பழங்கால இந்தியத் தத்துவ அறிவு ஆராய்சியியலில் உவமானம் நான்காம் பிரமாணமாகக் கருதப்படுகிறது. உபமானம் என்னும் சொல் ஒப்புமை எனப் பொருள் படும். இவ் ஒப்புமை எவ்வாறு அறிவைப் பெறும் வழியாக உதவுகிறது என்பதை ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாகக் கூறலாம். ஆமாவை (காட்டுப்பசுவை) அறியாத ஒருவனிடம் அது ஆவைப் போன்றிருக்கும் என்று கூறினால், அது கேட்டவன் காட்டிற் செல்லும்பொழுது ஆமாவைக் காண நேர்ந்தால் அது ஆவோடு ஒத்திருத்தல் பற்றி அதனை ஆமா என்று தெரிந்து கொள்வான். ஆதலின், ஒரு பொருளை விளக்க அதனோடு உவமையாகப் பொருந்துவதொன்றைக் கூறுதல் உலக வழக்கு. இதுவே உவமம் என்றும் சொல்லப்படும். உவமானத்தைப் பற்றிய கருத்துகள் உரையளவையியலில் காணப்படுகின்றன. இக்கருத்துகள் ஒப்புமை பற்றி உணரப்படுவதால் கருதலளவையில் அடங்கும், இக்கருத்தை நையாயிகர் தனி அளவையாகக் கொள்கின்றனர்.