பசிஃபிக் பெருங்கடல்
paciḵpik peruṅkaṭal
உலகில் காணப் படும் பெருங்கடல்களில் பசிஃபிக் பெருங் கடலே மிகப் பெரியது.
உலகில் காணப் படும் பெருங்கடல்களில் பசிஃபிக் பெருங் கடலே மிகப் பெரியது. இது முக்கோண வடிவில் அமைந்துள்ளது. முக்கோணத்தின் உச்சி பேரிங் நீர்ச் சந்தியிலும் அடிப் பக்கம் அண்டார்க்டிக்காவின் கடற்கரையிலும் அமைந்துள்ளன. நில நடுக் கோடு இப்பெருங்கடலை வட பசிஃபிக் என்றும், தென் பசிஃபிக் என்றும் பிரிக்கிறது. மகல்லன் என்பாரே, பசிஃபிக் பெருங் கடலுக்குப் பெயர் சூட்டியவராவர். பசிஃபிக் என்னும் சொல்லுக்கு அமைதி என்பது பொருளாகும்.
இதன் பரப்பு 165,245,000 ச.கி.மீ. ஆகும். பேரிங் நீர்ச் சந்தியிலிருந்து, தெற்கே ஆடேர் முனை வரை பசிஃபிக் பெருங்கடலின் அகலம் 24,000 கி.மீ. ஆகும். இக்கடலின் சராசரி ஆழம் 4,028 மீ. மேற்குப் பகுதியில் கிழக்குப் பகுதியை விடவும், வட பகுதியில் தென் பகுதியை விடவும் ஆழம் மிகுதி. உலகிலேயே, ஆழம் மிக்க பகுதியான சாலஞ்சர் ஆழ் குழி இப்பெருங்கடலில் உள்ளது.
எல்லைகள். பசிஃபிக்கின் மேற்கு எல்லை இந்தியப் பெருங்கடலின் கிழக்கு எல்லையாகும். இக்கடலின் தெற்கு எல்லை, அண்டார்டிகா வட்டம் என்றும், அண்டார்டிகாவின் கடற்கரை என்றும், கடல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அண்டார்டிக்காவின் கடற்கரையே தெற்கு எல்லை என்று பொதுவாகக் கருதப் படுகிறது. கிழக்கு எல்லை பேரிங் நீர்ச் சந்தியில் ஆர்க்டிக் வட்டத்திலிருந்து தொடங்கி, அமெரிக்காவின் தென் முனையை அடைந்து 66.04' மேற்கு நெடுங்கோடு வழியாக அண்டார்டிக்காவை அடைகிறது. வட எல்லை பேரிங் நீர்ச் சந்தியில் ஓடும் ஆர்க்டிக் வட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். வட எல்லையை நிலம் சூழ் பகுதியென்றே கூறலாம். ஏனெனில் பேரிங் நீர்ச்சந்தி 55 கி.மீ. அகலம் கொண்ட ஒரு குறுகிய நீர்ப் பரப்பாகும். பசிஃபிக்கின் மேற்கில், சிங்கப்பூரிலிருந்து ஆசியாக் கண்டத்தின் கிழக்குக் கடற்கரையே மேற்கு எல்லையாக அமைகிறது.
பசிஃபிக் பெருங்கடலின் வரலாறு. புதிய உலகையும், பழைய உலகையும் பிரிக்கும் இப்பெருங்கடலைப் பல காலமாகப் பன்னாட்டவர்கள் கடற் பயணம் செய்து, ஆய்ந்து வருகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னால், பாலினியர்களே பசிஃபிக்கின் குறுக்காக, முதன் முதலில் கடற்பயணம் செய்ததாக வரலாறு கூறுகிறது. 850இல் சோலிமன் என்னும் அரேபியர் கான்டன் வரை சென்று திரும்பினார். 1295இல் மார்க்கோ போலோ சீனா சென்று, மலாக்கா நீர்ச் சந்தி வழியாய்த் திரும்பினார். பசிஃபிக்கின் குறுக்காக, முதன் முதலில் பயணம் செய்த ஐரோப்பியர், மகல்லன் என்பாராவார். பின்னர், டச்சு நாட்டவர்கள் பசிஃபிக் கடலைச் சுற்றி ஆய்வு செய்தனர். 1679 - 91 இல் வில்லியம் டாம்பியர் என்னும் கடற் கொள்ளைக்காரர் பசிஃபிக் பெருங் கடலைப் பற்றிய பல செய்திகளைத் திரட்டித் தந்தார். 1724–30இல் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேரிங் என்பார், வட பசிஃபிக்கில் பயணம் செய்தார்.
1768–78இல் காப்டன் குக் பசிஃபிக்கில் நடத்திய பல சுற்றாய்வுகளே சிறப்பாகக் கருதப் படுகின்றன. பின், ஜெர்மானியர்களும், ஃபிரான்ஸ் நாட்டவரும், பேரிங் கடலில் பல சுற்றாய்வுகள் நடத்தினர். பசிஃபிக்கைப் பல வல்லுநர்கள் ஆயத் தலைப் பட்டனர். 1931இல் பீகிள் கப்பலில், டார்வின் செய்த பயணம் சிறப்பு மிக்கதாகும். எவ்வாறாயினும்,பசிஃபிக் பற்றிய அறிவியல் அடிப்படையான ஆய்வுகள், சாலஞ்சர் என்னும் புகழ் பெற்ற ஆய்வுக் கலம் நடத்திய சுற்றாய்வின் போது, தொடங்கின. தற்போது, பசிஃபிக்கின் கரையிலுள்ள பல நாடுகள் அப்பெருங்கடல் பற்றி, இன்றும் ஆய்ந்து வருகின்றன.
பசிஃபிக் பெருங்கடலின் தன்மை, வெப்பம். கடல் அமைந்திருக்கும் இடம், கடலின் வடிவம் ஆகியன வெப்ப நிலைப் பரவலைப் பாதிக்கின்றன.பசிஃபிக் பெருங்கடலுடன் ஆர்க்டிக் பெருங்கடலின் தொடர்பு மிகுதியாக இராமையால், அட்லாண்டிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை விடப் பசிஃபிக் கடலின் வெப்ப நிலை மிகுதியாகும். பசிஃபிக்கின் சராசரி வெப்ப நிலை 10.9°C ஆகும். பசிஃபிக் பெருங்கடல் 30°C வட அகலாங்கு 30°C தென் அகலாங்குக்கு உட்பட்ட பகுதியில் உள்ளமையால், பசிஃபிக் பெருங்கடலின் வெப்ப நிலை மிகுந்தே காணப் படுகிறது.
உலகின் அனைத்துக் கடல்களிலும், உவர்ப்பியம் ஒரே அளவாக இல்லை. கடலுக்குக் கடல், உவர்ப்பியம் மாறு படுகிறது. உவர்ப்பிய மிகுபாட்டிற்கு ஆவியாதலே பெருங்காரணமாகும். விஸ்ட் என்பாரின் கருத்துப் படி, ஆண்டு ஒன்றிற்கு மூன்றிலிருந்து நான்கு இலட்சம் க.கி.மீ. நீர் ஆவியாகிறது. மிகு வெப்பப் பகுதியிலும், வெப்ப மண்டலப் பகுதியிலும் ஆவியாதல் மிகுவதால், உவர்ப்பியமும் கூடுகிறது.
பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளில் மழை மிகுந்துள்ளமையால், உவர்ப்பியம் குறைவாகும். நில நடுக் கோட்டுக்கு அருகில் பசிஃபிக்கின் உவர்ப்பியம் 26% ஆகும். தென் பசிஃபிக்கில், வட பசிஃபிக்கில் காணப் படுவது போன்று, பெரும் உவர்ப்பிய வேறுபாடுகள் காணப் படவில்லை. வட பசிஃபிக்கை விடத் தென் பசிஃபிக்கில் உவர்ப்பியம் சிறிது கூடுதலாகிறது. வட பசிஃபிக்கில் 36% சம உவர்ப்பியமே காணப் படவில்லை. ஆனால், தென் பசிஃபிக்கில் 150° மேற்கிலிருந்து 105° மேற்கு வரையுள்ள 15° தெற்குக் குறுக்கோட்டைச் சுற்றிய பகுதியில் 36°C சம உவர்ப்பியம் அமைந்துள்ளது. பெரு, சிலி, கடற்கரையை ஒட்டிய உவர்ப்பியம் 33% ஆகும்.
அடர்த்தி. கடல் நீரின் அடர்த்தி, நீரின் வெப்ப நிலை, உவர்ப்பியம், அழுத்தம், நீர் கூடுகை, அழுத்தம் ஆகிய வற்றுக்கு உட்பட்டு அமைந்துள்ளது. வெப்ப நிலையை மட்டும் வைத்து நோக்கினால், அடர்த்தி பொதுவாக, நில நடுக் கோட்டிலிருந்து துருவம் நோக்கி மிகுதல் வேண்டும். ஆனால், அடர்த்தியினைப் பாதிக்கும் காரணிகள் வேறு பலவும் உள்ளமையால், அடர்த்தியின் கிடையான பரவல் பலவாறாக உள்ளது. ஆனால், இங்கு நீரோட்டங்கள் வெப்ப நீரை எடுத்து வந்து, அது இக்குறுங் கோடுகளில் குளிரும் போது, அந்நீரில் அடர்த்தி அதிகரிக்கிறது. கல்ஃப் நீரோட்டம், லாப்ரடார் நீரோட்டத்தைச் சந்திக்கும் இடத்திலும், கூரோஷயோ (Kuro-shio), ஓயாஷியோ நீரோட்டத்தைச் சந்திக்கும் இடத்திலும் இந்நிலைமை காணப் படுகிறது.
பசிஃபிக் பெருங்கடலின் அலைகள். தடக் காற்றுப் பகுதியில், அலைக் களம் நன்கு அமைந்திருப்பினும், போதுமான அளவிற்குக் காற்று இராமையால், சிறப்பாக எழுவதில்லை.
பசிஃபிக் கடல் நீரோட்டங்கள். பசிஃபிக் கடலின் நீரோட்டங்களை, வட பசிஃபிக் நீரோட்டங்கள், தென் பசிஃபிக் நீரோட்டங்கள் என்று பிரிக்கலாம்.
வட பசிஃபிக் நீரோட்டங்கள். அட்லாண்டிக் வளைகுடா நீரோட்டத்திற்கு ஈடானது, கூரோஷயோ நீரோட்டமாகும். வட நில நடு நீரோட்டத்திலிருந்து லூசான் வழியாகவும், ஃபார்மோசா வழியாகவும் வந்து சேரும் நீரே கூரோஷயோ நீரோட்டத்தைத் தோற்றுவிக்கிறது. இது 35° வரை ஜப்பான் கடற்கரையைத் தழுவிச் செல்கிறது. ஃபார்மோசாவிலிருந்து, ரியூகியூ தீவுகள் வரையிலான இடைப்பட்ட பகுதியில், இந்நீரோட்டத்தின் வேகம் நொடிக்கு 1 மீ. ஆகும். 700 மீ. ஆழம் வரை காணப் படும் இதில், நொடிக்கு 20 மில்லியன் க.மீ. நீர் செல்கிறது.
ரியூகியூவிற்கு வடக்கே இதன் வேகம் மிகுதியாகிறது.(33° வடக்கில் வேகம் 1.3–2மீ/நொடி). இங்கு, கடற்கரையிலிருந்து 150 கி.மீ. தொலைவிற்கு உள்ளேயே, இந்நீரோட்டம் அமைந்துள்ளது. இங்கு உவர்ப்பியம் 36% வெப்பநிலை 8°C. ஆயினும், ஆண்டு வெப்ப நிலையின் அளவு மிகுதியாக உள்ளது. இந்நீரோட்டத்திற்கு இணையாகக் கூரோஷயோ எதிர் நீரோட்டம், தெற்கு நோக்கி விரைகிறது. 35° வடக்கில் இது இரண்டாகப் பிரிந்து அகன்று, கிழக்காகச் சென்று வட பசிஃபிக் நீரோட்டமாக மாறுகிறது. மற்றொன்று, வடக்காக 42° வரை சென்று, ஓயாஷியோ நீரோட்டத்தோடு கலக்கிறது.
மேற்குத் திசைக் காற்றால், வட அமெரிக்கா நோக்கிச் செல்லும் வெப்ப நீரோட்டமான இது 150° மே வரை சென்று, பிரிகிறது. இந்நீரோட்டத்தின் பெரும் பகுதி, தெற்காகத் திரும்பிக் கலிஃபோர்னியா நீரோட்டமாக ஓடுகிறது.
ஒயாஷியோ நீரோட்டம், ஒரு கடுங் குளிர் நீரோட்டமாகும். ஆர்க்டிக் நீர், பேரிங் நீர்ச் சந்தி வழியாகப் பசிஃபிக்கில் நுழைந்து, காம்சட்கா தீவுக் கூட்டத்தில், கிழக்குக் கடற்கரை வழியாகத் தெற்காக 35°C வரை வருகிறது. லாப்ரடார் நீரோட்டமும், ஐரோஷியோ நீரோட்டமும் சந்திக்கின்றன. கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள கிளையும், வட பசிஃபிக் நீரோட்டத்தின் தென் கிளையும், ஓயாஷியோ நீரோட்டத்தைத் தோற்றுவிக்கின்றன.
தென் பசிஃபிக் நீரோட்டங்கள். பெரு நீரோட்டத்தை ஹம்போல்ட் நீரோட்டம் என்றும் கூறுவர். பசிஃபிக்கின் நீரோட்டங்களிலேயே நன்கு ஆயப்பட்ட நீரோட்டம், தென் பசிஃபிக் நீரோட்டமாகும். இது சிலி, பெரு நாடுகளின் கடற்கரை வழியாக வடக்காக ஓடும் கடுங்குளிர் நீரோட்டமாகும். மேற்குக் காற்று ஊர்மியிலிருந்து கிளம்பி, நில நடுக் கோடு வரை சென்று, மேற்காகத் திரும்பித் தென் நில நடு நீரோட்டத்தோடு கலந்து விடுகிறது. இதன் அகலம் 800 கி.மீ. ஆகும். இது 10–15 மில்லியன் க.மீ. நொடி நீரைக் கடத்துகிறது. இதன் வேகம் மணிக்கு 1.5 கி.மீ. ஆக உள்ளது.
