இறப்பின் போக்கு
iṟappiṉ pōkku
ஒரே காலத்து இறப்பு வீதத்தின் மூலம், இறப்பு நிலையையும் குறிப்பிட்ட பல்வேறு காலங்களின் இறப்பு வீதங்களால் இறப்பின் போக்கை (Mortality Trend) யும் அறியலாம்.
ஒரே காலத்து இறப்பு வீதத்தின் மூலம், இறப்பு நிலையையும் குறிப்பிட்ட பல்வேறு காலங்களின் இறப்பு வீதங்களால் இறப்பின் போக்கை (Mortality Trend) யும் அறியலாம்.
இறப்பின் நிலையும் அதன் போக்கும்
உலக நாடுகளின் அண்மைக் கால இறப்பு நிலை; உலகம் முழுவதுமான 1950–55–ஆம் ஆண்டுகளுக்கிடையில் 1000 மக்களுக்கு 18.5 ஆக இருந்த இறப்பு வீதம், 1975–80–இல் 11.5 ஆகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக மனிதன் பிறக்கும்போது எதிர்பாக்கப்படும் சராசரி ஆயுட்காலம் (Average Expectation of life at Birth) 47.2 ஆண்டுகளிலிருந்து 57.4 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
இறப்பு நிலையையும் அதன் போக்கையும் பொறுத்த மட்டில் கண்ணுக்குப் புலனாகிற வேறுபாட்டை, வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கிடையே காணலாம். வளர்ச்சியடைந்த நாடுகளைப் பொறுத்தமட்டில் இறப்பு வீதத்தில் வியக்கத்தக்க மாற்றமெதுவும் நிகழவில்லை. 1950–55க்கிடையே 1000க்கு 10.1 ஆக இருந்த இறப்பு வீதமானது, 1975–80–இல் 9.4 என்றாகியுள்ளது. ஆனால், வளர்ச்சி குன்றிய நாடுகளைப் பொறுத்தமட்டில் மிகவும் வியக்கத்தக்க வகையிலே இறப்பு வீதம் குறைந்துள்ளது. அதாவது 1950–55க்கிடையே 1000க்கு 22.6 ஆக இருந்த இறப்பு வீதம், 1975–80–இல் 12.2 ஆகக் குறைந்துள்ளது.
இறப்பு வீதம் குறைந்ததன் விளைவாக, வளர்ச்சியடைந்த நாடுகளில் 1950–55க்கிடையே 65.2 ஆண்டுகளாக இருந்த மனிதனின் சராசரி ஆயுட்காலம், 1975–80 இல் 71.9 ஆண்டுகளாக மிகுந்துள்ளது. வளர்ச்சி குன்றிய நாடுகளில் இதே கால கட்டத்தில் 42.5 ஆண்டுகளாயிருந்த மனிதனின் சராசரி ஆயுட்காலம் 51.1க்கு உயர்ந்துள்ளது.
உலகிலேயே ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் மிகுந்த இறப்பு வீதம் காணப்படுகிறது (1975–80–இல் 1000க்கு 17.1 இறப்புகள்). மனிதனின் சராசரி ஆயுட்காலமும் மற்றுக் கண்டங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஆப்பிரிக்காவில் மட்டுமே குறைந்து காணப்படுகிறது. (1975–80–இல் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 48.7 ஆண்டுகள் ஆகும்). ஆப்பிரிக்காக்கண்டத்திற்கு அடுத்தபடியாக ஆசியாக் கண்டம் மிகுந்த இறப்பு வீதத்தைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் ஒசனியாவும் இறுதியில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளும் இடம் பெறுகின்றன. ஆகையால் இறப்புவீதக் குறைப்பில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகள் முன்னாகவும் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகள் பின்னாகவும் உள்ளன. உலகிலேயே தெற்கு ஆசிய நாடான குவைத்து, தெற்கிந்தியக் கிழக்கு நாடான புருணை (Brunei), ஓசியானியாத்தீவுக் கூட்டத்திலுள்ள பிசி (Fiji), மத்திய அமெரிக்காவிலுள்ள கோசுடாரிகா (Costa Rica) ஆகிய நாடுகளில் மிகக் குறைந்த அளவிலான இறப்பு வீதமும் மேற்கு ஆப்பிரிக்க நாடான கேம்பியா (Cambia) வில் மிக உயர்ந்த இறப்பு வீதமும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மனிதனின் சராசரி ஆயுட் காலம் ஆப்பிரிக்க நாடான கேம்பியாவில் குறைந்தும் மற்ற நாடுகளில் உயர்ந்தும் காணப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பத்தாண்டுகள், உலகம் முழுவதுமான இறப்பின் அளவில் ஏற்பட்ட மாறுதல்களைத் தெளிவுறப் புலப்படுத்தும்.
