இதன் மூலம், பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு பொருளாக்கம் செய்வோர் (Producers), நுகர்வோர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்கும் வண்ணம் சமமான, ஒருங்கிணைந்த பங்கீட்டுக் கொள்கை ஒன்றை இந்திய அரசு உருவாக்க முனைந்துள்ளது. இடைத்தரகர்களின் சூழ்ச்சிகள், முற்றுரிமையாளர்களின் முதலாளித்துவம், வளப் பற்றாக்குறைகள் ஆகியவற்றால் பொருளாக்கம் குறைந்து பொருள்களின் விலையில் ஏற்றத் தாழ்வுகள் பெருகியமையால், 1959–ஆம் ஆண்டு அரசு இன்றியமையாப் பண்டங்களைக் கொள்முதல் செய்து, பங்கீடு செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுத்தது. இம்முடிவினால் அரசு தன் திட்டமிட்ட சமத்துவக் கோட்பாட்டை (Planned Socialisation) செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது. தொழிற் பொருள்களின் கொள்முதல், ஏற்றுமதி, இறக்குமதி, பங்கீடு இன்ன பிற அலுவல்களை அரசு வாணிகக் கழகம் ஏற்று நடத்துகிறது. காண்க: த.க. அரசு வாணிகக் கழகம். இன்றியமையாத வேளாண்மைப் பொருள்களின் வாணிகத்தில் அரசு நேரடிக் கட்டுப்பாடு செலுத்து- வதனால் பல்வேறு பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்ற இயலும் என அரசுக்கு உணவுத் தானிய ஆய்வுக் குழு (Food grains Enquiry Committee) பரிந்துரைத்தது. அதன்படி அரசு முதல் ஆய்வாக அரிசி, கோதுமை இவற்றின் வாணிகப் பொறுப்பை எடுத்துச் செயலாற்றத் தொடங்கியது. மைய அரசு வேளாண்மைப் பொருள்களின் வாணிகத்தை மொத்த விற்பனையாளர்கள் சில்லரை வணிகர்களுக்கு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விற்க அனுமதித்தது. இக்கட்டுப்படுத்தப்பட்ட விலை (Controlled Price) ஆக்கச் செலவைக் கணக்கிட்டு உறுதி செய்யப்பட்டது. விற்பனை விலை, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ், அளிப்பு (Supply) பாதிக்கப்படாத முறையில் சில்லரை வணிகர்களின் முடிவுக்கு விடப்பட்டது. நடைமுறையில், மொத்த வணிகர்கள், அரசிடம் உரிமம் பெற்று (Licenced Traders) அரசின் சார்பில் குடியானவரிடமிருந்து தானியங்களைக் கொள்முதல் செய்ய அனுமதி பெற்றனர். அரசு குறிப்பிடும் குறைந்த விலையை அவர்கள் குடியானவருக்கு அளிக்கக் கடமைப்பட்டனர். அரசு மொத்த வணிகர்களிடமிருந்து மொத்தமாகத் தானியங்களை அல்லது ஒரு பங்கு தானியத்தைக் கொள்முதல் செய்யும் உரிமையைக் கொண்டிருக்கிறது. மீதியைச் சில்லரை வணிகர்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைக்கு மிகாமல் மொத்த வணிகர்கள் விற்கலாம். நாளடைவில் கூட்டுறவுச் சேவை (Service Co–Operatives) நிறுவனங்களும் ஊரகங்களில் தானியங்களை அரசின் சார்பில் கொள்முதல் செய்தன. கூட்டுறவு நிறுவனங்களின் முன்னேற்றம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டதால் அவற்றின் தகவுடைமைக்குத் தக்கவாறு அவை செயலாற்றின. மைய அரசு, கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் கொள்முதல், சேமிப்பு, பாதுகாப்பு, பங்கீடு ஆகியவற்றில் திறமையாகச் செயற்பட இயலும் எனக் கருதி, இந்நிறுவனங்கள் இப்பணியில் சிறப்புப் பங்கு வகிக்க அதிக ஊக்கம் ஊட்டியது. இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) மைய உணவுக் கிடங்குக்கழகம் (Central Ware–housing Corporation) போன்ற நிறுவனங்களையும் உருவாக்கி, ஒவ்வோர் அறுவடைக் காலத்திலும் கொள்முதல் விலைகளை அறிவித்து இடையூறுகளின்றித் தானியங்களைக் கொள்முதல் செய்து பாதுகாக்கப் பல திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இந்திய அரசு 1965–இல் வேளாண்மைப் பொருள்களின் விலை வரையறைக் குழு (Agricultural Price Commission) ஒன்றை அமைத்தது. இக்குழு அரசுக்கு விலைக் கொள்கையைப் பற்றி அவ்வப்போது ஆலோசனை கூறி வருகிறது. உற்பத்தி மிகுதியினால் ஏற்படும் விலைச் சரிவைக் கட்டுப்படுத்திக் குடியானவர்களின் வருமானம் குறையாமல் இருக்க இக்குழு கொள்முதல் விலையை அவ்வப்போது மாற்றி உறுதி செய்கிறது. இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு நெல், கோதுமை, கம்பு, மக்காச் சோளம், உளுந்து, பருத்தி, சணல், கரும்பு போன்ற வேளாண்மைப் பொருள்களுக்கு விலைகளை அரசு உறுதி செய்கிறது. விலைச் சரிவு ஏற்படும் காலத்திலும் இடங்களிலும் இந்திய உணவுக் கழகம், நேரடியாகவோ மொத்த விற்பனையாளர்கள் மூலமாகவோ கட்டுப்பட்ட விலைக்குத் தானியங்களைக் கொள்முதல் செய்து எதிர்காலச் சேமிப்பு (Buffer Stock) இருப்புகளைப் பெருக்குகிறது. விலை உயரும் காலங்களில் தாமாகவோ, கூட்டுறவு நிறுவனங்கள், நுகர்பொருள் வாணிகக் கழகங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், நியாய விலைக் கடைகள் (Ration Shops) ஆகியவற்றின் மூலமாகவோ குறைந்த விலையில் தானியங்களை விற்க முன்வருகிறது. இப்போது ஏறத்தாழ 18 மிலியன் கண்டி (Ton) உணவுத் தானியங்களை இக்கழகம் கொள்முதல் செய்து எதிர்காலச் சேமிப்பு இருப்பாகப் பாதுகாத்து வருகிறது. இதற்குத் தேவையான பணத்தொகை 2000 கோடி உரூபாயாகும். இப்பணத் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய மாநிலங்களிலுள்ள கூட்டுறவுச் சேமிப்புக் கிடங்குகள், மையச் சேமிப்புக் கிடங்குகள். மொத்த வணிகர்களின் வளம் (Resources) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறது. உணவு உற்பத்திப் பற்றாக்குறையாக உள்ள மாநிலங்களின் தேவையை ஈடுசெய்யும் பொறுப்பை மைய அரசு ஏற்றுள்ளதால், மிகுதியாக உற்பத்தியாகும் மாநிலங்களிலிருந்து தானியக் கொள்முதல் செய்யும் பொறுப்பை இக்கழகத்திடம் ஒப்படைத்துள்ளது. மைய அரசு அளிக்கும் கொள்முதல் விலைக்கும் கட்டுப்பட்ட விற்பனை விலைக்கும் ஆக்கச் செலவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஏனெனில், மைய அரசு வேளாண்மை உற்பத்தி பாதிக்காத வண்ணம் குடியானவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும், பொது விலைப் பட்டியலின் (Price Index) அடிப்படையிலும் கொள்முதல் விலையை உறுதி செய்கிறது. பற்றாக்குறை மாநிலங்கள் (Deficit States), உதவித்தொகையுடன் மைய அரசிற்கு ஏற்படும் சேமிப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து, பிற கொள்முதல் செலவுகளைக் கணக்கிடாமல் குறைந்த விலைக்குப் பெறுகின்றன. மேலும், மாநில அரசுகள் தங்கள் மாநில நிலைக்குத் தக்கவாறு விற்பனை விலையைக் கூடுதலாகவோ குறைவாகவோ வரையறை செய்து, கூட்டுறவு நிறுவனங்கள், நுகர்பொருள் வாணிகக் கழகம் (Civil Supplies Corporation), ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், நியாய விலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் பங்கீடு செய்கின்றன. கொள்முதல் இடையூறின்றிச் செயற்படும் பொருட்டு அறுவடைக் காலங்களில் தானியங்கள் மாநிலங்களிலிருந்து கடத்தப்படாமல் தடுக்க அவை தனித்தனி மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலத்திலிருந்து பிறிதொரு மண்டலத்துக்கு வெளியே, உரிமங்கள் இல்லாமல் தானியங்கள் வெளிச் செல்வது தடைசெய்யப்படுகிறது. மாநிலங்களுக்குள்ளும் வளமான வேளாண்மை பெற்ற மாவட்டங்கள் குறிக்கப்பட்டு அங்கிருந்தும் தானியங்கள் வெளிச் செல்வது தடைசெய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் தஞ்சாவூர், வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்கள் அரிசிக் கொள்முதலுக்கென மிகுந்த உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் மொத்த விற்பனையாளர்சுனிடமிருந்தே பெரும்பாலும் கொள்முதல் நடைபெறுகிறது. அரிசி ஆலைகளிடமிருந்தும் ஒரு பங்கு கொள்முதலாகப் பெறப்படுகிறது. இவற்றோடு கூட்டுறவுச் சேவை நிறுவனங்களின் பணியும் குறிப்பிடத்தக்கது. அரசின் கொள்முதல் கொள்கையினால் வேளாண்மைப் பொருள்களின் விலைகளில் ஏற்படும் அளவுக்கு மீறிய ஏற்ற இறக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. குடியானவர்களின் வருமானம் ஒரு நிலையில் இருக்குமாறு செய்து, உற்பத்திப் பெருக்கத்தில் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது; நுகர்வோரின் நலனும் பாதுகாக்கப்படுகிறது.அ.இரா.