பசிஃபிக் பெருங் கடலின் கடலடி நிலப் புவி புறவியல். கடலின் ஆழத்தை அளவிட முயன்ற போது, கடலடி நிலத் தோற்றங்கள் தெரியவாயின. பாசிடோனியல் என்பார் கி.மு. 100இல் நில நடுக் கடலில் 1.5 கி.மீ. வரை ஆழத்தை அளவிட்டதாக வரலாறு கூறுகிறது. பசிஃபிக் பெருங் கடலையொட்டிய நிலப் பகுதிகள் ஆஸ்திரேலியா, கிழக்கு இந்தியத் தீவுகள், ஆசியா போன்றவையாகும். இவற்றின் கிழக்கே, அகலமாகக் கண்டத் திட்டுகள் அமைந்துள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே உள்ள சாகுல் என்பது உலகின் அகலமான திட்டுகளில் ஒன்றாகும். இத்திட்டத்தின் அகலம், வடமேற்காக ஏறத் தாழ 1120 கி.மீ. ஆகும். குவீன்ஸ்லாண்டு கடற்கரைத் திட்டு வடக்கில் குறுகி இருப்பினும், தெற்கில் 300 கி.மீ. அகலத்திற்கு விரிகிறது. இத்திட்டில்தான் புகழ் பெற்ற ஆஸ்திரேலியாவின் கடல் பாறை உள்ளது. ஆஸ்திரேலியாவின் தெற்குக் கடற்கரைத் திட்டு, இது வரை முழுவதுமாக ஆயப் படவில்லை.
சுமத்திரா, ஜாவா, போர்னியோ போன்ற தீவுகள் இதன் கிழக்கு ஆசியக் கடற்கரையை அடுத்த கண்டத் திட்டிலேயே அமைந்துள்ளன. ஹைனான் தீவிற்குத் தெற்கிலுள்ள திட்டு மிகுதியான ஆழத்தில் உள்ளது. சீனக் கடற்கரையை அடுத்து, திட்டு அகலமாக உள்ளது. ஜப்பான் கடலின் வாஸ்டாவிக்கை அடுத்து, திட்டின் அகலம் 50 கி.மீ. ஆகும். அலூஷன் தீவுகளுக்கு வடக்கே, பேரிங் கடல் திட்டு 650 கி.மீ. அகலத்தோடு உள்ளது.
வட அமெரிக்காவிற்கு மேற்கே சாண்டியாகோவை அடுத்து, ஓர் அகலமான திட்டு அமைந்துள்ளது. இதற்கு வடக்கே உள்ள திட்டு குறுகியே உள்ளது. தெற்கே கொலராடோ டெல்டாவை அடுத்துள்ள திட்டு, குறுகலாகவும் காணப் படும். பனாமா வளைகுடாவில் காணப் படும் திட்டு 120 கி.மீ அகன்று, 180 கி.மீ. ஆழத்தில் முடிகிறது. இங்கு உள் திட்டில் மண்ணும், வெளித்திட்டில் மணலும், சிப்பிகளும் பரவியுள்ளன. தென் அமெரிக்காவிற்கு மேற்கே, ஹார்ன் முனைக்கு வடக்கே, திட்டு அகன்றுள்ளது. இத்திட்டு பள்ளங்கள் மிகுந்து, கரடு முரடாகக் காட்சியளிக்கிறது.
பசிஃபிக் பெருங் கடலின் கண்டச் சரிவு. பசிஃபிக் பெருங் கடலின் மேற்குப் புறத்தே ஸ்கிரிப்ஸ் கழகமும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கப்பற்படையின் கடலாய்வுத் துறையும், பசிஃபிக்கின் கிழக்குப் புறத்தே சோவியத் நாடும், சிறப்பாகப் பல ஆய்வுகளை நடத்தி வருகின்றன.
ஆஸ்திரேலியாவிற்குக் கிழக்கே கண்டச் சரிவு ஓரளவு சரிவாகவே உள்ளது. இது வடக்கு நோக்கி மிகுதியாகச் சரிவடைகிறது. பிலிப்ஃபைன்ஸ் தீவுகளை அடுத்துக் கண்டச் சரிவு 11° சரிதலை அடைகிறது. இந்தோசீனா, மியான்மர் ஆகிய பகுதிகளை அடுத்துக் குறைவான சரிவும், ஃபார்மோசா, தெற்கு ஜப்பான் ஆகிய நாடுகளை அடுத்து, மிகுதியான சரிவும் ஏற்பட்டுள்ளன. ஃபார்மோசாவை அடுத்துள்ள சரிவில், குடைவுப் பள்ளத்தாக்குகளும் கடற் குன்றுகளும் காணப் படுகின்றன. சரிவின் தளமும், பாறைத் தளமாக அமைந்துள்ளது. தெற்கு ஜப்பானை அடுத்துள்ள சரிவின் சரிதல் 2° முதல் 10° வரை உள்ளது. டோக்கியாவிற்கு வடக்கே, கிழக்குக் கடற்கரைச் சரிவு 2° அளவில் சரிந்து, மென் சரிவைக் காட்டுகிறது. இங்கு, பாறைத் தளமும், அதில் மணல், பரல் கற்கள் போன்றவையும் காணப் படுகின்றன. உகாட்ஸ் கடலில், சரிவு கரடு முரடாக உள்ளது. பேரிங் கடலில் சரிதல் 20° முதல் 25° வரை உள்ளது. உலகில் சரிதல் மிக்க கண்டச் சரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
வட அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, மிகச் சிறப்பாக ஆயப் பட்டுள்ளது. அலூஷன் தீவுகளை ஒட்டிய சரிவு, தாழ்வாகவே உள்ளது. இச்சரிவில், நீண்ட பள்ளத்தாக்குகள் காணப் படுகின்றன. அலாஸ்கா வளைகுடாவின் சரிவு, வன்சரிவைக் கொண்டுள்ளது. வான்கூர் தீவிற்கு வடக்கே உள்ள சரிவில், குடைவுப் பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. 5° முதல் 6° வரையிலான அளவில் உள்ள இச்சரிவு 2–5 கி.மீ. ஆழமுடையது. வான்கூர் தீவிலிருந்து, கொலம்பியா ஆற்றுத் தொடுவாய் வரை உள்ள கண்டச் சரிவு 3° சரிதல் கொண்டு (2500மீ) 2.5 கி.மீ. ஆழத்தில் முடிகிறது. இங்கும் குடைவுப் பள்ளத்தாக்குகள் மிகுதியாக உள்ளன.கொலம்பியா ஆற்றுத் தொடுவாயிலிருந்து, ஈல் ஆற்றுத் தொழுவாய் வரை உள்ள கண்டச் சரிவில் குடைவுப் பள்ளத்தாக்குகள் காணப் படவில்லை. கலிஃபோர்னியா கடற்கரையை அடுத்து, கண்டச் சரிவு, வடக்கே உயர்ந்தும், தெற்கே தாழ்ந்தும் சரிவடைந்துள்ளது. ஆங்காங்கே, குடைவுப் பள்ளத்தாக்குகளும் காணப் படுகின்றன. பருமணலும் பரல் கற்களும் மிகுந்து கிடக்கின்றன.
தென் அமெரிக்காவிற்கு மேற்கே கண்டச் சரிவு மிகு ஆழத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். சராசரியாக 5.5–7.5 கி.மீ. ஆழத்தில் கண்டச் சரிவு காண்ப் படுகிறது. ஓரிடத்தில் ஆண்டீஸ் மலைச் சரிவையும் சேர்த்துக் கணக்கிடின், 13 கி.மீ. ஆழம் வரை சரிவு மண் சரிவாகவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதன் சராசரி சரிதல் 5° ஆகும். 2 கி.மீ. ஆழத்திற்கு மேல் இச்சரிதல் சற்று மிகுகிறது.பசிஃபிக் பேரகழிகள். பேரகழிகள் அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப் படுகின்றன. கடலடி நிலப் பரப்பில் நூற்றுக்கு ஒன்று என்னும் கணக்கில் பேரகழிகள் பரவியுள்ளன. எண்ணிக்கைகளிலும், ஆழத்தின் அளவிலும் பசிஃபிக் பேரகழியே முன்னிற்கிறது.
பசிஃபிக் பேரகழியின் மலைத் தொடர்கள். பிற பேரகழிகள் போன்று, பசிஃபிக்கின் மலைத் தொடர்கள் சிறப்பாக அமையவில்லை. பசிஃபிக்கின் கிழக்கில், குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கு ஒரு தொடர் அமைந்துள்ளது. இத்தொடரைப் பசிஃபிக் தொடர் என்பர். இது அகன்ற தொடர் என்பதால், சிலர் இத்தொடரை அல்பாட்ராஸ் பீடபூமி என்றும் குறிப்பிடுவர்.
அண்டார்க்டிக்காவின் வடக்கே, பசிஃபிக் அண்டார்க்டிக் தொடராகத் தொடங்கி, வடக்கு நோக்கிச் சென்று, தென் அமெரிக்காவிற்கு மேற்கே, தென் கிழக்கே பசிஃபிக் பீடபூமியாக விரிந்து, மேலும், வடக்காக அல்பாட்ராஸ் மேட்டு நிலமாகச் சென்று, கலிஃபோர்னியாவின் தென் முனை நிலத்தோடு சேர்ந்து மறைந்து விடுகிறது. அண்டார்டிகாவிலிருந்து கலிஃபோர்னியா வரை செல்லும் இத்தொடருக்குப் பல பெயர்கள் ஆங்காங்கு இருப்பினும், மொத்தமாகக் கிழக்குப் பசிஃபிக் தொடர் என்றே இதைக் கூறுகின்றனர். கிழக்குப் பசிஃபிக் தொடர் 2–3 கி.மீ. உயர்ந்தும், 2-4 கி.மீ. அகன்றும் அமைந்துள்ளது. பசிஃபிக்கின் இத்தொடர்களில், சிறு பிளவுப் பள்ளத்தாக்குகள் பல இணையாக அமைந்துள்ளன. இவை பெரிதும் கரடுமுரடாக உள்ளன. ஆங்காங்கே பிளவுகளும் உள்ளன.
கடற்குன்றுகளும் முட்குன்றுகளும். கடல் தரையிலிருந்து 200–700 மீ.உயரத்தில் அமைந்துள்ள தனித்த குன்றுகளே கடற்குன்றுகளாகும். இக்குன்றின் மேல் பகுதி மட்டமாக இருக்குமானால், அதை மட்டக் குன்று என்பர்.
கடற்குன்றுகள் கூர்மையான உச்சிகளைக் கொண் டுள்ளன. சிறிய கடற்குன்றுகளின் பக்கங்கள் 30° சரிதலையும், பெரிய கடற்குன்றுகளின் பக்கங்கள் 12° முதல் 14° வரையிலான சரிதலையும் பெற்றுள்ளன. குன்றுகளைச் சுற்றிக் கடல் தரையில் அகழி உள்ளது. கடற்குன்றுகளில் தற்போது மாங்கனீஸ் உள்ளதாகவும் கண்டு பிடித்துள்ளனர்.
சில கடற்குன்றுகள் நீருக்கு மேலும் காணப் படலாம். இவ்வாறு காணப் படின், அவை தீவாக அமையும். எ-டு. ஹவாய்த் தீவுகள். நீருக்கு வெளியே காணப் பட்ட சில குன்றுகள் அலை அரிப்பினால் நீரினுள் மூழ்கி விடலாம். எடுத்துக் காட்டு: டாங்கா தீவை ஒட்டி, நீரினுள் மூழ்கிக் காணப் படும் பால்கன் திட்டுக் கரை, முன்பு பால்கன் தீவாக இருந்தது.
உலகில் அனைத்துக் கடல்களிலும், கடற் குன்றுகள் காணப் படுகின்றன. ஆனால், பசிஃபிக்கில் சிறப்பாக, இவை அமைந்துள்ளன. பசிஃபிக்கின் நடுவில், வடக்கிலும், கடற்குன்றுகள் மிகுதி. 80–100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பசிஃபிக்கின் கடற்குன்றுகள் லேக் தீவுகளிலிருந்து, ஹவாய்த் தீவுகள் வரை, நடு பசிஃபிக் மலைத் தொடராய், ஆங்காங்கே தீவுகளோடு அமைந்தன என்பதை, 1969இல் பசிஃபிக்கில் நடத்திய ஸ்கிரிப்ஸ் கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பசிஃபிக்கில் 1400 கடற்குன்றுகள் உள்ளன என்று கணக்கிட்டுள்ளனர். பொதுவாக, இவை சங்கிலித் தொடர் போன்று நீண்டு அமைந்துள்ளன. மேற்குப் பசிஃபிக்கில், காம்சட்காவிலிருந்து வடக்கே 20° வரையிலும், அலாஸ்காவிற்குத் தெற்கிலும், ஹவாய்க்கு மேற்கே மரியானா தீவுகளிலிருந்து, மார்ஷல் தீவுகள் வரையிலும், வட்டக் குன்றுகள் சிறப்பாக அமைந்துள்ளன.
பசிஃபிக் பெருங்கடலில் காணப் படும் பவளப் பாறைகள். பசிஃபிக் பெருங்கடலில் கேப்டன் குக் என்பார், தம் கடல் பயணத்தில் எதிர்ப்பட்ட பவளத் தீவுகள் பற்றித் தெரிவித்தார். பவளப் பாறைகள் வடக்கே 35°–15° மற்றும் தெற்கே 32° வரையுள்ள வெப்ப மிகு கடற்கரைப் பகுதியில், 19 கோடி ச.கி.மீ. பரப்பில் பரவியுள்ளன. தென் பசிஃபிக்கின் மேற்குப் பாதிப் பகுதியே, உலகின் பவளக் கடலாகும். இப்பகுதியில் பல பவளத் தீவுகள் உள்ளன. இங்கு, புகழ் பெற்ற பெரிய தடைப் பாறை அல்லது கிரேட் பேரியர் ரிஃப் (Great Barrier reef) உள்ளது.
பசிஃபிக் பெருங்கடலின் கனி வளங்கள். கடலில் உப்புப் போன்ற கனிமப் பொருள்கள் உள்ளன. இயற்கையில் 104 மூலப் பொருள்களில், அனைத்தும் நீரில் உள்ளன என்றாலும், இது வரை 61 மூலப் பொருள்களை, நீரிலிருந்து பிரித்துக் காட்டியுள்ளனர். பசிஃபிக் பெருங்கடலில் கிடைக்கும் சில கனிமப் பொருள்களைக் கீழ்க் காணும் பட்டியலில் காணலாம்.
(மில்லியன் டன்)
பசிஃபிக் பெருங்கடலின் வயது. அனைத்துப் பெருங்கடல்களுக்கும் வயது பற்றிய மதிப்பீடுகள் இருக்கின்றன. ஆனால், பசிஃபிக் பெருங்கடலின் சரியான வயதை, இது வரை கணிக்க இயலவில்லை. எவ்வாறாயினும், கடலின் வயது, புவியின் வயதை விடக் குறைவு எனலாம். அதாவது, புவி தோன்றிய பின்னரே, கடல் தோன்றியது எனக் கூறலாம். கனடாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் காணப் படும் உயிரினக் காலத்து இறுகிய பாறை 2300 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கணக்கிட்டுள்ளனர். புவி தோன்றும் போது இருந்த இறுகிய பாறை 6000 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். எனவே, பசிஃபிக் பெருங்கடல், இன்றிலிருந்து 6000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளது என்று சிலர் கணிக்கின்றனர். —யூசுப் ஷரீப்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 416)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v8zwezgm/
தமிழ்“பசிஃபிக் பெருங்கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v8zwezgm/APA
Oliyon Research. (2026). பசிஃபிக் பெருங்கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v8zwezgm/MLA
"பசிஃபிக் பெருங்கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/v8zwezgm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment