சிறுநீர்ப்புற வழி இறுக்கமடைந்து, சிறுநீர் பிரிவதில் பெருந்துன்பம் ஏற்படுகிறது. பிறவியில் ஏற்படுவது, காயங்களால் ஏற்படுவது, அழற்சி (வெட்டை நோய். காச நோய், கிரந்திப் புண்), கருவிகளால் ஏற்படுவது, அறுவைக்குப் பின் ஏற்படுவது என இறுக்கம் பலவாகும். வெட்டை நோய்க்குப் பின் வரும் இறுக்கமே, ஒரு காலத்தில் பரவலாக இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நுண்ணுயிர் எதிர் மருந்துகளால், வெட்டை நோய் முழுக் குணமடைவதால், இறுக்கம் ஏற்படுவதில்லை. இறுக்கம் ஏற்பட்டாலும், அவை ஆண் குறியின் நுனி, ஆண் குறியும் விதைப் பையும் சந்திக்கும் இடம் ஆகியவற்றில் காணப்படுகின்றன. சிறுநீர்ப் புற வழியின் படலப் பகுதியிலும், விந்தகப் பகுதியிலும் இறுக்கம் ஏற்படுவதில்லை. சில சமயம் பல இறுக்கங்கள் ஏற்படுவதுண்டு. வெட்டை நோய்க்குச் சரியான மருத்துவம் அளிக்கப்படாத போது, புற வழியைச் சுற்றியுள்ள நிணக் கட்டிகளில் நுண்ணுயிரிகள் தேங்கி விடும். அவை சுற்றியுள்ள திசுக்களுக்குப் பரவ, வட்டச் செல்களும், ஃபைப்ரோபிளாஸ்டுகளும் ஊடுருவுகின்றன. ஊடுருவிய திசுக்கள் சுருங்கி, வடுத் திசு உருவாகி, சிரை அழற்சிக் கட்டி அடைப்பு ஏற்பட்டு இறுக்கங்கள் தோன்றுகின்றன. பெருமளவில் இறுக்கம் இருந்தால், செதிலுரிந்த மேலணியும், புற வழி வெளிப்பாடும் வைகறையில் வெளிப்படும் சிறுநீரில் காணப்படும். இதைத் தொடர்ந்து, நாளடைவில் வலியும் தோன்றும். பெரியதான விந்தகம், புற வழியை அமுக்கும் போது, ஏற்படுவதைப் போல இல்லாமல், நோயாளி சிறுநீரை முழுமையாக வெளியேற்ற மிகவும் துன்பப்படலாம். புற வழி இறுக்கம், இளம் வயதினரையே பாதிக்கிறது. நாளடைவில், சிறுநீர், சொட்டுச் சொட்டாக வெளிப்படுகிறது. முதலில், பகலில் மட்டும் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளிப்பட்டாலும், நாளடைவில், சிறுநீர்ப் பை அழற்சியின் காரணமாக, இரவிலும் இது நிகழ்கிறது. புற வழி இறுக்கத்தைக் கையால் கூடத் தொட்டுப் பார்க்கலாம். சிறுநீர் தேக்கமடைவதால், சிறுநீரகங்கள், சிறுநீரகக் குழல், சிறுநீர்ப் பை ஆகியவையும் பாதிக்கப்படுகின்றன. இறுக்கத்தின் அருகே யுள்ள புற வழியின் சிலேட்டுமப் படலம் வீக்கமடைவதால், சிறுநீர்த் தேக்கம் முழுமையடைகிறது. சிறுநீர்ப் புற வழி உள்நோக்கியின் மூலம் பிணிக் கூற்று ஆய்வில் முடிவு செய்யலாம். சிறுநீர்ப் புற வழி வரை படம் மூலம், இறுக்கத்தின் நீளத்தையும், பரிமாணத்தையும் தெரிந்து கொள்ளலாம். இதற்கு மருத்துவமாகப் புழைத் தண்டு அல்லது விரி கோல் கொண்டு இறுக்கத்தை விரிவடையச் செய்யலாம். இந்த விரி கோல்கள் ரப்பர் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டவை. விரி கோல் முறை (bougie bilatation) வெற்றி பெறாவிடில், அறுவை மருத்துவம் செய்ய நேரிடும். அறுவை, புற வழித் திறப்பு (urethrotomy) புற வழி நெகிழி இணைப்பு (urethroplasty) என இரு வகைப்படும். புறவழி இறுக்கத்தைச் சீர் செய்யாவிடில், சிறுநீர்த் தேக்கம், சிறுநீர்ப் புற வழிப் பக்க வளர்ச்சி (diverticulum), புறவழியைச் சுற்றிச் சீழ்க் கட்டி புறவழியில் புரையோடிய புண், நுண்ணுயிர்ப் பாதிப்பு, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் பிரிவதற்காக முக்குவதால் குடல் பிதுக்கம், மூல நோய் மலக் குடல் துருத்தல் முதலியவை தோன்றக் கூடும். —சாரதா கதிரேசன் நூலோதி. A J. Harding Rains. Bailey & Love's Short Practise of Surgery. Seventeenth Edition, ELBS, London, 1979.