அரசின் அதிகார எல்லை என்பது, நாடுகளின் அரசாங்க அமைப்பிலே ஒவ்வொரு அரசாங்கக் கூறுக்கும் (Unit), அல்லது அதிகாரிக்கும் சட்டத்தினால் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் செலுத்தப்பட வேண்டிய நிலப்பகுதியின் அளவு, அல்லது பொதுப் பணியின் அளவு அல்லது வரம்பினைக் குறிக்கும். ‘Jurisdiction’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான பொரும், நீதிவழங்குதல் அல்லது நீதிவழங்கும் அதிகாரத்தைக் கையாளுதல் என்பதாகும். இது சட்டப்படியான அதிகாரத்தையும் ஏவும் அதிகாரத்தையும் குறிப்பதற்குக் கையாளப்படுகிறது. சட்டத்தை எடுத்துச் சொல்லி உரிமையைக் காத்தல் அஃதாவது நீதி வழங்குதல் என்ற பொருளில் தான் இது கையாளப்பட்டது. ஒவ்வொரு அதிகாரியும் தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைச் சட்டப்படி எந்தத் துறையில் கையாளுதல் வேண்டுமோ அந்தத் துறையில்தான் அதனைக் கையாளுதல் வேண்டும். வேறொரு துறையில் அதனைச் செலுத்துதலாகாது என்ற வரம்பும் இத்தொடரால் உணர்த்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இடைக்காலத்தில் இங்கிலாந்தில் தோன்றிய ஒரு சட்டத்தின்படி கிறித்துவத் திருச்சபையைச் சேர்ந்த அதிகாரிகள், உலகியல் துறை பற்றிய வழக்குகளை (Temporal) முடிவு செய்தல் கூடாது. எச்.எச் வில்சன் (H.H. Wilson) தாமெழுதிய ‘பிரிட்டிஷ் இந்திய வரலாறு’ (இரண்டாம் பாகத்தில்), “மாநிலங்கள் ....... கிழக்கிந்திய வாணிகக் கழகத்தாருடைய அதிகார எல்லையிலிருந்து விலக்கப்பட்டவை என்று கருத இயலாது”, என்று கூறுகிறார். கி.பி. 1896–ஆம் ஆண்டின் சட்ட அறிக்கை ஒன்று (Law–Times Report, LXXIII), ஒரு குறிப்பிட்ட நீதிமன்றத்தைச் சுட்டி, “அமெரிக்காவிலுள்ள சொத்துகளைப் பற்றிய வழக்குகளை ஆய்வு செய்து தீர்மானித்தற்கு, இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை” என்று கூறுகிறது. இங்கு இத்தொடர், நீதி வழங்கும் அதிகாரத்தைக் குறிக்கிறது. பொதுவாக இத்தொடர், அதிகாரம், ஆட்சி, நிருவாகம், கட்டுப்பாடு முதலிய கருத்துகளை உணர்த்துகிறது; இதிலிருந்து நீதிவழங்கும் அதிகாரத்தின் அளவு அல்லது எல்லை, ஆட்சி அல்லது நிருவாக அதிகாரத்தின் அளவு அல்லது எல்லை முதலிய பொருள்களை உணர்த்துவதாகக் கொள்ளப்பட்டது. பின்னர் இது நீதித் துறை அமைப்பையும் நீதிமன்றத்தையும் குறிப்பிடும் பொருளிலும் கையாளப்படுகிறது. உரிமை வழக்குகளை (Civil Cases) முடிவு செய்யும் நீதிமன்றங்கள் எல்லாம் தம் நாட்டில் அவ்வவற்றின் அதிகார எல்லைக்குத் தக்கப்படி ஒன்றின்மேலொன்றாக அடுக்காக அமைக்கப்பட்டுள்ளன. வழக்கிற்கு உட்படும் மதிப்பு சிறிய அளவாக இருந்தால், அவ்வழக்கு முன்சீபு நீதிமன்றத்திலும், (Munsif-Court) சிறிது கூடுதல் மதிப்புள்ள வழக்காக இருந்தால் மாவட்டத் தலைமை நீதிமன்றத்திலும், அதனினும் பெரிய வழக்கு மாநில உயர்நீதிமன்றத்திலும், எல்லாவற்றிலும் பெரிய வழக்கு இந்தியத் தலைமை நீதிமன்றத்திலும் ஆய்வு செய்யப்படுகின்றன. அதிகாரம் செலுத்தப்படும் நில எல்லையை ஆதாரமாக வைத்து, நாடு பொதுவாக மாநிலங்களாகவும், மாநிலங்கள் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் வட்டங்களாகவும், வட்டங்கள் பட்டணங்களாகவும், சிற்றூர்களாகவும் பிரிக்கப்படுகின்றன; ஒவ்வொரு கூறுக்கும் அதிகாரத்தைத் செலுத்துவதற்கு அரசாங்கம் அதிகாரிகளை அமர்த்தி, அவர்களுடைய அதிகாரத்தையும் பணிகளையும் வரையறை செய்கிறது. அதிகார எல்லையை ஒட்டியே அதிகாரக்குவிப்பு (Centralisation) அதிகாரப் பரவல் (Decentralisation) என்ற கருத்துகள் தோன்றியுள்ளன. செய்ய வேண்டிய பணிகளை முடிவு செய்யும் அதிகாரங்கள் அனைத்தும் (Decision-making Powers) நாட்டின் தலைமை அல்லது நடுவண் அரசாங்கத்திடமோ அதிகாரியிடமோ வைக்கப்பட்டிருக்குமானால், அத்தகைய அமைப்புக்கு அதிகாரக் குவிப்பு என்பது பெயர்; இவ்வகை அமைப்பில் மேல்நிலை அதிகாரியானவர் மக்களுக்குப் பொறுப்பாக இல்லாமலும், தம் பதவிக்கு மக்களுடைய ஆதரவைச் சார்ந்திராமலுமிருக்கிறார்; எனவே இவ்வகை அமைப்பு குடியாட்சி இயல்பு உடையதன்று. இதற்கு மாறாக, அதிகாரப் பரவல் முறையிலே கீழ்நிலை அதிகாரிகளுக்கும் அவரவர் நில எல்லைக்குத் தேவையான செயல்களை முடிவு செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வமைப்பில் கீழ்நிலை அதிகாரிகள் தம் எல்லையிலுள்ள மக்களுக்குப் பொறுப்பாக இருப்பாராதலால், இவ்வமைப்பு குடியாட்சி இயல்புடையதாக இருக்கும். ஆட்சித்துறை அமைப்பிலே, அதிகாரிகளின் அதிகார அளவு அல்லது வரம்பு என்ற கோட்பாடுதான் மிக இன்றியமையாத கோட்பாடாகும். எவ்வாறெனில் ஒவ்வோர் அரசாங்க அதிகாரியும் மக்களுக்குப் பயனுள்ள ஒரு பணியைச் செய்தற் பொருட்டே, தமக்குச் சட்டத்தினால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை – (அதாவது ஒருவரை ஒரு பணியைச் செய்யுமாறு வற்புறுத்தி அவரை ஏவக்கூடிய, ஆணையிடக் கூடிய அதிகாரத்தைச்) செலுத்துதல் வேண்டும். அதுவன்றி அவர் பிறிதொரு நோக்கத்திற்குத் தம் அதிகாரத்தைக் கையாளுவராயின், அவர் சட்டத்தை மீறிச் செயற்படும் குற்றத்துக்கு ஆளாவார். சட்டத்- தின் ஆட்சி (Rule of Law) நடைபெறும் குடியாட்சி நாட்டில் சட்டத்தை மீறிய தவறு செய்பவர் எவராயினும், அவர் எளிய குடிமகனாயினும், அரசாங்க அலுவலராயினும், மிகக் கீழ்நிலை அலுவலராயினும், மிக உயரிய தலைமை அமைச்சர் அல்லது குடியரசுத் தலைவராக இருந்தாலும், சட்டத்தை மீறிய குற்றம் செய்தவராகக் கருதப்பட்டுத் தண்டம் பெறுதற்குரியர். ஆதலால் ஒவ்வோர் அதிகாரியும் தம் அதிகார எல்லை அல்லது வரம்பு என்பது, தாம் செய்ய வேண்டிய பணிகளால் அமைந்தது என்றுணர்ந்து செயலாற்றுதல் வேண்டும். பிரிட்டிசு, அமெரிக்க, இந்திய ஆட்சித்துறைகளெல்லாம் குடியாட்சிக் கோட்பாட்டை ஒட்டி அமைக்கப்பட்டவையாதலால், அவற்றில் அரசியல் அதிகார எல்லை என்னும் கோட்பாடு அடித்தளமாக விளங்குவதைக் காணலாம்.பா.சூ.