ஒளி புகும் பொருள்களிலோ, ஒளியை எதிரொளிக்கும் பொருள்களிலோ, கட்ட வேறுபாடு அல்லது ஒளிப் பாதை வேறுபாட்டைக் காணவும், அளக்கவும் பயன் படும் நுண்ணோக்கியே குறுக்கீட்டு முறை நுண்ணோக்கி (interference microscope) ஆகும். கொள்கை. கட்ட ஒப்பீட்டு நுண்ணோக்கியில் படு அலையும், பொருளால் விளிம்பு விளைவுக்குள்ளான அலையும் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு, அவற்றிற்கிடையே ஒரு கட்ட வேறுபாட்டைக் கொடுத்து, பின்னர், வேறுபாடுற்ற அவ்விரு அலைகளை மீண்டும் இணைத்து, முடிவான படிவத்தைப் (image) பெறலாம். இறுதித் தொகு பயன் அலையின் வீச்சு, படு அலையின் வீச்சை விடக் குறைவு. ஆதலால், ஒளி புகும் பொருள் கண்ணுக்குத் தெரிகிறது. இவ்விளைவே, வேறு முறையில் குறுக்கீட்டு முறை நுண்ணோக்கியில் பயன் படுகின்றது. இதில் படு அலையும், விளிம்பு விளைவுற்ற அலையும் பிரிக்கப் படுவதில்லை. மாறாகப் பொருள் வழியாகச் சென்ற அலையும், அதே ஒளி மூலத்திலிருந்து புறப்படும் மற்றோர் அலையும் குறுக்கீட்டு விளைவுக்குள்ளாகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> படம் 1இல் A என்பது படு அலை; B என்பது ஒளி புகும் பொருளின் வழியே புகுந்து வந்த ஒளி அலை; பொருளில் ஒளி ஆற்றல் வீணாணக்கப் படாமையால், B இன் வீச்சு Aஇன் வீச்சுக்குச் சமமாகிறது. ஆனால், B அலை, A அலையை விடப் பின் தங்கிக் காணப் படுகிறது. அதாவது, கட்ட வேறுபாடு அடைந்துள்ளது. குறுக்கிடும் மற்றோர் அலை, படத்தில் துண்டுக் கோடுகளால் காட்டப் பட்டுள்ளது. அப்பே கொள்கைப் படி, பொருளின் இறுதிப் படிவம், ஒளியமைப்பின் வழியாகச் செல்லும் அனைத்து அலைகளின் தொகு பயனே ஆகும் . குறுக்கிடும் அலையையும் பொருள் வழியே புகுந்த அலை Bயையும் கூட்டினால், கிடைக்கும் தொகு பயன், அலையின் வீச்சு படு அலை Aஇன் வீச்சை விடக் குறைவாக அமைவதை, படம் (1) காட்டுகிறது. அதாவது, ஒளி புகும் பொருள், ஓரளவு ஒளியை உட்கவர்ந்து, கொண்டதாகத் தோன்றுகிறது. அதனால் ஒளி புகும் பொருள் கண்ணுக்குத் தெரிகிறது. குறுக்கிடும் அலையின் வீச்சையும், கட்டத்தையும் மாற்றினால், விளையும் தொகு பயன் படிவமும், வேறுபட்ட தெளிவுடன் காணப் படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நுண்ணோக்கி. ஒளியை எதிரொளிக்கும் பொருளின் மேற்பரப்புகளை, நன்கு ஆராய்வதற்கு லின்னிக் குறுக்கீட்டு நுண்ணோக்கி பயன் படுகிறது (படம் 2). ஒளி மூலத்திலிருந்து செல்லும் ஒளி, அரை எதிரொளிப்பு ஆடி Pஆல் இரண்டு ஒளிக் கற்றைகளாகப் பிரிக்கப் படுகிறது. ஒரு கற்றை, பொருளருகு வில்லை அமைப்பு O₁ஆல் குவிக்கப்பட்டு M₁ என்னும் பொருள் பரப்பு மீது விழுகிறது. மற்றொரு கற்றை, O₂ஆல் குவிக்கப்பட்டு, ஒப்பீட்டு பரப்பு M₂ மீது விழுகிறது. இரண்டு எதிரொளிப்புக் கற்றைகளும், குறுக்கீட்டு விளைவுக்குள்ளாகின்றன. அவை ஆடி Pஇல் விழுந்து, ஒன்றாகின்றன. தொகு பயன் படிவத்தைக் கண்ணருகு வில்லை வழியாகக் காண முடியும். M, ஐச் சிறிது சரித்தால், குறுக்கீட்டு வரிகள் தோன்றும். M₁ இல் பொருள் உள்ளமையால், வரிகள் இடப் பெயர்வு இருக்கும். ஆடிகள் M₁, M₂ இரண்டும் இணையாகும் போது, M₁ இல் உள்ள பொருளின் படிவம் சீரான ஒளிப் பின்னணியில் ஒளிச் செறிவு, வேற்றுமை படிவமாகத் தெளிவாகக் காணப் படுகிறது. பொருளின் மேற்பரப்பில் உள்ள கோடுகள் கீறல்கள் ஆகியவற்றையும் தெளிவாகக் காணலாம். ஒளி ஊடுருவும் பொருளின் தன்மையை ஆராய்வதற்கு, ஓர் அமைப்பு உள்ளது (படம் 3). ஒளி மூலத்திலிருந்து வந்த ஒளிக் கற்றை அரை எதிரொளிப்பு S₁–இல் பட்டு, இரு கற்றைகளாக முறியும். ஒரு கற்றை, பொருள் Oஐத் தன்னகத்தே கொண்ட ஓர் ஒளி நுண்ணோக்கி வழியாகச் செல்லும். மற்றொரு கற்றை வெற்று ஒப்பீட்டுக் கண்ணாடியை உள்ளடக்கிய மற்றொர் ஒளி எதிரொளிப்பு ஆடி S2 இல் பட்டுக் குறுக்கிட்டு, இணைந்து விடுகின்றன. கண்ணருகு வில்லை வழியாக, இறுதிப் படிவத்தைக் காணலாம். இரு கற்றைகளின் பாதைகளில், தக்க வடி கட்டிகளையும், தக்க ஒளி புகும் தட்டுகளையும் வைப்பதன் மூலம், வேண்டிய கட்டம் மற்றும் வீச்சு வேறுபாடுகளை ஏற்படுத்தித் தக்க தெளிவான படிவத்தைப் பெறலாம். லீஜ் (Leitz) என்பார், தம் கொள்கையின் படி, ஒரு நுண்ணோக்கியை அமைத்தார். இந்நாளில் டைசன் நுண்ணோக்கி, ஸ்மித்–பேக்கர் நுண்ணோக்கி போன்ற மேம்படுத்தப்பட்ட குறுக்கீட்டு நுண்ணோக்கிகள் வழக்கத்தில் உள்ளன. பயன். இந்நுண்ணோக்கி உயிரியலில், காய்ந்த சிறு பொருள்களை நன்கு ஆராயப் பயன் படுகிறது. செல்லின் அமைப்பை ஆய்வதிலும் இது பயன் படுகிறது. செல் கொள்ளளவு, தடிப்பு, திண்ம, நீர்மப் பொருள்களின் செறிவு இவற்றை ஆய்வதிலும் பயன் படுகிறது. மேலும், நொதியின் செரிப்புக் காரணமாகச் சிறு பொருள்களின் மீது உள்ள காய்ந்த, நிறைப் பகுதிகள் அளவில் மாறுபடுதலை இந்நுண்ணோக்கி வழியாக ஆராயலாம். மேலும், படிகங்கள், நூல் இழைகள் போன்ற ஒளி புகும் பொருள்களை ஆராய்வதிலும், உலோகவியலில், உலோகப் பரப்புகளை ஆராய்வதிலும், இதன் பங்கு மிகச் சிறப்பானது. —மு. சேக்முஸ்தபா