இராமபித்திகசு என்பது ஒரு புதைவடிவ உயர் பாலூட்டிகளின் (Primate) பொதுவினம் (Genus) ஆகும். இவ்விலங்கினம் ‘மையோசீன்’ (Miocene) ஊழியின் (Epoch) பிற்காலத்திலோ, ‘பிளியோசீன்’ (Pliocene} ஊழியின் முற்காலத்திலோ வாழ்ந்ததாகும். இராமபித்திகசு (Ramapithecus) இக்கால மனிதனின் நேரடியானதும் பழமையானதுமான மூதாதையர் எனக் கருதப்படுகிறது. சி.இ. இலீவிசு (G.E. Lewis) 1932–ஆம் ஆண்டு முதன் முதலில் வட இந்தியாவிலிருக்கும் சிவாலிக்குக் குன்றுகளில் (Siwalik Hills) இவ்விலங்கின் எலும்புத் துண்டுகளைக் கண்டெடுத்தார். இவ்விலங்கின் தாடை, பல் முதலானவற்றின் சிதைவுற்ற துண்டுகளே கிடைக்கப் பெற்றன. இதனைக் கொண்டு ஆய்வு செய்ததில் இராமபித்திகசின் மேல் தாடைத் துண்டு வாலில்லாக் குரங்கினைக் காட்டிலும் மனிதனையே பெரிதும் ஒத்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. தாடையின் சிறு துண்டு ஒன்றி- னையே அடிப்படையாகக் கொண்டு கணிப்பதற்குத் தொல்லுயரியலாளர்கள் (Palaeontologists) மறுப்புத் தெரிவித்தனர். மேரி இலீக்கேயும் (Mary Leakey) இலீவிசும் 1961-ஆம் ஆண்டில் மேல்தாடை, கீழ்த்தாடை ஆகிய இரண்டு தாடைகளையுமே கண்டறிந்தனர். இதன் காலம் 14,000,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணக்கிடப்பட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலான கண்டங்களில் கண்டெடுக்கப்பட்ட தாடைகளும் பற்களும் இக்கால மனிதனின் நேரடி மூதாதை எனக் கருதப்படும் இராமபித்திகசு என்பதனுடையவாகும் என முடிவு செய்தனர். இது 15,000,000 ஆண்டு முதல் 8,000,000 வரையிலான காலத்திற்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இராமபித்திகசு பல், தாடை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இராமபித்திகசு உயர் விலங்கினத்தில் இடம்பெறும் நிலையை உடல்சார் மானிடவியலாளர்கள் (Physical Anthropologists) கணக்கிட்டுள்ளனர். மனிதனின் தாடை, சாய் மாலை வட்டமாகச் (Parabolic) சீராக வளைந்து காணப்படுவதாகும். வாலில்லாக் குரங்குகளின் தாடை அமைப்பு சதுர வடிவிலான ‘U’ வடிவத்தினைக் கொண்டுள்ளது. ஆனால், இராமபித்திகசுவின் தாடை ஏறக்குறைய வட்ட வடிவமாகக் காணப்படுவதால் இதனை வாலில்லாக் குரங்குடன் ஒப்பிடுவதைவிட மனிதனின் குடிவழியுடன் ஒப்பிடுவதே பொருத்தமாகும். இதனைக் காட்டிலும் கோரைப்பல்லின் வடிவத்தையும் உருவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இராமபித்திகசின் நிலை மேலும் தெளிவுபெறுவதனை உணரலாம். வாலில்லாக் குரங்குகளில் கோரைப்பல் நீண்டும் கீழ்நோக்கி வளைந்தும் உள்ளதால் மாமிசத்தையும் உணவுப் பொருள்களையும் கிழிக்க ஏதுவாகிறது. ஆனால், மனிதனின் பல்வரிசையில் கோரைப்பல் தட்டையாகவும், குறுகியும் இருக்கிறது. அப்பல் மற்றப்பற்களைப் போல் கீழ்ப்புறமாகவோ பக்கவாட்டிலோ நீட்சி பெற்றிருக்கவில்லை. இதனாலேயே உணவினை அரைப்பதற்கும் மெல்லுதலுக்கும் ஏதுவாக உள்ளது. இராமபித்திகசின் கீழ்க் கோரைப்பல் சிறியதாகும். இதன் பல்சிப்பி (Tooth enamel) வாலில்லாக் குரங்கின் பல்சிப்பியைக் காட்டிலும் தடித்ததாகவும் காணப்படுகிறது. பல் அமைப்பில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டு இராமபித்திகசுக்கள் வேறுபட்டாலும், வாலில்லாக் குரங்குகளைப் போன்றே தொடக்க காலத்தில் அவை காட்டிலேயே வாழ்ந்திருந்தன. பிற்கால இராமபித்திகசுக்கள் திறந்த புல்வெளிகளில் வாழ்ந்தன என்பதற்குப் போதுமான சான்றுகள் கிடைத்துள்ளன. புறச்சூழ்நிலையில் வாழ்ந்ததால் அழுத்தமானதும் கடினமானதுமான நாற்பொருள்கள் அடங்கிய உணவினை மிகுதியாக உண்ணும் நிலையினைப் பெற்றது. தாவீது பில்பீம் (David Pilbeam} எடுகோளின்படி இராமபித்திகசு பஞ்சாபிகசு (Ramapithecus Punjabicus) படிமலர்ச்சி வழியில் காட்டு மனிதன் (Orangutan) மூதாதையரைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது.