இது லெகுமினேசி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். சிகைக்காய் மரத்திற்குச் சீயக்காய் மரம், நல்ல சீயக்காய் மரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. இம்மரத்திற்கு அக்கேசியா கோன்சின்னா (Acacia concinna) என்பது தாவரப் பெயராகும். அக்கேசியா சின்னேட்டா (Acacia sinnata), மைமோசா கோன்சின்னா (Mimosa concinna), அக்கேசியா கோன் சின்னா வார் ரகேட்டா (Acacia concinna var ragata) என்றும் பல பெயர்களுண்டு. இது ஒரு முள்ளுடைய மரமாகும். வெப்ப மண்டலக் காடுகளில் குறிப்பாகத் தென்னிந்தியப் பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவைத் தவிர இலங்கை, சீனா, நேபாளம், மலேசியா, நியூகினியா, பர்மா முதலிய இடங்களில் 1400 மீ உயரப் பகுதி வரை காணலாம். மரத்தின் உலர்ந்த நெற்றுகளே (pods) சிகைக்காய்த் தூள் தயாரிக்கப் பயன்படும். உலர்ந்த நெற்றுகளை நன்கு தூள் செய்து, மயிரிலுள்ள அழுக்கு, உடலிலுள்ள எண்ணெய்ப் பசை முதலியவற்றை நீக்குவதற்குப் பயன்படுத்தலாம். இது உடல் தோலை உலர விடுவதில்லை. வங்காள மக்கள் சிகைக்காய் விதைகளை மீன்களைக் கொல்லப் பயன்படுத்துகின்றனர். காயின் முதிர்ச்சிக்கேற்றவாறு, சிகைக்காய் தூள் கிடைப்பது மாறுபடும். சிகைக்காயில் 5% சப்போனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. மரம். சிகைக்காய் மரம் முள் நிறைந்தது; 15—20 மீ உயரம் வளரும். கிளையின் நுனி மஞ்சள் நிறமாகவும், அடிப்பகுதி பளபளப்பாகவும் இருக்கும். மரத்தின் மீது பல முண்டுகள் இருக்கும். முள் கொக்கி போல் வளைந்திருக்கும். இலைகள் 10 செ.மீ. நீளத்தில் மாற்றடுக்கத்தில் தோன்றியிருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 8—15 இரட்டைக் காம்புகள் இருக்கும். இலை 1.5—4.5 செ.மீ. நீளத்திலிருக்கும். இதில் ஒவ்வொன்றிலும் 3.5—12 மி.மீ. அளவுடைய 15—35 இரட்டைச் சிற்றிலைகள் அமைந்திருக்கும். இலை ஓரம் முழுமையாகவும், முனை மழுங்கியும் இருக்கும். இலைக் காம்பு 3 செ.மீ. நீளமுடையது. இதன் கீழ்ப் பகுதியிலும் மஞ்சரிக் காம்பிலும் சிறு சிறு முள்களைக் காணலாம். இலையடிச்செதில்கள் முட்டை வடிவாக இலைக் கக்கத்திலோ, தழை வளர்ச்சியின் நுனியிலோ தோன்றும். மஞ்சரித் தலையின் குறுக்களவு 10 செ.மீ. ஆகும். மஞ்சரிக் காம்பு 2 செ.மீ. நீளமானது. பூவடிச் செதில் முட்டை வடிவானது. பூக்காம்புச் செதில் ஒரு மி.மீ. அளவுடையது. ஒவ்வொன்றும் 2 மி.மீ குறுக்களவில் இருக்கும். புல்லி வட்டக் குழல் நீண்டும், ஐந்து கதுப்புகளைக் கொண்டும் இருக்கும். பல மகரந்தக் கேசரங்கள் உள்ளன. சூல் பை வட்ட வடிவமாகப் பளபளப்பாக இருக்கும். சூல் தண்டின் நீளம் 4.5 மி.மீ ஆகும். பிப்ரவரி—ஏப்ரல் மாதங்களில் பூக்களையும், மார்ச்—ஏப்ரல் மாதங்களில் காய்களையும் காணலாம். நெற்று ஒவ்வொன்றும் 6—10 விதைகளைப் பெற்றிருக்கும். பொருளாதாரப் பயன்கள். இம்மரத்தின் தளிர் இலைகள் உணவில் பயன்படும். பட்டையைத் தோல் பதனிடுவதற்குப் பயன்படுத்தலாம். மீன் பிடிக்கும் வலை, கயிறு முதலியவற்றிற்குச் சாயம் போடவும் பட்டை உதவும். சிகைக்காய் மரத்தின் இலை, நெற்று ஆகியன மருந்தாகப் பயனாகின்றன. உடலிலுள்ள பேன், பொடுகு இவற்றைப் போக்க, சிகைக்காய் 250 கிராம், வெந்தயம் 25 கிராம், சீமைக் கிச்சிலி 60 கிராம், நன்னாரி வேர் 60 கிராம், சந்தனச் சக்கை 60 கிராம் இவற்றைச் சேர்த்து உலர்த்திப் பொடித்துத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சிகைக்காய் மஞ்சள் காமாலையையும் போக்கும். இதன் இலைக்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உண்டு. மஞ்சள் காமாலை, காய்ச்சல் ஆகிய நோய்களும் இலையால் குணமாகும். இலையை மிளகு ரசத்திலிட்டு உட்கொள்ளப் பேதியாகிப் பித்தம் போகும். இதன் இலைக் கொழுந்தை அளவாக எடுத்து உப்பு, மிளகு, புளி, மிளகாய் சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர, காமாலை நோய் போகும். இலைக் கொழுந்துடன் அளவோடு மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்தரைத்துத் தர மலச்சிக்கல், காய்ச்சல் ஆகியன நீங்கும். —கோ. அர்ச்சுணன்