பசுங் குடில் விளைவு
pacuṅ kuṭil viḷaivu
வளி மண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு வளிமம் புவியைச் சுற்றி, ஒரு கண்ணாடிப் படலம் போலச் செயல் படுகிறது.
வளி மண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு வளிமம் புவியைச் சுற்றி, ஒரு கண்ணாடிப் படலம் போலச் செயல் படுகிறது. இவ்வளிமப் படலம், சூரிய ஒளி புவியை வந்தடைய அனுமதிக்கிறது. ஆனால், புவியிலிருந்து வெப்பக் கதிர் வீச்சு வெளியேறாதபடித் தடுத்து விடுகிறது. ஊட்டி போன்ற மிகக் குளிர்ந்த பகுதிகளில் தாவரங்களை, திறந்த வெளியில் அமைந்த கண்ணாடி அறைகளில் வளர்ப்பர். இத்தகைய கண்ணாடி அறைகளில் வளரும் தாவரங்களைக் கடும் குளிர் தாக்காது. கண்ணாடிக் கூண்டிற்கு உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறாது. இது தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். இத்தகைய கண்ணாடி அறைக்குப் பசுங் குடில் (Green house) என்று பெயர். வளி மண்டலத்திலுள்ள கார்பன்டை ஆக்சைடு படலம் புவியின் மீது பசுங் குடில் போலச் செயல்படுகிறது. எனவே இந்,நிகழ்வு பசுங் குடில் விளைவு (Green house effect) எனப் படுகிறது.
வளி மண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவை இரு மடங்காக்கினால், சூரிய வெப்பத்தை இவ்வளிமம் பெருமளவு உட்கவர்ந்து, உலகமே வெப்ப மண்டலமாகி விடும். இதனால், துருவப் பகுதியிலிருக்கும் பனிப் பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து விடும். ஆனால், வளி மண்டலத்தில், கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைந்தால், பெரும் பகுதி வெப்ப ஆற்றல் வெளியேற்றப் பட்டுப் புவியின் வெப்ப நிலை மிகவும் குறைந்து, உறைபனிக் காலம் (ice age) உண்டாகி விடும். எனவே, வளி மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு வளிமத்தின் அளவு ஒரே சீராக இருப்பது இன்றியமையாததாகும்.
புவியின் உயிரினங்கள் செழிக்கவும், மேகங்கள் தோன்றி, மழை பொழியவும், பசுங் குடில் விளைவு உதவி வந்துள்ளது. உலகில், தொழில் புரட்சி தோன்றிய பின், வளி மண்டலக் கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரித்துப் புவியிலிருந்து வெப்பம் வெளியேறுவதை மேலும், பெருமளவில் தடுத்துப் புவியின் வெப்ப நிலை உயர்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. 1896இல் ஆர்கீனியஸ் என்பார், கார்பன்டை ஆக்சைடின் அளவு இரு மடங்கானால், புவியின் வெப்ப நிலை 50°C உயருமெனவும் கணக்கிட்டுள்ளார். பின்னர், 1975இல் வி. இராமநாதன் என்பார், பசும் குடில் விளைவில் குளோரோ புளுரோ கார்பனும் பங்கு பெறுவதாகக் கண்டறிந்தார்.
உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளும், போக்குவரத்து ஊர்திகளும் கார்பன் டை ஆக்சைடு வளிமங்களை வெளியிடுகின்றன. காற்றில் கலக்கக் கூடிய கார்பன்டை ஆக்சைடின் அளவை, ஓர் அளவில் வைத்துக் கொள்ள இயற்கை பொதுவான திறனைப் பெற்றுள்ளது. காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடின் ஒரு குறிப்பிட்ட பகுதி, கடல் நீரில் கரைந்து விடுகிறது. வெப்பம் அதிகரிக்கும் போது, நீரில் கரைந்துள்ள கார்பன் டை ஆக்சைடு நீரிலிருந்து வெளியேறி, வளி மண்டலத்தில் கலக்கிறது. தாவரங்கள் குறிப்பிட்ட அளவு கார்பன் டை ஆக்சைடு வளிமத்தை உட்கவர்ந்து, ஆக்சிஜனை வெளி விடுகின்றன. தற்போது, இயற்கையாலும் அகற்ற முடியாத அளவிற்குக் கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலக்கிறது. ஆண்டு தோறும், ஏறத் தாழ 600 டன் கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலப்பதாக ஐ.நா வின் ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது.
கார்பன் டை ஆக்சைடு வளிமம் மனிதர் சுவாசிக்கும் காற்றை மிகக் குறைந்த அளவே மாசடையச் செய்கிறது. இவ்வளிமம் பசுங் குடில் விளைவைப் புவியில் ஏற்படுத்திப் புவியின் வெப்ப நிலை உயரப் பெரிதும் காரணமாகிறது. கார்பன் டை ஆக்சைடு மட்டுமின்றி, குளிர்வூட்டும் பெட்டியில் பயன் படுத்தப் படும் குளோரோ ஃபுளூரோ கார்பன், சதுப்பு நிலங்களில் தோன்றும் மீத்தேன் வளிமம், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வளிமங்களும், பசுங் குடில் விளைவில் பங்கு கொண்டுள்ளன. எனவே, இவ்வளிமங்கள் பசுங் குடில் வளிமங்கள் எனக் குறிப்பிடப் படுகின்றன. புவியின் வெப்ப நிலை உயர்வதில், கார்பன் டை ஆக்சைடு 55% பங்கு கொண்டிருப்பதாகத் தற்போதைய ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. —பெ.துரைசாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 428)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sk7qt9gg/
தமிழ்“பசுங் குடில் விளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sk7qt9gg/APA
Oliyon Research. (2026). பசுங் குடில் விளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sk7qt9gg/MLA
"பசுங் குடில் விளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sk7qt9gg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment