உய்த்துணரவைப்பு என்பது நன்னூலார் கூறியுள்ள 32 உத்திகளுள் ஒன்று. சில நூற்பாக்களின் விதிகளைக் கொண்டு, ஆராய்ந்து அறிந்து கொள்ளுமாறு ஒரு பொருளைக் கூறுவது என்று ஆறுமுகநாவவர் இவ்வுத்தியினை விளக்கியுள்ளார். மகரக் குறுக்கம் கூறவந்த நன்னூலார். ‘ணனமுன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும்’ (நன். 96) என்று நூற்பா இயற்றியுள்ளார். ணகர னகரங்களுள் ஓரெழுத்து நின்று தொடர்ந்திட அதற்கு முன்னால் மகரம் வந்தாலும், வகரம் வந்து தொடர்ந்திட அதற்கு மேல் மகரம் வந்தாலும், அம்மகரம் தனக்குரிய அரைமாத்திரையில் குறுகி ஒலிக்கும் என்பது இதன் பொருள். ‘மருளினும் எல்லாம் மருணம்’, ‘திசையறி மீகானும் போன்ம்’, ‘தரும் வளவன்’ ஆகியன இதற்குரிய எடுத்துக்காட்டுகள் ஆகும். முற்கூறிய நூற்பாவிற்குப் பின்னர் வரும் நூற்பாக்கள் சிலவற்றில் கூறப்பட்டவற்றை மனத்துட் கொண்டு உரையாசிரியர்கள் பின்வருவனவற்றை உய்த்துணர்ந்து குறிப்பிட்டுள்ளனர். அவை வருமாறு: 1) ணகர னகரங்களின் முன்வந்த மகரம் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றின் இறுதியில் அமைந்த மகரம் ஆகும். 2) ஈற்றயல் உகரம் கெட, அந்த உகரம் ஊர்ந்த ளகர லகரங்கள் ஈற்றிலுள்ள மகரத்தோடு மயங்காமையால் திரிந்த ணகர னகரங்களே இங்குக் கூறப்பட்டன. 3) இவ்வாறமையும் ணகர னகரங்கள் மகரத்தோடு ஈரொற்றாய் மயங்கினால் அங்கு மகரம் தன் மாத்திரையில் குறுகும். 4) இவ்வாறு குறுகுவது செய்யுட்கண்ணேயாகும். 5) காணும், கூறும் என்று வருவனவற்றுள் வரும் மகரம் குறுகாது. பின்வரும் நூற்பாக்களின் பொருளை நோக்கி இவ்வாறு உய்த்துணர்ந்து கொள்ளுமாறு விதி அமைப்பது உய்த்துணர வைப்பு என்னும் உத்தியாகும். இது தொல்காப்பியத்தில் ‘உய்த்துக் கொண்டு உணர்தல்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனை இளம்பூரணர், ‘ஒரு நூற்பாவால் ஓரிலக்கணம் ஓதியவழி அதற்குப் பொருந்தாமை உளதாகத் தோன்றின், அதற்குப் பொருந்துமாறு விசாரித்துணர்தல்’ என விளக்கியுள்ளார். மேலுமவர், பனி என்னும் சொல்லுக்கு அத்தும் இன்னும் சாரியை ஆம் என்றாராயினும், அவற்றுள் ஏற்பதொன்றாதலின் அவற்றுள் இது இன்ன இடத்து வரும் என்று அறிந்து கொள்ளுவது உய்த்துணர்தலாம் என்று கூறி எடுத்துக்காட்டும் தந்து இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.