உருசிய நாட்டில் 1917-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாள் நிகழ்ந்தது. சார் மன்னர்களின் (Tzars) முடியாட்சி ஒழிக்கப்பட்டு, பொதுவுடைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்களாட்சி மலர்ந்த திருநாளாகும் இது. இதனை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வரலாற்று நிகழ்ச்சி எனலாம். இப்புரட்சி வெற்றி பெற வழி கண்டவர் இலெனின் (Lenin) ஆவார். இப்புரட்சிக்குப் பல காரணங்கள் உண்டு. உருசியாவை ஆண்ட சார் மன்னர்கள் வல்லாட்சி நடத்தி மகிழ்ந்தவர்கள். அவர்கள் ஆட்சித் துறைத் தலைவர்களாகவும், சமயத் துறைத் தலைவர்களாகவும் விளங்கினார்கள். அதனால் கொடுங்கோன்மை தலைகாட்டியது. இரண்டாம் அலெக்சாந்தர் முதல், இரண்டாம் நிக்கோலசு வரை அரசாண்ட மன்னர்கள், புரட்சி இயக்கங்களையும், புதுமைக் கருத்துகளையும் தலையெடுக்கா வண்ணம் தடுத்தார்கள். சமயத் தலைவர்கள் மக்களை அறியாமை என்னும் இருட்டறையில் வைத்திருந்தார்கள். இவ்விரு சாராரும் செய்ய முனைந்த சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்கவில்லை. நாட்டில் மக்களாட்சிக் கோட்பாடுகள் மலர வாய்ப்பில்லை. எனவே, மக்கள் மன்னர்களின் எதிரிகளானார்கள். வறுமையில் வாடிய தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் தலைமை தாங்கிய இலெனின் இப்புரட்சி மலர உறுதுணையாக நின்றார். இலெனின் செங்காவற்படையினரிடையே சொற்பொழிவாற்றும் காட்சி நன்றி: சோவியத்துத் தூதரகம், சென்னை. நிலவுடைமைச் சமூக அமைப்பில் நிலப் பிரபுக்களே எல்லா நன்மைகளையும் பெற்றார்கள். நிலமற்ற பண்ணை அடிமைகள் வறுமையில் உழன்றார்கள். நாட்டின் பொருளாதாரம் நலிவுற்றது. உழுது பயிரிட்ட ஏழைக் குடியானவர்கள் வறுமை நீங்கி வாழ்வதற்கு நிலத்தின் தேவையை உணர்ந்தார்கள். ஆனால், சார் மன்னர்களின் விடுதலைச் சட்டமோ காகிதச் சட்டமாகவே நின்றுவிட்டது. குடியானவர்களின் பொருளாதார வாட்டம் தீர வழி பிறக்கவில்லை. தொழிற் புரட்சி, தொழிலாளி–முதலாளி என்னும் புதிய சமூக அமைப்பிற்கு வழிகோலியது. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டாத நிலையும் இப்புரட்சிக்கு வித்திட்டது. சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் புரட்சிக் கனலுக்கு நெய்வார்த்தன. சமயத் தலைவர்கள், பிரபுக்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் உயர் குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். மற்றவர்கள் கீழ்க்குடி மக்களானார்கள். இவர்கள் அடிமைகளாகவும் கருதப்பட்டார்கள். அக்டோபர் புரட்சிக்கு வழிவகுத்தோர் உருசிய நாட்டு அறிஞராவர், தால்சுதாய் (Tolstoy), மாக்சிம் கார்க்கி (Maxim Gorky), துர்கனேவ் (Turganev), தாசுதயோல்சுகி (Dostoyevsky) போன்ற புத்துலக எழுத்தாளர்கள் புரட்சிக் கருத்துகளைத் தங்கள் புதினங்களில் வெளியிட்டனர். மக்களிடையே மனமாற்றம் தேவையென வலியுறுத்தினார்கள். அதன் காரணமாக உருசியாவில் 1917-ஆம் ஆண்டில் புரட்சிகள் தோன்றின. முதல்புரட்சி அவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் ஏற்பட்டது. அதில் உயிர்ச்சேதம் இல்லாமல் மன்னராட்சி ஒதுக்கித் தள்ளப்பட்டதெனலாம். சட்டமன்றமான தூமா (Duma) அவையினரும் படைத்தலைவர்களும் இணைந்து, நிக்கலசு மன்னரைப் பதவியிலிருந்து விலக்கி, இடைக்கால அரசு ஒன்றை இலியோவ் (Lvov) தலைமையில் நிறுவினார்கள். இவரால் சமுதாயத்தைச் சட்டத்தின் கட்டுப்பாட்டில் வைக்க இயலவில்லை. இவர் ஆட்சி ஏற்ற சில மாதங்களுக்குள் உருசியாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலெனின் தலைமையில் போல்சி- விக்கு (Bolsheviks) மத்தியக் குழு, ஆயுதப்புரட்சிக்கு ஆயத்தம் செய்தது. புதிய புரட்சிக்கான ஏற்பாடுகளை இலியான் திராட்சுகி (Trotsky, Leon) விரைந்து செயலாற்றி முடித்தார். செங்காவற்படைப் பிரிவுகள் அனைத்தும் இராணுவப் புரட்சிக் குழுவின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டன. இராணுவப் புரட்சிக் குழுத் தலைவர்கள் அக்டோபர் 21-இல் பெட்ரோகிராடு கோட்டையிலிருந்த படைகளைத் தங்கள் பொறுப்பில் கொண்டுவந்தார்கள். இடைக்கால அரசால் இந்த நடவடிக்கைகளைச் சிறிதும் தடுத்து நிறுத்த இயலவில்லை. புரட்சியின் தலைமையகமான சுமோல்னி கட்டிடத்திற்கு இலெனின் சென்றார். அங்குப் படைப்பிரிவுத் தலைவர்களும் செங்காவற்படைத்தலைவர்களும் தொழிலாளர் தலைவர்களும் நிரம்பி வழிந்தனர். கட்டிடத்திற்கு வெளியே கவசமோட்டார்கள், துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருந்தன. புரட்சிக்கு எதிராக இருந்த இடைக்கால அரசின்மீது திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றிரவே, அரசு வங்கி, அஞ்சல் நிலையம், தொலைபேசி நிலையம், பாலங்கள், இருப்புப்பாதைகள் போன்ற அனைத்தும் செங்காவலர்களால் கைப்பற்றப்பட்டன. அரசாங்கத்தின் போர்க் கப்பலான ‘அரோரா’ என்னும் போர்க் கப்பலும் நெவா ஆற்றில் நங்கூரமிட்டு நின்றிருந்தது. அக்கப்பலும் அரசின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு புரட்சியாளர்களுக்குத் துணையாகவும் செயல்பட்டது. இவ்வாறு, உருசியப் புரட்சி உச்சநிலை அடைந்து 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் வெற்றிவாகை சூடியது. இலெனின் தலைமையில் போல்சுவிக்கும் பெட்ரோகிரேடு சோவியத்தும் இணைந்து நின்று நடத்திய, வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சி, புத்துலக நாடுகளுக்கு வழிகாட்டியது. ப.ந.