நுண்ணுயிர்ப் பெருக்கத் தடை
nuṇṇuyirp perukkat taṭai
இது நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும், பெருக்கத்தையும் கட்டுப் படுத்தும் ஒரு முறையாகும்.
இது நுண்ணுயிரிகளின் வளர்ச்சியையும், பெருக்கத்தையும் கட்டுப் படுத்தும் ஒரு முறையாகும். திறன் மிகு வேதிப் பொருள்களைப் பயன் படுத்தி, நுண்ணுயிர்ப் பெருக்கத் தடையை (bacteriostasis) உண்டாக்கலாம்.
செயல்பாடு. நுண்ணுயிரிப் பெருக்கத் தடைகள் பொதுவாக மூன்று வகையாகச் செயல் படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை, நுண்ணுயிரியின் புரதத்தை மாற்றி அமைப்பதன் மூலம் செயல் படுகின்றன. சில, நுண்ணுயிரியின் அணுக் கருவை அழிக்கின்றன. சில, நுண்ணுயிரிகளுக்கு ஆற்றல் அளிக்கும் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துகின்றன.
புரதத்தை மாற்றும் நுண்ணுயிரிப் பெருக்கத் தடைகள். அமிலங்கள், ஃபீனால், டெட்ராசைக்கிளின், குளோராம் ஃபினிக்கால் முதலிய மருந்துகள் நுண்ணுயிரிகளின் புரதத்தை அழித்து விடுவதன் மூலம், பெருக்கத்தை மட்டுமன்றி வளர்ச்சியையும் தடுத்து விடுகின்றன.
அணுக் கருவை அழிக்கும் நுண்ணுயிரிப் பெருக்கத் தடைகள். நியூட்ரல் ரெட் (neutral red), புரோஃபிளோவின் (proflovin), டொலுயிடின் போன்ற ஒரு சில சாயங்கள் அணுக் கருவால் உறிஞ்சப் படுகின்றன. இந்நுண்ணுயிரிகள் மீது, புற–ஊதாக் கதிர்கள் படும் போது சாயங்கள்புது ஆற்றல் பெறுகின்றன. இவ்வகை எழுச்சி, குவானைன் எனப் படும் நியூக்ளிக் அமிலத்தைத் தனியே பிரித்து விடுகிறது. இவ்விளைவு ஒளியேற்ற விளைவு (photodynamic reaction) எனப் படுகிறது.
ஆற்றல் அளிப்புத் தடுப்பு. பாதரச உப்புகள் நுண்ணுயிரிகளின் உடலில் உள்ள சல்ஃப்ஹைட்ரல் பொருள்களுடன் இணைந்து, ஆற்றல் அளிப்பதைத் தடை செய்வதன் மூலம், நுண்ணுயிரிப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துகின்றன. நுண்ணுயிரிப் பெருக்கத் தடைகளின் இயக்கம், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை, வகை, நேரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். சான்றாக, 500–600 நுண்ணுயிரிகளைக் கொல்ல, ஒரு சில துளிகளே போதுமானவை. ஆனால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மிகுந்தால், ஒரு சில துளிகள் செயல் அற்றவையாக இருக்கும்.
சாக்கடையில் காணப்படும் நுண்ணுயிரிகள். ஒரு செல் உயிரி, நாக்குப் பூச்சி, பாக்டீரியா, வைரஸ் ஆகிய நான்கு முக்கிய நுண்ணுயிரிகளினால் நீர்–நோய்கள் பரவுகின்றன. இவற்றில் மனிதனுக்கு நேர்முகமாகத் தீங்கு விளைவிக்கும் அல்லது மாசை எடுத்துக் காட்டிச் (Indicators) சொல்லும் வகைகளைக் காணலாம்.
ஒரு செல் உயிரி (Protozoa). இவ்வகை ஒட்டுண்ணிகள் மனிதக் கழிவின் மூலம் நீரை அடைகின்றன. இதனால், மனிதர்களுக்கு அமீபிய வயிற்றுப் போக்கு (Amoebic dysentry) ஏற்படுகிறது. இதனை, வளர்ந்த நாடுகளில் கட்டுப் படுத்தி இருந்தாலும், தென் கிழக்கு ஆசியாவில் மிகவும் பரவலாகக் காணப் படுகின்றது.
இவ்வொட்டுண்ணியில் சீலியேட் (ciliates) முதன்மைப் பங்கு கொள்கிறது. பேரமேசியம், கோல்போடா, கோல்பிடியம், வொர்ட்டி செல்லா, எபிஸ்டைலிஸ் போன்றவை எடுத்துக் காட்டு வகைகளைச் சேர்ந்தவை.
எண்டமிபா ஹீஸ்டோலிடிகா (Entamoeba histolytica) எனும் ஒட்டுண்ணி, மனிதனின் பெருங்குடலில் வசித்து மிகக் கடுமையான மலச் சிக்கலையோ, குருதிக் கடுப்பினையோ ஏற்படச் செய்கிறது. ஜையார்டியா லேம்ப்லியா (Gyrardia lamblia) என்னும் ஒட்டுண்ணி பெரும்பாலும் வெப்பப் பகுதிகளிலுள்ள குழந்தைகளைப் பாதித்துப் பேதியை உண்டாக்குகிறது.
நாக்குப்பூச்சி (Helminthes) குடல் வழி ஒட்டுண்ணி-நாக்குப் பூச்சி சாக்கடைகளின் கழிவுப் பொருள்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, நீர் நிலைகளை மாசு படுத்தும். வட்டப் பூச்சி, கொக்கிப் பூச்சி, சாட்டைப் பூச்சி, ஊசிப் பூச்சி, குட்டை நாக்குப் பூச்சி, நாக்குப் பூச்சி ஆகியன கேடுகளை விளைவிக்கின்றன.
வட்டப் பூச்சி சிறு குடலைத் தாக்கிக் கடும் வயிற்று வலியைக் கொடுக்கும். 15–31 செ.மீ. நீளமும் கொண்ட இப்பூச்சி, சிறு குழந்தைகளைத் தாக்குகிறது. பாதிக்கப் பட்ட குழந்தைகள் உடல் வலிமை, மன வலிமை குன்றியவர்களாகவும், சத்துக் குறைந்தவர்களாகவும் காணப் படுவர்.
கொக்கிப் பூச்சி மனிதக் குடலின் உட்புறச் சுவர்களில் சிறப்பு பற்களால் கவ்விக் கொண்டு, குருதியை உறிஞ்சும் ஒட்டுண்ணியாக விளங்குகிறது. இவ்வகைப் பூச்சிகளின் முட்டைகளில் இருந்து வெளி வரும் கூட்டுப் புழு (larve), நேரடியாக வெற்றுக் கால்களின் மூலமாகவோ, தோல் மூலமாகவோ உடலில் புகுந்து குருதியில் கலக்கிறது. இதனால் குருதியில் இரும்புத் தாது குறைந்து, குருதிச் சோகை ஏற்படுகிறது. சாட்டைப் பூச்சியின் ஒற்றுமை இனப் பெருக்கத்தினால், குடல் வழி அடைப்பட்டு வயிற்றெரிச்சல் உண்டாகிறது. ஊசிப் புழுவின் பெண் இனம், குதத்தின் (Anus) முடிவில், மிகுதியான முட்டைகள் இடுகிறது. பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் கை, துணி மூலமாக மற்றவர்களுக்கும் இதன் முட்டைகளைப் பரப்புகின்றனர். நாக்குப் பூச்சி 2–7 மீட்டர் நீளம் வளர்கிறது. இது, மனிதக் குடலின் உட்புறச் சுவர்களைக் கவ்விக் கொண்டு, தனக்கு வேண்டிய உணவுப் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிறது. இவ்வகை நாக்குப் பூச்சியின் முட்டை, பன்றி அல்லது கால் நடைகளின் மூலமாகக் கூட்டுப் புழுப் பருவம் அடைந்து, பின் இவ்விலங்குகளை உண்பவர்களுடைய குடலில் முழுப் பருவம் அடைகிறது. இதனால், பாதிக்கப் பட்டவர்கள் கடும் வயிற்று வலியாலும், எடை குறைவினாலும் துன்பத்திற்குள்ளாகின்றனர்.
மேற்கூறிய நாக்குப் பூச்சியின் முட்டைகள், சாக்கடை நீர் மூலமாக நீர் நிலைகளை அடைந்து, அதில் வாழும் உயிரினங்களையும், பின் நீர்-வாழ் உயிரினங்களை உட்கொள்ளும் விலங்குகளையும் பாதிக்கின்றன. உலகச் சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வுப் படி, இவ்வகை நோய்கள், கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் காணப் படுகின்றன எனத் தெரிகிறது.
பாக்டீரியா. பல்லாயிரக் கணக்கான நன்மை செய்யும், தீங்கு இழைக்கும் நுண்ணுயிர்கள் மனித, விலங்கு கழிவு நீருடன் சாக்கடைகள் மூலம் ஆறு, குளம், கடலைச் சென்று மாசு படுத்துகின்றன. எனவே, எவ்வகையான நுண்ணுயிரிகளைக் கண்டு பிடித்தால், தீங்கிழைப்பவற்றை அறியலாம் என ஆராய்ந்தனர். இவ்வகைத் தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகள் எப்போதும் குறைந்த அளவிலேயே காணப் படுவதால், மிகுந்த அளவில் இருக்கும் குடல் வழி நுண்ணுயிரிகளை எளிதில் கண்டறிய முடிகிறது. மல மாசு நுண்ணுயிர், எஸ்ச்சரிசியா கோலி (E.coli), ஸ்ட்ரெப்ட்டோகோக்கை (streptocci) ஆகியவை இவ்வகையில் குறிப்பிடத் தக்கவை.
எஸ்ச்சரிச்சியா கோலை நீரில் 96–98% மல மாசையும், அதன் தொடர்பான தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளையும் காட்டும். ஸ்ட்ரெப்ட்டோகோக்கை மல மாசின் அளவையும், அதன் மூல காரணங்களையும் எடுத்துக் காட்டும். மேலும், இம்மாசு தொன்மையானதா, புதியதாக ஏற்பட்டதா என அறியவும் உதவுகிறது. எஸ்ச்சரிச்சியா கோலி, ஸ்ட்ரெப்ட்டோகோக்கை ஆகியவற்றின் விகிதப் பொருத்தம் (Fo/Fs ratio) மாசுச் சேர்க்கையில்–நுண்ணுயிரிகள், பிராணிகள், மனித நீர்க் கழிவு நீர்களிலிருந்து பங்கினைத் தெரியப் படுத்துகிறது. இவ்விதமான எடுத்துக் காட்டிகள் நீர் நிலைகளில் இருப்பது பெருமளவில் தீங்கிழைக்காவிடினும், தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளைக் கொண்ட நீரை எடுத்துக் காட்டி எச்சரிக்கையடைய வைக்கிறது. நோய் நுண்ணுயிரிகளைச் செய்முறைப் பரிசோதனைகள் மூலம் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போகும் போது, இந்த எடுத்துக் காட்டிகள் மிகவும் பயன் படுகின்றன. எனவே, முன் மாதிரியான எடுத்துக் காட்டிகள் கீழ்க் காணும் குண நலன்களைப் பெற்றிருத்தல் வேண்டும்.
மனித, விலங்குகளின் மல மாசில் கூடுதலாகவும், எளிதில் கண்டு பிடிக்கப் படுபவையாகவும், பாதுகாக்கப் பட்ட நீரில் காணப் படாதவையாகவும், தீமை விளைவிக்காதவையாகவும், நோய் நுண்ணுயிரியை விட நீண்ட காலம் வாழ்ந்திருக்கவும், ஆனால், நீரைத் தூய்மை செய்யும் போது, கடைப் பிடிக்கும் முறைகளில் எளிதில் அழியக் கூடியவையாகவும் இருத்தல் வேண்டும்.
நோய் நுண்ணுயிரிகள். சால்மோனல்லா (salmonella), ஷிஜெல்லா (shigella), லெப்ட்டோஸ்பைரா (Leptospira).
நோய் பரப்பும் ஈ-கோலி. பாய்ஸ்சரெல்லா (pasteurella), விப்ரியோ (Vibrio), மைக்கோபேக்டிரியம் (mycobacterium) முதலிய நோய் நுண்ணுயிரிகள் பொதுவாக நீர் நிலைகளில் காணப் படுகின்றன. இவை மிகுந்து காணப் படுவதும், மல மாசு நீர்ச் சாக்கடை, கடல் மற்றும் ஆற்றில் கலப்பதே இதற்குக் காரணமாகும்.
இவ்வகை நுண்ணுயிரிகள் உள்ள நீர் நிலைகளை ஆராய்ந்து, அதனை மக்கள் பயன் படுத்தாமல் தடுப்பதற்கான செய்திகளைப் பரப்புவதும், இந்நுண்ணுயிரியால் பாதிக்க ப்பட்ட விலங்குகளை உட்கொள்ளாமல் தடுப்பதும், குறிப்பிடத் தக்கவை.
சால்மோனெல்லா. 2000க்கு மேற்பட்ட இனங்களையும், துணை இனங்களையும் கொண்டது. இது உணவை நச்சாக்கக் கூடியதும், பேதி மற்றும் கடுமையான டைஃபாய்டு (typhoid) காய்ச்சலை உண்டாக்கக் கூடியதுமான நோய் நுண்ணுயிரியாகும். இது வளமுள்ள பண்ணை விலங்குகளிலும், செம்மறி ஆடு, பன்றிகளிலும் காணப்படுகிறது. 12–15 சால்மோனெல்லா இனங்கள், மனிதரில் காணப்படும் பெருவாரியான தொற்று நோய்களுக்குக் காரணம் என ஆராய்ந்துள்ளனர். டைஃபாய்ட் காய்ச்சல், சா. டைஃபி (S.Typhi) எனும் நுண்ணுயிரியால் மனிதருக்குப் பரவுகிறது.
சா பேராடைஃபி. (S.paratyphi) இந்தியாவில் அரிதாகவும், மியான்மரில் பரவலாகவும் காணப் படும். இது கால் நடை, மனித மற்றும் பண்ணை விலங்குகளின் கழிவுகள், நீர் நிலைகளையும், கடல் மற்றும் கழிமுகங்களையும் சென்றடைவதால் பெருகும்.
ஷிஜெல்லா எனும் நுண்ணுயிரி பெரும்பாலும் 10 வயதுக்குட் பட்ட பெண் குழந்தைகளைத் தாக்கி, காய்ச்சல், வாந்தி, சீத பேதி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இவ்வகை நுண்ணுயிரி, பெரும்பாலும் நோய் வாய்ப்பட்டவர்கள் மூலமாக, மற்றவர்களுக்குப் பரவுகிறது. மேலும், சுகாதாரமில்லாத நீரைப் பயன் படுத்துவதாலும் இந்நோய் பரவுகிறது. இது விலங்குகளில் அரிதாகக் காணப் படுகிறது.
லெப்ட்டோஸ்பைரா எனும் நோய் நுண்ணுயிரி மனித உடலுக்குள், காயம் மற்றும் சளி, கோழை மூலம் சென்று, சிறுநீரகம், கல்லீரல், மைய நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது பெரும்பாலும் வீட்டு விலங்குகள் மூலம் பரவுகிறது. நேரடிச் சிறுநீர்க் கழிவினால், நீர் நிலைகள், ஆறுகளில் இவ்வகை நுண்ணுயிரி பெருகுகிறது.
பாய்ஸ்சுரெல்லா நுண்ணுயிரி ஓடை, நீர் நிலைகளில் மலம், சிறு நீர் கழிவு, இறந்து போன கால் நடை போன்றவற்றால் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் குளிர் காய்ச்சல், மூட்டு வலியால் துன்பமுறுகின்றனர்.
நோய் பரப்பும் ஈ–கோலி என்பது வளரும் நாடுகளில் சாதாரணமாகக் காணப் படுகிறது. இதன் மூலம், பேதி, வயிற்றுப் போக்கு கண்டு, உடல் நீர் வற்றி, நோயாளி மெலிவர். 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் இந்நோயால், பாதிக்கப் படுவதாக ஆராய்ந்துள்ளனர். இந்நோய் நுண்ணுயிரி கால் நடை, பன்றி, மீன் போன்றவற்றில் காணப் படுகிறது. மேலும், இது மொத்த குடல் வழி மல நுண்ணுயிரியில் (faecal coliforms) 1% காணப் படுகிறது. இவ்வகை நோய்ப் பரப்பும் ஈ.கோலி ஒரு முறை மீன் போன்றவற்றில் குடலில் காணப் பட்டால் நீர் நிலைகள் மிகுந்த மாசடையும் எனக் கண்டறியப் பட்டுள்ளது.
காலரா நோய், தென் கிழக்காசிய நாடுகளில் மிகுந்து காணப் படுகிறது. இது விப்ரியோ காலரே (V.Cholerae) எனும் நுண்ணுயிரியால் பரவுகிறது. இதனால், கடுமையான வயிற்றுப் போக்கு, நீர்–மலம் கழித்தல், வாந்தி, சிறுநீர் தடைப் படுதல், உடல் நீர் வற்றுதல் போன்றவை தோன்றுகின்றன. இந்நோய், நோய் கண்ட மனிதராலோ, நன்றாகச் சமைத்து அளிக்கப்படாத உணவாலோ, மாசடைந்த நீராலோ மற்றவர்களுக்குப் பரவுகிறது. கடல் நீரில் மிகுந்து காணப்படும் விப்ரியோ பேராஹிமோலிட்டிடஸ் (V.parahaemolytits) எனும் நுண்ணுயிரி பெரும்பாலான கடல் வாழ் உயிரினங்கள் மூலம் மனிதனை அடைகிறது. இதுவும், வி. காலரே போன்று நோய் விளைவிக்கக் கூடியது. இவ்வகை நோய் நுண்ணுயிரிகள், ஆறு, குளங்களில் மிகுந்து காணப் படுவதில்லை. ஏனெனில், வி.பேராஹிமோலிட்டிகஸ் உப்பு மிகுந்த நீர்களில் வாழும் தன்மையுடையது.
மைக்கோ பேக்டீரியம் எனும் நோய் நுண்ணுயிரி, நுரையீரல் காச நோயைக் (Pulmonany tuberculosis) கொடுக்கக் கூடியது. இவ்வகை நோய் நுண்ணுயிரி, மாசுள்ள நீர் (கழிவு) மூலம் பரப்பப் பட்டு, பல காலங்கள் உடலுக்குள் வளர்ந்து, நோய் முற்றியவுடன் தெரிய வரும். இது நீச்சல் குளங்களிலும், தூய்மையற்ற நீர் நிலைகளிலும் இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.
குடல் வழி வைரஸ் (Enteric Viruses). 100க்கும் அதிகமான இவ்வகை நுண்ணுயிரி பாரிச வாயு, மூளை, இதய, சுவாச நோய், வாந்தி பேதியை உண்டாக்கும். அமெரிக்காவில் இவ்வகை வைரஸ்களினால் ஆண்டுக்கு 12,000 சிறார்கள் இறந்து போகிறார்கள் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. உலகச் சுற்றுப் புறச் சூழ்நிலை தரக் கட்டுப்பாட்டு நிர்வாகக் குழு நடத்திய ஆய்வுப் படி (1970) காச நோய் வருவதற்கு அடினோ–வைரஸ் (adeno Viruses) நுண்ணுயிரி காரணமாகலாம் எனக் கருதப் படுகிறது. மலம், சீழ், கோழை, சளி மூலம் கழிவு நீரில் கலந்து, இந்நுண்ணுயிரி நீர் நிலைகளைச் சென்றடைகிறது. இந்நோய் நுண்ணுயிரி கால் நடை, பன்றிகளில் காணப் படுவதற்கு மனிதர்களே காரணம் என அறிந்துள்ளனர். நவீன முறையில் பதப் படுத்தப் பட்ட குடிநீர், சரியான கழிவு நீர்க் கட்டுப்பாடு, கழிவு நீக்குதலில் கடைப் பிடிக்கும் புதிய அளவுகளினால், காலரா மற்றும் டைஃபாய்டு குடல் வழி–நுண்ணுயிரிகளை அகற்றி விட்டாலும், எளிதில் பிரித்தெடுக்க முடியாத வைரஸ் நுண்ணுயிரிகளால், அமெரிக்காவில் ஆண்டு தோறும் 50,000–60,000 பேர் பாதிக்கப் படுகிறார்கள்.
கழிவு நீர்த் தூய்மிப்பில் நுண்ணுயிரிகளின் வெளியேற்றம். நீரானது குடல் வழி நுண்ணுயிரிகள், வைரஸ் நுண்ணுயிரிகள் ஆகியவை சூரிய ஒளி, வெப்பம், மற்றும் வண்டல் கசடுகளினால் செயலிழக்கச் செய்யப் படுகின்றன. எனவே, இவ்வகை நுண்ணுயிரிகளை முறையான நீர்த் தூய்மிப்பின் மூலம் வெளியேற்றலாம். இவ்வகைத் தூய்மிப்புச் செயல்களைக் கீழ்க் காணுமாறு பிரிக்கலாம். அவை முதன்மை முறை. இரண்டாந்தர உயிரியல் முறை, உயிரிய வேதியல் முறை எனப் படும்.
முதன்மை முறை. இம்முறையில் பண்படாத கழிவு நீரை, நேரடியாகத் தூய நீரில் கலந்து, வலிமை குன்றச் செய்து, 35–45% உயிர் வேதி ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்து, மேலும் 60% கழிவுகளை மிதக்கும் திண்மப் பொருளாக மாற்றி வெளியேற்றலாம்.
நாக்குப் பூச்சியின் முட்டைகள், இம்முறையினால் இரண்டு மணி நேரத்திலேயே வண்டல் கசடுகளில் மிகுதியாக அமிழ்ந்து விடுகின்றன. ஏனெனில், இம்முட்டைகளின் தன் அடர்த்தி (specific gravity) 1.1 இது நீரினளவை விட மிகுதி. இம்முறையில் வைரஸ் நுண்ணுயிரி சிறிதளவே வெளியேற்றப் படும்.
இரண்டாந்தர உயிரியல் முறை. ஊக்குவித்த களிமண் மூலம் (activated–sludge process) கழிவு நீர்த் தேக்கங்களில் தேவையான வளிமங்களை நிரப்புவதால், இவ்வகை ஊக்குவித்த களிமண் கிடைக்கப் பெறுகிறது. பாஸ்கரன் குழுவினர் கண்டு பிடிப்பில் 93–98% ஆஸ்காரிஸ், 81.5–96% கொக்கிப்பூச்சி, 91.8–100% சாட்டைப் பூச்சி முட்டைகள் இம்முறையில் அகற்றப்பட்டமை அறியப் படுகிறது.
குடல்–வாழ் நுண்ணுயிரிகள், நோய் நுண்ணுயிரிகள் ஆகியன இம்முறையின் மூலம் மிக சிறப்பாக அகற்றப் படுகின்றன. இம்முறையால் வைரசை முற்றிலும் அகற்ற முடியாவிடினும், பெரும்பாலான வகைகளை வெளியேற்றி விடலாம் எனக் கருதப் படுகிறது.
நிலை நிறுத்தப்பட்ட குளங்கள் மூலம், இவ்வகைக் குளங்களைக் கட்டவும், பயன்படுத்தவும், பராமரிக்கவும் எளிய முறைகளைக் கடைப் பிடிக்கலாம். மேலும், இக்குளங்கள் வெப்பப் பகுதித் தட்ப–வெப்ப நிலைகளின் ஒத்த தன்மையுடையவை.
கழிவு நீரை இக்குளங்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைத்தால், நாக்குப் பூச்சியின் முட்டைகளையும் அமிபிக் ஒட்டுண்ணிகளையும் முற்றிலும் அழிக்கலாம். குளங்களின் கீழ்ப் பகுதி ஆக்சிஜன் அற்று இருப்பதால், இவ்வகைப் பூச்சிகள் ஒடுக்கப் படுகின்றன. ஜோஷி குழுவினர் 1973ஆம் ஆண்டு, நாக்பூரில் நடத்திய ஆய்வுப் படி, இக்குளங்களில் விடப் படுவதற்கு முன் உள்ள கழிவு நீரில் 4–540 / 100மி.லி. சால்மோனால்லாக்கள் இருந்தன எனவும், பின் 4 நாள்கள் இக்கழிவினை நிலை நிறுத்தப் பட்ட குளங்களில் வைத்திருந்து, வெளியேற்றிய நீரில் சால்மோனால்லாக்கள் இல்லை எனவும் கண்டறிந்துள்ளனர். இம்முறையில், ஈ.கோலி குடல் வழி ஸ்ட்ரெப்டோ கோக்கை மற்றும் மொத்த குடல் வழி நுண்ணுயிரிகளை 99.9% வரை பிரித்தெடுக்கலாமென அறுதியிட்டுக் கூறுகின்றனர். இதே போல், வைரஸ் நுண்ணுயிரியை 10 நாள்களுக்குள் பெரும் பகுதி வெளியேற்றி உள்ளனர்.
வேதிப் பொருள்கள் மூலம் உறைதல் (Chemical coagulation) செய்யலாம். இம்முறையில், வேதிப் பொருள்கள், எ.டு: ஃபெர்ரிக் குளோரைடு, கால்சியம் கார்பனேட், கால்சியம் குளோரைடு ஆகியவை, இரண்டாந் தர நிலைக்கு உட்படுத்தப் பட்டு வெளியேற்றிய கழிவு நீரில் சேர்த்து, நுண்ணுயிரிகளைப் பெருவாரியாக வெளியேற்றலாம். இம்முறையால் 99.1% வைரஸ் நுண்ணுயிரிகளை அகற்றலாம் என அறிந்துள்ளனர். இவ்வகை வேதிப் பொருள்கள் கழிவு நீரில் சேர்வதால், இந்நீரின் காரம் (alkalinity) மிகுதிப் படுத்தப் பட்டு, நுண்ணுயிரிகளைச் செயலிழக்கச் செய்யும். பெரும் அளவு முன்மாதிரி ஆய்வில் 99.98.5% குடல் வழி நுண்ணுயிரிகளை உறைதல் வண்டல் கசடுகளாக்குதல், வடிகட்டுதல் (Chemical coagulation–sedimentation–filtration) முறையினால் பிரித்தெடுத்து உலர்த்தியுள்ளனர்.
நுண்ணுயிரிக் கொல்லி. மேற்கூறிய முறைகளில் கழிவு நீரில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக அகற்றி விட முடியாது. எனவே, நுண்ணுயிரிகளற்ற நீரைப் பெற நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன் படுத்த வேண்டும். குளோரின் பல ஆண்டுகளாக நுண்ணுயிரிக் கொல்லியாக விளங்கி வருகிறது.
நாக்குப் பூச்சியின் முட்டை இவ்வகை நுண்ணுயிரிக் கொல்லியால் (0.2–0.6 மி.கி/லி) 30 நிமிடங்களில் முழுவதுமாக அகற்றப் படுகிறது. காட் என்பார் 1975இல் நடத்திய ஆய்வுப் படி நிலை நிறுத்தப் பட்ட குளங்கள் மூலம் தூய்மை செய்யப் பட்டு, வெளியேற்றிய நீரில் 8 மி.கி./லி. குளோரின் (சோடியம் ஹைப்போ குளோரைட்) நுண்ணுயிரிக் கொல்லியைப் பயன் படுத்தி 4.6 X 105 ஆக இருந்த ஈ. கோலியை 2க்கு குறைவாகக் குறைத்தனர். இதே அளவு நுண்ணுயிரிக் கொல்லி வி.காலரேயை அழித்தது. வைரஸ், இவ்வகைக் குளோரின் அல்லது அம்மோனியாக் கொல்லியால் முற்றிலும் வெளியேற்றப்படாமலும், நீர் நிலைகளில் வாழும் மீன்களுக்கும், மீன்களுக்கு உணவாகப் பயன்படும் ஏனைய விலங்குகளுக்கும் அழிவைத் தரும்.
எனவே ஓசோனேசன் (Oxonation) எனும் முறையினைக் கையாண்டு, இதனைத் தவிர்க்கலாம். மஜும்தார் குழுவினரின் ஆய்வுப் படி, 1 மி.கி./ லிட்டருக்கும் குறைவான ஓசோன், 5 நிமிடங்களில் மேற்கூறிய பணியினை இட்டு நிரப்ப வல்லது எனவும், இதனால், நீர் நிலைகளில் வாழும் மீன்களுக்கும், அவற்றை உண்டு வாழும் மனிதருக்கும், தீங்கு வருவதில்லை எனவும் அறியப் படுகிறது.
மீன், இறால் வகைகளில் நுண்ணுயிரிகள் மாசு. நோய் நுண்ணுயிரியும், வைரசும்–கடல், கழி முகங்களில் நுழைவதால், மீன், இறால் வகைகளுக்கு நோய்கள் உண்டாகி, இவற்றை உட்கொள்ளும், மனிதரையும், விலங்குகளையும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகளால் ஒட்டுண்ணிகள், பண்படாத அல்லது நன்கு வேக வைக்காத மற்றும் உரிய முறையில் பதனிடப்படாத மீன், இறால் வகைகளை உட்கொள்வதால், தொற்றும் என அறியப் பட்டது. பல முன்னேறிய மேலை நாடுகளில் மீன், இறால் மூலமாகக் காலரா, டைபாய்டு, பொட்டுலிசம் (botulism) மற்றும் உணவு நச்சு (food poisioning) நோய்கள் பரவுகின்றன. —க. வெங்கடேஸ்வரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 56)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ue3mvz6j/
தமிழ்“நுண்ணுயிர்ப் பெருக்கத் தடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ue3mvz6j/APA
Oliyon Research. (2026). நுண்ணுயிர்ப் பெருக்கத் தடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ue3mvz6j/MLA
"நுண்ணுயிர்ப் பெருக்கத் தடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ue3mvz6j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment