சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு போன்ற இணைத்துக் கட்டும் பொருளுடன் மணலும், நீரும் சேர்த்துத் தயாரிக்கப்படும் பசை போன்ற கலவையைச் சாந்து (mortar) எனலாம். இணைத்துக் கட்டும் பொருளான சிமெண்ட் அல்லது சுண்ணாம்பை வார்ப்படப் பொருள் எனலாம். வார்ப்படப் பொருளின் தன்மையால் கலப்படப் பொருள் இணைத்துக் கட்டுமானம் உருவாக்கப்படுவதால், சாந்தின் நீண்ட கால உழைப்பு, தரம், வலிமை ஆகியவை வார்ப்படப் பொருளைப் பொறுத்தே அமையும். கடினமான, தொடர்ச்சியான திண்மப் படலமாக இறுக வல்ல நீரியத் திண்மக் குழைமம், கட்டடங்களின் உட்புறச் சுவர்களுக்குப் பூச்சுப் பொருளாகப் பயன்படுகிறது. இதே பொருளை வெளிப்புறச் சுவர்களுக்குப் பூச்சாகப் பயன்படுத்தும் போது, அதற்கு, குழைகாரை (stucco) என்று பெயர். சாந்தை அடிப் பூச்சாகவும் (1.9 செ.மீ தடிமனுக்கு), மேல் பூச்சாகவும் (0.16 செ.மீ. தடிமனுக்கு) பயன்படுத்தலாம். அடிப்பூச்சு மென்மையற்றதாகவும் மேல் பூச்சு மென்மையானதாகவும் அமையும். அடிப்பூச்சுக்குச் சுண்ணாம்பு, மணல், இழை முதலியனவும், மேல்பூச்சுக்குச் சுண்ணாம்பு—ஜிப்சம் கலவை முதலியனவும் பயன்படுகின்றன. களிமண், சுண்ணாம்பு, ஜிப்சம் ஆகிய மூலப் பொருள்களிலிருந்து சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. இது நீருடன் இணையும் போது, வேதி மாற்றம் நிகழ்ந்து பசை போன்று மாறி இளகும் நிலையை அடைகிறது. பின்னர் உலர்ந்து இறுக்கமடைந்தால், கல் போல் ஒரே பொருளாகி விடுகிறது. இயற்கையான சுண்ணாம்புக் கற்கள், சுண்ணப் பாறை, கடல் சிப்பி முதலிய மூலப்பொருள்களைத் தூய்மைப்படுத்தி, அதிக வெப்பத்தில் வேக வைத்து மிகுநீர் சேர்த்துக் குளிரூட்டிப் பொடியாக அரைத்துச் சுண்ணாம்பு தயாரிக்கப்படுகிறது. இதுவும் சிமெண்டைப் போலவே, நீருடன் இணைந்த பின், உலர்ந்து இறுகிக் கட்டியாக மாறுந் தன்மை உடையது. ஆனால், வலிமை குறைந்தது. சாந்து தயாரிக்க, சிமெண்ட் அல்லது சுண்ணாம்பைத் தரமுள்ளதாகத் தேர்வு செய்ய வேண்டும். பின்பு அதனுடன் சேர்க்கத் தேவையான மணலும் தரமுள்ளதாக இருக்க வேண்டும். மணல் என்பது சிறு துகள்களாக உள்ள சிலிக்கா ஆகும். இது நெடுங்கால நிலை மாற்றங்களால், மணல் பாறைகளில் அரிப்பு உண்டாகி, உதிர்ந்து உருவாகிறது.குழி மணல், ஆற்று மணல், கடல் மணல் என இயற்கையாக மணல் மூன்று வகையாகக் கிடைக்கிறது. குழி மணல் என்பது நிலத்திலிருந்து 1—2 மீ ஆழம் வரையுள்ள மண் குழிகளில் கிடைக்கிறது. இது கூர்மையான கோணம் உள்ள துகள் ஆகும்; உப்புத் தன்மையற்றது. தூய குழி மணல் சாந்து தயாரிக்கப் பயன்படும். பல வேலைக்கும் பயன்படக் கூடிய ஆற்று மணல் வெள்ளை நிறத்தில் உருண்டை மணி போல் ஆற்றுப் படுகைகளில் கிடைக்கும். கடற்கரையில் கிடைக்கக் கூடிய கடல் மணல் உருண்டையான நுண்ணிய மணி போல் வெளிர் நிறம் கொண்டது. உப்பு நிறைந்த இம்மணல் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடையது. அதனால் கட்டடத்தின் ஈரப் பகுதி வெளுத்து விடுவதால், கட்டுமானப் பொருள் பிரிந்து விடும். சிமெண்ட் இறுக்கமடைவதைக் குறைக்கும். ஆகவே சுடல் மணல் கட்டுமான வேலைகளுக்கு ஏற்றதன்று. 1.5875 மி.மீ. வலையைக் கடந்து செல்லும் மணல் நுண்மணல் என்றும், 3.175 மி.மீ. வலையைக் கடந்து செல்லும் மணல் பருமணல் என்றும், 7.62 மி.மீ வலையைக் கடந்து செல்லும் மணல் கல் மணல் என்றும் பல வகைப்படும். நுண்மணல் பூச்சு வேலைக்கும், பருமணல் கட்டுமான வேலைக்கும், கல் மணல் கற்காரை வேலைக்கும் பயன்படுத்தப்படும். மணலுடன் நீர் சேரும் போது, மொத்த மணலின் கன அளவு கூடுதலாகும். இதை மணல் வீக்கம் எனக் குறிப்பிடலாம். நீர் அதிக அளவில் சேர்ந்தால், மணல் துகள் மீண்டும் நெருக்கம் அடைந்து இயல்பான கன அளவைப் பெறும், நல்ல மணல் என்பது வேதி மாற்றம் உண்டாக்காமல், தூய்மையாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்; நுண்ணுயிர்கள், தாவரங்கள் இல்லாத, நீண்ட காலம் மாறாத வடிவாக மணிகள் இருக்க வேண்டும்; நீரை உறிஞ்சக் கூடிய உப்பு இதில் இருக்கக் கூடாது. சாந்து, கட்டுமானத்தில் இணைப்புப் பொருளாகப் பயன்படும். சாந்தின் கன அளவை அதிகரிக்கும் கலப்படப் பொருளாக மணல் பயன்படுவதால் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பின் அளவு குறைகிறது. சுண்ணாம்புடன் இணையும் போது, அதில் உள்ள கார்பன் டைஆக்சைடு மணலில் உள்ள இடைவெளிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டு, விரைவில் இறுக்கம் அடைகிறது. சாந்து உலர்ந்து, இறுக்கம் அடையும் போது, சுருங்கிக் கீறல் விழாமல் தடுக்கிறது. சாந்து அல்லது கற்காரையின் வலிமையில் சிறு மாற்றம் செய்ய மணல் பயன்படுகிறது. சாந்தின் மீது சுமை செயல்பட்டு நொறுங்கும் போது, மணல் தடுக்கிறது. சில இடங்களில் மணலுக்குப் பதிலாகக் கல் துகள், எரித்த களி மண், எரித்த நிலக் கரித் தூள் போன்ற பொருள்கள் பயன்படுகின்றன. சாந்து பல வகைப்படும். சாந்து விரிவடையும் அடர்த்தியைப் பொறுத்துப் பளுவான சாந்து அல்லது குறை சுமையுடைய சாந்து எனப்படும். இணைக்கப்படும் பொருள்களை ஒட்டிச் சுண்ணாம்புச் சாந்து, சிமெண்ட் சாந்து, ஜிப்சச் சாந்து, சுண்ணாம்பும், சிமெண்டும் கலந்த சாந்து எனப் பல வகைப்படும். பயன்படும் தன்மையை ஒட்டிச் செங்கல் கட்டுமானச் சாந்து, பூச்சு வேலைச் சாந்து என இரு வகைப்படும். பல குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பயன்படும் சாந்துகள் நெருப்பு எதிர்ப்புச் சாந்து, எடை குறைந்த சாந்து, விரைந்து இறுகும் அடைப்புச் சாந்து, ஒளி ஏற்கும் சாந்து, கதிர் வீச்சுக் கவசச் சாந்து எனப் பல வகைப்படும், நல்ல சாந்து தேவையான வலிமை, ஒட்டும் தன்மை, நீர்த் தடுப்பாற்றல், வேலை செய்ய எளிதான தன்மை, விரைந்து இறுக்கம் அடையும் தன்மை, கீறல் விழாத தன்மை, நீண்ட காலம் தோற்றம் மாறாமல் உழைக்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். சுண்ணாம்பு, மணல், நீர் சேர்ந்த கலவையை அரைத்துச் சுண்ணாம்புச் சாந்து தயாரிக்கப்படுகிறது. அரைப்பதற்கு, செக்குப் போன்ற அரைவைத் தொட்டி அல்லது எந்திரம் பொருத்திய அரைவைக் கலன்கள் பயன்படுகின்றன. சிமெண்ட் சாந்து, நீர் புகாத மேடை அல்லது இரும்புத் தகட்டில் சிமெண்ட், மணல் கலவை மீண்டும், மீண்டும் கலக்கப்பட்டுப் பின்னர் நீர் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. ஆய்வு மூலம் சாந்தின் ஒட்டும் தன்மை, அழுத்தந்தைத் தாங்கும் வலிமை, அழுத்த விசையைத் தாங்கும் வலிமை முதலியவற்றைக் கணக்கிட முடியும். —ஏ. எஸ். எஸ். சேகர் —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. I. C. Syal & A. K. Goel, Reinforced Concrete Structures, Second Edition, Wheeler & Co Private Ltd., Allahabad, 1987.