ஆட்சியாளர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட மக்களை இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரித்து ஆள நினைப்பது இயல்பு, இரண்டு பிரிவுகளுள் ஒரு பிரிவினர் ஆட்சியாளர்களை ஆதரிப்பர்; பிறிதொரு பிரிவினர் ஆட்சியாளர்களை எதிர்ப்பர். பாராளுமன்ற முறை மக்களாட்சி நிலவக்கூடிய நாடுகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் கடைப்பிடித்த கொள்கை பிரித்தாளும் கொள்கையாகும் (Divide and Rule). ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சியை நிலை நாட்டுவதற்கு இக்கொள்கை அவர்களுக்கு மிகவும் பயன்பட்டது. ஆங்கிலேயர்கள் இககொள்கையைக் கடைப்பிடிக்கவில்லையேல் 1947–ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்திருக்க முடியாது. இந்தியாவில் இந்துக்கள், முகமதியர் ஆகியோர் பெரும்பான்மையோராக வாழ்கின்றனர். இவர்களைத் தவிர, கிறித்துவர், சீக்கியர் போன்ற பிரிவினரும் வாழ்கின்றனர். இவ்வாறு பல பிரிவினர்களைக் கொண்டு இந்தியா திகழ்ந்தாலும், இந்துக்கள் முகமதியர் ஆகியோர் தத்தம் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் வாழ முயற்சி செய்ததன் விளைவே இருநாட்டுக் கொள்கையாகும். இந்தியா அயல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமென்பதில் அனைத்துப் பிரிவினரும் தொடக்க காலத்தில் ஒற்றுமையாகத்தான் செயலாற்றினர். எல்லா மக்களும் தேசிய உணர்ச்சியினால் உந்தப்பட்டனர். தொடக்க காலத்தில் எவ்வித வேறுபாடுமின்றிச் செயற்பட்டாலும், நாளடைவில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கப்படுவதுபோல் உணர்ந்தமையால் இருநாட்டுக் கொள்கை (Two Nation Theory) உருவெடுத்தது. ஆங்கிலேயே அரசு பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டதென்பது வரலாற்றில் உண்மையாகும். இயல்பாகவே வேறுபாடு கொண்ட பிரிவினரை நிலையாகவே பிரித்து ஆளுவதை மெக்கியவல்லியின் தத்துவமாகக் கருதக் கூடாது என்று இங்கிலாந்தின் பிரதமர் டிசுரேலி (Disraeli) கூறியுள்ளார். ஆனால் இக்கூற்றுக்கு மாறாக அவரே இது இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் ஏற்பட உதவுமென்று இந்து – முசுலீம் வேறுபாடு குறித்துக் கூறியுள்ளார். இதுவே பின்னால் வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு உறுநிணையாயிற்று. இந்துக்கள் பெரும்பான்மையோராக இந்தியாவில் உள்ளனர். முகமதியர் சிறுபான்மையோராக உள்ளனர். இந்துக்களுடைய பெரும்பான்மை நிலையால் முகமதியரின் சமயமும் நலனும் பாதிக்கப்படக் கூடுமென அவர்கள் உணர்ந்ததால், முசுலீம் சமயத்தின் தனித்தன்மையைக் காக்கவும், முகமதிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அவர்கள் முயற்சி செய்தனர். இதனால், 1916–ஆம் ஆண்டு ஏற்பட்ட இலக்குமணபுரி ஒப்பந்தத்தின்படித் தனித் தேர்தல் தொகுதிகள் முகமதியர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இவ்வொதுக்கீடு முகமதியரின் நலன்களைப் பேணும் வகையில் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் முகமதியர்களுக்கு ஒதுக்கப்படாத பொதுத் தொகுதி- கள், முகமதியருக்கல்லாத தொகுதிகள், இந்து தொகுதிகள் என்ற மாயை வளரத் தொடங்கியது. பின்னாளில் இதுவே இருநாட்டுக் கொள்கையாக மலர்ந்தது. தேசியப் போராட்டத்தில் முனைந்து இருந்த பொழுது இந்து, முசுலீம் என்ற வேறுபாட்டிற்கு இடமில்லாமலிருந்தது. காங்கிரசுக் கட்சித் தலைவர்கள் நடத்திய தீவிரவாதப் போராட்டத்தில் முசுலீம்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும் காங்கிரசுக் கட்சியின் தலைமையில் இந்துக்களுடைய மேலாதிக்கம் இருந்தாலும், இந்து–முகமதியத் தலைவர்களுக்கிடையே தனிநபர் வேறுபாட்டுணர்ச்சி சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது. முகமதியர் நலன்களைக் காக்க அகில இந்திய முசுலீம்லீகு 1909–ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது படிப்படியாக முசுலீம்களுக்குச் சில நன்மைகளுக்காகப் போராடிக்கொண்டே வந்தது. மாநிலங்களுக்கு 1935–ஆம் ஆண்டைய சட்டம் சுயாட்சியை வழங்கியது. இதற்குப் பின்னர் வெளிப்படையாக முகமது அலி சின்னா இருநாட்டுக் கொள்கையைப் பரப்பத் தொடங்கினார். அவருடைய முயற்சியினால் 1938–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கராச்சியில் நடைபெற்ற சிந்து முகமதியர் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்த இந்த இந்தியக் கண்டம் அமைதியோடு இருக்கவும், கலாச்சார வளர்ச்சிக்கும், பொருளாதார, சமூக மேம்பாட்டிற்கும், அரசியல் சுயநிருணயத்திற்கும் இந்து, முசுலீம் ஆகிய இரு நாடுகள் தேவை என்று அத்தீர்மானம் கூறியது. மேலும் முசுலீம்களுக்கு சட்டப்படியான, தகுதியும் மரியாதையும் வழங்கக் கூடிய அரசியலமைப்புப் பற்றி முசுலீம் லீகு தீர்மானிக்க வேண்டுமென்றும், அந்த அரசியலமைப்பில் முசுலீம்கள் முழுச்சுதந்திரத்தோடு இயங்க வேண்டும் என்றும் அத்தீர்மானம் விளங்கியது. இந்திய அரசுச் சட்டம் (1935) வழங்கிய கூட்டாட்சித் தகுதியைச் செயற்படுத்த வேண்டாமென்றும், இந்தத் தகுதி முகமதியர்களின் நலனைப் பாதிக்குமென்றும் அத்தீர்மானம் வலியுறுத்தியது. எனவே முசுலீம், இந்து என வெளிப்படையாகப் பேசக்கூடிய நிலை உருவாகியிற்று. இலாகூரில் 1940–ஆம் ஆண்டு, மார்ச்சு 22–ஆம் நாளில் நடைபெற்ற அகில இந்திய முசுலீம் லீகு மாநாட்டில் முகமது அலி சின்னா இருநாட்டுக் கொள்கையை மிகவும் தெளிவாக விளக்கினார். முகமதியர் என்போர் சிறுபான்மையினர் அல்லர். அவர்களே ஒரு நாடு என வரையறுக்கலாம் என்று அவர் கூறினார். இந்தியத் துணைக் அமைதி நிலவ வேண்டுமாயின் இந்தியாவைச் சுதந்திரமான இரு தேசிய நாடுகளாகப் பிரிக்க வேண்டும்; அப்போதுதான் மக்கள் மகிழ்வோடு வாழ முடியும்; தேசிய நாடுகள் ஏற்பட்டுவிட்டால், இத்தேசிய நாடுகள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்குமென ஏன் நம்பவேண்டும்; மாறாகப் பன்னாட்டு ஒப்பந்தங்கள் மூலமாக இந்தத் தேசிய நாடுகள் நல்லெண்ணத்தோடும் அமைதியோடும் வாழமுடியும்; ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை ஆதிக்கம் செலுத்தும் நிலை மறையலாம் என்று இருநாட்டுக் கொள்கையின் நன்மை பற்றி அவர் விளக்கினார். சின்னா இலாகூர் மாநாட்டில் ஏன் இருநாட்டுக் கொள்கை அவசியமென்பதைக் கீழ்க்கண்டவாறு விளக்கினார். இந்துசமயம், முசுலீம் சமயம் ஆகியவற்றின் உண்மையான நிலைமையை ஏன் என்னுடைய இந்து நண்பர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர் என்பதை அறிய முடியவில்லை. இந்து, முசுலீம் என்பவற்றை சமயங்கள் என்று சொல்ல முடியாது. இவை இரண்டும் மாறுபட்ட இரண்டு சமூகங்கள். இந்த இரண்டு சமூகங்களும் பொதுவாகச் சேர்ந்து இயங்கக்கூடிய காலம் கடந்துவிட்டது. இரண்டும் சேராமல் இயங்குவதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணம். இதனால், நாடு கூட அழிந்துவிடலாம். எனவே, இதனைத் தக்க நேரத்தில் திருத்தி அமைக்க வேண்டும், இந்துக்கள், முசுலீம்கள் ஆகியோர் மாறுபட்ட சமயத் தத்துவத்தையும், சமூகப் பழக்கவழக்கங்களையும், இலக்கியங்களையும் கொண்டவர்கள். இவர்களுக்கிடையே திருமண உறவுகளோ சேர்ந்து உண்ணும் பழக்கமோ இல்லை. இவர்கள் வெவ்வேறு கருத்துகளையும் கோட்பாடுகளையும் கொண்ட இரண்டு மாறுபட்ட நாகரிகத்தினர். இவர்கள் வாழ்வு முறை வேறுபட்டது. ஒரு சமயத்தின் தலைவர் மற்றொரு சமயத்திற்கு எதிரி. இவர்களை ஒன்றாக வைத்தால், அதாவது, சிறுபான்மையோரைப் பெரும்பான்மையோர் ஆதிக்கத்தில் விட்டால், நாடு சிதறுண்டு போகுமென்று தலைமையுரை நிகழ்த்தினார் முகமது அலி சின்னா. இம்மாநாடு முகமதியர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இதுதான் பாகிசுத்தான் தீர்மானம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இத்தீர்மானத்தில் பாகிசுத்தான் என்று ஒரு சொல் கூட இடம்பெறவில்லை. இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டதால் ஆங்கிலேய அரசு முசுலீம் லீகு, முகமதியர், முகமது அலி சின்னா ஆகியோர்களை மிகவும் நம்பியது. இவர்களது ஆதரவு தேவையென்பதை உணர்ந்து, தங்களது பிரித்தாளும் கொள்கைக்கு இவர்களைப் பக்கபலமாகக் கையாண்டது. கிரிப்சு தூதுக்குழு (1942) இந்தியாவிற்கு வந்து வெளியிட்ட அறிக்கைகளைக் காங்கிரசு, முசுலீம் லீகு ஆகிய இரண்டுமே எதிர்த்தன. இதனையடுத்து ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தைக் காங்கிரசுக் கட்சி நிறைவேற்றியது. அதற்காகப் பேரியக்கமே நடைபெற்றது. காங்கிரசுத் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். முசுலீம் லீகு இதில் கலந்து கொள்ளவில்லை. ஆங்கிலேயர் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்தால் அது காங்கிரசுக்கு வரும்; எனவே காங்கிரசு ஆட்சி அதாவது இந்துக்கள் ஆட்சி ஏற்படும்; அதனால் முசுலீம் மக்கள் பாதிக்கப்படுவர் என்று முசுலிம் லீகினர் கூறினர். இந்து-முசுலீம் வேறுபாட்டை முசுலீம் எழுத்தாளர்கள் அதிகமாக வளர்த்தனர். இவர்களுக்குச் சமீல் உத்தீன் அகமது என்பவர் (Jamil–ud–Din Ahmad) தலைவர். இந்துக்கள் உருவ வழிபாடு செய்வோர், முசுலீம்கள் அதற்கு எதிரானோர். ஒரே தெய்வம் என்ற நம்பிக்கையுடையோர் முசுலீம்கள், அதற்கு மாறானோர் இந்துக்கள். இந்துக்கள் சாதி முறையை விரும்பக்கூடியவர்கள், முசுலீம்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர் என்று வேறுபாடுகளை முசுலீம் எழுத்தாளர்கள் கூறி, வேற்றுமைகளை வளர்த்தனர். முகமது அலி சின்னா மகாத்மா காந்தியை ஓர் இந்துவென்றும், இந்துக்களுக்காகவே போராடுபவர் என்றும், இதனால் முசுலீம் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் புதுதில்லியில் 1943–ஆம் ஆண்டு ஏப்ரல் 24–ந்தேதி நடைபெற்ற அகில இந்திய முசுலீம் லீகு கூட்டத்தில் கூறினார். மகாத்மா காந்தி அடிகள் 1921-ஆம் ஆண்டு அக்டோபர் 12–ஆம் நாள் ‘இளைய பாரதம்’ (Young India) என்ற பத்திரிகையில் எழுதியதை முகமது அலி சின்னா சுட்டிக்காட்டி விளக்கினார். ‘நான் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றை நம்பும் சனாதானி இந்து; வருண ஆசிரம தருமத்தை நம்புபவன்; பசுவைத் தெய்வமாக வணங்கும் நம்பிக்கையுடையவன்; உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாதவன் அல்லன்’ என்பவை காந்தியடிகள் இளைய பாரதத்தில் எழுதியவை. தேர்தல்களில் முகமதியருக்கு வாக்களிக்க வில்லையேல், முகமதியர் இந்துக்களுக்கு அடிமையாகத் தாழ்வுறுவர் என்றும் முகமது அலி சின்னா எச்சரித்தார். எனவே, முசுலீம் தலைவர்கள் முசுலீம்கள் தனியே வாழ வேண்டுமென்பதில் தீவிர அக்கறை கொண்டனர். இந்தியா, பாகிசுத்தான் என்னும் இருநாடுகளாக இந்தியாவைப் பிரிப்பதாகிய இராசகோபாலாச்சாரியார்த் திட்டத்திற்கு மகாத்மா காந்தி அடிகள் ஆதரவளித்தார். இராசகோபாலாச்சாரியார் 1944–ஆம் ஆண்டு ஏப்பிரல் 8–ஆம் நாள் இதனைச் சின்னாவுக்குத் தெரிவித்தார். இராசகோபாலாச்சாரியார்த் திட்டத்தில் சொல்லியிருந்த இந்தியாவோடு சேர விரும்புவோரைக் கணிக்க முசுலிம் பகுதிகளில் வாக்கெடுப்பு எடுப்பதைச் சின்னா உடன்படவில்லை. காந்தி-சின்னா பேச்சு வார்த்தை நடைபெற்றது. பலன் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் 1945–ஆம் ஆண்டின் இடைக்கால அரசாங்கத்தில் இந்துக்களும் முசுலீம்களும் பங்கு பெற வாய்ப்பளிக்கும் இலியாகத்து – தேசாய் ஒப்பந்தத்தையும் முகமது அலி சின்னா ஏற்றுக்கொள்ளவில்லை. தனிநாடு முசுலீம்களுக்கு வேண்டுமென்ற கொள்கையைச் சின்னா தளரவிடவேயில்லை. அமைச்சரவைத் தூதுக்குழு (Cabinet Mission) பாகிசுத்தான் கோரிக்கையை மறுத்தது. அந்தத் தூதுக் குழுவின்படி சவகர்லால் நேரு இடைக்கால அரசாங்கத்தை 1946, ஆகசுட்டு, 16–இல் அமைத்தார். முசுலீம் ஆட்சி செலுத்திய வங்காளம், சிந்துப் பகுதிகளில் பொது விடுமுறையாக அறிவித்தது முசுலீம் அரசு. இதனால், பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. இனக் கலவரங்கள் தோன்றின. வன்முறை தலைதூக்கித் தொடர்ந்தது. இதனால், ஆங்கிலேய அரசு சூன் 1948க்குள் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கும் உறுதியை அளித்தது. மௌண்ட்பாட்டன் பிரபு தலைமை ஆளுநராகப் பதவி ஏற்றார். காங்கிரசு, முசுலீம் லீகின் தலைவர்களோடு பேசினார். பின்னர் இந்தியாவை இந்தியா, பாகிசுத்தான் என்று இரண்டாகப் பிரிக்கும் கொள்கையை வெளியிட்டார். அதன்படி இரண்டு நாடுகள் உருவாக்கப்பட்டன. இரு நாட்டுக் கொள்கை தானாகவே மனதில் உதித்ததெனினும், அது அயல் ஆங்கிலேயே அரசாங்கம், முசுலீம் தலைவர்கள் ஆகியோரின் விடாமுயற்சியால் வெற்றியடைந்தது. தலைவர்களிடம் விட்டுக் கொடுக்கும் தன்மையிருந்தால் ஒருவேளை இந்து முசுலீம் ஒன்றாக வாழ இந்நேரம் பழகியிருப்பர். இருநாடுகள் தோன்றியிருக்கா. எம்.ப.