அதிர வீசியாடுவார் என்பது சிவபெருமானுக்கு அவர் ஆடுங்கோலம் ஒன்றினால் அமைந்த பெயராகும். ஆடல் வல்லானாகிய சிவபெருமான் மதுரையம்பதியில் கால் மாறி ஆடிய அமைப்பில் உள்ளார். நடனக்கலை பயின்ற சிவபக்தனான பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்கிக் கூத்தர் பெருமானாகிய சிவபெருமான் மதுரையில், இயல்புக்கு மாறாகக் கால் மாறி ஆடி அருளினார். மன்னன் வேண்டியவாறு என்றும் யாவரும் காண இறைவன் மதுரை மன்றில் கால்மாறி ஆடிய கோலத்தில் காட்சியளிக்கின்றார் என்பது புராண வரலாறு. தமிழிலுள்ள இரண்டு திருவிளையாடற் புராணங்களும் இத்திருவிளையாடலைப் பாடிப் போற்றுகின்றன. இந்நடனக்கோலத்தில் சிவபெருமானுடைய இடக் கால் சற்றே வளைந்து முயலகன் மீது சிறிதே ஊன்றப்பட்டு விளங்கும். வலக் கால் உயர்த்தி வீசி ஆடும் பாங்கில் விளங்கும். இந்த நடனக் கோலம் அதிர வீசியாடுதல் எனப்படும். சிவபெருமானது இத்திருக்கோலத்தைச் சுட்டித் திருஞானசம்பந்தர் ‘அதிரவீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ’ என்று போற்றுகின்றார். இதனைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி தம் திருவிளையாடற் புராணத்தில், “முன்னம், மெய்ப்பட ஆடுங்கூத்தை விட்டு மேல் வலத்தாள் குஞ்சித்து, அப்பெரும் புதுமைக் கூத்தை ஆடினான் அதிரவீசி” என்றும், அதனால் சிவபெருமான் ‘அதிரவீசி ஆடுவார்’ வழங்கப்பட்டார் என்னும் குறிப்பிட்டுள்ளார்.