குசராத்து மாநிலத்தில் சுனாகது (Junagadh) என்னும் வரலாற்றுப் புகழ் பெற்ற ஊருக்கு அருகில் உள்ளதொரு சிற்றூர். இங்குக் கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடைவரைகள் உள்ளன. உபர்கோட்டு – குடைவரைகளின் உள்தோற்றம் இக்குடைவரைகளில் குசராத்தி மொழிக் கல்வெட்டுகள் பல உள்ளன. மேற்கிந்தியாவை ஆண்ட சத்திரபர்கள் இக்குடைவரைகளைக் குடைந்துள்ளனர். புத்த மதக் குடைவரைகளான இவை பெரும் குன்றுகளைக் குடைந்து இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. குடைவரைகளின் உட்பகுதியில் கூரைகளைத் தாங்கும் வண்ணம் பல தூண்கள் உள்ளன. தூண்கள் உருண்டை வடிவ அமைப்புடையனவாகவும் நான்கிற்கு மேற்பட்ட கோணங்களைப் பெற்றும் திகழ்கின்றன. குடைவரைகளின் முதல் தளத்தில் பல அறைகளும் இடைவழிகளும் உள்ளன. சுவர்களில் வழிபாட்டுக்குரிய சிறிய சைத்திய (Chaitya) உருவ அமைப்புகள் காணப்படுகின்றன. மேல் தளத்தில் பெரிய அறையும் குளியல் அறையும் உள்ளன. உபர்கோட்டில் உள்ள கோட்டை மிகப் பழமையானது என்று கருதப்படுகிறது. இக்கோட்டை கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் அழிந்துபட்டது. காடுகளால் இக்கோட்டை மறைந்திருந்தது. ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இராகிரகர் (Rah Graher) என்பவர் இக்கோட்டையைக் கண்டு பிடித்தார்.