இனமையக் கொள்கை
iṉamaiyak koḷkai
எல்லாச் சமுதாயத்தினரும் சமூகத்தின் அடிப்படை அமிசங்களில் பொதுவான கூறுகளைக் கணிசமான அளவில் கொண்டிருந்தாலும் கூட வாழ்க்கை முறைகளில் ஒரு சமூகத்தினர் நிச்சயமாக மற்றொரு சமூகத்தினரிடமிருந்து பல விதங்களில் மாறுபட்டே வாழ்கின்றனர்.
எல்லாச் சமுதாயத்தினரும் சமூகத்தின் அடிப்படை அமிசங்களில் பொதுவான கூறுகளைக் கணிசமான அளவில் கொண்டிருந்தாலும் கூட வாழ்க்கை முறைகளில் ஒரு சமூகத்தினர் நிச்சயமாக மற்றொரு சமூகத்தினரிடமிருந்து பல விதங்களில் மாறுபட்டே வாழ்கின்றனர். பிறந்ததிலிருந்தே தங்கள் பண்பாட்டு முறைகளைப் பின்பற்றி வருவதால் தங்களின் வாழ்க்கை முறையை மிக உயர்வானதாகக் கருதுகின்றனர். இவ்வகையான கருத்தே இனமையக் கொள்கை (Ethnocentrism) ஆகும். இனமையக் கொள்கை உணர்வானது பொறாமை மற்றும் போட்டி உணர்ச்சிகளில் இருந்து மாறுபட்டது. இனமையக் கொள்கை உணர்ச்சியில் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற உயர்வு மனப்பான்மையே காணப்படும். இவ்வுணர்வானது வெவ்வேறு பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கிடையேயும், சில சமயங்களில் ஒரே பண்பாட்டுச் சமூகத்தைச் சேர்ந்த வெல்வேறு மதம் அல்லது குழுக்களுக்கிடையேயும் காணப்படும்.
பிற சமூகத்தினரின் வாழ்க்கை முறைகள் தங்களுக்குப் பழக்கமில்லாததாகவும் புதியதாகவும் இருப்பதால் அப்பண்பாட்டு முறைகள் உயர்த்தனவல்ல என்று எண்ணத் தொடங்குகிறார்கள். பெரும்பான்மையோர் தம்முடைய பண்பாட்டு முறைகளே உயர்வானவை, மற்றவை தாழ்வானவை என்று கருதுகிறார்கள். இம்மாதிரியான தங்கள் இனத்தின் பண்பாட்டு முறைகளே பிற பண்பாட்டு முறைகளை விட உயர்ந்தவை என்று கருதும் மனப்பான்மையே ‘இனமையக் கொள்கை’ ஆகும்.
இந்த இனமையக் கொள்கையின் முதன்மையான குணம் பிற பண்பாட்டு முறைகளை அளவிடுதலாகும். இங்குத் தங்கள் பண்பாட்டு முறைகளான நம்பிக்கைகள், மதிப்பீடுகள், அல்லது வாழ்வின் பழக்கங்கள் முதலானவற்றை உயர்ந்தனவென்றும். பிற பண்பாட்டு முறைகள் தாழ்ந்தன அல்லது பிற்போக்கானவை என்றும் மக்கள் கருதுவதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மக்கள் தம் பண்பாட்டைப் பற்றி உயர்வு மனப்பான்மை கொண்டு, பிற சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை எள்ளி நகையாடுகின்றனர். இந்தச் சுய பண்பாட்டுப் பெருமைக்கான முக்கிய காரணம் பிற பண்பாட்டு முறைகளையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றிய தெளிவான அறிவு இல்லாமையே ஆகும். தாங்கள் மட்டுமே பண்பாட்டில் மிகவும் உயர்ந்தவர்கள் என்ற தற்பெருமையுணர்ச்சியும் மற்றொரு முதன்மையான காரணமாக அமைகின்றது.
பெரும்பாலோர் பிறரின் நடவடிக்கைகளையும், சமூக மதிப்பீடுகளையும், சமூக வழக்கங்களையும் அந்த ச்மூகச் சூழ்நிலையில் வைத்து அவர்களின் சமூகக் கண்ணோக்கில் புரிந்து கொள்ளாததே அறியாமைக்குரிய காரணமாகும். எனவே, பிற சமூகங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களோடு பலகாலம் வாழ்ந்தவர்களுக்கு இந்த இனமையக் கொள்கை உணர்வு தோன்றுவது அரிது.
உளவியல் நோக்கில் இதற்கான காரணத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஒருவர் தம் சமூகத்தின் மேல் உள்ள பற்றை இனமையக் கொள்கை மூலம் தான் வெளிப்படுத்துகிறார் எனலாம். இந்த மனப்பான்மை தங்களிடையே உள்ள குறைகளை மறைப்பதற்காவும் கொண்டுள்ளனர். பொதுவாக அதிக அளவு தொடர்பு இல்லாதவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள், பிறரோடு நெருங்கி பழகாமல் தனித்திருக்கும் குணம் கொண்டவர்கள், பிறரிடம் குற்றம் காணும் இயல்புடையவர்கள், தீவிர மதவுணர்ச்சி, மொழிப்பற்று, நாட்டுணர்வு கொண்டுள்ளவர்கள். எதேச்சாதிகார மனப்பான்மை உடையவர்கள் போன்றோரே இந்தச் சுயபண்பாட்டுப் பெருமைக் குணத்தைக் கொண்டிருப்பார்கள். எந்தவிதமான சூழ்நிலையில் வாழும் மக்கள், இத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்வது கடினம். அதுபோல் எந்த அளவு கொண்டிருப்பார்கள் என்பதும் சொல்லுந் தரத்ததன்று, இனமையக் கொள்கை ஆளுமைத் தன்மையாலும் ஊக்குவித்து வளர்க்கப்படுகின்றது. சமூகத்தில் உள்ள எல்லோரும் ஒரேமாதிரியாக இம்மனப்பான்மையைக் கொண்டிருப்பதில்லை. சில குறிப்பிட்ட ஆளுமைக் குணங்களைக் கொண்டிருபவர்களே மற்றவர்களைக் காட்டிலும் இவ்வுணர்வைக் கொண்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மற்றச் சாதியினருக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருப்பதை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். ஆனால், தம்மிடையே அல்லது தம் சமூகத்தினரிடையே உள்ள இந்த இனமையக் கொள்கைக் குணத்தை மக்கள் எளிதில் உணர முடிவதில்லை.
சமூகத்திலுள்ள கல்வி நிறுவனங்கள், மதநிறுவனங்கள் எல்லாம் பொதுவாகவே தத்தம் பண்பாடே சிறந்தவை என்று மனிதனுடைய குழந்தைப் பருவந்தொட்டே போதிக்கத் தொடங்கிவிடுகிற காரணத்தால், இந்த ஒருமுகமான–ஒருதலைப்பட்சப் பண்பாட்டுணர்வு என்பது இயற்கையாக அவர்களிடம் காணப்படும் ஒன்றாய் மாறிவிடுகிறது. குழந்தைகளும் நாட்டின் வரலாறு, மொழி மற்றும் சமூக மதிப்பீடுகளையும், சமூக கொள்ளும் வழக்கங்க பாரம்பரியம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளும் போதும் இப்பண்பாட்டுப் பெருமையுணர்வு மேலோங்கி, அவர்களது இன உணர்வு வேரூன்றிக் கால்கொண்டு வளர்ச்சியடைய வழி வகுக்கிறது. இவ்வாறு வித்திடப்பட்டு வளர்ச்சி நிலையை எட்டும் எந்த மனிதனது இனப் பெருமையும் பெரியவர்களாகும் போது பிற்காலத்தில் வெளிப்பட்டே நிற்கும். இது பற்றி யாருக்கும் ஐயப்பாடு எழத் தேவை- யில்லை. ஆனாலுங் கூடத் தன்னுடைய சமூகப் பண்பாட்டுக் கோட்பாடுகளை மட்டும் கடைப்பிடித்து நடப்பதுதான் இனமையக் கொள்கை என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையின் வசதிகளை ஒருவன் அறிந்தே பண்பாடு பற்றிய கோட்பாடுகளை இறுதியாகக் கடைப்பிடிக்கின்றான் என்பதே கண்கூடு. அவனிடத்திலே ஒருவித நம்பிக்கை அல்லது பிடிப்பு ஏற்படுவதென்றால் அதற்குக் காரணமாயிருப்பதும் இந்த வசதிகள்தாம் என்று சொல்லிவிடலாம். ஆகவே, பண்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒருவன் பிற பண்பாட்டு முறைகளை நன்கு தெரிந்து வைத்திருந்தாலும் கூட அதைக் கடைப்பிடிப்பதில் ஏற்படும் சிரமங்களையும் எண்ணிப்பார்த்துத் தன் சமூகப் பண்பாட்டு முறைகளையே வாழ்வில் கடைப்பிடிக்க முற்படுகின்றான். இதுவும் ஒருவிதக் கட்டுப்பாடு, அதிலும் இயற்கையில் விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடு ஆகும் ஆகையால், இதற்கு மாறான போக்கு மனிதனிடம் காண்பதற்கில்லை. சான்றாக, இந்துச் சமூகத்தின் படித்த மக்களுள் பெரும்பான்மையோரும் தங்கள் வகுப்பிலே (சாதி) திருமணம் செய்து கொள்வதில் தான் ஒருவித அழுத்தமான விருப்பமுடையவர்களாயிருக்கிறார்கள். கலப்புத் திருமணம் என்பது அவர்களுக்கு ஒரு மாபெரும் பிரச்சினை அன்று. ஆயினும் கூடத் தன் சாதியில் நிகழும் திருமணம் சுமுகமான ஒன்று; அது பிரச்சினைகளை உண்டாக்க நியாயமில்லை என்பது அவர்களது அசையாத நம்பிக்கை; முடிந்த முடிவும் கூட. பெரும்பான்மையான பண்பாட்டுக்கோட்பாட்டு முறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தினால்கூட மிகவும் இயற்கையானவையாகவும் பொருத்தமானவையாகவும் ஆகிவிடும் ஒரு வளர்ச்சியடைந்த பண்பாட்டில் வேற்றுப் பண்பாட்டின் கலப்பு இருக்கும். ஆயினும், மக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் வேற்றுப்பண்பாட்டு முறைகள் கலந்திருப்பதைச் சில நேரங்களில் அறியாமல் கூட இருக்கச் செய்யும் ஆற்றல் இந்தச் சுய பண்பாட்டுப் பெருமை உணர்விற்கு உண்டு.
இந்த இனமையைக் கொள்கை நாடு, பண்பாடு மற்றும் சமூக அளவில் காணப்படுகிறது. பெரிய நாடாக இருப்பின் அவற்றின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வுணர்வு மக்களிடையே காணப்படுகிறது. அரிசி சாப்பிடுவோர், கோதுமை உரொட்டியை இகழ்ந்தும், தங்கள் தாய் மொழியினைச் சிறப்பிப்போர் பிறர்மொழியினைத் தாழ்த்தியும் பேசுவது, இந்தச் சுய பண்பாட்டுப் பெருமை உணர்விற்கு ஏற்ற உதாரணமாகும். இனமைய உணர்வை மக்கள் குடும்பங்கள், மதங்கள், பள்ளிகள், சாதிகள் மூலமாகப் பெறுகிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் பயிலப்படும் பழமொழிகளும், ஓரிரு நாட்டுப்புறக் கதைகளும் இக்காலத்தில் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளும் புதினங்களும், திரைப்படங்களும், இவ்வுணர்வை மக்களுக்கு அதிகமாக உண்டாக்குகின்றன.
இந்த இனமையக் கொள்கை பல அளவுகளில் சமூகத்தில் காணப்படுகிறது. சாதாரணமாகப் பிறர் பழக்க வழக்கங்களை எள்ளி நகையாடுவதிலிருந்து சில பழக்கங்களை மட்டும் பலமாகக் கண்டிப்பது வரை இந்த உணர்வு மக்களிடையே காணப்படுகிறது. காட்டாகப், பலவற்றைச் சொல்லலாம். அவற்றில் ஒன்று நாகரிகமடைந்தவர்கள் என்று கருதும் நகர்வாழ் மக்கள், ஆதிவாசி இனத்தவரின் உடையணியும் முறைகளை ஏளனமாகப் பார்ப்பது. இதைச் சாதாரணமாகப் பண்பாட்டுப் பெருமை உணர்வு எனலாம். மற்றொன்று, இப்போது பல கணவர்களை மணக்கும் முறையை நாகரிகமுற்ற மக்கள் தீவிரமாக எதிர்ப்பது. இதுவும் இனமையக் கொள்கையின் ஆழமான வெளிப்பாடாகும். இவர்கள் அனைவரும் ஆதிகுடிகளின் வாழ்க்கை முறைகளைஅவர்கள் சூழலில் இருந்து அவற்றின் பயன்களை நோக்காத அறியாமையாகிய காரணத்தால்தான் இந்தப் பண்பாட்டு முறையினை இகழ்வாகக் கருதுவதற்குரிய நிலை ஏற்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஒரே பண்பாட்டுச் சமூகத்தினரிடையும் சில பழக்க வழக்கங்களில் பலரிடையே இவ்வுணர்வைக் காணலாம். சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களிடையே பெரும்பாலோர் அசைவ உணவு உட்கொள்பவர்களைத் தாழ்வாகக் கருதுகிறார்கள். எனவே, மேற்சொன்ன உதாரணங்களினால் இந்த இனமையக்கொள்கை உணர்வானது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பது புலப்படுகிறது. எதையும் ஆராய்ந்து தெளிவாக நோக்கும்முறை இல்லையென்று வந்துவிட்டால் ஏற்படும் விளைவே இந்த இனமையக் கொள்கை உணர்வாகும் என்று சுருங்கச் சொல்லிவிடலாம். இச்சுய பண்பாட்டுப் பெருமை உணர்வானது மக்களைப் பிற பண்பாடுகளிலிருந்து தீவிரமாக வேறுபடுத்துகிறது. சமூகத்தில் குறிப்பாக மக்களின் எண்ணங்களுக்குத் தடைவிதிக்கிறது. சமூகத்தில் இனமையக் கொள்கை உணர்வினால் ஒரு நாட்டின் பண்பாட்டிற்கு நன்மைகளும் தீமைகளும் ஏற்படலாம்.
நன்மைகள்
இனமையக் கொள்கை அல்லது சுய உயர்வு எண்ணமானது பொதுவாக ஒரு சமூகத்தின் பண்பாட்டு முறைகள் நிலைத்து இருப்பதற்கு மிகவும் உதவி செய்கிறது. வழக்கில் உள்ள செயல்- முறைகளும் எண்ணங்களும் நம்பிக்கைகளும் பிற பண்பாட்டுச் சேர்க்கையினால் மாறிவிடாமல் பாதுகாக்கிறது. சுருங்கக் கூறினால் ஒரு சமூகத்தின் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், மக்கள் தங்களைச் சார்ந்துள்ள சமூகத்தின் பண்பாட்டிற்கு முதன்மையான இடம் கொடுத்து அதைக் கடைப்பிடிப்பதின் மூலம் அந்தப் பண்பாட்டு முறை மாறாமலும் அழியாமலும் பாதுகாக்கிறார்கள். தங்கள் பண்பாட்டுக் கோட்பாடுகளே சரியென்றும், விரும்பத்தக்கவை என்றும், வாழ்விற்கு நன்மை செய்து பாதுகாப்பளிக்கக் கூடியவை என்றும் நம்புகிறார்கள். இதனால், அந்தச் சமூகத்தின் பண்பாட்டிற்கு மக்களின் வெறுப்பினால் அழிவு ஏற்படும் என்ற பயமே இல்லை.
மேலும், இவ்வுணர்வினால் பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையினைக் கடைப்பிடிப்பதால் சமூகத்தில் வேறுபாட்டிற்கு இடமே இல்லை. வகுப்புகள், மதங்கள், இனங்கள் ஆகியவற்றிடையே சமூக மதிப்பீட்டு முறைகளில் வேறுபாடுகள் தோன்றுவதற்கும் இடமே இல்லை. இதனால், சமூகத்தில் அமைதி நிலவுகிறது. தன் இனத்திற்கு உண்மையாக இருப்பதும் நல்லதுதான். நாட்டுணர்வு, நாட்டுப்பற்று, இனம் மற்றும் மொழிப் பற்று ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது, தன் சமூகப் பண்பாட்டை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கி மாறுதல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால், சமூக மாறுதலினால் உண்டாகும் பிரச்சினைகள் தடுக்கப்படுகின்றன. குறிப்பாக மனப் போராட்டங்களும், விருப்பமில்லாமல் சமூகத்தோடு ஒத்துப் போகும்படியான சூழ்நிலைகளும், ஏற்படுவதில்லை. இந்த உணர்வினால் அமைதியாக வாழ முடிகிறது. மக்களைச் சமூகத்தோடு ஒன்றிப் போசுச் செய்கிறது என்பதும் உண்மையாகிறது.
தீமைகள்
இனமையக்கொள்கை உணர்வானது பல சமயங்களில் சமூகத்தின் வளர்ச்சிக்கு எதிராகச் செயற்படுகிறது. பிறபண்பாட்டிலிருந்து பெறக்கூடிய நன்மைகள், புதிய முறைகள் முதலானவற்றைத் தம் சமூக வழக்கில் கொண்டு வராமல் தடுக்கிறது. பழம் பெருமையைப் பேசிப் புதிய மாறுதல்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் விரைவில் வரவிடாமல் தடுக்கிறது. வெளிக் கருத்துகள் ஐயத்தோடு பார்க்கப்பட்டு அவை பெரும்பாலும் தீமை பயப்பன என்றே கருதப்படுகின்றன. இதனால், சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் சுலபமாகத் தீர்க்கப்படுவதற்கு மாறாக அப்படியே விடப்படுகின்றன.
இவ்வுணர்வானது, மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும்பொழுது மக்களைப் பிற சமூகத்தின் அறிவு பூர்வமான நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளாதவாறு தடுக்கிறது. அவற்றுக்குப் பெரும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே, பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு, சமூகத்தில் ஒரு வளமான வாழ்வு முறை அமையாமல் தடுக்கப்படுகிறது. இக்காலத்தில் எந்தச் சமூகமும் தனித்தியங்க முடியாது. எந்தச் சமூகம் தானே உயர்ந்தது என்ற செருக்கோடு இருக்கிறதோ அதனால் பிற சமூகத்துடன் ஒன்றிப் போக இயலாது. இதனால், சமூகங்களிடையே பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. எனவே மனக்கசப்புகளும், பயமும் சந்தேகங்களும், காழ்ப்புணர்ச்சியும் தோன்றுகின்றன. வெவ்வேறுபட்ட பழக்கமுள்ள சமுதாயத்தினரிடையே ஒற்றுமை ஏற்படுவதை இது தடுக்கிறது.
எனவே, இனமையக் கொள்கை தற்காலச் சூழ்நிலையில் சமூகத்திற்கு அதிகமாக நன்மைகள் தருவதில்லை. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தியோ அல்லது விலக்கியோ இருத்தல் இன்றியமையாதது. மக்கள் இவ்வுணர்விலிருந்து விடுபட அவர்களிடையே ஆராய்ந்து தெளிவும் அறிவுபூர்வமான நோக்கு மலர வேண்டும். எந்தப் பண்பாட்டு நடவடிக்கைகளையும் அப்பண்பாட்டுச் சூழலில் புரிந்து கொள்ளும் பழக்கம் மக்களிடையே ஏற்பட வேண்டும். இதற்குப் பொதுமக்களிடையே மிக்க செல்வாக்குள்ள செய்தித் தொடர்புச் சாதனங்களான நாளேடுகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலியன பெரும் பணி ஆற்றவேண்டும். சீ.சே.தே.
துணை நூல்கள்
Moore, Alexander, Cultural Anthropology, Harper Row, NewYork, 1978.
Cuber, John, F., Sociology - A Synopsis of Principles, Printice Hall, New Jersy, 1968.
Rokeach, Milton, The open and closed mind: Investigations into the nature of Belief systems and Personality Systems, Basic Books, New York, 1960.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 616)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/twrybzdt/
தமிழ்“இனமையக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/twrybzdt/APA
Oliyon Research. (2026). இனமையக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/twrybzdt/MLA
"இனமையக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/twrybzdt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment