இராமசாமி, வே.வ
irāmacāmi, vē.va
இவர் விருதுநகரில் வன்னிய நாடார், பொன்னம்மாள் ஆகியோருக்கு மகவாக 18.3.1897–இல் பிறந்தார்.
இவர் விருதுநகரில் வன்னிய நாடார், பொன்னம்மாள் ஆகியோருக்கு மகவாக 18.3.1897–இல் பிறந்தார். இவர்தம் பிள்ளைப்பெயர் இராமலிங்கம். இவர் மக்களால் ‘வி.வி.ஆர்’ என்றும் விருதைப் பெரியார் என்றும் அன்பாக அழைக்கப்பெற்றார். இவர் 4.7.1919–இல் சிவகாமியம்மையை மணம் புரிந்தார். பள்ளிப்படிப்பை விருதுநகரில் முடித்த பின், 1915–இல் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். விடுதலைப் போராட்ட வேட்கையால் 1918–இல் கல்லூரியை விட்டு வெளியேறினார். காந்தியடிகள், பூபேந்திரநாத போசு ஆகிய காங்கிரசுத் தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். அன்னிபெசண்டு அம்மையாரின் தன்னாட்சி உரிமை இயக்கத்தில் 1914–இல் சேர்ந்தார். காலப்போக்கில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஈடுபட்டு, 1920–ல் நீதிக்கட்சியில் சேர்ந்தார். விருதுநகரை நீதிக்கட்சியின் கோட்டையாக்கினார். 1937–இல் நீதிக்கட்சியின் சார்பில் இவரும் காங்கிரசின் சார்பில் காமராசரும் தமிழகச் சட்ட மேலவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டனர். இவர் காமராசரிடம் தோற்றார். ஈ.வே. ராமசாமிப் பெரியாரின் தலைமையில் தொண்டாற்றிய இவர், நீதிக் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய போது பெரியாரை விட்டு விலகினார்.
இராமசாமி, வே.வ.
இவர் 1951–இல் தனிப்பட்ட முறையில் தேர்தலில் நின்று சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினரானார். விருதுநகர் நகராட்சித் தலைவராகப் பல ஆண்டுகள் பதவி வகித்து அந்நகரத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். உயர்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், மகப்பேறு நிலையம் முதலியன விருது- நகரில் அமைவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தார். அந்நகரில் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு நாணயச் சங்கம், கூட்டுறவு வங்கி முதலியவற்றைத் தோற்றுவித்தார். விருதுநகர் வணிகத் தொழில் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பால் பண்ணைகள், குடிசைத் தொழில்கள் முதலியன கூட்டுறவு முறையில் அமைக்க உதவினார். பனைத் தொழிலாளர்களின் இருளடர்ந்த வாழ்வு ஒளிரும் பொருட்டுப் பனைத்தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக 1932–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியின் செயலாளராக 1947–1955 வரை பணியாற்றி, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். தமிழ்மொழி வளர்ச்சியில் இவருக்கும் பேரீடுபாடு உண்டு. விருதுநகரில் தமிழ்க் கழகம் கண்டு தமிழ்த் தென்றல் என்ற திங்களிதழையும் வெளியிட்டார். கடமை உணர்வு, நாட்டுத்தொண்டு, சமுதாயத் தொண்டு, கல்விப்பணி, அரசியல் பணி போன்ற பல்வேறு பணிகளில் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார்.
இவர் உடன்பிறந்த ஆண்கள் மூவர்; பெண்கள் மூவர் மைந்தர் மூவர்; மகளிர் நால்வர். பொது வாழ்வில் ஈடுபட்டுப் புகழுடன் விளங்கிய இவர் 27.12.78–இல் மறைந்தார். க.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 108)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ss939zg9/
தமிழ்“இராமசாமி, வே.வ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ss939zg9/APA
Oliyon Research. (2026). இராமசாமி, வே.வ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ss939zg9/MLA
"இராமசாமி, வே.வ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ss939zg9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment