சமூகப் பணியாளரும், சிகாகோ மக்கள் நலக் கல்லூரியை (Chicago School of Civics and Philanthropy) நிறுவியவர்களுள் ஒருவரும், ஐக்கிய அமெரிக்கக் குழந்தைகள் மன்றத்தின் முதல் தலைவரும் ஆவார். இவர் இல்லினாய் மாநிலத்திலுள்ள இராக்கோர்டு என்னுமிடத்தில் பிறந்தார்; இலாத்ராபு (Lathrope Julia Clifford) கி.பி. 1880–ஆம் ஆண்டில் பல சமூகப் பணிகளைச் செய்தார். சிகாகோவிலுள்ள அறக்கொடைக் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில் மிகக் கடுமையான முயற்சி மேற்கொண்டார். இல்லினாயின் அறக்கொடை மன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக விளங்கி, அனாதை இல்லங்களுக்குச் சென்று பல சிறந்த பணிகளைச் செய்துள்ளார். இவர் அனாதை இல்லங்களிலிருந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குத் தனியாக இல்லங்கள் ஏற்படுத்த முயன்றார். தேசிய மனநலக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். சிகாகோ மனநலத் துணைக் குழுவை உருவாக்க உதவினார். இளங்குற்றவாளிகளின் நலத்திற்காகப் பாடுபட்டு, அவர்களுக்கென கி.பி. 1899–ஆம் ஆண்டில் இளங்குற்றவாளிகள் நீதிமன்றத்தை இல்லினாயில் நிறுவக் காரணமாக இருந்தார். இதுவே அமெரிக்க ஐக்கியநாட்டின் இளங்குற்றவாளிகள் நீதிமன்றமாகும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இளங்குற்றவாளிகளில் மனநோய் நிறுவனத்தை உருவாக்க உதவினார். இதுவே குழந்தைகளின் மனநலத்தைக் காக்க உருவாக்கப்பட்ட முதல் மருத்துவமனை ஆகும். சூலியா 1912–ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமெரிக்க ஐக்கியக் குழந்தைகள் மன்றத்திற்குத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறந்த பணியாற்றினார். இதற்குத் தலைவராக இருந்த ஒன்பது ஆண்டுகளில் குழந்தைகளின் சமூக, பொருளாதார நிலைகள், குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றவை பற்றி ஆய்வு செய்தார். மேலும் குழந்தை இறப்பு, பேறுகாலத்தில் தாயின் இறப்பு. குழந்தை வளர்ச்சி போன்றவற்றிலும் ஆய்வு செய்து பல முன்னேற்றத் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தினார். ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு குழந்தைகள் நலப் பணி பற்றித் திட்டமிடப் பல நாடுகளுக்கு உதவி புரிந்தார். இவர் பெண்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத்தரப் போராடினார். இல்லினாயில் ஓட்டுரிமை பெற்ற பெண்களின் கூட்டமைப்புக்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டுநாடுகளின் (League of Nations) குழந்தைகள் நலக் குழுவிற்கு 1925 ஆம் ஆண்டு முதல் 1931-ஆம் ஆண்டு வரை ஆசோசனை கூறுபவராகவும் இருந்தார்.