இந்தியக் குடியரசின் அரசியல் அமைப்புத் திட்டத்தை உருவாக்கிய பேரறிஞர்; அரிசன மக்களின் தனிப் பெரும் தலைவர். மராட்டிய மாநிலத்திலுள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் மோ என்னும் வட்டத்தில் அம்பாவடே என்னும் சிற்றூரில் இவர் 1891–ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 14–ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் இராம்சி மலோசி சக்பால்; தாயார் பெயர் பீமாபாய். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இராம்சி சக்பால் இராணுவப் பணியால் ‘சுபேதார் மேசர்’ என்னும் தகுதியைப் பெற்றார். இவர்களுக்குப் பதினான்கு குழந்தைகள் பிறந்தன. பதினான்காம் குழந்தையாகப் பிறந்தவரே ‘பீமாராவ் இராம்சி’ என்று அழைக்கப்பட்ட அம்பேத்கர் (Ambedkar). தீண்டாமைக் கொடுமை, அறிவுக் கோயிலான பள்ளியிலும் குடிகொண்டிருப்பதைப் பீமாராவ் இராம்சி கண்டார். பள்ளியில் மாணவர்கள் உட்கார மரப்பலகைகள் உண்டு. ஆனால், உயர்ந்த சாதி மாணவர்களே அவற்றில் உட்காரலாம். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளியின் ஒரு மூலையில் கோணிப் பையைத் தரையில் விரித்து உட்கார வேண்டும். ஆசிரியர்களோ உயர்சாதி மாணவர்களோ தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களைத் தீண்ட மாட்டார்கள். அவர்கள் வைத்திருக்கும் பொருள்களையும் தொட மாட்டார்கள். அரசுக்குச் சொந்தமான எல்பின்சுடன் (Elphinston) உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் அம்பேத்கர் தீண்டாமையால் பல்வேறு கொடுமை- களுக்கு ஆனானார். அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர் அம்பேத்கர் என்ற பெயர் கொண்டவர். இவர் பார்ப்பன இனத்தவர். பீமாராவ் இராம்சி படிப்பில் காட்டிய ஆர்வத்தையும் கூர்மையான அறிவுத் திறனையும் கண்ட ஆசிரியர் அம்பேத்கர், பீமாராவ் மீது அன்பு செலுத்தினார். படிக்கவேண்டிய நல்ல நூல்களைக் கொடுத்தும் தாம் கொண்டுவந்த உணவைக் கொடுத்தும் அவர் பீமாராவுக்கு உதவினார். சிறு வயதில் நல்வழிப்படுத்திய ஆசிரியராகிய அம்பேத்கர் செய்த உதவிகளுக்கு அடையாளமாகத் தமது பெயருடன் ‘அம்பேத்கர்’ என்னும் பெயரைப் பீமாராவ் இணைத்துக் கொண்டார். பீமாராவ் இராம்சி அம்பேத்கர் என்ற பெயர் நாளடைவில் சுருக்கம்பெற்று அம்பேத்கர் என்று வழங்கலாயிற்து. அம்பேத்கருக்குப் பள்ளிப் படிப்பில் இருந்து தொடர்ந்து உதவி செய்து வந்தவர் கிருட்டிணாசி அர்சுன் கெலுசுகர் என்பவராவர். அம்பேத்கரின் மேற்படிப்புக்குப் பரோடா மன்னர் சாயாசி கெயிக்வாடு (Jayaji Gaikwad) என்பவரின் உற்வியைப் பெறத் துணை செய்தவரும் கெலுசுகரே யாவார். அக்காலத்திலேயே சமூகச் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டவர் பரோடா மன்னர். அவர் உதவியால் மேற்படிப்பிற்காக அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். படித்து முடித்தபின் பரோடா சமசுதானத்தில் பத்து ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் அம்பேத்கர் அமெரிக்கா சென்று, அங்குள்ள கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் பயின்றார். ‘பண்டைய இந்தியர் வாணிகம்’ என்னும் ஆய்வுக் கட்டுரைக்காக 1915–ஆம் ஆண்டு முதுகலை (எம்.ஏ.) பட்டம் பெற்றார். தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டு ‘இந்தியாவின் தேசியப் பங்கு-வரலாறு மற்றும் ஆய்வுக் கட்டுரை’ எனும் ஆய்வுத் தொகுதியைக் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் தந்து, அவ்வாய்வுக் கட்டுரைக்காக டாக்டர் பட்டம் பெற்றார். இதே ஆய்வுக் கட்டுரைதான் பிற்காலத்தில் “ஆங்கில இந்தியாவின் மாநில நிதி வளர்ச்சி”, எனும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. டாக்டர் பட்டம் பெற்றபின் ஒப்பந்தப்படி பரோடா சமசுதானத்தில் அம்பேத்கர் “இராணுவச் செயலாளர்” பொறுப்பை ஏற்றார், தீண்டாமையைப் பெரிதும் கடைப்பிடிக்கும் மக்களிடையே இருந்து அம்பேத்கரால் பணியாற்ற முடியவில்லை. அவருக்குத் தங்க இடம் கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. பரோடாவில் பணியாற்ற முடியாத நிலையில் அவர் அம்பேத்கர் பம்பாய்க்குத் திரும்பி, சைடன் (Sidon) கல்லூரியில் பொருளாதாரத் துறையில் பகுதிநேரப் பேராசிரியராகப் பணியாற்றினார். பம்பாய்ச் சைடன் கல்லூரியில் பணியாற்றியபோது கோலாப்பூர் மன்னரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. அவருடைய உதவியுடன் “ஊமைகளின் தலைவன்” என்ற இதழைத் தொடங்கினார் அம்பேத்கர். அம்பேத்துர் இலண்டன் சென்று மேலும் படிக்க விரும்பினார். நேவல் பதேனா என்ற தம் நண்பரிடமும் கெலுசுகரிடமும் நிதி உதவி பெற்று இலண்டன் சென்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், சட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் பயிலுவதற்கு அம்பேத்கர் பதிவு செய்து கொண்டார். இலண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்தைத் தம் படிப்புக்காக முழுநேரமும் பயன்படுத்திக் கொண்டார் அம்பேத்கர். இவ்வாறு ஓய்வின்றிக் கற்று, அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிசுடர் பட்டமும் பெற்றார் அவர். ‘நாணயத்தின் சிக்கல்’ என்னும் ஆய்வுக் கட்டுரையை அவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அளித்து ‘அறிவியல் வல்லுநர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். இந்தியாவிற்குத் திரும்பிய அம்பேத்கர் வழக்கறிஞர் தொழிலை நடத்தியபோதும் சமூகத் தொண்டையே முதன்மையாகக் கொண்டார். அவர் தாழ்த்தப்பட்ட ஏழைகளுக்காகப் பணம் வாங்காமல் நீதிமன்றத்தில் வாதாடி நீதி பெற்றுத் தந்தார். தாழ்த்தப்பட்டவரின் நலனுக்காக அம்பேத்கர் கழகம் ஒன்றைத் தொடங்கினார்; அதன் சார்பில் மாணவர் விடுதி ஒன்றையும் ஏற்படுத்தினார் பம்பாய் நகரில் படிப்பகமும் விளையாட்டுக் கழகமும் நிறுவினார். இந்நிலையில் அவர் பம்பாய் மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராய் ஆளுநரால் அமர்த்தப் பெற்றார். இந்தியாவிலேயே சட்டமன்றத்திற்கு முதன் முதலாக அமர்த்தப்பெற்ற தாழ்த்தப்பட்ட இனத்தவர் டாக்டர் அம்பேத்கரேயாவார். மேலவை உறுப்பினரானதைப் பாராட்டி நடந்த கூட்டத்தில் தமக்களித்த பணமுடிப்பை அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் கழகத்திற்கே அளித்தார். அம்பேத்கர் செய்த தொண்டின் திறத்தால் 1923–ஆம் ஆண்டு எசு.கே. போலே (S.K. Bhole) என்பார், அரசு நிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளி, மருத்துவமனை, அலுவலகம், நீர்நிலை, நீதிமன்றம் போன்ற பொது அமைப்புகளெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோருக்கும் உரிமையுள்ளதாக்கப்பட வேண்டுமெனத்தீர்மானம் கொணர்ந்தார். அதனை அரசு ஏற்றது. அதுவே நாட்டில் முதல் முறையாகத் தீண்டாமை ஒழிப்புப் பற்றிய முதல் ஆணையாகத் திகழ்ந்தது. அரசின் தீர்மானத்திற்கு எதிராகப் பம்பாய் மாநிலத்தில் மகாத்து என்னும் ஊரிலுள்ள நகரசபை செயற்பட்டு வருவதை அம்பேத்கர் அறிந்தார். பொதுக் குளத்தைத் தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தக் கூடாது என்று மற்றோர் ஆணையையும் அந்த நகரசபை நிறைவேற்றியது. இதை அறிந்த அம்பேத்கர் 1927–ஆம் ஆண்டில் இரண்டு நாள் மாநாடு ஒன்றைக் கூட்டினார். இரண்டாம் நாள் மாநாட்டுப் பந்தலில் இருந்து ஊர்வலம் கிளம்பிப் பொதுக் குளத்தை அடைந்தது. முதலில் டாக்டர் அம்பேத்கர் குளத்தில் இறங்கித் தண்ணீரை அள்ளிப் பருகினார். பின் அனைவரும் பருகினர். பொதுக் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் நீர் எடுத்தனர் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட சாதி இந்துக்கள் மனம் கொதித்தெழுந்தனர். சிறு சிறு குழுக்களாகத் திரும்பிய தாழ்த்தப்பட்டோரைக் கழி, கத்தி, அரிவாள்களைச் கொண்டு தாக்கிக் குருதி பெருக அடித்து நொறுக்கினர். செய்தியறிந்த அம்பேத்கர் பதறி ஓடி வந்தார். பழிக்குப் பழி வாங்கத் துடித்த மக்களை அமைதி கொள்ளச் செய்தார். தாக்குதல் நடத்தியோர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். அதன் பின்னரும் அவ்வூரின் சாதி இந்துக்கள் நீதிமன்றத்தில் ‘ஊர்க்குளத்தில் தாழ்த்தப்பட்டவருக்கு உரிமை இல்லை’ என்று வழக்குத்தொடுத்து வாதாடினார்கள். இறுதியில், ‘தாழ்த்தப்பட்டவருக்கு ஊர்க்குளத்தில் உரிமை உண்டு’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அம்பேத்கர் 1928–ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். பொதுப் பணிகளில் ஈடுபட்டதால் முன்பு தாம் மேற்கொண்ட வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இந்த ஆண்டில்தான் சைமன்குழு இந்தியாவிற்கு வந்தது. அக்குழுவில் இந்தியர் எவரும் இல்லாததால் சைமன் குழுவிற்கு உதவிபுரிய டாக்டர் அம்பேத்கர் உட்பட்ட ஓர் இந்தியக் குழுவை அரசு அமர்த்தியது. டாக்டர் அம்பேத்கரும் சைமன் குழுவிடம் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையினை விளக்கினார். அம்பேத்கரின் பொதுத் தொண்டு தொடர்ந்தது. அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக மேலும் மாணவர் விடுதிகளைத் தொடங்கினார். அவர் தூண்டுதலால் அரசும் ஐந்து மாணவர் விடுதிகளைத் தொடங்கியது. பின்னர் அவர் சித்தார்த்தர் கல்லூரியை நிறுவினார்; மக்கள் கல்விக்கழகம் என்ற அமைப்பையும் தொடங்கினார். இந்தியர்க்கு உரிமை வழங்குவது பற்றி முடிவெடுக்க ஆங்கில அரசு இலண்டன் நகரில் இருமுறை வட்டமேசை மாநாடு கூட்டியது. அம்பேத்கர் இரு மாநாடுகளிலும் கலந்துகொண்டு, தாழ்த்தப்பட்டோரின் நிலையை எடுத்து விளக்கினார். தாழ்த்தப்பட்டோருக்குத் தனிச் சலுகைகள் வழங்க அரசும் முடிவு செய்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உறுப்பினர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களே தேர்வு செய்யும் உரிமையை அம்பேத்கர் வேண்டினார். இவரது வேண்டுகோளை எதிர்த்து எரவாடாச் சிறையில் காந்தியடிகள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். 21 நாள் வரை காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தார். அடிகளாரின் உடல்நிலை சீர் கெட்டது. டாக்டர் இராசேந்திர பிரசாத், இராசாசி போன்றவர்களின் முயற்சியால் அம்பேத்கரும் காந்தியடிகளும் எரவாடாச் சிறையில் சந்தித்தனர். அவ்விருவரும் 1932–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 24–ஆம் நாளில் செய்து கொண்ட ‘பூனா ஒப்பந்தம்’ குறிப்பிடத்தக்கதாகும். அம்பேத்கர் பின்னர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். வங்காள சட்டமன்றத்திலிருந்து அரசியல் அமைப்புச் சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்புச் சபை 1947–ஆம் ஆண்டில் - ‘தீண்டாமை பெருங்குற்றம்; அதைக் கடைப்பிடிப்பவர்கள் குற்றவாளிகள்’ என்று அறிவித்தது. அம்பேத்கரின் குறிக்கோள் ஓரளவு நிறைவேறியது. நேரு 1947–ஆம் ஆண்டு தாம் அமைத்த அமைச்சரவையில் அம்பேத்கரைச் சட்ட அமைச்சராக்கினார். இந்தியாவின் அரசியல் சட்டம் அமைப்பதற்கான முன் வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் அமர்த்தப்பட்டார். வரைவுக் குழுவில் உறுப்பி- னர்கள் பல காரணங்களால் உதவாவிடினும் அம்பேத்கர் தனியாகவே அரசியல் சட்டத்தை இயற்றி அளித்தார். பின்னர் அம்பேத்கர் கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையிலிருந்து விலகினார். இவர் பிறகு புத்த சமயத்தில் அக்கறை செலுத்தினார். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடந்த புத்த சமய மாநாடுகளில் அவர் கலந்து கொண்டார். அவர் 1956–ஆம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களோடு சாதிப் பிரிவற்ற புத்த சமயத்தைத் தழுவினார். அம்பேத்கரின் திறமையை அறிந்து அமெரிக்காவின் கொலம்பியாப் பல்கலைக்கழகம் அவருக்குச் சிறப்புப் பட்டம் அளித்தது; உசுமானியாப் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் வழங்கியது. அம்பேத்கரின் மக்கள் ஐவருள் இப்போது இருவர் உளர். அம்பேத்கர் 1956–ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 6–ஆம் நாள் மறைந்தார். இந்திய வரலாற்றில் டாக்டர் அம்பேத்கர் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றார். டாக்டர் அம்பேத்கரின் சிறப்பான பணியினைப் பாராட்டும் வகையில் தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்னால் அவருடைய முழு உருவச் சிலையினை இந்திய அரசே நிறுவியுள்ளது.பி.வி. துணை நூல்கள் Keer, Dhananjay, “Dr. Ambedkar”. Thangaraj, P., “Selected Thoughts of Dr. Ambedkar”. இராமசந்திரன், க.நா., “டாக்டர் அம்பேத்கர்” நாட்டுக்குழைத்த நல்லவர், “டாக்டர் அம்பேத்கர்” பழனியப்பா பதிப்பகம், சென்னை. தமிழ்மறையான், “படமும் பாடமும்”. பூவண்ணன், “டாக்டர் அம்பேத்கர்”.