோதனைகள் பயன்படுத்தப்பட்டன. இராணுவ பீட்டாச் சோதனையின் பெரும்பாலான பகுதிகள் நுண்ணறிவுச் சோதனைகளின் பகுதிகளைப் போன்று அமைக்கப்பட்டுள்ளன. பீட்டாச் சோதனையில் கட்டளை நிறைவேற்றல் மிகுதியாக இடம் பெறவில்லை. ஏனெனில், பீட்டாச் சோதனை கல்வித் தகுதி குறைந்தவர்களுக்கு நுண்ணறிவுச் சோதனையாகவும் பல்வேறு மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களுக்கு இராணுவச் சோதனைகளாகவும் கொடுக்கப்படுகின்றன. முதல் உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் 1917—18–ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத்தில் 17 இலட்சம் பேர்கள் பல்வேறு பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழுச் சோதனைகளாக இராணுவ ஆல்பா, இராணுவ பீட்டா ஆகிய சோதனைகள் இவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.
இரண்டாம் உலகப்போர் தொடங்கியவுடன் உளவியலார் புதிய குழுச்சோதனைகளை அமைத்தனர். அவற்றுள் இராணுவப் பொது வகைப்படுத்தற் சோதனை (Army General Classification Test) என்பது குறிப்பிடத்தக்கதாகும். இச்சோதனை, நான்கு வேறுபட்ட வகைகளாகவும் எளிதாக மதிப்பீடு செய்யப்படக் கூடியதாகவும் அமைந்திருந்தது. இராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இச்சோதனையின் உதவியால் ஐந்து வகை நுண்ணறிவினர்களாகப் பாகுபாடு செய்யப்பட்டனர். இச்சோதனையில் மிகைப் புள்ளிகள் எடுத்தவர்கள் இராணுவத்தில் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்களாக இருந்தனர் என்பது அறியப்பட்டது. அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இச்சோதனையில் குறைந்தது 110 புள்ளிகளை அடைந்தவர்களே எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
இராணுவச் சோதனைகள் குழுச் சோதனைகளாகக் கொடுக்கப்பட்டதால், தனிமனிதர்களின் திறன்களும் நுண்ணறிவும் மதிப்பீடு செய்யப்பட இச்சோதனைகளில் வாய்ப்பு இல்லை. மேலும், நுண்ணறிவு மிக்கவர்களை மட்டுமே எல்லாப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் நுண்ணறிவுத் திறன் மிகுந்தவர்கள், சலிப்பூட்டக்கூடிய ஒரே தன்மையான இயக்கங்களைக் கொண்ட தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் அத்தகைய தொழில்களை நன்கு செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். அத்தகைய தொழில்களை நுண்ணறிவுத் திறன் குறைந்தவர்கள் திறம்படச் செய்வார்கள். இராணுவ அதிகாரிகள் தம் கீழ்ப் பணிபுரியும் இராணுவ ஊழியர்களைப் பற்றிய நேர்முக அறிவு கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகையவர்களைப் பொறுப்பான பதவிகளுக்கு உயர்த்துவது உகந்தது என்று இவ்வதிகாரிகள் கருத நேரிடலாம். நுண்ணறிவுத்திறன் சோதனைகளில் இவ்வூழியர்கள் மிகுந்த புள்ளிகள் எடுக்கவில்லை என்ற காரணத்தினால் இவர்களை ஒதுக்கிவிடமுடியாது.
போர் விமானியைத் தேர்ந்தெடுப்பதற்குத் தனிப்பட்ட சோதனைகள் உள்ளன. நுண்ணறிவு பற்றி இசுபியர்மன் கொண்ட பொதுக் கருத்துகள் மாற்றம் அடைந்து ‘சூழமைவுக்கு ஏற்ற நுண்ணறிவு’ என்ற கருத்துப் பரவலாயிற்று. இதன் விளைவாக இக்காலத்தில் இராணுவ உளவியல் சோதனைகள் தனித் துறையாக உருவாக்கப்பட்டுள்ளன.
துணை நூல்கள்
Cronbach, Lee J., Essentials of Psychoiogical Testing, (Harper International Edition) Harper & Row, New York, 1970.
Anastasi Anne., Psychological Testing, Coller Macmillan, (International) New York, 1976.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 70)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vk79um8x/
தமிழ்“இராணுவ ஆல்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vk79um8x/APA
Oliyon Research. (2026). இராணுவ ஆல்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vk79um8x/MLA
"இராணுவ ஆல்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vk79um8x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment