உடைமையும் அரசியலுரிமையும்
uṭaimaiyum araciyalurimaiyum
சட்டம், நீதி, உரிமை, அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கம் முதலிய கருத்துகளை முதன்முதலில் ஆராய்ந்து திட்டவட்டமான இலக்கணங்களை வகுத்தவர்கள் பண்டைய கிரேக்க அரசியல் சிந்தனையாளர்களாகிய பிளேட்டோ, அரிசுடாட்டில் முதலியோர் ஆவர்.
சட்டம், நீதி, உரிமை, அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கம் முதலிய கருத்துகளை முதன்முதலில் ஆராய்ந்து திட்டவட்டமான இலக்கணங்களை வகுத்தவர்கள் பண்டைய கிரேக்க அரசியல் சிந்தனையாளர்களாகிய பிளேட்டோ, அரிசுடாட்டில் முதலியோர் ஆவர். இவர்கள் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தனர். இவர்கள் தாம் வாழ்ந்த நகரரசு (City State) என்னும் சமூக அமைப்பையும், அதனுடைய சில தனிப்பட்ட இயல்புகளையும் பின்னணியாக வைத்து இக்கருத்துகளை ஆய்வு செய்தனர். சுய சிந்தனையாளராகிய சாக்ரட்டீசின் (Socrates) மாணவராகிய பிளேட்டோ (Plato) கி.மு. 427–ஆம் ஆண்டு முதல் கி.மு. 347–ஆம் ஆண்டு வரை ஏதென்சு (Athens) நகரரசில் வாழ்ந்து, அரிசுடாட்டில் போன்ற சிறந்த மாணவர்களுக்குத் தமது கழகத்தில் (Academy) தமது அரசியற் கருத்துகளை விளக்கி (இலட்சியக்) குடியரசு (Republic), அரசியலறிஞர் (Statesman), சட்டங்கள் (Laws) முதலிய அரிய நூல்களை எழுதினார். ஓர் இலட்சியக் குடியரசு நாட்டில் அரசியலறிவு அல்லது மெய்யுணர்வு பெற்றவரே ஆட்சி செய்தல் வேண்டும்; அறிவுடையோரே ஆளுதல் வேண்டும்; அறிவுடைமையே பண்பும் இன்பமும் ஆகும் என்ற கருத்துகளை அவர் கூறுகிறார். ஆளுதல் என்பது பிழையற உணர்ந்த அறிவுடைமை ஒன்றையே சார்ந்திருக்கும் தொழில் ஆகும். ஒவ்வொருவரும் தத்தம் தேவைகளை மற்றவர்களின் வாயிவாக ஒருவருக்கொருவர் நிறைவு செய்து கொள்ளுதலே சமூகம் ஆகும். இவை இரண்டும் பிளேட்டோவின் மையக் கருத்துகள் ஆகும். நீதி (Justice) என்பது அறிவாற்றல், உணர்ச்சி யாற்றல், வீரம் அல்லது ஊக்கப் பண்பு ஆகிய மூவகை இயல்புகளையுமுடைய மனித சமுதாயத்தில் யாவரிடையேயும் நல்லிணக்கத்தையும் (Harmony) நல்ல ஒழுங்கையும் (Discipline) ஏற்படுத்தும் பண்பு (Virtue) என்று பிளேட்டோ தமது இலட்சியக் குடியரசு என்ற நூலில் கூறுகிறார்.
குடியரசு என்ற நூலில் பிளேட்டோ கூறும் உடைமை உரிமை பற்றிய கருத்து
இலட்சியக் குடியரசில் அறிவாற்றல் மிக்கோரே ஆளுவோராகையால், அவர் காவலர் (Guardian Class) வகுப்பையும், வீரம் அல்லது ஊக்கப் பண்புடையோர் போர்வீரர் வகுப்பையும் (Warrior Class), உணர்ச்சி ஆற்றலுடையோர் தொழிலாளர் வகுப்பையும் (Workers Class) சேர்ந்தவராவர். காவலராதற்குரிய பயிற்சி பெறுதற்குச் சில தகுதிகளை உடையவர்கள் குடிமக்களிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும். நாட்டிற்கு நன்மை செய்யக் கூடிய மனவளர்ச்சியும், உணர்ச்சி காரணமாக நல்ல நோக்கத்தினின்றும் வழுவிவிடாத மனஉறுதியும் உடையவர்களாக ஆகும் பொருட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும். போர் வீரர்களும் இவ்வாறே தகுதியுடைய குடிமக்களிடையேயிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி கொடுக்கப்படுதல் வேண்டும். இலட்சியக் குடியரசிஸ் காவலரையும், போர் வீரர்களையும் பொறுத்தவரையில் தனியார் உடைமை உரிமை இல்லை. பொதுவுடைமையே (Communism) நடைமுறையிலிருக்கும். காவலர் நீதிபதிகளாக அலுவல் செய்யவராதலால் அவர்கள் மனித இயல்பை அறிந்தவராகவும், நற்பண்பு எது என்றும் தீய பண்பு எது என்றும் அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும். தங்களுடைய ஆன்மா, உடல் ஆகிய இரண்டையும் அவர்கள் பேணுதல் வேண்டும். ஆளும் காவலரும் போர் வீரரும் தமக்கு இன்றியமையாத தேவைக்குக் கூடுதலாகத் தமக்கெனச் சொந்த உடைமை எதுவும் வைத்துக் கொள்ளுதல் கூடாது; தமக்கெனச் சொந்த வீடு வைத்துக்கொள்ளுதல் கூடாது. தமது தொழிலுக்காக அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை ஆண்டுதோறும் (ஓராண்டு வாழ்க்கைக்குப் போதுமான அளவில்) குடிகளிடமிருந்து பெறுதல் வேண்டும். அளவு கடந்த செல்வநிலையும் வறுமை நிலையும் மனிதப் பண்பை அழித்து விடுகின்றன. செல்வம் ஆடம்பரப் போக்கையும் சோம்பலையும் வளர்க்க, வறுமை சிறுமையையும் கயமையையும் வளர்க்கிறது. காவலர் போர் வீரர் வகுப்பிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுபவராதலால், போர்வீரர் வகுப்புக்கும் உடைமை உரிமை இல்லை.
பிளேட்டோ தமது பொதுவுடைமைக் கருத்தை மாற்றுதல்
பிளேட்டோ தமது முதல் நூலில் தனியார் உடைமை உரிமையை மறுத்துப் பொதுவுடைமையை ஆதரித்ததுபோலவே, காவலருக்கும் போர் வீரருக்கும் திருமண உறவை மறுத்து, குடும்பமும் பொதுவுடைமையாக இருத்தல் வேண்டுமென்று கூறினார். பின்னர் இக்கருத்துகளை அவர் தமது பிற்கால நூலாகிய ‘சட்டங்கள்’ என்ற நூலில் மறுத்து, சிறந்த அறிவும் பண்புமுடைய மக்களைப் பெறுவதற்குக் குடும்ப வாழ்வே ஏற்றதாகையால் நிலையான திருமண முறையும் தனிக்குடும்ப வாழ்க்கை முறையும் இன்றியமையாதவை என்றும், பொதுவுடைமை நடைமுறைக்கு ஒத்து வாராதாகையால் தனியார் சொத்து உரிமைக் கொள்கையே ஏற்றது என்றும் ஒப்புக் கொள்ளுகிறார். இவ்வாறு அவர் தனியார் சொத்து உரிமைக் கொள்கையை ஒப்புக் கொண்டாலும், ஒரு பொருளாதாரச் சமத்துவக் கொள்கையை மனத்தில் வைத்து அவர் மேலும் சில கருத்துகளைக் கூறுகிறார்.
சமமான சொத்துரிமை இன்மையினால் விளையும் தீமைகளினின்றும் நாட்டைப் பாதுகாப்பதற்காகச் சில தற்காப்புகள் இருத்தல் வேண்டும். அரசியலில் எழும் பூசல்களெல்லாம் பொருளாதார அடிப்படையில் காணப்படுகின்றன. அமைதியான அரசில் தீவிரமான வறுமையோ தீவிரமான செல்வநிலையோ இருத்தல் இயலாது. எனவே பொருளுடைமைகளைச் சமமாக ஆக்கும் பொருட்டுச் சட்டங்கள் இயற்றப்படுதல் வேண்டும். நாட்டின் விளைநிலங்கள் குடிமக்கள் யாவருக்கும் சமமான பங்குகளில் கிடைப்பதற்கு வகை செய்தல் வேண்டும். வேறு வழியில் செல்வம் சிலர் கைவசம் திரண்டுவிடாமல் தடுப்பதற்காகக் குடிமக்கள் வணிகச் செயல்களிலீடுபடாமல் தடுத்தல் வேண்டும். அயற் செலாவணிக்குத் தேவைப்படும் தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள் அரசாங்கக் கருவூலத்தில் மட்டும் சேகரித்து வைக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு சட்டங்கள் செய்யப்பட்டாலும், சொத்து உடைமையில் சமத்துவம் ஏற்படாது. ஆகையால் தவிர்க்க இயலாத அளவில் சமமில்லாத சொத்துடைமை தோன்றும். அப்போது அதை ஆதாரமாகக் கொண்டு அரசாங்கம் அமைக்கப்படுதல் வேண்டும். அரசாங்க அலுவல்களெல்லாம் சொத்துத் தகுதியின் அடிப்படையில் பிரித்தளிக்கப்படுதல் வேண்டும். சொத்து உடையவர்கள் நான்கு வகுப்பார்களாகப் பிரிக்கப்படுதல் வேண்டும். முதல் வகுப்பில் அரசாங்கத்தால் பாதுகாப்பாகச் சமபங்கீட்டு முறையின் வாயிலாக நிலம் பெற்றவரும், இரண்டாம் வகுப்பில் முதலாம் வகுப்பாரொருவரைப்போல் இருமடங்கு சொத்துடையவரும், மூன்றாம் வகுப்பில் மூன்று மடங்கு சொத்துடையவரும், நான்காம் வகுப்பில் நான்கு மடங்கு சொத்துடையவரும் இருத்தல் வேண்டும். நான்கு மடங்குக்கும் கூடுதல் மதிப்புள்ள சொத்துடையவரிடமிருந்து அச்சொத்து அரசாங்கத்தால் விசாரணையின்றியே பறிமுதல் செய்யப்படுதல் வேண்டும்.
பிளேட்டோவின் கருத்தைப் பற்றிய மதிப்பீடு
பிளேட்டோ முதலில் கூறிய பொதுவுடைமைக் கருத்து (சொத்து உரிமையைப் பொறுத்த பொதுவுடைமைக் கருத்து) அவர்காலத்து இசுபார்ட்டா (Sparta) நகரரசிலிருந்து சமுதாய, பொருளாதார, அரசியல் அமைப்புகளிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். இந்தக் கருத்தை அவர் புகழ்ந்தாலும், அவருடைய அறிவிற்சிறந்த மாணவராகிய அரிசுடாட்டில் அதை மறுத்துக் குடும்ப உரிமையும், தனி உரிமையுமே சிறந்த அரசுக்கு ஆதாரமானவை என்று சுட்டிக் காட்டினார். சமபங்கீட்டுக் கொள்கையோடிணைந்த பிளேட்டோவின் பிற்கால உடைமை உரிமைக் கோட்பாடும், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சொலோன் (Solon) என்ற அறிஞர் ஏதென்சு நகரரசில் நிறுவிய அரசியலமைப்புக் கோட்பாட்டிலிருந்தே வருவிக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டையும் நடைமுறையில் செயற்படுத்துவது எளிதன்று. எனவே சொலோனின் அரசியலமைப்பும் வலுவிழந்தது. குறிக்கோளளவில் காணும்போது, நீதியான அரசுக்கு ஆதாரமாக உள்ளது. தீவிர நிலையிலில்லாத சமமான சொத்துரிமை என்ற பிளேட்டோவின் கருத்தை அரிசுடாட்டிலும் பிற்கால பல அரசியற் சிந்தனையாளரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். எனினும் தனியார் தன் முயற்சி உரிமைக் கொள்கையும், பொருள் பெருக்குவதற்குரிய பல அறிவியல் புதிய முறைகளும் பெருகியுள்ள இக்காலத்தில் பிளேட்டோ கூறும் சமமான சொத்துரிமைக் கோட்பாட்டிற்கும், பொருள் சேர்க்கும் இக்கால நோக்கத்துக்கும் முரண்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது.
துணை நூல்கள்
Barker, Ernest, Greek Political Theory: Plato and His Predecessors, London, 1951.
Barker, Ernest, The Laws of Plato, Manchester, 1920.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 827)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vh9azdgs/
தமிழ்“உடைமையும் அரசியலுரிமையும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vh9azdgs/APA
Oliyon Research. (2026). உடைமையும் அரசியலுரிமையும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vh9azdgs/MLA
"உடைமையும் அரசியலுரிமையும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vh9azdgs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment