பச்சை ஆமை
paccai āmai
ஆமை ஊர்வனவற்றில் முன்னோடியாகக் காணப் படுகிறது.
ஆமை ஊர்வனவற்றில் முன்னோடியாகக் காணப் படுகிறது. உலகில் பொதுவாக 275 வகை ஆமைகள் உள்ளன. சில வகை ஆமைகள் நிலத்தில் வாழும் தன்மையுடையன. சில வகை ஆமைகள் நீர், நிலம் இரண்டிலும் வாழும் தன்மையுடையன. ஆனாலும், பெரும்பாலான ஆமைகள் நீரில் வாழ்பவையாகவே இருக்கின்றன. கடலில் ஐந்து வகையான ஆமைகள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பச்சை ஆமை (Chelone mydas) ஆகும். இப்பச்சை ஆமையே, முதன் முதலில் தோன்றிய கடலாமை என்று விலங்கியல் வல்லுநர்கள் கருதுகின்றன.
உடலமைப்பு. நல்ல வளர்ச்சியுற்ற பச்சை ஆமை தட்டையான உடலமைப்பைக் கொண்டது. மேற்புறத் தோற்றத்தில், இவ்வாமையின் மேலோடு முட்டை வடிவத்தில் காணப் படும். வால் பகுதியில், இது குவிந்த உடலமைப்பைக் கொண்டுள்ளது. வழவழப்பான இதய வடிவ ஓட்டுடன் சிறிய வட்ட வடிவ முன் தலையுடன் கூடிய ஒழுங்கு படுத்தப் பட்ட உடலமைப்பைக் கொண்டது. இவ்வோட்டின் பக்கவாட்டில் நான்கு இரட்டைத் தட்டு அமைப்புகள் (lateral sites) காணப் படுகின்றன. முதலில் உண்டான தட்டின் அடியில் ஒன்றன் கீழ் ஒன்றாகப் பல புதிய அடுக்குகள் உண்டாகிக் கொண்டே போவதால், இவ்வாமையின் மூக்குப் பகுதியில் ஒர் இரட்டைச் செதில்கள் காணப் படுகின்றன. வயிற்றுப் பகுதியில் உள்ள ஓடு மஞ்சள் நிறத்துடன் காணப் படும். பொதுவாக, இவ்வாமை 250 கி.கி. எடையளவுக்கு வளரக் கூடியது. இவ்வாமை ஊர்ந்து செல்லும் பாதையின் அகலம் ஏறத் தாழ 1 மீ. இருக்கும். ஊர்ந்து செல்லும் பாதை ஆழமாகவும், அதன் முன் கால்களால் பறிக்கப் பட்ட குழி போன்ற அமைப்புடன் காணப் படும். இது பெரிய பரந்த மணற் பரப்புகளில் ஊர்ந்து செல்லும் இயல்புடையது.
வாழ்விடம். இப்பச்சை ஆமை தனியாக வாழும் மிகவும் மந்தமான உயிரினமாகும். இதற்குக் காரணம், இதன் மூச்சு உறுப்புகளின் அமைப்பேயாகும். உடலைக் கெட்டியான ஓடு மூடியிருப்பதால், இதனால் விரியவும், சுருங்கவும் முடிவதில்லை.
பரவல். வெப்ப, மித வெப்ப (25–35°C) நீர் நிலைகளில் பச்சை ஆமை பரந்து காணப் படுகிறது. ஆழமற்ற (25மீ.) பகுதிகளிலும் மிகவும் அதிகமாகக் காணப் படுகிறது. குளிர்ச்சியான தீவுகளில் மிகவும் குறைந்த அளவில் காணப் படுகின்றது. பசிபிக் பெருங்கடல், இந்துப் பெருங் கடல், அந்தமான் நிக்கோபார், லக்காவீல், மினிகாய் போன்ற தீவுகள், கேரளத்தில், கொல்லத்திற்குத் தென் புறத்தில் உள்ள கடற்கரை, தமிழ்நாட்டில் தென் கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா ஆகிய இடங்களில் இவ்வாமை மிகுந்துள்ளது. இனப் பெருக்கம். முட்டையிடும் காலத்திற்கு முன்பே, இவ்வாமை புணர்கின்றன. புணரும் போது, சேமித்து வைக்கப் படும் விந்து எதிர் காலத்தில் கருத்தரிக்கப் பயன் படுகிறது. புணர்ச்சி முடிந்தவுடன், பெண் ஆமையைக் கரைக்குக் கொண்டு வந்து, பிளந்து பார்த்தால், பெண் உறுப்புகளில் முட்டைகள் வளரும் இடத்தில், முட்டைகள் தென்படுவதில்லை. மாறாக, முட்டைகளை வளர்ப்பதற்குத் தேவையான பாலிக்கிள் (follicle) காணப் படும். ஒவ்வோர் ஆண்டும் புணரும் போது, படிப் படியாகக் கருத்தரிப்பு குறைந்து கொண்டே போகிறது. இதன் இனப் பெருக்க இடைவெளி பொதுவாக, இரண்டு ஆண்டுகளாகும். சில சமயங்களில் ஒன்று, மூன்று, நான்கு ஆண்டுச் சுழற்சிகளும் காணப் படும். குறிப்பாக ஆமை, எச்செயலில் ஈடுபட்டிருந்தாலும், புணர்ச்சிக்கு நேரம் வந்து விட்டால், தன் செயலை நிறுத்தி விட்டு, ஆண், பெண் உறவைக் கொண்டாடும் இயல்புடையது. எதிரி உயிரியைக் கவர்வதற்காக மணச் சுரப்பிகள் (scent glands) இதற்கு உள்ளன. இனப் பெருக்கத்தில் இவற்றின் சேர்க்கையும், முட்டையிடலும் அடங்கும்.
முட்டையிடுதல். பச்சை ஆமை, தனது இனப் பெருக்கக் காலங்களில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முட்டையிடும். இளவேனிற் காலத்திலும், கோடைக் காலத்திலும், இப்பச்சை ஆமை முட்டையிடத் தொடங்குகிறது. பொதுவாக, ஆமை எப்போதும் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கும். கடலிலிருந்து இவ்வாமை முட்டையிடுவதற்காகக் கடற்கரையை நோக்கி இரவில் வரும். கரைக்கு வந்த பின்னர், அரை மணி நேரத்தைச் செலவிட்டு, முட்டையிடுவதற்கு உரிய இடத்தைத் தேர்ந்தெடுக்கும்.
இது உலர்ந்த, அதே சமயம் குறைந்த ஈரமுள்ள மணலையே முட்டையிடத் தேர்ந்தெடுக்கிறது. மேலும், அம்மணலில் காற்றுப் போக்குவரத்து இருக்கிறதா எனவும் பரிசோதிக்கும்.பிறகு, முட்டையினைப் பாதிக்கும் கல், கிளிஞ்சல் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்கும். தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தவுடன், ஆமை தன் முன் கால்களின் மூலம் இடத்தைத் தூய்மை செய்து, குப்பைக் கூளங்களை அகற்றுகிறது. பின்னர், தனது முன் கால்களையும், பின் கால்களையும் மாற்றி மாற்றிப் பயன் படுத்திக் குழியைத் தோண்டுகிறது.
பச்சை ஆமை போதுமான ஆழத்திற்குக் குழியைத் தோண்டியதும், குழியின் இரு பக்கங்களிலும் பின் கால்களை உள்ளும் புறமுமாக வைத்து, வாலைக் குழிக்குள் செலுத்தித் தலையை உள்ளிழுத்துக் குழிக்குள் தரையோடு சமமாக உட்கார்ந்து, குழியை மூடி முட்டையிடத் தொடங்கும். இக்குழி உடற்குழி என்று குறிப்பிடப் படுகிறது. குறிப்பாகக் குழி தோண்டும் போது, இவ்வாமையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும். இக்கண்ணீர், கண்களில் காணப் படும் மணற் துகள்களை அகற்றவும், உடலைச் சம நிலைப் படுத்தவும் பெரிதும் பயன் படுகிறது. இவ்வாமை 2–5 முட்டைகள் இடுகிறது. இறுதி முட்டையை இட்டவுடன், குழிக்கு வெளியே குவிந்துள்ள மணலைப் பின் கால்களின் உதவியால் தள்ளிக் குழியை மூடுகிறது. பின்னர், பின் கால்களையும், வாலையும் கொண்டு அழுத்தி மணலை நன்றாக மூடுகிறது. பின்னர், குழியை இடந் தெரியாமல், காலால் மணலைக் கிளறி விட்டுச் செல்கிறது.
ஆமை முட்டையிடும் போது, கோழை போன்றுள்ள நீர்மம் முட்டைகளோடு வெளியேறுகிறது. முட்டையின் வடிவம் உருண்டையாக இருப்பதோடு, தோல் போன்றும் காணப் படுவதால், குழியில் விழும் போது உடைந்து போகாமல், பாதுகாப்பாக இருக்கிறது. முட்டை 48 முதல் 70 நாள்கள் வரை கரைகளில் காணப் படுகிறது. சூரிய ஒளியின் உதவியால், ஆமைக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வரும். குஞ்சுகளின் நீளம் 2.5–10 செ.மீ இருக்கும். பொதுவாக, இவ்வாறு முட்டையிருந்து வெளிப் படுவது இரவு நேரத்தில்தான் நடக்கிறது. மணற்பரப்பு சூடாக இருக்கும் போது, குஞ்சுகள் வெளி வருவது கிடையாது. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிப் பட்டவுடன், கடலை நோக்கி நீந்தத் தொடங்கி விடுகின்றன. குஞ்சுகள் பிறக்கும் போது, கடினமான மேற்புற உடலமைப்பையும், வெளுத்த அடிப் புறத்தையும் பெற்றிருப்பதாலும், உடலின் நிறத்தாலும் எதிரிகளான பெரிய மீன்களிலிருந்தும், பறவைகளிடத்தின்றும் இந்த ஆமையால் தப்பித்துக் கொள்ள முடிகிறது. குஞ்சுகளின் வளர்ச்சி மழைக் காலத்தை விடக் கோடைக் காலத்தில் மிக விரைவாக நடைபெறுகிறது. மழைக் காலத்தில், குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வர சராசரியாக 91 நாளாகும். ஆனால், கோடைக் காலத்தில், குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வர 56 நாள்களே போதும்.
எதிரிகள். பச்சை ஆமையின் முட்டைகள் பறவைகளாலும், பாலூட்டிகளாலும் அழிக்கப் படுகின்றன. கீரி, முள்ளம் பன்றி, நாய், நரி போன்ற விலங்குகள், ஆமை முட்டையிடும் இடங்களைக் கண்டு பிடித்து, அம் முட்டைகளை உணவாக உட்கொண்டு விடுவதன் மூலம், ஆமையின் முதன்மை எதிரிகளாகி விடுகின்றன. மேலும் இவ்விலங்குகள் தோண்டிய குழியில் எஞ்சியிருக்கும் முட்டைகளைப் பருந்துகள் உணவாக உட்தொண்டு விடுகின்றன.
முட்டையிலிருந்து வெளி வரும் குஞ்சுகளுக்கும், எதிரிகள் உண்டு. இவ்வெதிரிகளை நிலத்தில் வாழ்வன, நீரில் வாழ்வன எனப் பாகுபடுத்தலாம். நிலத்தில் வாழும் காக்கை, கடற்காக்கை, பருந்து போன்றவை மிக அதிகமாக இக்குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, இவ்வினத்தை அழிக்கின்றன. நீரில் வாழும் நண்டுகள், இக்குஞ்சை உணவாக உட்கொள்ளும். குஞ்சுகள் இரவில் முட்டை யிலிருந்து வெளிப் படும் போதே, இவை உண்டு விடுகின்றன. இவ்வெதிரிகளிடமிருந்து தப்பிக்கும் குஞ்சுகள் கடல் நீருக்குள் சென்ற பின், அங்கிருக்கிற சுறா மீன்களால் உட்கொள்ளப் பட்டு விடுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த முதிய ஆமைகளைத் திமிங்கிலங்கள் உட்கொள்கின்றன. பெரிய ஆமைகள் முட்டையிடுவதற்காக கடற்கரை நோக்கி வரும் போது, மனிதரால் அழிக்கப் பட்டு விடுகின்றன.
பிடிக்கும் முறை. பச்சை ஆமையை ஈட்டி, தூண்டில், மிதவை வலை, இறால் முதலியவற்றின் மூலமாகப் பிடிக்கலாம். மேலும், ஆமையைக் களைப்படையச் செய்யும் வரையில் விரட்டிச் சென்று, பிடிக்கும் வழக்கமும் உண்டு. நீரில் நன்கு மூழ்கும் திறன் படைத்தவர்களால் ஈட்டி எய்து பிடிக்கும் முறையும் சில இடங்களில் கையாளப் படுகின்றது.
பயன். கடற்புல்லை உண்பதால், இவ்வாமையின் இறைச்சியின் சுவை கூடுதலாகி விடுகிறது. இதனால், பெரும்பாலும், இறைச்சிக்காக இது பிடிக்கப் பட்டு, உணவாகப் பயன்படுகிறது.இதன் இறைச்சியில் புரதச் சத்து மிகுந்துள்ளமையால், இது முழு உணவாகும். இவ்வாமையின் தோல் மிகுந்த மதிப்புள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, ஆமையின் தோல் பன்னாட்டுச் சந்தையில் முதன்மைப் பொருளாகத் திகழ்கிறது. இவ்வாமையின் மேலோடு, கீழோடு ஆகியவற்றின் ஓரங்களிலிருந்து எடுக்கப் படும் குருத்தெலும்பு விலையுயர்ந்த சாறு தயாரிப்பதில் பெரிதும் பயன் படுகிறது. மேலும், இவ்வாமையின் கழுத்து, வயிற்றுப் பக்கத்திலிருக்கும் குறுத்தெலும்புகளும், வால் பக்கத்திலிருக்கும் எலும்புகளும், ஆமைச் சாறு (Soup )செய்யப் பயன் படுகின்றன.
ஆமை ஓடு ஐரோப்பாவில் அலங்காரப் பொருளாக விளங்குகிறது. ஜப்பான் நாட்டில் இது கலாச்சார மதிப்பு மிக்கதாகக் கருதப் படுகிறது. மேலும், திருணச் சடங்குகளில் இன்றியமையாமை பெறுகிறது. ஆமையின் தோல் மிகுந்த மதிப்புள்ளது. தோலிற்காக, இவ்வாமைகளைப் பிடித்து, இறைச்சியினை உண்டு, தோலை மட்டும் ஏற்றுமதி செய்கின்றனர். ஜப்பான், சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் பெருமளவில் பச்சை ஆமையின் தோலை இறக்குமதி செய்கின்றன.
ஆமை எண்ணெய், பல விதமான அழகுப் பொருள்களிலும், இதய நோய்களுக்கான மருந்துகளிலும் பயன் படுகிறது. பச்சை ஆமையின் உடற் பகுதிகள் வணிகச் சிறப்பு வாய்ந்தவை. மேல் ஓடு பலவித அணி கலன்களைச் செய்வதற்குப் பயன் படுகிறது. இப்பச்சை ஆமையின் குருதி, மூல நோயையும், ஆஸ்துமாவையும் குணப் படுத்தும். மிகப் பயனுள்ள ஆமை இனம், நாளுக்கு நாள் மிகவும் அருகி <!---- extinct ----> வருகிறது. இதைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அனைத்துலக விலங்குப் பாதுகாப்புக் கழகத்தார் மேற்கொண்டுள்ளனர். —செ. மரியசூசைநாதன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 391)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t826vnx2/
தமிழ்“பச்சை ஆமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t826vnx2/APA
Oliyon Research. (2026). பச்சை ஆமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t826vnx2/MLA
"பச்சை ஆமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t826vnx2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment