உத்தராயணம்
uttarāyaṇam
அயணம் என்பதற்கு வினை அடிப்படையில் செல்லும் வழி என்பது பொருள்.
அயணம் என்பதற்கு வினை அடிப்படையில் செல்லும் வழி என்பது பொருள். இடத்திற்கு ஏற்ப இதற்குக் கதி, இருப்பிடம் என்றும் பொருள் அமையும். நாராயண, இராமாயண, பாராயண போன்ற தொடர்களில் இதனைக் காணலாம்.
கதிரவன் கதிர்கள் (கிரணங்கள்) நேராகவன்றிச் சற்றுச் சாய்வாகவும் பாய்வதாலேயே பொருள்களில் உள்ள ஈரம், உரம் போன்றவற்றை அவற்றால் உரிஞ்ச முடிகிறது. சூரிய சக்தி கொண்ட மின்னாற்றல் எப்பொழுதும் குறுக்கேதான் பாயும். கதிரவனின் ஆயிரம் கதிர்களின் நடுவே மிக நுண்ணிய துளை இருக்கலாம் என்று வேதம் கூறுகிறது. உள்ளத்திற்கும் உடலுக்கும் வலிமை ஊட்ட வல்ல ‘மர்த்யம்’ என்ற ஆற்றல் உடலிலும், ஆன்மபலம் அளிக்கவல்ல ‘அம்ருதம்’ என்னும் ஆற்றல் உச்சந்தலையின் முன் பகுதியிலும் கதிரவன் கதிர்கள் சிலவற்றின் வழியாகப் பாய்கின்றன என்று வேதம் கூறுகிறது.
காலம் என்பது கடவுள் போன்று பிரிக்கவியலாத ஒரு தத்துவம். அது தவறின்றிச் செயற்படவல்லது. வைதிக நெறியில் இயற்றப்பட வேண்டிய கடன்கள் நேரம், நாள் கருதிச் செய்ய வேண்டி இருப்பதால், சோதிட சாத்திரத்திற்கிணங்க ஊழி, ஆண்டு, பருவம், மாதம், நாள் முகூர்த்தம், ஓரை முதலியனவாகக் காலம் பிரிக்கப்பட்டுள்ளது. கதிரவன் பூமியைச் சுற்றுகிறான் என்ற கொள்கை கொண்ட சாத்திர நூல்கள், கதிரவன் பூமியின் வட பகுதியில் சற்றுச் சாய்ந்து செல்லும் கால அளவை உத்தராயணம் எனவும், தெற்குப் பகுதியில் சாய்ந்து செல்லும் கால அளவைத் தட்சிணாயணம் எனவும் கூறுகின்றன.
அமரம் என்னும் நிகண்டு காலத்தை நிமிடம், காட்டை, கலை, கணம், முகூர்த்தம், பொழுது (பகல் அல்லது இரவு), நாள், பட்சம், மாதம், பருவம், அயணம் எனப் பகுத்து விளக்குகிறது. மூன்று பருவங்கள் கொண்டது ஓர் அயணம். தை முதல் ஆனி வரையிலான 6 மாதங்கள் உத்தராயணம் எனப்படும்.
காலவகைகளுள் நன்மை பயப்பனவும் தீமை விளைவிப்பனவும் உள்ளன. அவை முறையே மங்கல காலம், அமங்கல காலம் எனப்படுகின்றன. இராகு காலம், அமங்கலயோகம், தியாச்சியம் முதலிய காலங்களில் நற்செயல்கள் செய்தல் தகாது. கால நுட்பங்களை நன்கு உணர்ந்த ஆபசுத்தம்ப முனிவர் உத்தராயணம் வளர்பிறையில் குறிப்பிட்ட நாளில் மங்கல வேளையில்தான் செயல்களைச் செய்ய வேண்டும் எனவும், அப்பொழுதுதான் பூமியில் கதிரவன் கதிர்கள் வாயிலாக நிலச்சத்து ஏற்படும்; பூமிக்கடியில் உள்ள இரத்தினங்கள் முதலியன கெடாமலும் இருக்கும்; உயிரினங்களின் உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகியவற்றில் ‘ஊர்க்கு’ என்ற சீவாதார இரசாயனப் பொருள் சுரக்கும் எனவும் குறிப்பிடுகிறார். மேலும், அவர் கிரகணம் தவிர்த்து மற்றைய வேளைகளில் பூமலம், நீர்மலம், வானமலம் போன்ற மலங்கள் கதிரவன் கதிர்களுக்குள் புகா எனவும் கூறுகிறார்.
பழைய சாத்திர நூல்களில் தீயவர்களின் உயிர்க் காற்று உடலில் உள்ள 9 துளைகளுள் ஒன்றின் மூலம் வெளிப்படும். ஆனால் வீரர்கள், யோகிகள், சரணாகதர்கள், மெய்யடியார்கள் ஆகியோரின் உயிர்க் காற்று உச்சந்தலை மூர்த்தன்ய நாடி மூலம் வெளிப்பட்டு, சூரிய மண்டலத்தின் நடுவழியாகச் செல்லும். அவர்களுக்கு நரகம் வாய்க்காது. இவ்வாறு ஆன்மா செல்லும் வழியை அனுபூதி மார்க்கம், சமாதிமார்க்கம், அர்ச்சிராதிமார்க்கம் எனக் கூறுவர். அர்ச்சிராதிமார்க்கத்தில் முதன் முதலில் உத்தராயண தேவதை, வளர்பிறைத் தேவதை, பகல்தேவதை ஆகியோர் வழி நடத்துகின்றனர் என வைணவச் சாத்திரங்கள் கூறுகின்றன. என்.எஸ்.தா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 889)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ub6y6wdf/
தமிழ்“உத்தராயணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ub6y6wdf/APA
Oliyon Research. (2026). உத்தராயணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ub6y6wdf/MLA
"உத்தராயணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ub6y6wdf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment