சிறு குடல் வளர்ச்சி மாறுபாடுகள்
ciṟu kuṭal vaḷarcci māṟupāṭukaḷ
இரைப்பைக் குடல் மண்டலத்தின் பல பிறவி ஊனங்கள் முழுமையாகவோ, ஓரளவாகவோ குடலை அடைக்கலாம்.
இரைப்பைக் குடல் மண்டலத்தின் பல பிறவி ஊனங்கள் முழுமையாகவோ, ஓரளவாகவோ குடலை அடைக்கலாம். பெரும்பாலும் மலக் குடலும், குதமும் அடைக்கப்படுகின்றன. அடுத்துச் சிறுகுடல் அடைக்கப்படுகிறது. இரைப்பையின் கடைப் பகுதிச் சுருக்கம், முன் சிறு குடல் வளர்ச்சி இன்மை அல்லது சுருக்கம், நடுச் சிறு குடல் அல்லது கடைச் சிறு குடல் வளர்ச்சி இன்மை அல்லது சுருக்கம், தவறான சுழற்சியால் ஏற்படும் குடல் திருகல், பிறவிப் பெருங்குடல் நோய், துளைபடாக் குதம், குடல் பக்க வளர்ச்சி என்பவை குறிப்பிடத்தக்க வளர்ச்சி மாறுபாடுகளாகும்.
இரைப்பைக் கடைப் பகுதிச் சுருக்கம். இச்சுருக்கம், 150 பேரில் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் தோன்றலாம். முதலில் ஆண் குழந்தையே பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. 15% நோயாளிகளில் இந்நோய் பரம்பரையாகத் தொடர்ந்து வரலாம். தொடக்கத்தில், எதிர்க்களிப்பும் சில வேளை வாந்தியும் உண்டாகும். குழந்தை பிறந்த மூன்று வாரத்திற்குள் அறிகுறிகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு முறையும் சாப்பிட்டவுடன், வாந்தி உண்டாகிறது. ஆகவே, குழந்தை அடிக்கடிச் சாப்பிடுவதும் உடனடியாக வாந்தி எடுப்பதுமாக இருக்கலாம். இரைப்பையிலுள்ள பொருள்களுடன் சில சமயம் குருதியும் வெளிப்படும். பித்த நீர் காணப்படுவதில்லை. மலம், மிக மிகக் குறைந்த அளவிலேயே வெளிப்படும். நீர்ம இழப்பு, சோர்வு, எடை இழப்பு, தோல் சுருக்கம் ஆகியன காணப்படும். சிறு குடலில் அலை அசைவுகளைக் காணலாம். பேரியம் சல்ஃபேட் கொடுத்து நோய் உறுதி செய்து, செய்யப்படும் அறுவையை ஃபிரடெட்—ராம்ஸ்டெட் அறுவை முறை என்பர்.
சிறுகுடல் அடைப்பிலும் பிறவிச் சுருக்கம், 1500 குழந்தைகளில் ஒன்று என்ற வீதத்தில் உண்டாகிறது. வாந்தி, வயிறு உப்புசம், மலம் பிரியாமை ஆகிய அறிகுறிகளைக் கொண்டு நோயை உறுதி செய்யலாம். நோயை அறுதியிட 10—15 மி.லி. இரைப்பை நீர்மத்தை ஆய்வு செய்யலாம். நீர்ம இழப்பைச் சீர் செய்து, அறுவை முறையைக் கையாள வேண்டும்.
சிறுகுடலின் வளர்ச்சியின்மையும், சுருக்கமும் பிறவி ஊனங்களைச் சேரும். நடுக் குடலின் முழு வளர்ச்சியின்மையும் (atresia) துளையற்ற குதமும் (imperforate anus) டவுன் கூட்டியத்தில் (Down syndrome) காணப்படுகின்றன. முழு வளர்ச்சியின்மை, பல வகைகளில் காணப்படும். குடலில் தவறான சுழற்சி அல்லது அரைகுறையான சுழற்சி ஏற்படுவதால் குடல் அடைப்பும், வாந்தியும், நீர்ம இழப்பும் ஏற்படுகின்றன. நீர்ம இழப்பைச் சீர் செய்தவுடன், வயிற்றைத் திறந்து, அறுவை மருத்துவம் செய்ய வேண்டும்.
பிறவிப் பெருங்குடல் நோயில் ஏற்படும் குடல் அடைப்பு, பரம்பரையாக வரலாம். வாந்தி, வயிற்று வலி, வயிற்று உப்புசம் ஆகியவை காணப்படும். மலக்குடல் பிணிக் கூறாய்வின் மூலம் நோய் அறுதியிடப்படும். பேரியம் சல்ஃபேட் கொடுத்து எடுக்கப்படும் எக்ஸ் கதிர்ப் படங்களும் உதவியாக இருக்கும். பேரியம் நீரேற்றி நோய் அறுதியிடுவதில் உதவும். அறுவை முறையே மருத்துவமாக அமைகிறது. இதற்குக் குடல் திறப்பு முறையைப் (colostomy) பெரும்பாலும் பின்பற்றுகின்றனர்.
துளைபடாக் குதம், 4500 குழந்தைகளில் ஒன்றிற்கு ஏற்படுகிறது. இது மேலோ, கீழோ இருக்கலாம். கீழே உள்ளதற்கு எளிதில் மருத்துவம் அளிக்கப்படுகிறது. மேலே இருப்பது, சிறு நீர்க் குழலினுள் நுழைந்து புரையோடிய புண்ணை உண்டாக்கும். எக்ஸ் கதிர்ப் படம் எடுப்பதன் மூலம் அறுதியிடும் போது, அறுவையே நன்மை பயக்கும். —அ. கதிரேசன் நூலோதி. Vaughan et.al., Nelson Text Book of Paediatrics, Twelfth Edition, W.B. Saunders Co., London, 1983.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 337)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uuac3ukk/
தமிழ்“சிறு குடல் வளர்ச்சி மாறுபாடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uuac3ukk/APA
Oliyon Research. (2026). சிறு குடல் வளர்ச்சி மாறுபாடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uuac3ukk/MLA
"சிறு குடல் வளர்ச்சி மாறுபாடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uuac3ukk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment