இலிவிங்சுடன், தாவீது
iliviṅcuṭaṉ, tāvītu
இசுகாட்லாந்தைச் சார்ந்த கிறித்தவ சமயப் போதகரும் புது நாடுகளை ஆய்வு செய்த ஆய்வாளருமாவார்.
இசுகாட்லாந்தைச் சார்ந்த கிறித்தவ சமயப் போதகரும் புது நாடுகளை ஆய்வு செய்த ஆய்வாளருமாவார். இலிவிங்சுடன் (Livingstone, David) கி.பி. 1813–ஆம் ஆண்டில் இலானார்க்சயரிலுள்ள இலோபிளாண்டயர் என்னும் ஊரில் பிறந்தார்; பிள்ளைப் பருவத்தையும் இளமையையும் பஞ்சாலையொன்றில் பணியாற்றிக் கழித்த இவர் போதுமான அளவிற்குப் பொருளைத் திரட்டிக் கொண்டு கிளாசுகோ நகர் சென்று, அங்கு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார். இவர், கி.பி. 1840–ஆம் ஆண்டு மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்றார். இலண்டன் சமய போதகக் கழகம் (London Missionary Society) இவரை ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள பெச்சுவானாலாந்திற்கு மருத்துவ உதவி செய்யும் நோக்குடன் அனுப்பியது. அங்கு நோய்வாய்ப்பட்டவர்களைப் பேணிக் காத்ததுடன் அடிமைத் தளையைக் அகற்றவும் இவர் அரும்பாடுபட்டார்.
இவர் கி.பி. 1849 முதல் 1856 வரை நகாமி (Nagamin) ஏரியையும் விக்டோரியா நீர்வீழ்ச்சியையும் கண்டறிந்ததுடன், சாம்பெசி ஆற்றையும் ஆய்வு செய்தார். பின்னர், இவர் பிரிட்டனுக்குத் திரும்பினார் பதினெட்டு மாதங்களைப் பிரிட்டனில் கழித்த பிறகு, இவர் மீண்டும் ஆப்பிரிக்காவிற்குச் சென்றார். இவருடைய மூன்றாம் ஆய்வுப் பயணத்தின்போது (கி.பி. 1858 முதல் 1861 வரை) சாம்பெசி ஆற்றின் துணையாறுகளையும் நியாசா ஏரியையும் கண்டறிந்து, நூலொன்றை எழுதுவதற்கான செய்திகளைத் திரட்டிக் கொண்டார். அந்நூல் வாயிலாகப் போர்ச்சுகீசியர் அடிமை வாணிகத்தில் செய்த அட்டூழியங்களை உலகறியச் செய்தார். அரசர் நிலவியல் கழகம் (Royal Geographical Society) தந்த பேரார்வத்தின் விளைவாக கி.பி. 1866–ஆம் ஆண்டு நைல் ஆற்றின் உற்பத்தி இடத்தைக் கண்டறியும், ஆய்விற்குப் பணிக்கப்பட்டுச் சென்றார். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் அவரைப் பற்றிச் செய்தி ஒன்றுமே தெரியவில்லை. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமிருந்த பொதுமக்கள் கவலைப்படவே, ‘நியூயார்க் ஏரால்டு’ (New York Herald) என்னும் நாளிதழ், என்றி மார்ட்டன் இசுட்டான்லி (Henry Morton Stanley, 1841–1904) என்பாரை இலிவிங்சுடனைத் தேடும் பணியில் ஈடுபடுத்தியது. அவர் கி.பி. 1871–ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலிவிங்சுடனைத் தங்கனீக்கா ஏரிக்கரை ஊரான உசிசி (Ujiji) என்னுமிடத்தில் கண்டார். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் ஆய்வுப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த இலிவிங்சுடன் சாம்பியாவிலுள்ள இலாலா (Ilala) என்னுமிடத்தில் கி.பி. 1873 மே மாதம் முதல் நாள் காலமானார்.
இவரை ஆப்பிரிக்கர்கள் மதித்துப் போற்றினர். அதுபோல் ஆங்கிலேயரும் அமெரிக்கரும் கூட இவருடைய தொண்டுகளை அன்புடன் பாராட்டினர். இவர் கிறித்தவச் சமயத்திற்கும் மருத்துவத் தொழிலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் காட்டிப் பெருந்தொண்டு செய்த பெரியவராவார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 424)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5ycttzy/
தமிழ்“இலிவிங்சுடன், தாவீது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u5ycttzy/APA
Oliyon Research. (2026). இலிவிங்சுடன், தாவீது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u5ycttzy/MLA
"இலிவிங்சுடன், தாவீது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u5ycttzy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment