இராமானுசர்
irāmāṉucar
சென்னைக்குத் தென்மேற்கே முப்பது கல் தொலைவிலுள்ள சீபெரும்பூதூரில் பூமிப் பிராட்டியாருக்கும் ஆசூரிகேசவப் பெருமால் என்பாருக்கும் கி.பி.
சென்னைக்குத் தென்மேற்கே முப்பது கல் தொலைவிலுள்ள சீபெரும்பூதூரில் பூமிப் பிராட்டியாருக்கும் ஆசூரிகேசவப் பெருமால் என்பாருக்கும் கி.பி. 1017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13–ஆம் நாள் மகவாகத் தோன்றினார். இவர் மனைவியின் பெயர் தஞ்சமாம்பாள். பூமி, கமலா என்போர் இவர் தம் சகோதரிகள்.
இவர் தம் தந்தை கேசவ சோமயாசியாரிடம் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர், தம் தந்தையின் தோழர் திருக்கச்சி நம்பியிடம் பாடம் கேட்டார். அதன்பின் இவர் யாதவப் பிரகாசர் என்ற வேதாந்தியிடம் பயின்றார். ஆசிரியர் கொண்டொழுகிய அத்துவிதக் கொள்கை மாணவராகிய இராமாநுசரின் பக்திக் கொள்கைக்கு ஏலாது போகவே பிணக்கும் பகையும் ஏற்பட்டுப் பிரிந்தனர். பின்னர், இவர் பெரிய நம்பியிடம் பாடம் பயின்றார். திருவரங்கத்திலிருந்து பக்தி இயக்கத்தைப் பரப்பி வந்த ஆளவந்தாரைக் காணச் சென்று, அவர் காலமாகிய நிலையில், அவர் மூன்று விரல்கள் மடங்கியிருப்பதைக் கண்டு, அவர் பரப்ப நினைத்தவை மூன்று கொள்கைகள் என்று துணிந்து அவற்றைப் பரப்பும் செயலில் முனைந்தார்.
அக்கொள்கைகளாவன: வியாசமுனிவர் இயற்றிய பிரம்ம சூத்திரங்களுக்குப் பிரபந்தக் கொள்கைகளைப் பின்பற்றி வியாக்கியானம் செய்லது. 2) வியாசருக்கும் அவர் தந்தை பராசரருக்கும் நன்றிக் கடனாற்றுவது. 3) நம்மாழ்வாரைச் சிறப்பாக ஆழ்வார் குழாத்துப் பயிலச் செய்வது.
இவற்றைத் தெரித்து கொண்டு, திருக்கோட்டியூர் நம்பியிடம் வைணவ மந்திரமாகிய மறை பொருளை அறிந்துகொள்ளச் சென்றார். அவர் இவரைப் பதினெட்டுத் தடவை சோதனை செய்து உயிர் போமளவில் ஏற்றுக் கொண்டார். திருக்கோட்டியூர் நம்பி, ‘நமோநாராயணாய’ என்னும் மந்திரத்தைச் செவிசாற்றியருளினார். அதனைக் கேட்ட இராமானுசர் அம்மந்திரப் பொருள் ஒரு சிலருக்கே மறைபொருளாகி, அறிய அரிதாக இருந்தவை நோக்கித் தாம் அம்மறை பொருளைப் பலரறியக் கூறினால் நிரயம் வரும் என்ற கூற்றிற்கு மாறாக, தாம் நிரயம் புகுந்தாலும் எண்ணிறந்தோர் உய்யவிருக்கும் வாய்ப்பை உன்னிக் கோபுரத்தில் எறி எல்லோரும் அறியக் கூறி முழக்கமிட்டார்.
இவருக்கும் இவர் மனைவிக்கும் ஏற்பட்ட சாதியொழுக்கம் பற்றிய கருத்து மாறுபாட்டால் துறவியானார்.
இவருக்குச் சீடர் பலர் வாய்த்தனர்; அவர்கள் முதலியாண்டான், கூரத்தாழ்வான், யாதவப்பிரகாசர் (குருவே சீடரானார்), கோவிந்தன், அருளாளப் பெருமாள், நல்லான் சக்கரவர்த்தி, அகளங்க நாட்டாழ்வான், எச்சான், தொண்டையனூர் நம்பி, மருதூர் நம்பி, வில்லியாழ்வார், எம்பார், வடுக நம்பி, பொன்னாச்சி முதலியவராவர்.
இவர் திருக்கச்சி நம்பியிடம் கற்றனவாய ஆறு கொள்கைகளைக் கண்ணாகக் கொண்டு தாம் உணர்ந்த வைணவ சமயத்தைப் பரப்பினார். அவை, (1) திருமாலே பரம்பொருள். (2) சீவாத்துமாவிற்கும் பரமாத்துமாவிற்கும் உள்ள வேற்றுமையை உணர்வது. (3) சரணாகதியும் பரபத்தியுமே சிறந்த முத்தி என்றறிவது. (4) இறக்கும்போது மனத்தைக் கடவுளிடத்தில் ஒப்படைத்தலும் வேண்டாதது என்று கொள்வது. (5) உடல் அழியுங்கால் பாகவதர் உறுதியாக முத்தி பெறுவர் என்று நம்புவது. (6) பெரிய நம்பியைக் குருவாகக் கொள்வது ஆகியனவாம்.
இவர் திருவரங்கத்திலிருந்து செய்த பணிகள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கன. திருவரங்கக் கோயிலின் சிதைந்த மதில்களைச் செப்பனிட்டமை, வசந்தமண்டபங்கள், பூங்காக்கள் செப்பனிட்டமை, கோயில் வழிபாட்டு முறைகளைச் செம்மைப்படுத்தியமை, மடப்பள்ளியில் காலம் தவறாது நிவேதன உணவுகளை அமைக்கவும் ஆராதனைக்கு ஆக்கவும் செய்தமை போன்றனவாகும். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களைக் கோயில் வழிபாட்டுடன் இணைத்துப் பரப்பினார். இவர் இயற்றியனவாக உள்ள நூல்களுள் தலையாயது சீபாடியம். அது போதாயன விருத்தியை அடிப்படையாகக் கொண்டது.
இராமானுசரின் கொள்கை விசிட்டாத்துவிதமாகும். அது பிரமம் வேறு, ஆன்மா வேறு; ஆன்மா பிரமத்திற்கு உடலாக இருந்து, பிரமத்தின் சந்நிதான விசேடத்தால் மெய்யறிவு கைகூடப் பெற்று உலகினை முற்றத் துறந்து பிரமத்தின் மேல் பற்றுடைய தாய் வைகுண்டத்தை அடைந்து, பிரம்மசாரூபம் பெற்று இன்புற்றிருத்தலே முத்தி என்று கூறுவது.
உயிர்ப் பொருளையும் உயிரல்லாத பொருளையும் உடம்பாக உடைய பொருளின் அத்துவிதம் என்பதே விசிட்டாத்துவிதம் என்பதன் பொருளாகும். சித்து என்ற உயிர்ப் பொருளையும் அசித்து என்ற உயிரில்லாத பொருளையும் உடம்பாக உடைய பொருளல்லது பரம்பொருள் இரண்டில்லை; ஒன்றே யாகும் என்பதுவே விசிட்டாத்துவிதம் என்பதில் வரும் அத்துவிதத்திற்குரிய பொருளாகும். அதாவது, எல்லாம் ஒருங்கிணைந்த இரண்டற்றது என்பதாகும். அருளே இறைவன் வடிவம் என்பதும், அன்பே அடியவர்க்கு உரியது என்பதும் விசிட்டாத்துவிதத்தின் உட்பொருளாகும்.
இவரைப்பற்றி ‘இராமானுசர் நூற்றந்தாதி’ என்னும் நூலைத் திருவரங்கத்தமுதனார் என்பார் இயற்றியுள்ளார்.
இவர் இயற்றிய வேறு நூல்கள் வேதாந்ததீபம், வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம், கீதாபாடியம், சரணாகதி சத்தியம், சீரங்க சத்தியம், சீலை குந்த சத்தியம் என்பனவாகும்.
இவர் விக்கிரமசோழன் காலத்து வாழ்ந்தவர். இவர் நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்து வைணவ நெறியை நிலைபெறுத்தியவராவர். இவர் கி.பி. 1137–இல் மறைந்தார். காண்க: விசிட்டாத்துவிதம். கு.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 156)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sc74syut/
தமிழ்“இராமானுசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sc74syut/APA
Oliyon Research. (2026). இராமானுசர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sc74syut/MLA
"இராமானுசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sc74syut/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment