சிவபெருமானால் செய்யப்பட்ட சிவாகமங்கள் அல்லது சைவாகமங்கள் ‘மூலாகமங்கள்’ என்றும் ‘உபாகமங்கள்’ என்றும் இரு வகைப்படும். அவற்றுள் சிவபெருமான் படைப்புக் காலத்திலே முதற்கண் செய்து சிலருக்கு உபதேசித்த ஆகமங்கள் ‘மூலாகமங்கள்’ எனப்படும். அவை காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டாகும். அம்மூலாகமங்கள் ஒவ்வொன்றின் சார்பாகவும் அவற்றின் பொருளை அவ்வப்பொழுது சிலருக்கு அப்பெருமான் இனிது விளக்கிச் செய்த ஆகமங்கள் ‘உபாகமங்கள்’ எனப்படும். ஒவ்வொரு மூலாகமத்திற்கும் உபாகமங்கள் பல உண்டு. அனைத்து ஆகமங்கட்கும் உரிய உபாகமங்கள் இருநூற்றேழு. ‘இருபதும் எட்டுமே மூலம், உபவேதம் இருநூறும் எழும் என எண்’ என்பது சைவ சமய நெறி (பொது இலக்கணம்–336). ஒவ்வோர் ஆகமத்திற்கும் உரிய உபாகமங்கள் இத்தனை என்பதையும் அவற்றின் பெயர்களையும் இக்குறள் வெண்பாவின் உரையிற் காணலாம். சி.அ.