அட்டவணை (1) இல் காட்டப்பட்டுள்ள பிரிவுகள் முதலில் உலகம் முழுமைக்குமான போக்கினை உணர்த்துவதோடு, வளர்ச்சியடைந்த, வளர்ச்சி குன்றிய நாடுகளைப் பற்றி மிகவும் விரிவான முறையில் விளக்குகிறது. வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கிடையேயான அண்மைக் காலப் போக்குகளையும் எதிர்கால நிலையினையும் தெளிவுற உணர்த்துகிறது. அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மதிப்பிடப்பட்டதாகையால் இவை செம்மையற்றிருப்பதற்கான வாய்ப்பைக் கொண்டவையே. மேலும், இங்கு வளர்ச்சியடைந்த நாடுகள் என்பது சோவியத்து ஒன்றியம். கனடா, வட அமெரிக்காவிலுள்ள அமெரிக்க ஐக்கிய நாடு, அட்டவணை 1
எதிர்பார்க்கப்படும் காலமும் (மதிப்பிடப்பட்டது) 1950–55, 1975–80, 1995–2000
::மூலம்: ஐக்கிய நாட்டுச் சபை, 1980.
ஆசியாவிலுள்ள சப்பான், இசுரேல், ஓசியானியாவிலுள்ள ஆசுத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவையாகும். மற்றப் பகுதிகளான அனைத்து ஆப்பிரிக்க நாடுகள், இலத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியாவிலுள்ள குறிப்பிடப்படாத மற்ற நாடுகள் ஆகிய அனைத்தும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் அடங்குகின்றன.
உலகம் முழுவதுமான இறப்பு வீதம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டு வரை, மிக உயர்ந்தும் அடிக்கடி ஏறியும் இறங்கியும் வந்துள்ளது. இதற்கான சிறப்புக் காரணங்களாகச் சொல்லப்படுவன: 1. உணவுப் பற்றாக்குறை அதன் காரணமாக ஏற்பட்ட பஞ்சமும் ஊட்டச்சத்துக் குறைவும். 2. கொள்ளை நோய்கள் (Epidemic Diseases), 3. அடிக்கடி நிகழ்ந்த போர்கள் (Recurrent Wars), 4. மிகக் குறைவான சுற்றுப்புறத் தூய்மை ஆகியன.
1. பஞ்சமும் உணவுப் பற்றாக்குறையும்
எல்லா வகையிலும் பின்தங்கியிருந்த தொழிற்காலத்திற்கு முந்தைய காலங்களில், வேளாண்மைத் துறையில் போதுமான வளர்ச்சி இல்லை. பஞ்சங்கள் அடிக்கடி தோன்றலாயின. நல்ல விளைச்சல் இருந்த சில காலங்களிலுங் கூட உணவைப் பாதுகாப்பதற்கும் உணவுப் பொருள்களைப் பற்றாக்குறையுள்ள இடங்களுக்குக் கொண்டுபோவதற்கும் போக்குவரத்து வசதிகளும் இல்லை. மேற்கு ஐரோப்பாவில் மட்டும் கி.பி. 1000–ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1882–ஆம் ஆண்டிற்குள், 450 முறை பஞ்சங்கள் நிகழ்ந்ததாகச் சான்றுகள் கிடைக்கின்றன. ஆசியாவில் மேலும் மோசமாயிருந்தது. சீனாவில் மட்டும் கி.மு. 108–ஆம் ஆண்டிலிருந்து 1911–ஆம் ஆண்டு வரை 1828 முறை பஞ்சங்கள் ஏற்பட்டன. இப்படிப்பட்ட பஞ்சங்களினால் மக்களுக்குப் போதுமான சத்- துணவு கிடைக்காமல் உடல் நலம் குன்றி எண்ணற்ற நோய்கள் உண்டாயின.
2. கொள்ளை நோய்கள்
வரலாற்றின் தொடக்க காலம் முதற்கொண்டே மனிதக்குலம் கொடுமையான நோய்களின் பாதிப்புக்குள்ளாகியது. பித்தவாதக் காய்ச்சல் (Typhoid), வயிற்றுப் போக்கு, அம்மை, மலேரியா, காசநோய், மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever), குழந்தைகள் தொற்று நோய்கள் போன்றவை பெரும் எண்ணிக்கையிலான உயிர்களைக் கொள்ளை கொண்டன. மக்கள் தொகை நெருக்கமான பகுதிகளில் இத்தொற்று நோய்கள் நேரடித் தொடர்பு {Personai Contacts), தூய்மையற்ற தண்ணீர், உணவு, மக்கள் இடப்பெயர்வு, ஈக்கள் ஆகியவற்றின் மூலம் மிக எளிதில் பரவின. ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னால், இந்நோய்களைப் பற்றிய அறிவு மக்களுக்குப் போதுமானதாயில்லை. மேலும், மக்கள் பொதுவாக மருத்துவ வசதி பெறாமலிருந்தனர்.
(3) அடிக்கடி நிகழ்ந்த போர்கள்
மக்கட் குலத்தின் வரலாறு முழுமையிலும் மக்கள் தொகை அளவைப் பாதிப்பதில் போர்கள் மிகச் சிறந்த பங்கேற்றன. இப்போர்களின் விளைவாக இருவித இறப்புகள் நிகழ்ந்தன. பெருமளவில் போர் வீரர்கள் போர்க்களத்திலேவே மாண்டனர். சிலர் போரின் விளைவாக ஏற்பட்ட நோய்களால் உயிர் இழந்தனர். சில போர்கள், நோய்களைப் பரப்புவதன் மூலம் குடிமக்களின் உயிர் இழப்பிற்குக் காரணமாக இருந்தன. எடுத்துக்காட்டாக, கி.பி. 1870–71–ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு–பிரசியப் போரைக் (Franco–Prussian War) குறிப்பிடலாம்.
(4) மிகக் குறைவான சுற்றுப்புறத் தூய்மை
சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பற்றிய அறிவு அவ்வளவாக இல்லை. மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்திருந்தது. மனிதனின் தனித் தூய்மை நிலையும் போதுமானதாக இல்லை. சுற்றுப்புறத் தூய்மை வசதிகளும் நிறைவளிப்பதாயில்லை. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து சுற்றுப்புறத் தூய்மைக்கு ஊறு விளைவித்தன. இதன் காரணமாகப் பலதரப்பட்ட நோய்கள் தோன்றிப் பலர் மடிந்தனர். மேலும் வீட்டுச் சூழல் (Housing Condition), பணியிடச்சூழல் (Working Condition) ஆகியவை தூய்மைக் கேட்டை விளைவிப்பனவாகவேயிருந்தன.
வளர்ச்சியடைந்த நாடுகளான மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, வேளாண்மைப் புரட்சி ஆகியவற்றால் உற்பத்தி பெருகி பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, அந்நாடுகளின் இறப்பின் அளவு வெகுவாகக் குறைந்தது. பொதுநலவழி நடவடிக்கைகளாகப் பல தூய்மைச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு மக்களிடையே தூய்மை உணர்வுகளும் மேலோங்கின. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், நோய்த் தடுப்பு மருத்துவம் (Immunology) ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி, இறப்பின் அளவைக் குறைத்தது.
வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்ப் பொதுநல வழி முறைகளும் நோய்க் கட்டுப்பாட்டு வழிமுறைகளும் வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து அறிந்து கொள்ளப்பட்டன. இதன் விளைவாக இந்நாடுகளில் ஏற்பட்ட ஓரளவு பொருளாதார முன்னேற்றமும் பிறப்பின் அளவைக் குறைத்தது. வெளிநாட்டு இறக்குமதியில் மிகச் சிறப்பான நோய் எதிர்ப்பு மருந்துகளான ‘பெனிசிலின்’ (Penicillin), அம்மை எதிர்ப்பு ஆற்றல் மருந்து (B.C.G.) போன்றவை அடங்கும். அறிவியல் தொடர்பு (Scientific Communication), பன்னாட்டு ஒற்றுமை ஆகியவற்றின் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து மிகவும் குறைந்த விலையில் மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பெற்று, அவை பொது நலவழித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. உலக நலவழி நிறுவனத்தின் (World Health Organisation) உதவியால் மிக்க அளவில் மக்களை மாய்க்கும் மலேரியா, அம்மை போன்ற நோய்கள் அடியோடு ஒழிக்கப்பட்டன. இதன் காரணமாகவே வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இறப்பின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்தது.
இந்தியாவில் இறப்பின் போக்கு (Mortality Trend in India): இந்திய மக்கள் தொகை வளர்ச்சியின் வரலாற்றை, 1921–ஆம் ஆண்டுக்கு முன், இறப்பை எதிர்த்துப் போராடிய வரலாறு என்றே சொல்லலாம். இந்திய நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி 1921–ஆம் ஆண்டு வரை இறப்பைப் பொறுத்திருந்தது. இப்பேரளவான இறப்புகளுக்குப் பஞ்சமும் கொள்ளை நோய்களுமே காரணங்களாய் அமைந்தன. நாடு முழுவதும் பரவலாக ஏற்பட்ட இயற்கையின் சீற்றங்களாலும் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாயின.
இந்தியாவில் இறப்பின் போக்கைக் காட்டும் இந்த அட்டவணையிலிருந்து சிறப்பாக இரு கருத்துகள் புலனாகும். முதலாவதாக, 1921–ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் இறப்பு வீதம் மிகவும் உயர்ந்திருந்தது. (1000 மக்களுக்கு இறப்பு 40க்கும் 50க்கும் இடையிலிருந்தது). இரண்டாவதாக, 1921-
(1881 – 1981)
(1000 மக்களில் இறப்புகள்)
ஆம் ஆண்டுக்குப் பிறகு இறப்பு வீதம் குறைந்து வந்துள்ளது. மிகக் கொடுமையான சளிக் காய்ச்சல் கொள்ளைநோய் (Influenza Epidemic) 1911–1921 என்ற இவ்விரண்டு ஆண்டுகளுக்கிடைப்பட்ட பத்து ஆண்டுகளில் அதுவும் குறிப்பாக 1918–ஆம் ஆண்டில் இந்தியாவில் பேரழிவினை உண்டாக்கியதெனச் சொல்லலாம். இக்கொடுமையான நோய் ஒரு கோடியே ஐம்பது இலட்சத்துக்கும் மிகுதியான உயிர்களைக் கொள்ளை கொண்டதாகக் கிங்சிலி தாவீது (Kingsly David) என்பார் கணக்கிட்டுள்ளார். இக்காரணமாகவே இக்குறிப்பிட்ட பத்தாண்டில் சராசரி இறப்பு வீதம் மற்ற ஆண்டுகளின் இறப்பு வீதங்களைக் காட்டிலும் மிக உயர்ந்து காணப்படுகிறது. இந்தியா இறப்பை எதிர்த்துப் போராடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் ஆண்டுச் சராசரி இறப்பு வீதம், 1911–21–ஆம் ஆண்டிலிருந்து 1961–1971–ஆம் ஆண்டு வரையான 50 ஆண்டுகளில் 48.6இலிருந்து 18.9க்குக் குறைந்துள்ளது. இக்குறைவு, 61 விழுக்காட்டிற்கும் மிகுதியானதாகும். இந்தியாவில் காணப்படும் பல்வேறு மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் மிக உயரளவு இறப்பு வீதத்தையும். கேரளா மிகக் குறையளவு இறப்பு வீதத்தையும் பெற்றுள்ளன.
இந்தியாவில் பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் சராசரி ஆயுட்காலம்
இது இறப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. இறப்பின் போக்கை இதன் உதவியோடும் அறிந்துகொள்ள முடியம். எடுத்துக்காட்டாக, பிறக்கும் போது மனிதன் சராசரியாக வாழ எதிர்பார்க்கப்படுங் காலம் உயர்ந்துகொண்டே போகுமானால், அது இறப்பின் போக்குக் குறைந்து வருவதைக் காட்டும். ஒரு மனிதன் அவன் பிறக்கும்போது வாழ எதிர்பார்க்கப்படும் சராசரி ஆயுட்காலத்தை, ஆயுள் அட்டவணையின் உதவியால் கணிக்க இயலும். பின் வரும் அட்டவணையில் மனிதனின் சராசரி ஆயுட் காலம் வெவ்வேறு காலங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் இரண்டு பத்தாண்டுகளில் மிக மோசமான இறப்பு நிலையின் காரணத்தால் மனிதனின் சராசரி ஆயுட்காலம் மிகவும் குறைந்து காணப்பட்டது. சராசரி ஆயுட்காலம் 1911–1921–இல் ஆண்களுக்கு 19.4 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 20.9 ஆண்டுகளாகவும், இருபாலருக்கும் சேர்த்து 20.1 ஆண்டுகளாகவும் இருந்தது. இந்நிலை உலகின் எப்பகுதியிலும் காணப்பட முடியாத மிகக் குறைந்த அளவாகும்.
அட்டவணை–2
எதிர்பார்க்கப்படுங் காலம் (மதிப்பிடப்பட்டது) –1901–1910: 1961–1970
:மூலம்: C.I.C.R.E.D. The Population of India World Population Year Series 1971.p.36.
அட்டவணை (2)–இல் காணப்படுவதைப் போல, 1901–1910–இல் 22.9 ஆண்டுகளாயிருந்த மனிதனின் சராசரி ஆயுட்காலம், 1961–1970–இல் 46.4 ஆண்டுகளாய் மிகுந்துள்ளது. இது இறப்புப் போக்குக் குறைந்து வருவதைக் காட்டுகிறது. முதல் இரண்டு பத்தாண்டுகளில் பெண்களின் சராசரி ஆயுட்காலத்தைவிடக் குறைந்து காணப்பட்ட ஆண்களின் சராசரி ஆயுட்காலம், அடுத்துவரும் ஒவ்வொரு பத்தாண்டுகளில் பெண்களின் ஆயுட்காலத்தைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகிறது. இது ஆண்களின் இறப்பு, பெண்களின் இறப்பைக் காட்டிலும் குறைந்து வருவதைக் காட்டுகிறது. மிகுதியான இளங்குழவி இறப்பு வீதத்தின் (Infant Mortality Rate). காரணத்தால், இந்தியாவில் மனிதன் வாழ எதிர்பார்க்கப்படும் காலம் குறைவாயுள்ளது. காண்க: இளங்குழவி இறப்பு.
எடுத்துக்காட்டாக, 19011–1911–இல் உயிரோடு பிறந்த ஆயிரம் ஆண்குழந்தைகளில் 290 இளங்குழவிகளும், பெண் குழந்தைகளில் 284.6 இளங்குழவிகளும் ஓர் ஆண்டைக் கடக்குமுன்பே இறந்துள்ளன. அதாவது நான்கில் ஒருபங்கு இளங்குழவிகள் ஒரு வயதைக் கடப்பதற்குள் இறந்துவிடுகின்றன. இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் மொத்த இறப்பில் இளங்குழவி இறப்பின் விழுக்காடு மிகுதியான அளவில் காணப்படுவதால், மொத்த இறப்பு வீதம் பெரிதும் உயர்ந்து காணப்படுகிறது. ஆகவே, நாட்டின் மொத்த இறப்பு வீதத்தைக் குறைக்க வேண்டின் முதலில் இளங்குழவி இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது இன்றியமையாத ஒன்றாகிறது.
இந்தியாவில் 1931–ஆம் ஆண்டு வரை உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளுன் 200க்கும் மிகுதியான குழவிகள் ஒருவயதைக் கடக்குமுன்பே இறந்தன. இது 1983–இல் 122க்குக் குறைந்தது. இளங்குழவி இறப்பு வீதம் இவ்வாறு பெருமளவில் குறைந்துள்ள போதிலும், இது வளர்ச்சியடைந்த நாடுகளின் இறப்பு வீதத்தைக் காட்டிலும் மிகுதியானதேயாகும். வளர்ச்சியடைந்த நாடுகளில் இளங்குழவி இறப்பு வீதம் 30க்கும் குறைவானது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. எஸ்.இரா.
துணை நூல்கள்
Agarwala, S.N., India's Population Problem, Tata Mc Graw–Hill Publishing Company Limited, New Delhi, 1977.
Chandrasekhar,S., Infant Mortality, Population Growth and Family Planning in India, George Allen and Unwin, London, 1972.
Donald Bogue, J., Principles of Demography, John Wiley and Sons, New York, 1969.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 512)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uhrean7d/
தமிழ்“இறப்பின் போக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uhrean7d/APA
Oliyon Research. (2026). இறப்பின் போக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uhrean7d/MLA
"இறப்பின் போக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uhrean7d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment