கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசைத்தமிழ்ப் புலவர். இவர் தஞ்சை மாவட்டத்திலுள்ள வையைச் சேரியைச் சேர்ந்தவர். துரைசாமி அய்யரின் மகனாகிய இவர் பிரகசரண வகுப்பில் கௌண்டினிய கோத்திரத்தைச் சார்ந்தவர். இசைத்துறையில் புகழ் வாய்ந்த வைத்தியநாத அய்யர், சாம்பமூர்த்தி அய்யர், அப்பாசாமி அய்யர் ஆகியோர் உடன்பிறந்தோராவர். இவர் தம் தந்தையிடமும் மாநோன்புச் சாவடி வேங்கட சுப்பிரமணிய அய்யரிடமும் இசைப்பயிற்சி பெற்றார். தமிழில் சிலேடையாகப் பேசுவதில் திறமைமிக்கவர். இவருக்குத் திருவாவடுதுறை ஆதினத்தலைவரும், புதுக்கோட்டை மன்னரும் சிறப்புகள் பல செய்தனர். இவர் பெரியபுராணத்தைக் கீர்த்தனையாகப் பாடித் திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் அரங்கேற்றினார். இவருடைய நூல்களுள் பார்வதி சரித்திரக் கீர்த்தனை, திருச்செந்தில் சந்தவிருத்தம். திருவையாற்றந்தாதி, மயூரகிரி இரட்டை மணிமாலை, திருவையாற்று நிரோட்டக யமக அந்தாதி, மகா வைத்தியநாத விசய சங்கிரகம், திருத்தொண்டர் போற்றிக் கலி வெண்பா, திருவையாற்றிரட்டை மணிமாலை ஆகியன குறிப்பிடத்தக்கன.