மத்திய தரைக்கடல் பகுதியில் அல்லாதிகூயியா (Al–Ladhigiyah) என்னும் ஊரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொன்மை மிக்க நகரம். இந்நகரத்தின் சிதைவுகளைக் கொண்ட மண்மேடு இராசுசம்ரா (Ras Shamra) என்று குறிக்கப்படுகிறது. இம்மண்மேட்டில் தொல்லியல் பொருள்களை உழவர் ஒருவர் தற்செயலாகக் கண்டுபிடித்தார். பின்னர், பிரான்சு நாட்டுத் தொல்லியலறிஞர் கிளவுடு எப்.ஏ. இசுகாப்பர் (Claude F.A. Schaffer) என்பவர் தலைமையில் 1929–இல் இங்கு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உகரித்தில் (Ugarit) புதிய கற்காலம், கல்செப்புக் காலம் போன்றவற்றின் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன; வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்களும் ஒரே நிறத்தில் பல சாயல்களில் உள்ள பளபளப்பு மிக்க மட்கலன்களும் சிவப்பு மட்கலன்களும் அகழாய்வில் கிடைத்தன. செப்புக் காலத்தில் உலோகத்தின் பயனை இங்கு வாழ்ந்த மக்கள் அறிந்தனர். இக்காலத்தில் இங்குப் புதிய குடியேற்றங்களும் ஏற்பட்டன. உகரித்து முற்காலத்தில் ஒரு சிறந்த துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியது. உகரித்தின் பொற்காலமாக கி.மு. 1450 முதல் 1200 வரையுள்ள காலம் கருதப்படுகிறது. இந்நதகரறை கி.மு. 1200–ஆம் ஆண்டளவில் வடக்கே வாழ்ந்த மக்கள் கைப்பற்றினர். இக்காலத்தில் இங்கு நில நடுக்கமும் பெரும் பஞ்சமும் ஏற்பட்டன. அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரச மாளிகைகள், நூல் நிலையங்கள், ஆவணக் கூடங்கள் உகரித்தின் பொற்காலத்தைச் சார்ந்தவை. பல கட்டடங்கள் சிறு குன்றில் கட்டப்பட்டுள்ளன. கட்டடங்களின் கலைத்திறன் மைசீனியக் கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பல வீடுகளின் அடிப்பகுதியில் நிலவறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. நூலகங்களும் ஆவணக் கூடங்களும் இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மைச் சின்னங்களுள் சிறப்பு வாய்ந்தவை. பொது மக்களே பல நூலகங்களைக் கட்டி இருக்கின்றனர். இந்நூலகங்களில் பல ஆவணங்கள் உள்ளன. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட நூல்களில் கிரீட்டுப் புராணக் கதை (Keret Legend), தானியேல் புராணக்கதை (Legend of Daniel), பால்–அலியன் பழங்கதை (Myth of Baal Aliyan), பாலின் இறப்பு (Death of Baal) போன்றவை குறிப்பிடத்தக்கவை. விவிலிய நூலின் முன்னோடியாக உகரித்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூலங்கள் விளங்குகின்றன. இவற்றின் கதைகளே பிற்காலத்தில் விவிலிய நூலில் எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. கனானைட்டு (Cannanite) நாகரிகத்திற்குச் சில சிறந்த சான்றுகளாக இவ்விலக்கிய மூலங்கள் விளங்குகின்றன. கனானைட்டு மக்கள் செமிட்டிக்கு வகை ஆப்பு வடிவ எழுத்துகளையும் உகரித்திற்கே தனிப்பட்ட ஆப்பு வடிவ எழுத்துகளையும் பயன்படுத்தியுள்ளனர். இது உகரித்து அகரவகை எழுத்து எனப்படும். களிமண்ணால் செய்யப்பட்ட வரைபடத் தொகுதிகள் பல இவ்வாவணக் கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. சில எழுத்துகள் 1970–இல் படிக்கப்பட்டன. இவ்வெழுத்துகள் பாபிலோனிய ஆப்பு வடிவ எழுத்துகளால் (Cuneiform) எழுதப்பட்டுள்ளன. இவ்வெழுத்துகளை வணிகர்களும் ஆட்சியாளர்களும் பயன்படுத்தினர். வடக்குச் செமிட்டிக்கு எழுத்துகளைப் போன்று இவை காணப்படுகின்றன. இதில் 30 எழுத்துக் குறிகள் உள்ளன. 3 எழுத்துகள் உயிர் எழுத்தாகவும் 22 மெய் எழுத்துகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆப்புவடிவ அமைப்பில் அமைந்துள்ள இவ்வெழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளன. உகரித்து, அக்காடியன், சுமேரியன், ஊரியன் என்னும் நான்கு மொழிகளில் இவ்வரைபடத் தொகுதிகள் உள்ளன. 7 வகை வெவ்வேறான குறிகள் இவ்வரைபடத் தொகுதிகளில் காணப்படுகின்றன. இவ்வெழுத்து ஆவணங்கள் உகரித்தின் தொன்மைமிக்க வளர்ச்சியைப் பறை சாற்றுகின்றன. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுள் மட்கலன்களும் தந்தப் பொருள்களும் குறிப்பிடத்தக்கவை. தந்தத்தால் செய்யப்பட்ட பெட்டியினுடைய மூடியின் இருபக்கங்களிலும் அழகான உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு பெண் அமர்ந்த நிலையில் இரண்டு கைகளில் இலைகளை வைத்துக் கொண்டுள்ளாள். அவளுக்கு இருபக்கங்களிலும் பின்னங்கால்களால் நின்ற நிலையிலுள்ள இரண்டு ஆடுகள் அவளது கையிலுள்ள இவைகளைத் தின்ன முயன்றவாறுள்ளன.