மகாபாரதத்தில் சிறப்பித்துக் கூறப்படும் பழைமையான நகரம், இப்பொழுது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் மவானா (Mavana Tehsil) வட்டத்தில் அமைந்துள்ளது. இன்று சிற்றூராகக் காட்சியளிக்கும் அத்தினாபுரம் (Hastinapura), குரு மரபு மன்னர்களின் தலைநகரமாகவும் பாண்டவர்களின் தலைநகரமாகவும் விளங்கியிருந்ததாக மகாபாரதம் கூறுகிறது. இந்நகரை ‘அத்தினா’ அத்தினாபுரம்-அகழாய்வு செய்யப்பெற்ற இடம் என்னும் மன்னன் நிறுவியதாகவும், அதனால் ‘அத்தினாபுரி’ என்னும் பெயரை இந்நகரம் பெற்றது என்றும் சொல்வர். இந்நகரத்தின் சிறப்பினையும் அழகி- னையும் மகாபாரதம் செப்புகின்றது. புத்தர் பிரான் இந்நகருக்கு வந்து தங்கியிருந்ததாக, புத்த சமய நூல்கள் கூறுகின்றன. இந்நகரம் சமண சமயத்தோடும் தொடர்புடையதாக விளங்கியது. ‘திவ்விய வதனா’ என்னும் புத்தசமய நூலில் இந்நகரின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. சாந்தி நாதர், கீர்த்தி நாதர், ஆதிநாதர் என்னும் மூன்று சமணத் தீர்த்தங்கரர்கள் இந்நகரத்தில் பிறத்தனர் என்னும் பெருமையினை அத்தினாபுரம் பெற்றுள்ளது. பாணினி என்பவரும், தாலமி என்னும் கிரேக்க நாட்டுப் புவியியலாரும் தங்கள் நூல்களில் இந்நகரினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 16–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அபுல் பாசல் என்பவர், இந்நகரை அசுநகர் (Hast Nagar) எனக் குறிப்பிட்டுள்ளார். பெரும் தலைநகரமாக விளங்கி வந்த அத்தினாபுரம் கங்கை ஆற்றின் பெருவெள்ளத்தால் அழிந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. வரலாற்றுத் தொடர்பு கொண்ட இந்நகரின் பெருமைகளை மேலும் அறியும் பொருட்டு இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் 1950-52-ஆம் ஆண்டுகளில் அகழாய்வினை மேற்கொண்டனர். அத்தினா புரத்திலுள்ள மண்மேடுகளில் அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இவ்வகழாய்வின் மூலம் அத்தினாபுரம் மிகத் தொன்மை வாய்ந்த நகரம் என்பதும், ஐந்து வகையான பண்பாட்டுக்கால மக்கள் இந்நகரில் வாழ்ந்திருந்தனர் என்பதும், கங்கை ஆற்றின் பெரு வெள்ளத்தாலும், தீப்பற்றி எரிந்ததாலும் இந்நகரம் பலமுறை அழிந்து மீண்டும் பன்முறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் புலனாகின்றன. வெளிறிய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் (Ochre Coloured Pottery), வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் (Painted Gray Ware), சிவப்பு நிற மட்பாண்டங்கள் (Red Ware) போன்றவை இங்குக் கிடைத்த மட்பாண்டங்களில் குறிப்பிடத்தக்கனவாம், மற்றும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களும், மதுரா அரசர்களின் நாணயங்களும், யவுதேயர் கால நாணயங்களும், அடிமை மரபினைச் சார்ந்த கியாசுதின் பால்பனின் நாணயங்களும், சுடுமண் பொம்மைகளும், மணற்கல்லினால் செய்யப்பட்ட பார்வதி உருவச்சிலையும், சமணத் தீர்த்தங்கரரான இரிசப தேவரின் உருவச்சிலையும் மணிகளும் அகழாய்வின் மூலம் கிடைக்கப்பெற்றன.