இனக்குழுச் சொற்பொருளியல்
iṉakkuḻuc coṟporuḷiyal
மக்களின் பண்பாட்டு அமைப்புகளுக்கும் அவர்கள் பேசும் மொழிகளின் சொல் அமைப்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு.
மக்களின் பண்பாட்டு அமைப்புகளுக்கும் அவர்கள் பேசும் மொழிகளின் சொல் அமைப்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு. இத்தொடர்பினை ஆய்ந்துணரும் பரப்பில் சொற்பொருளின் (Semantics) பண்பு இன்றியமையாதது. ஒவ்வொரு மொழியின் சொற்கோவை அக்குழுவின் பண்பாட்டுச் சூழலுடன் தொடர்பு பெற்றுப் பண்பாட்டுக் குணநலன்களை வெளிப்படுத்தும் இயல்பினை அறியும் இனக்குழுச் சொற்பொருளியல் (Ethnosemantics), மானிடவியல்சார் மொழியியலின் ஒரு பிரிவாகும்.
ஒரு மொழியின் சொற்கோவையை ஆழ்ந்து ஆராயும்போது மொழிக்கும் பண்பாட்டிற்குமிடையே மிகப் பெரியதோர் உறவு காணப்படுவதையும் பண்பாட்டுச் சூழலுடன் அம்மொழியின் சொற்கோவை தொடர்பு பெறும் சிறப்பு அமைப்புகளையும் சொற்பொருளியலார் (Semanticists) சுட்டிக் காட்டுவர். ஒவ்வோர் இனக்குழுவினரும் தம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம், விலங்குகள், தாவரங்கள், உலகம் முதலான அனைத்தையும் தத்தம் மனப்பாங்கின்படி வகைப்படுத்தும் இயல்பினைக் கொண்டுள்ளமை கண்கூடு. ஒரு மொழியைப் பேசுபவர்கள் தாம் சார்ந்த சுற்றுச் சூழலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் வகைப்படுத்தவும் விளக்கிக் கூறவும் இனங்கண்டுகொள்ளவும் முற்படுகின்றனர். அன்றாட வாழ்வின் பல அமைப்புகளை விளக்கிப் பேசும்போது பல சொற்கள் கையாளப்படினும் ஒருசில குறிப்பிட்ட அமைப்பில் பல்வேறு பண்பாடுகளுக்கிடையே வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் காணப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக உடலின் உறுப்புகளைப் பகுத்தலிலும், எண்ணிக்கையை எண்ணுதலிலும், அளவையையும் காலத்தையும் அளத்தலிலும், நிறங்களைச் சுட்டிக்காட்டலிலும் பல முறைகள் பல்வேறு பண்பாடுகளில் கையாளப்படுகின்றன. புறப்பண்பாட்டு இயல் நிகழ்ச்சிகளில் பண்பாடு, தமக்குள் வேறுபடுவதோடு நில்லாது தாம் அமைக்கும் புறப் பண்பாட்டு உள்ளொளிகளிலும் வேறுபடுகிறது.
சொற்கோவையின் (Vocabulary) அளவு, சிறப்பு நிலை, வேறுபடுத்தும் நிலை ஆகியவற்றின் வாயிலாகப் பண்பாட்டு வலியுறுத்தலின் கருத்துக்கள் மொழியில் நேரடியாக எதிரொலிக்கப்படுகின்றன. ஒரு மொழியைப் பேசுபவர்களின் நெருங்கிய உறவுடைய சுற்றுச் சூழல் அல்லது பண்பாட்டுக் கூறுகளின் தொடர்பாக, மிகுதியான தனிச் சொற்களும் ஒரு பொருட்பன்மொழிகளும் (Synonyms) நுண்பகுப்புகளும் காணப்படுகின்றன. இனக்குழுச் சொற்பொருளியலார் ஒவ்வொரு மொழியிலும் காணப்படும் உண்மையானதும் கற்பனையானதுமான பன்மைகள், வினைச்சொற்கள், உருவகங்கள் முதலான அனைத்தும், பண்பாட்டுப் பரப்பில் தொடர்புற்று வெளிப்படுவதைச் சொற்பொருளைக் கொண்டு ஆராய்வர். மொழியையும் பண்பாட்டையும் உறவுபடுத்தி ஆராயும் மானிடவியல்சார் மொழியியலார் இனக்குழுச் சொற்பொருளின் துணைக்கொண்டு பண்பாட்டின் பின்னணியைக் கண்ணுறுகின்றனர். இனக்குழுச் சொற்பொருளியல் ஆய்வுகள் மானிடவியல், மொழியியல் ஆகிய இரு துறைகளுக்கும் பொதுவாக அமைந்து நிற்கின்றன. ஜெ.பா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 581)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uydbdkx4/
தமிழ்“இனக்குழுச் சொற்பொருளியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uydbdkx4/APA
Oliyon Research. (2026). இனக்குழுச் சொற்பொருளியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uydbdkx4/MLA
"இனக்குழுச் சொற்பொருளியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uydbdkx4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment