உடுக்கை
uṭukkai
இடை சுருங்குபறை என்றும் துடி என்றும் கூறப்படும் ஒரு தோற்கருவி.
இடை சுருங்குபறை என்றும் துடி என்றும் கூறப்படும் ஒரு தோற்கருவி. இது ஒரு பழமையான இசைக் கருவி. இது நடுவே சிறுத்தும் ஓரங்கள் பெருத்தும் இருக்கும். இதன் உடல் மண்ணினாலோ மரத்தினாலோ பித்தளையினாலோ செய்யப்பட்டிருக்கும். தோல்களின் சுற்றுப் பக்கத்தில் சிறு துவாரங்கள் இருக்கும். இவற்றின் மூலமாக ஒரு நீண்ட கயிறு இரு முகங்களினின்றும் மாறி மாறி இறுகப் பின்னப்பட்டிருக்கும். இந்தக் கயிற்றைச் சுற்றி நடுவில் ஒரு நாடா இருக்கும். வாசிப்பவர் இந்த நாடாவை அழுத்துவதினால் முகங்களின் சுருதி அதிகமாகி, சாருகமகம் போன்ற ஒரு நாதம் எழும்பும். இது கேட்பதற்கு மிக்க இனிமையாக இருக்கும். உடுக்கையை இடக்கையால் நடுவில் பிடித்துக் கொண்டு, வலக்கையால் வாசிப்பார்கள். மாரியம்மன் கோயில்களிலும் கிராம தேவதைகளின் கோயில்களிலும் இதைக் கேட்கலாம்.
உடுக்கை
இப்பறை உடுக்கு என்றும் வழங்கப்படுகிறது. இது ஏறக்குறைய ஓர் அடி நீளமுள்ளது. தெருப் பாடகர்கள் தம் பாடலுக்குப் பின்னணியாக இக்கருவியைப் பயன்படுத்துகின்றனர். குறிசொல்லுவோர் பேய், பிசாசுகளை விரட்டுவதற்காகத் தம் தெய்வங்களை வேண்டி உடுக்கையடிக்கிறார்கள்.
உடுக்கையின் இருபுறமும் கன்றின் தோலால் போர்த்தப்பட்டிருக்கும். உடுக்கை என்ற இக்கருவி மென்மைக் கருவியாகும். இது இடைக் கருவி வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. வயிரவன், முருகன், துர்க்கை ஆகிய கடவுளர் மூவர்க்கும் இசைக்கப்படும் தோற்கருவிகளுள் இதுவும் ஒன்றாகும்.
உடுக்கை என்ற தோற்கருவி சிவனின் சின்னம் என்ற குறிப்புடன் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
‘நிலையாய் உடுக்கை வாசிப்பான்’ என்ற தொடர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. பேருடுக்கையைத் தவண்டையென்பர். இதன் வாய்கள் ஆட்டுச்சவ்வால் போர்க்கப்பட்டிருக்கும். இடப்பக்க வாயின் தோலின் மீது குதிரை மயிரினால் திரிக்கப்பட்ட மெல்லிய கயிறு கட்டப்பட்டிருக்கும். அதை வீணை என்பர். வலப்பக்க வாய் ஒன்றின் மீதே அடிப்பர். அவ்வப்போது இடையின் மீதுள்ள நாடாவை அமுக்குவர். அப்போது ஓர் உறைப்பான ஒலி உண்டாகும்.
‘உடுக்கை வாசிக்கும் பாவை’ ஒன்றைப்பற்றி ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. அதாவது அப்பாவை செம்பால் செய்யப்பட்டு, பொன் முலாம் பூசப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
அதே போல் மத்தளம் கொட்டுகின்ற பாவை ஒன்றும், பாடுகின்ற பாவை ஒன்றும் ஆடுகின்ற பாவையொன்றும் இருந்ததாகவும் அக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
இக்கல்வெட்டு முதலாம் இராசராசன் காலத்தது; திருவையாறு பஞ்சநதீசுவரர் கோயிலில் உள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 818)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ruxey68a/
தமிழ்“உடுக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ruxey68a/APA
Oliyon Research. (2026). உடுக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ruxey68a/MLA
"உடுக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ruxey68a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment