காலப் போக்கில் பல புதிய நாடுகள் தோன்றுகின்றன; சில பழைய நாடுகள் மறைகின்றன; சில நாடுகள் இணைகின்றன; வேறு சில நாடுகள் புதிய வடிவம் பெறுகின்றன. இவ்வாறு புதிய நாடுகள் தோன்றுவதும் மறைவதும் இணைவதும் உலக அரங்கில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. அவற்றுள் ஒன்று அங்கீகாரம் (Recognition) அல்லது ஏற்பு என்பதாகும். புதிய நாடு ஒன்று உருவாகும் போது, முன்னரே இருக்கும் நாடுகளால் அந்நாடு அங்கீகரிக்கப்பட்டால் தான் அது உலக நாடுகளின் கூட்டுக் குடும்பத்தில் உறுப்பினராக இயலும். வங்காளதேசம் (Bungladesh) 1971-இல் தோன்றியது இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். ஆனால், சில அறிஞர்கள் இக்கருத்தினை ஏற்றுக்கொள்வதில்லை. அங்கீகாரம், புதுநாடு அங்கீகாரம், புதுத்தலைமை அங்கீகாரம், போரிடுவோர் அங்கீகாரம், எதிரெழுச்சி நிலை அங்கீகாரம், ஆள்நிலப் பகுதி கூடுதல், குறைதல் அங்கீகாரம் என்று பல்வேறு வகைப்படும். அரசு அங்கீகாரம், அரசாங்க அங்கீகாரம் முதலியவற்றைச் சட்டப்படியான அங்கீகாரம் (De Jure Recognition), நிகழ்வுநிலை அங்கீகாரம் De Facto Recognition) என இருவகைப்படுத்தலாம். இன்றுவரை அங்கீகாரம் அந்தந்த நாடுகளால் அவர்களுடைய விருப்பம்போல் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. உலக நாடுகள் ஒருமுகமாக வரையறுக்கப்பட்ட விதிகளின்படி அங்கீகாரம் வழங்க இதுவரை அனைத்துலகச் சமுதாயம் வழிவகை செய்யவில்லை. ஐக்கிய நாடுகளின் சபை, இப்புதிய சமுதாயத்தை ஓர் உறுப்பு நாடாக ஏற்றுக் கொள்வதானது, அதனை ஒரு நாடென்று உறுதி செய்வதற்கு ஒப்பாகும். பேராசிரியர் ஓப்பன்கீம் (Oppenheim) என்பவர், ஒரு நாடு உலக ஆளுமை (International personality) பெறுவது அங்கீகாரத்தின் மூலமே என்று கூறியுள்ளார். ஒரு சமுதாயம் ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்துச் சிறப்புகளையும் அடைந்த பிறகும், உலக அரங்கில் நாடாகக் கருதப்பட, அது பிற நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றாக வேண்டும். அங்கீகாரம் வெளிப்படையானதாகவோ (Express) உய்த்துணரக்கூடியதாகவோ (Implied) இருக்கலாம். அறிவித்தலால் அல்லது பிரகடனத்தால் (Declaration) அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் அதனை வெளிப்படை அங்கீகாரம் என்றும், ஒரு நாட்டின் நடவடிக்கை மூலம் அங்கீகாரம் வெளிப்படுமானால் அதனை உய்த்துணர் அங்கீகாரம் என்றும் கூறப்படும். புதிய சமுதாயத்துடன் தூதர் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டால், அந்தப் புதிய சமுதாயம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அந்த அங்கீகாரம் வெளிப்படையானதாகாது. அது உய்த்துணர் அங்கீகாரம் என்று கூறப்படும். ஒரு நாடு புதிய சமுதாயத்துடன் நேரடியாக எந்தவித உறவு ஏற்படுத்திக் கொண்டாலும் அதனை மறைமுகமாக அங்கீகரித்ததாகக் கூறலாம். நாடுகள் தனித் தனியாகவோ ஒருங்கிணைந்தோ ஒரு புதிய சமுதாயத்தை அங்கீகரிக்கலாம். ஒரு நாட்டில் அரசு ஒன்று தோன்றி, தன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இறையாண்மையுடன் (Sovereignty) அரசோச்சுகிறது. ஆனாலும், அங்கீகரிக்கும் வெளிநாடுகளின் கருத்துப்படி, அந்நாடு தன்னை நிலையாக உறுதிசெய்து கொள்ளாத போதும் அனைத்துலக அரங்கில் தன் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தயங்கும்போதும் அல்லது தவறும்போதும் சட்டப்படி இல்லாவிட்டாலும் அந்நாட்டைச் செயல்நிலையில் அங்கீகரிக்கலாம். இதுவே நிகழ்வு நிலை (De Facto) அங்கீகாரம் ஆகும். பொருநிலை அங்கீகாரம் (Recognition of Belligerency) என்பது பொருவோர், நாட்டின் சட்டப்படி இயங்கும் அரசுடன் பொதுவாகப் போரில் ஈடுபட்டு, போர் விதிகளைக் கடைப்பிடித்து, ஆளும் நிலத்தையோ அதன் ஒரு பகுதியையோ அடக்கி ஆண்டால், அயலரசுகள் அவர்களோடு தொடர்புகளை வரையறை செய்ய வேண்டிய தேவை ஏற்படும்போது, அவர்களைப் பொருவோராக (எதிரியாக) அங்கீகரிப்பார்கள். இதனைப் பொருநிலை அங்கீகாரம் என்பர். மேலே கூறிய கட்டுப்பாடுகளையும் எதிரெழுச்சியினர் (Insurgents) நிறைவு செய்வார்களானால் அவர்களும் பொருதுவோராவார்கள், மற்றைய நாடு- கள் அவர்களுக்கு நிகழ்வுநிலை அங்கீகாரம் வழங்கலாம்; சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவதில்லை. ஏனெனில், சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட பழைய அரசும் அதே ஆளும் நிலத்தில் ஆட்சியில் இருக்கும் அல்லது இருப்பதாகக் கருதப்படும். எதிரெழுச்சிநிலை அங்கீகாரம் (Recognition of Insurgency) என்பது, சட்டப்படி ஆட்சியிலுள்ள அரசுக்கு எதிராகச் சிலர் கிளர்ச்சியில் ஈடுபட்டுப் பொருதுவோராக ஏற்கப்படுவதற்குரிய கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்றினை நிறைவு செய்யாமல் இருப்பார்களானால், அவர்கள் எதிரெழுச்சியினர் (Insurgents) என அங்கீகரிக்கப்படுவார்கள். அந்நிலை எதிரெழுச்சி நிலை அங்கீகாரம் எனப்படும். அவ்வாறு எதிரெழுச்சியினராக அங்கீகரிக்கப்படாவிட்டால் அவர்கள் கலகக்காரர்கள் என்றும், சட்டத்தை மீறுபவர்கள் என்றும், அதனால் தண்டனைக்குரியவர்களென்றும் நாட்டின் சட்டப்படி கருதப்படுவார்கள். உள்நாட்டுச் சட்டம் அவர்களை எந்நிலையிலும் கலகக்காரர்களாகவே கருதும். ஆள் நிலப்பகுதி கூடுதல் குறைதல் அங்கீகாரம் ஒரு நாடு புதிய ஆள்நிலப் பகுதி ஒன்றினை இணைக்கும்போது அதனைப் பிற நாடுகள் அங்கீகரிக்கலாம். புதிய ஆள்நிலம் பற்றிய உரிமை அங்கீகாரத்துக்குப் பின்னரே நிறைவு பெறுகிறது. பிற நாடுகள் அங்கீகரிப்பதால் அந்தப் பகுதியில் அவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதும் தெளிவாகிறது. ஆகவே ஒவ்வொரு நாடும் புதிய ஆள்நிலம் பெற்ற விடத்து அதனை அங்கீகரிக்கும்படி பிற நாடுகளைக் கேட்கும். இது இசுட்ரிம்சன் கொள்கை (Strimson Doctrine of Non–Recognition) எனப்படும். அங்கீகரியாமைக் கோட்பாடு: பன்னாட்டுச் சட்டத்திற்குப் (International law) புறம்பாக ஒரு நாடு மற்றொரு நாட்டை இணைத்துக் கொள்வதைப் பிற நாடுகள் அங்கீகரிக்க மறுக்கலாம். இதனால் சட்டம் மீறிய நாடு தொல்லைக்குள்ளாகும். இவ்வாறு அங்கீகாரத்தை மீறும் நாடுகளை ஒடுக்கும் ஓர் ஆயுதமாக இந்த அங்கீகாரச் சட்டத்தைக் கொள்ள இடமிருக்கிறது. சப்பான் உலகநாடுகள் மன்றத்தில் 1931 – இல் ஓர் உறுப்பினராக இருந்தபோது சீனாவிற்குச் சொந்தமான மஞ்சூரியாவை முற்றுகையிட்டுத் தெற்கு மஞ்சூரியாவைத் தன்வயப்படுத்திக் கொண்டது. இத்தகு சூழ்நிலைகளில் வன்முறையின் அடிப்படையில் நடந்த இந்நிகழ்ச்சிக்குத் தான் அங்கீகாரம் வழங்க இயலாது என்று அமெரிக்க நாட்டுச் செயலர் இசுட்ரீம்சன் அறிவித்தார். அன்று முதல் எந்த ஒரு நாடும் இக்காரணங்களுக்காக அங்கீகாரம் மறுக்கப்படுமானால் அது “இசுட்ரிம்சன் கொள்கை” என அழைக்கப்படுகிறது. அங்கீகாரம் புதிய சமுதாயத்திற்குப் பல உரிமைகளை வழங்குகிறது. அங்கீகாரம் வழங்கும் நாடுகள் சட்ட விதிகளைக் கடைப்பிடித்து அதனை வழங்குவதில்லை; அரசியல், பொருளாதாரச் சிக்கல்களை முன்வைத்தே வழங்குகின்றன. தங்கள் கொள்கைக்கு எதிராக வளரும் சமுதாயத்தை அந்நாடுகள் நீண்ட காலத்திற்கு அங்கீகரிப்பதில்லை. எனவே அங்கீகாரம் வழங்கும். பொறுப்பைத் தனிப்பட்ட நாடுகளிடமிருந்து எடுத்து, ஐக்கிய நாடுகள் சபையிடமோ பன்னாட்டு நீதி மன்றத்திடமோ (International Court of Justice) ஒப்படைப்பது சிறப்புடையது என்று பல சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒரு நாடு உறுப்பினராவதற்குச் சில நிபந்தனைகளை நிறைவு செய்தல் வேண்டும். உறுப்பினராக விரும்பும் நாடு வரையறை செய்யப்பட்ட எல்லையையும் அரசினையும் நிலையான மக்களையும் பிற நாட்டாரோடு தொடர்பு கொள்ளக் கூடிய தகுதியையும் பெற்றிருத்தல் வேண்டும்; ஐக்கிய நாட்டு நிலையாவணத்தில் (Charter) கண்டுள்ள சட்டப் பிணைப்புகளை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்தல் வேண்டும். வே.க. துணை நூல்கள் Starke, J.G., “Introduction to International Law” Butterworths, London, 1977. பழனிசாமி, அ., “சர்வதேசச் சட்டம்”, சி. சுப்பய்ய செட்டி & கோ, சென்னை, 1979. தனபாலன், இர. வை., “அமைதிக்கால நாட்டிடைச் சட்டம்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973.