கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வைசாலியில் வாழ்ந்த பரத்தையருள் ஒருத்தி. இவள் அரசருடைய தோட்டத்தில் மாமரத்தடியில் கண்டெடுக்கப் பெற்றவளாதலால் அம்பபாலி எனப்பெயர் பெற்றாள், ஆம் என்றால் மாமரம். அம்பபாலி நன்கு வளர்ந்து அழகான பெண்ணானாள். இவளுடைய அழகில் சொக்கிப் போன பல இளவரசர்கள் இவளை அடையத் தமக்குள் போராடிக் கொண்டனர். உள்நாட்டுப் போரைத் தவிர்க்க இவளைப் பரத்தையாக அறிவித்தனர். இவளை அனுபவிக்க விரும்பியவர் இரவொன்றுக்கு 50 பொற்காசுகளை வழங்கவேண்டும். இவளுடைய கவர்ச்சியான கட்டழகினால் ஈர்க்கப்பட்டவர்களுள் பலர் இவளை விரும்பி அடைய முற்பட்டனர். இவளுடைய புரவலர்களாகச் செல்வந்தர்கள் பலர் இருந்தனர். பிம்பிசார மன்னரும் அவர்களுள் ஒருவர். பிம்பிசாரருக்கு இவள் மூலம் விமலா கொண்டண்ணா என்ற மகன் பிறந்தான். அம்பபாலி புத்தரைப் பற்றியும் அவர் ஆற்றி வந்த அறிவுரை பற்றியும் கேட்டறிந்தாள். வைசாலிக்கருகில் இருந்த கோட்டிக் கிராமத்திற்குச் சொற்பொழிவாற்ற வந்த புத்தரின் வருகையை அறிந்த அம்பபாலி, புத்தரைக்காணத் தம் பணியாட்கள் புடைசூழ வந்து சேர்ந்தாள். புத்தரின் அறிவுரைகளைச் செவிமடுத்த இவள் பெருமகிழ்ச்சியுற்று, புத்தரையும் அவருடைய சீடர்களையும் தம் பெருமனைக்கு எழுந்தருளி விருந்துண்ண வேண்டினாள். இவளுடைய அழைப்பினை ஏற்றுக்கொண்டார் புத்தர். இதனையறிந்த இளவரசர்கள் நம் வீடுகளுக்கும் புத்தர் பிரானை விருந்துண்ண அழைத்தனர். முதன்முதலில் அம்பபாலி தம்மை விருந்துண்ண அழைப்பு விடுத்துள்ளதையும், தாம் வர இசைந்துவிட்டதையும் கூறிய புத்தர், இளவரசர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்பபாலி கொடுத்த விருந்திற்குப் புத்தர் வந்திருந்தார். அவருடைய போதனைகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்ட அம்பபாலி காலப்போக்கில் புத்தரின் சீரிய சீடர்களுள் ஒருத்தியாக மாறினாள். அம்பபாலி பிக்குணியாக மாறியதைக் குறித்துப் பல கதைகள் உண்டு. இவள் மகன் விமலா கொண்டண்ணாவும் புத்த சமயத்தில் சேர்ந்து அருகதர் என்று போற்றப்பட்டார். தம் மகன் புத்த பிக்குவாக மாறியபின், அவர் ஆற்றிய அழகான சொற்பொழிவு ஒன்றினைக் கேட்ட அம்பபாலி, மெய்ம்மறந்து பிக்குணியானாள். இவளுடைய மாளிகையில் விருந்துண்ண வந்த புத்தருக்கு அம்பபாலி மாந்தோட்டம் ஒன்றினைப் பரிசாக வழங்கினான். அங்கு இவளே பிற்காலத்தில் விகாரை ஒன்றைக் கட்டினாள்.