அம்பலவாண தேசிகர் கலம்பகம்
ampalavāṇa tēcikar kalampakam
திருவாவடுதுறைத் திருமடத்தின் தலைவராக விளங்கிய அம்பலவாண தேசிகர் மீது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய கலம்பக நூலாகும்.
திருவாவடுதுறைத் திருமடத்தின் தலைவராக விளங்கிய அம்பலவாண தேசிகர் மீது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய கலம்பக நூலாகும். கலம்பகம் என்பது பல்வேறு வகையான பா, பாவினங்களும் அகப்பொருள் புறப்பொருள் துறைகள் சிலவும், சுவை பலவும் நிரம்பிய இலக்கிய வகையாகும். எனவே, இதனைக் கலம்பக மாலை என்றும் சிறப்பிப்பர். தேவர் மீதும், முனிவர் அரசர் முதலிய சிறப்புடை மாந்தர்மீதும் இந்தச் சிற்றிலக்கியம் பாடப் பெறுவது மரபு, முனிவரைக் குறித்துப் பாடும்போது அவரைத் தேவரைப் போல வைத்துப் பாடுவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய அம்பலவாண தேசிகர் கலம்பகம் இதற்குத் தக்கதொரு எடுத்துக்காட்டாகும்.
திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர், அத்திருமடத்தின் 15–ஆம் குரவராகக் கி.பி. 1845 முதல் கி.பி. 1868 வரையில் அருளாட்சி புரிந்தவர்; தம் மடத்தில் தமிழ்ப்புலவராய் விளங்கிய திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தவர் இவரே. இவர்தம் தவநிலையும் தண்ணருளும் பற்றிப் பேசுமிடத்துப் பிள்ளை இவரைச் சிவவடிவமாகவே போற்றியுள்ளார்.
‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ (திருமந். 6.1.9) எனத் திருமூலர் கூறியுள்ளார். இருபாவிரு பதில் ஆதிக்குருமூர்த்தியாகிய மெய்கண்டாரைச் சிவமெனவே கொண்டு அருணந்தி சிவாச்சாரியாரும் தொன்மை மரபைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். திருவாவடுதுறைத் திருமடத்தின் தலைவர் சடையின்றி மழித்த தலையுடன் உருத்திராக்கம், திருநீறு, கண்டிகை முதலிய சிவவேடப் பொலிவுடன் காட்சி தருவர். ‘பாடுந் துறைசைப் பதியம் பலவாணன்’ (அ.க. 12) எனத்தொடங்கும் பாடலில் சிவபெருமானே மானிடச்சட்டை தாங்கி அம்பலவாண தேசிகர் வடிவில் குருநாதனாய் வந்து அருள்புரிகிறார் என்பதைப் பத்தி ஈடுபாடும் சிலேடை நயமும் அமையப் பாடியுள்ளார். இப்பாடலில், ‘என் பணி கொள் ஏந்தல்’ என்னும் தொடர் ‘என் பணிகொள் ஏந்தல்’ என்றும், ‘என்பு அணிகொள் ஏந்தல்’ என்றும் பிரிந்து சிலேடைப் பொருள் படுவதாக உள்ளது.
அகம், புறம் பற்றிய பொருள் எதுவாயினும் பாடல்களை அம்பலவாண தேசிகரின் அரும்பெருங் குணங்கள் வெளிப்பட அமைத்துள்ள திறம் கண்டு மகிழத்தகும். இந்நூற்கண் சைவ மரபுகளும் திருவாவடுதுறைத் திருமடத்தின் மரபுகளும் விளக்கமுற மகாவித்துவான் அவர்கள் அங்கங்கே எடுத்துரைத்துள்ளார்.மு.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 427)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t8xts3cf/
தமிழ்“அம்பலவாண தேசிகர் கலம்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t8xts3cf/APA
Oliyon Research. (2026). அம்பலவாண தேசிகர் கலம்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t8xts3cf/MLA
"அம்பலவாண தேசிகர் கலம்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t8xts3cf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment