தலைச்சங்கத் தலைமைப் புலவராகிய அகத்தியருடைய பன்னிரு மாணவர்களுள் இரண்டாமவராக வைத்து எண்ணப்படுபவர். முதல் மாணாக்கர் தொல்காப்பியர். அவர் எழுதிய தொல்காப்பியம் என்னும் நூல், நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக்களத்தில் தலைமைப் புலவராக இருந்த அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. இச்செய்தியினைத் தொல்காப்பியப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் கூற்றால் அறியலாம். “அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து” என்பது அப்பாயிரப்பகுதி, பனம்பாரனார் இவரை, “அறங்கரைநாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என அப்பாயிரத்துள் பாராட்டியுள்ளார். இதனால் இவரது வடமொழிப் புலமை நன்கு புலனாகும். தொல்காப்பியம் அரங்கேற்றப்படுங்கால், இவர் அதில் குற்றங்கூற, அதற்குத் தொல்காப்பியர் விளக்கங் கூறினார் என்பர். ஆதங்கோடு என்பது ஓர் ஊர், அவ்வூரினராதலின் இவர் அதங்கோட்டாசான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார் எனத்தெரிகிறது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. அதங்கோடு என்பது சேர நாட்டிலுள்ள திருவிதாங்கோடு என்று சிலர் கருதுவர்.ஆர்.கி.