சுழலும் அச்சின் மீது மரக் கட்டை, பட்டை அல்லது உராய்வுத் தன்மையுடைய பொருள்களை அழுந்தச் செய்து, உராய்வு உண்டாக்கி, அதன் மூலம் அச்சின் சுழல் ஆற்றலை உள்ளிழுத்து, வெப்ப ஆற்றலாக மாற்றிச் சுழலும் அச்சின் திறனை அறுதியிட உதவும் கருவி சிறு நிறுத்தி (prony brake) ஆகும். சுழலும் அச்சுச் சிறியதாக இருப்பின், அதில் உராய்வு ஏற்படுத்த வசதியாகப் பெரிய உருளை ஒன்று பொருத்தப்பட வேண்டும். அவ்வுருளையின் மேல் ஒரு சட்டம் பொருத்தப்பட்டு, அச்சட்டத்திலிருந்து உருளையின் மேல் பகுதியிலும், சுற்றிலும் மரக்கட்டை அல்லது உராய்வு ஏற்படுத்த வல்ல உட்புறப் பட்டைகள் படத்தில் காட்டியபடி அமைக்கப்படும். அதாவது, உருளையின் மேல் பகுதியில் உராய்வு ஏற்படுத்த மேல் உள்ள சட்டத்தில் மரக் கட்டை பொருத்தப்படும். உருளையைச் சுற்றி உராய்வு ஏற்படுத்த, சட்டத்திலிருந்து ஒரு பட்டை தொங்க விடப்பட்டு, உருளைக்கும், பட்டைக்குமான இடைவெளியில் மரக் கட்டை அல்லது உட்புறப் பட்டைகள் (lining) அமைக்கப்படும். இத்தொங்கும் பட்டைகளின் இடைவெளியைக் கூட்டவோ, குறைக்கவோ வசதியாகத் தொங்கும் பட்டையின் ஒரு முனை நிலையாகவும், மற்றொரு முனை ஒரு மீளாற்றல் சுருளுடன் சுரை ஆணியின் உதவியால் சட்டத்துடனும் பொருத்தப்படும். சுரை ஆணியைத் திருகி உராய்வுப் பொருள் உருளையின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தைக் கூட்டவோ, குறைக்கவோ முடியும். மேற்புறம் உள்ள சட்டம் உராய்வு ஏற்படுத்தாத கிடையான சம நிலையில் இருக்கும் போது, அதன் ஒரு முனை ஓர் எடை அளவியின் முனையோடு இணைக்கப்பட்டு, படத்தில் காட்டியபடி அமைக்கப்பட்டிருக்கும். சுழல் அச்சின் மையத்திலிருந்து அளவியின் மேல் சட்டம் தொடும் இடத்திற்கு இடைப்பட்ட இத்தொலைவை நிறுத்தியின் கை (brake arm) L எனலாம். அச்சு, சுழலாமல் இருக்கும் போது, சட்டத்தின் எடை மட்டும் எடை அளவியின் முனையில் அழுத்த, அதை மறு முனையில் எடைகளைப் போட்டு நிலைப்படுத்தினால், அவ்வெடையை ‘W₀’ எனக் கொள்ளலாம். அச்சு சுழலும் போதும், பட்டைகளை இறுக்கி உராய்வு ஏற்படுத்தும் போதும், சுழற்சியின் வேகம் குறைகிறது. அப்போது சட்டமும் கீழ் நோக்கி அழுத்தப்படுகிறது. இப்போது, தராசின் மறு முனையில் எடைகளைக் கூட்டிச் சட்டத்தை நிலைப்படுத்தினால், அப்போதைய எடையை W எனக் கொள்ளலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இந்நிலையால் சுழல் திருப்பு விசையின் (torque) அளவு T=L(W-W₀) என்பதாகும். இப்போது அச்சின் சுழல் வேகம் நிமிடத்திற்கு π சுற்றுகள் என்றால், சுழற்- சியின் குதிரைத் திறன் \frac{2nL(W-W_0)}{33000} எனக் கணக்கிடலாம். இவ்வகைச் சிறு நிறுத்தியில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதற்குப் பெரிய உருளைகள் அமைத்து, அவற்றில் நீரை நிரப்பிப் பயன்படுத்தலாம். —பொ. இராஜாமணி