கூட்டாட்சி அமைப்பு முறையில் (Federal Set–up) மைய அரசு, மாநில அரசுகளின் பணிகள் சிறப்பதற்காக அவ்வப்போது அளிக்கும் நிதி, மற்றும் பொருள் உதவிகள், கொடைகள் (Grants) என்று கூறப்படுகின்றன. அரசின் கொடையை, இங்கிலாந்தில் ஊக்கக் கொடை (Subsidy) என்றும், அமெரிக்காவில் உதவி (aid) என்றும், பிரான்சு, செருமனி, பெல்சியம், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உதவுகை (Sub–vention) என்றும் கூறுகிறார்கள். இந்தியாவில், அரசாங்கக் கொடைகளும் உதவிகளும் (Grants & Aids) நான்கு வகைகளில் வழங்கப்படுகின்றன. அவை: (1) மைய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கும் கொடைகளும் உதவிகளும், (2) மாநில அரசுகள் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அளிக்கும் கொடைகளும் உதவிகளும், (3) மாநில அரசு, பிற வளர்ச்சி அமைப்புகளுக்கு வழங்கும் உதவிகள், (4) மைய, மாநில அரசுகள் தனிப்பட்டவர்களுக்கு நேரிடையாகக் கொடுக்கும். ஊக்கக் கொடைகளும் உதவிகளும், மைய அரசு, பின்வரும் நோக்கங்களுடன் மாநிலங்களுக்குக் கொடைகளும் உதவிகளும் அளிக்கிறது. (1) மாநில அரசுகளின் நிதி நெருக்கடியைக் குறைத்து, வரவுக்கும் செலவுக்கும் சமநிலையை ஏற்படுத்தல். (2) மாநில அரசுகளின் பணியில் அளவு, தரம் ஆகியவற்றில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து, மண்டலங்களுக்கிடையிலான வளர்ச்சியைச் சமப்படுத்தல் (Balanced Regional Development). (3) பொதுநலப் பணிகளான கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சீரான முன்னேற்றத்தைக் கொணர்தல். (4) தேசிய முதன்மை வாய்ந்த பணிகளை மாநிலங்களிடையே மேம்படுத்தல் அல்லது அப்பணிகளில் ஈடுபட மாநில அரசுகளை ஊக்குவித்தல். (5) மாநில அரசுகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்தல். (6) மைய, மாநில உறவுகளைச் சீராக்குதல். மைய அரசு அளிக்கும் கொடையின் அளவு பல காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் பொதுத் தேவை, சிறப்புத் தேவை, மாநிலத்தின் நிதித் திறமை ஆகியவற்றை வரவு செலவு அறிக்கையிலிருந்து ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கொடையின் அளவு முடிவு செய்யப்படுகிறது. நிதி வசதியைப் பெருக்குவதற்கு ஒவ்வொரு மாநில அரசும் எவ்வளவு முயற்சிகன் மேற்கொள்கின்றனவோ, அவற்றைப் பொறுத்தும் கொடையின் அளவு முடிவு செய்யப்படும். எடுத்துக்காட்டாக, எந்த மாநில அரசு தன் வரிகளின் மூலம் உச்ச வருவாய் பெறுகிறதோ, அந்த மாநிலம் மிகுந்த கொடையைப் பெறும். செலவினைக் கட்டுப்படுத்தித் தனது வருவாயைத் திறமையாகப் பயன்படுத்தி, மக்களின் நலனை உச்சப்படுத்துகிற மாநில அரசு மிகுந்த கொடையைப் பெறும். மேலும் சமூகப் பணிகளின் நிலையைப் பொறுத்து, அவை குறைந்த நிலையில் உள்ள மாநிலங்களுக்கு மிகுந்த கொடை வழங்கப்படும். கட்டுப்பாடற்ற கொடைகள் இந்தக் கொடைகளை ஒரு மாநில அரசு தனது விருப்பம்போல் செலவு செய்து கொள்ளலாம். கொடைகளின் நோக்கங்கள் பற்றி அல்லது அவை எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்ற முறையைப் பற்றி மைய அரசு, மாநில அரசுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்காது. அரசியலமைப்புச் சட்டமும் எவ்வளவு தொகை வழங்கலாம் என்று வரையறுக்காது. பெரும்பாலும், இக்கொடைகள் மாநில அரசுகளின் தேவைக்கேற்ப மாநிலங்களுக்கிடையே சமநிலை ஏற்படுத்த அளிக்கப்படும். இவை மொத்தக் கொடையாகவோ (Block Grant), பொதுக் கொடையாகவோ (General Grant), தனிப்பட்டவர் அடிப்படையிலோ, எல்லா மாநிலங்களுக்கும் சம அளவிலோ மாறுபட்ட அளவிலோ அளிக்கப்படும். மற்றக் கொடைகளுக்கு இல்லாத நெகிழ்ச்சி அல்லது மாறும் தன்மை இதற்கு உண்டு. மாநிலத் தனியாட்சி (State Autonomy)க்கு ஊறு செய்யாமல், மாநிலங்களின் நிதி நிலையையும் பொருளாதார நிலையையும் இவை நிலைப்படுத்தும். எனவே, இந்தக் கொடைகள் கூட்டாட்சி அமைப்பின் நோக்கத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆயினும், இந்தக் கொடைகளின் அளவு போதுமானதன்று. கட்டுப்பாடுற்ற கொடைகள் மைய அரசு மாநிலங்களுக்குச் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வழங்கும் கொடைகளைக் கட்டுப்பாடுற்ற கொடைகள் எனலாம். எடுத்துக்காட்டாக, மாநில அரசுகள், தங்களது திட்டம், மற்றும் வரவு–செலவு அறிக்கையைச் செயற்படுத்து முன், மைய அரசின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு கட்டுப்பாடு விதிக்கலாம். வேலைவாய்ப்பினை உருவாக்குவது, பணிகளின் தகுதியைப் பேணுவது, மாநில நடவடிக்கைகளைப் பற்றிய அறிக்கை கொடுப்பது, கொடைகளைத் திரும்பிப் பெற்றுக் கொள்வது ஆகியவை குறித்துச் சில வரையறைகள் விதிக்கப்படலாம். அவற்றிற்கு உட்பட்டுத்தான் ஒரு மாநில அரசு, கொடைகளைச் செலவிடல் வேண்டும். ஒரு மாநில அரசு பெறும் கொடைகளில், கட்டுப்பாடுற்ற கொடைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கட்டுப்பாடுற்ற கொடைகள், சட்ட முறையில் அமைந்த கொடைகள் (Statutory Grants), சட்ட முறையில் அமையாக்கொடைகள் (Non–Statutory Grants), மைய அரசின் திட்டங்களுக்கான கொடைகள் (Central Schemes Grants), மைய அரசின் உதவி பெற்ற மாநிலத் திட்டங்களுக்கான கொடைகள் (Centrally Aided State Schemes Grants), திட்டம், மற்றும் திட்டம் சார்பற்ற கொடைகள் (Plan and Non-plan Grants), இணைக் கொடைகள் (Matching Grants) என ஆறு வகைப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 275–ஆம் பிரிவின்படி நாடாளுமன்றம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அளிக்க வேண்டிய கொடைகளை முடிவு செய்கிறது. இச்சட்டத்தின்படி அரசு, மாநில மைய அரசுகளுக்குக் கட்டாயமாக வழங்கக்கூடிய கொடைகள் சட்ட முறையிலமைந்த கொடைகள் எனப்படும். இவை மாநில வருவாய்க் கணக்கில் ஏற்படும் திட்டத்திற்கு அப்பாற்பட்ட செலவினங்களை ஏற்று நடத்துவதற்கும் நிருவாகத்தின் திறமையை உயர்த்துவதற்கும், மது விலக்கை அமுல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கும் அளிக்கப்படும். மைய அரசின் வரவு செலவு அறிக்கையில் இந்தக் கொடைகள் திட்டச் சார்பற்ற கொடைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சட்ட முறையில்லாக் கொடைகளின் அளவை மைய, மாநில அரசுகள், கலந்து, ஆராய்ந்து, முடிவு எடுக்கின்றன. மைய அரசும் மாநில அரசுகளும் ஒரு திட்டமிட்ட வளர்ச்சிக்கான பொறுப்பை ஏற்று, அதனைச் செயல்படுத்த இந்தக் கொடைகள் வகை செய்கின்றன. மைய அரசு, மாநிலங்களுக்கிடையே சிறப்பிடம் பெறுவதும், பொருளாதார முறையில் சிறப்பிடம் பெறுவதுமான பணிகளை எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளும். இத்திட்டங்கள், மாநில அரசின் நெருங்கிய தோழமையுடன் மைய அரசினால் நேரடியாகச் செயல்படுத்தப்படும். ஆனால், திட்டங்களுக்குத் தேவைப்படும் முழு நிதி வசதியையும் மைய அரசு, மாநில அரசுக்குக் கொடையாக வழங்கும். இதனை மைய அரசின் திட்டங்களுக்கான கொடைகள் என்று கூறலாம். மாநில அரசுகளின் திட்டங்களான வேளாண்மை வளர்ச்சி, பின்தங்கிய மக்கள், பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றம், கல்வி, வீட்டு வசதி தொழிலாளர் வேலைவாய்ப்புப் போன்றவற்றின் செயல்பாட்டிற்கு மைய அரசு, அரசியலமைப்புச் சட்ட 282–ஆம் பிரிவின்படி வழங்கும் கொடைகள் மைய அரசின் உதவி பெற்ற மாநிலத் திட்டங்களுக்கான கொடைகள் எனப்படும். இக்கொடைகளைத் தன் விருப்பக் கொடைகள் (Discretionary Grants) என்று கூறுவது மிகவும் பொருந்தும். பாராளுமன்றம் இக்கொடைகளைக் கட்டுப்படுத்தாது. அவை மைய அரசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டவை. திட்டக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் மாநிலங்களுக்கு அளிக்கக்கூடிய உதவித் தொகையைத் திட்ட முறையிலமைந்த கொடைகள் எனலாம். ஒவ்வொரு மாநிலத்தின் திட்ட அளவை முடிவு செய்த பின்பு, மாநில அரசு எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியும் என்று கணித்த பிறகு, திட்டக் கொடையின் அளவு முடிவு செய்யப்படும். திட்ட அளவுக்கும் காலத்திற்கும் அப்பாற்பட்டுச் சில திட்டப் பணிகளுக்காகத் தொடர்ந்து ஏற்படும் செலவினங்களை ஏற்று நடத்த அளிக்கப்படும் கொடைகளைத் திட்டச் சார்பற்ற கொடைகள் என்று கூறலாம். இக்கொடைகள் சில குறிப்பிட்ட பணிகளுக்காக வழங்கப்படுபவை. அப்பணிகளின் மொத்தச் செலவில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மைய அரசு கொடையாக அளிக்கும். அதற்கு இணையான செலவினை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும். திட்டக்குழு முடிவு செய்யும் மாநிலச் செலவிற்கிணங்க இந்தக் கொடைகள் அளிக்கப்படும். ஈட்டுக் கொடைகள் இவை மாநில அரசுகள் மேற்கொள்ளும் இழப்புகளை ஈடு செய்வதற்காக மைய அரசினால் அளிக்கப்படுபவை. @@ART@@மைய அரசின் கொடைகளின் அளவு 1951–52 முதல் 1984–85 வரை@@ ::{| :ஆதாரம்: மைய இருப்பு வங்கியின் அறிக்கைகள். இந்த அட்டவணையிலிருந்து ஒவ்வொரு திட்டக் காலத்திலும் மைய அரசின் கொடையளவு மிகுந்துள்ளதைக் காணலாம். இருப்பினும், மைய அரசு சிக்கனமாகக் கொடைகள் வழங்குவதாகவும், இதனால் மாநிலங்கள் வளர்ச்சி குன்றுவதாகவும், மாநில அரசுகள் பல காலமாகக் குறை கூறிவருகின்றன. இக்கருத்துப் பற்றி அண்மையில் தென்மாநில முதலமைச்சர்கள் கூடி ஆராய்ந்தனர். இதன் எதிரொலியாக மைய அரசு சர்க்காரியா ஆணையத்தை (Sarkaria Commission) நிறுவியுள்ளது. இருப்பினும், கொடைகளின் சிக்கல்களையும், மத்திய–மாநில உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் நிலையான அடிப்படையில் தீர்க்க ஒரு பொதுச் செலவு ஆணையம் (Public Expenditure Commission) அமைக்க அரசு ஆராய்ந்து வருகிறது. மாநில அரசின் கொடைகளும் உதவிகளும் இந்திய அரசியலமைப்பு 40-ஆம் பிரிவு மாநில அரசு, உள்ளாட்சி நிறுவனங்களை ஏற்படுத்தி, அவை தன்னாட்சி நடத்துகிற மண்டலங்களாக இயங்குவதற்குத் தேவையான அதிகாரங்களையும் நிதி வசதியினையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் பணிக்கிறது. எனவே, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளான மாவட்டம், வட்டம், ஊராட்சி ஒன்றியம், ஊரகங்கள் ஆகியவற்றிற்குப் பல உதவிகளையும் கொடைகளையும் அளித்து வருகிறது. அவற்றையும் அரசுக் கொடைகள் என்று கூறலாம். பணித் திறமையை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் கொடைகள் வழங்குகின்றன. மாநில அரசு வழங்கும் கொடைகளைப் பல மாநிலங்களிலும் வெவ்வேறு வகையில் குறிப்பிடுகிறார்கள். மாநில அரசின் கொடைகளும் ஏறக்குறைய மையக் கொடை வகைகளை ஒத்தவையே. எடுத்துக்காட்டாக, மாநில அரசின் கொடைகளைக் கட்டுப்பாடுற்ற கொடை, கட்டுப்பாடற்ற கொடை, சிறப்புக் கொடை (Special Grant), பொதுக் கொடை, பற்றாக்குறைக் கொடை (Deficiency Grant), தூண்டத்தக்க அல்லது உதவிக் கொடை (Stimulating or Support Grant) என்றும் பிரிக்கலாம். தமிழகத்தில் உள்ளது போல, எல்லா மாநிலக் கொடைகளையும் இரு பெரும் பிரிவில் அடக்கலாம். அவை: சட்ட முறையிலமைந்த கொடைகள், சட்ட முறையிலமையாக் கொடைகள் என்பன. மாநில அரசு சில கொடைகளைக் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சட்ட முறையாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவை நிலத் தீர்வை, மண்டலச் சாலைகள் கொடை, மண்டலச் சிறப்புத் தீர்வை (Special cess), மேல் வரி (Surcharge)களை ஈடுகட்டும் கொடை, மண்டலக் கல்விக் கொடை ஆகியவையாம். இக்கொடைகள் பெரும்பாலும் ஊராட்சி எல்லையில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு என்று முடிவு செய்து வழங்கப்படுகின்றன. சட்ட முறையிலமையாக் கொடைகளில் சிறப்பானவை ஊரக வேலைகள் கொடை, மதிய உணவுத் திட்டக் கொடை, முதியோர் எழுத்தறிவுக் கல்விக் கொடை, சமூகக் கல்விக் கொடை, கல்விக்கொடை, உதவி பெறும் பள்ளிக் கொடை, விலையேற்றக் கொடை, மண்டல நீர்ப்பாசனக் கொடை, குடி மராமத்துக் கொடை, பெண்கள், குழந்தைகள் கொடை, தாய்சேய் நலக் கொடை, குறைந்த அளவுத் தேவைத் திட்டம் (Minimum Needs Programme), ஏரி, குளம் ஆகியவற்றை ஆழப்படுத்துதல், உலர்கழிப்பிடங்களைத் துப்புரவுக் கழிப்பிடங்களாக மாற்றுதல், இரவு தங்குமிடம் கட்டுதல், வருவாய் தரக்கூடிய வகைப்பாடுகள் ஆகியவற்றிற்காக உள்ளாட்சிக் கொடைகள் வழங்கப்படுகின்றன. மாநில அரசுக்குட்பட்டு இயங்கும் பல நிறுவனங்களுக்கும் மாநில அரசு உதவி அளிக்கிறது. அவற்றுள் தலையாயது கூட்டுறவுத்துறை. அதன் வளர்ச்சியைப் பேணுவதற்கும் பின்வரும் நோக்கங்களுக்கும் அரசு உதவிகள் அளிக்கப்படுகின்றன. கூட்டுறவு அலுவலகங்கள், கிடங்குகள் கட்டுவதற்கு, பணியாளர் ஊதியம், நிருவாகப் பணியாளர் உதவி ஆகியவற்றிற்கு (Managerial Subsidy), கட்டிடங்களுக்கு மரச்சாமான்களும் எந்திரங்களும் வாங்குவதற்கு, உறுப்பினர்கள் பங்கு மூலதனத்திற்கு (Share Capital Subsidy), உறுப்பினர்கள் வீட்டு வசதி, கல்வி வசதி ஆகியவற்றிற்கு, நிறுவனங்களின் மூலதனத்திற்கு, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கு, கிளைச் சங்கங்கள், மன்றங்கள் ஆகியவை அமைப்பதற்கு, துணிகள் விற்பனை மீதான தள்ளுபடிக்கு, அனைத்து இந்தியக் கூட்டுறவு விழாக்கள், கண்காட்சிகள், மாநாடுகள் நடத்துவதற்கு, அரசு உதவிகள் அளிக்கப்படுகின்றன. அரசு உதவிபெறும் மற்றைய நிறுவனங்கள்: அரசு அல்லாத தொடக்க, இடைநிலைப் பள்ளிகள், குழந்தை வளர்ப்பு நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஆசிரியர் நலனுக்கான தேசிய நிதி ஏற்பாட்டு நிறுவனம், இலக்கியப் பண்பாட்டுப் பணிக் கழகங்கள், தன்னியக்க நிறுவனங்கள் (Voluntary Organisation), மாநிலச் சமூக நல ஆராய்ச்சி வாரியம், மகிளா மண்டல்கள், சமயம் மற்றும் அறநிலையங்கள், தொழிலாளர் சேமிப்பு நிறுவனம், தேசியப் பணித்திட்டம், மக்களுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருள்களைப் பங்கீடு செய்வதற்கான இந்திய உணவுக் கழகம், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவையாகும். தனிப்பட்டவர்களுக்கு அளிக்கும் ஊக்கக் கொடைகளும் உதவிகளும் நாட்டிலுள்ள மக்களை வளர்ச்சிப் பாதையில் ஊக்குவிப்பதற்காக அரசு அளிக்கும் பல வகை உதவிகளையும் அரசுக் கொடை என்று கருதலாம். தனிப்பட்டவர்களை ஊக்கப்படுத்த அளிக்கும் கொடைகளை உற்பத்தி ஊக்க உதவிக் கொடை (Production Subsidy), நுகர்ச்சி ஊக்க உதவிக்கொடை (consumption Subsidy), காரணி உதவிக்கொடை (Factor Subsidy), சிறப்பு உதவிக் கொடை (Special Subsidy) என நான்கு வகையாகப் பிரிக்கலாம். இந்தக் கொடைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோரின் ஆக்கத் திறனை உயர்த்தி, நாட்டின் மொத்த வருவாயையும் பொருளாதார வளர்ச்சியையும் மிகுமாறு செய்கின்றன. தேவை என்று கருதப்படும் ஆக்கத் துறைகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கிறது. வறுமையில் வாடும், நலிந்த, பின் தங்கிய தாழ்த்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பினையும் வருவாயினையும் மிகச் செய்து, அவர்களது வாழ்க்கை நிலையை உயர்த்துகிறது. மற்றும், வருவாய் ஏற்றத்தாழ்வுகளைச் சமுதாயத்தில் களைந்து, சமப் பங்கீட்டினை ஏற்படுத்தி, சமூக நீதியை நிலைநாட்டுகிறது. அரசு தனிப்பட்டவர்களுக்கு வழங்கும் சில கொடைகளைப் பின்வருமாறு சுருக்கித் தரலாம்; வேளாண்மையினருக்குக் கொடை பயிர், இரசாயன உரச் செயல்முறை விளக்கத் திட்டம், பல பயிர்களின் பெருக்கத் திட்டம் ஆகியவற்றிற்காகத் தேவைப்படும் விதைகள், பூச்சிக் கொல்லிகள், தாவரப் பொருள்கள், பயிர்ப் பாதுகாப்புப் பொருள்கள், நீர்ப் பாசனக் கருவிகள் ஆகியவற்றைக் குறைந்த விலை- யில் அளித்தல், அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடி உழவர்கள் தம் நிலங்களில் ஆக்கத்திறனைப் பெருக்கவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பினை மேம்படுத்தவும் அவர்களுக்குத் தேவைப்படும் உரம், விதை, கருவிப் பொருள்கள் ஆகியவற்றை வாங்கக் கொடை அளித்தல், கலப்பு இனப் பசுக்கள், சிறந்த கோழி வகைகள் ஆகியவைகளைக் குறைந்த விலையில் வழங்குதல் ஆகியவையாம். வறட்சி, வெள்ளம் ஆகியவற்றால் வரும் துயர்நீக்கு கொடை (Drought – Flood Relief Grant), மீனவர்களுக்குத் தேவையான வலை, நூல், கட்டுமரங்கள், படகுகள், வீடு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை நல்குதல், மீனவர்களுக்கான சேமிப்பு–துயர்நீக்கு திட்டம் (Savings Cum Relief Scheme), காப்பீட்டுத் திட்டம் (Insurance Scheme), புயல் இடர்காப்புத் திட்டம் (Cyclone Relief) ஆகியவற்றிற்கான உதவிகளை அளித்தல் முதலியன மேற்குறிப்பிடப்பெற்ற கொடையில் அடங்கும். தொழில் முனைவோருக்குக் கொடைகள் மின்சாரக் கட்டணக் கொடை, சிறு தொழிலகங்களின் மூலப் பொருள்கள் மீதான விற்பனை வரிச் செலவினைத் திருப்பித் தருதல், குடிசை மற்றும் ஊரகத் தொழில் செய்வோருக்கு விற்பனை உதவி, தொழில் முனைவோருக்கு அளிக்கும் நிருவாகப் பயிற்சிச் செலவிற் பெரும்பகுதியைக் கொடையாக வழங்கல், தொழில் தொடங்க முனையும் அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு வாடகை உதவித் தொகை (Rent Subsidy), வட்டி உதவித் தொகை (Interest Subsidy), சிறப்பு முதலீட்டு உதவித் தொகை (Special Investment Subsidy) ஆகியவையாம். மாணவர்களுக்குக் கொடைகள் ஏழைக் குழந்தைகள், அட்டவணைப்படுத்தப்பட்ட இனம் மற்றும் பழங்குடி வகுப்பு மாணவர்கள், விடுதலைக்குப் பாடுபட்டோரின் குழந்தைகள் ஆகியோருக்கு எழுது பொருள்கள், பாடப் புத்தகங்கள், மதிய உணவு, சீருடைகள் ஆகியவை இலவசமாக அளித்தல், பல நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கும் மாணவ விளையாட்டு வீரர்களுக்கும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கும் கல்வி வசதி, பயிற்சி உதவித் தொகை, ஊக்குவிப்புத் தொகை வழங்கல் ஆகியவையாம். சமூக நலக் கொடைகள் (1) அட்டவணைப்படுத்தப்பட்ட இனத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க, கடும்பிணி போக்க, நீந்தார் கடன் செய்ய, தொழில் செய்முறைப் பயிற்சிகளில் பங்குகொள்ள, சட்ட உதவி (Legal Aid) பெறக் கொடைகள் வழங்கப்படுகின்றன. நலிந்த பிரிவினர் வீட்டு மனை பெற்று அவற்றில் வீடு கட்டிக்கொள்ள உதவி செய்தல், கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் ஆகியவற்றிற்கு ஊக்கத் தொகை அளித்தல், விதவைகள், காப்போரற்ற பெண்கள், முதியவர்கள் ஆகியோருக்கு நிதி உதவி வழங்கள், ஓய்வு ஊதியம் வழங்கல், உடல் ஊனமுற்றவர்கள், சிகை, சலவைத் தொழிலாளர்களுக்கு வேண்டிய கருவிகளை உதவியாகவோ குறைந்த விலையிலோ வழங்குதல். திக்கற்ற மற்றும் வாழ்விழந்த பெண்கள், அட்டவணைப்படுத்தப்பட்ட இனத்தவர் பெண்களுக்குத் திருமணம் செய்ய உதவி வழங்கல் ஆகியவை சமூகக் கொடைகளாம். மேற்கூறிய அரசுக் கொடைகளும் உதவிகளும் மக்கள் வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்கின்றன.எம்.இரா. துணை நூல்கள் Hemalata Rao, “Centre - State Financial Relation”, Allied Publishers, New Delhi, 1981. Veera Raghavachariyar, “Union State Financial Relation”, Sterling Publishers, New Delhi, 1969. Venkata Rao, Niru Hazavika, “Local Self–Government in India”, S. Chand & Company, New Delhi, 1980. Raja Chellaiah & Others, “Trends and Issues in Indian Federal Finance”, Allied Publishers, New Delhi, 1981.