ஒட்டுச் சிப்பி (limpet) எனப் படும் கடற்கரையோரப் பாதைகளில் ஓட்டி வாழும் இந்த நத்தை வகை உயிரி, மெல்லுடலிகள் (Mollusca) தொகுதியில், வயிற்றுக் காலிகள் (gastropoda) வகுப்பில் அடங்கும். துணை வகுப்பான ஸ்ட்ரெட்டோ நியூரா அல்லது முன் செவுளிகள் (prosobranchiata) என்னும் கூட்டத்திலுள்ள வரிசை ஆஸ்பிடோபிராங்கியேட்டா அல்லது டயட்டோ கார்டியாவினைச் சேர்ந்த டோக்கோ கிளாஸா (docoglossa) என்னும் துணை வரிசையில் இது வருகிறது. உணவாக விளங்கும் இது, சிறிய முட்டை வடிவமான மெல்லியக்கமுடைய (sluggish) உயிராகும். பாறைகளைக் கொண்ட கடற்கரைகளின் ஓரங்களில், அலைப் பரப்பினிடையே வாழ்வதற்கேற்ற முழுத் தகஅமைப்புடைய இவ்விலங்கு, ஒரு முட்டை வடிவமான சிறிய எரிமலைக் கூம்பு போல் (volcanic cone) மேல் நோக்கி நீண்டுள்ள ஓட்டினைப் பெற்றுள்ளது. ஓட்டின் மூடி (operculum) இதில் இல்லை. இளம் நிலையில் இவ்வோடு தெளிவான சுருள்களைக் கொண்டுள்ளது. ஓட்டின் அடியில் நிறமிகளைக் கொண்ட போர்வை (mantle) போன்ற தளர்ச்சியான உடலுறை உள்ளது. வயிற்றுப் பக்கத்தின் நடுவில் ஒரு பெரிய பாதம் உண்டு. அதிலுள்ள அகன்ற ஊர்ந்து செல்லும் பரப்பினால், இவ்விலங்கு கரையோரப் பாறைகளில் ஒட்டிக் கொள்கிறது. பாதத்தைச் சுற்றிலும் ஒரு பெரிய லாட வடிவமான போர்வைத் தசை (pallial muscle) உள்ளது. இது இவ்விலங்கிற்குப் பாறைகளில் ஒட்டிக் கொள்ளப் பயன் படுகிறது. தலையில் இரு பருமனான உணர் நீட்சிகளும், நிறமிகளைக் கொண்ட குழி போன்ற கண்களும் உள்ளன. உண்மையான போர்வைக் குழி (mantle cavity) முன் புறம் மட்டுமே காணப் படுகிறது. செவுள்கள் தேய்ந்து எஞ்சிய உறுப்புகளாக (vestiges) தலையின் முன் பகுதியில் உள்ளன. ஆனால், பாதத்திற்கும், போர்வைக்கும் இடையில் இரண்டாம் போர்வைக் குழி (secondary cavity) ஒன்று பரவியுள்ளது. இக்குழியில் உள்ள வரிசையான சிறு செவுள்கள், இரண்டாம் நிலைச் செவுள்கள் (secondary Branchiae) அல்லது போர்வைச் செவுள்கள் (pallialgills) எனப் படுகிறது. இவையே சுவாச உறுப்புகளாகும். உணவூட்டம். பட்டல்லா சிறு கடற் பூண்டுகளையும், (sea seeds) கடற் தாவரங்களையும் உண்ணும். பாறைகளில் படிந்துள்ள கடற்பாசிகளைத் தன் நீளமான பல் நாக்கினால் சுரண்டி உண்ணும். பல் நாக்கில் சில கொக்கி போன்ற ஓரப் பற்களைக் (marginal teeth) கொண்ட வரிசைகள் உள்ளன. உணவு தேடுவதற்காக, நெடுந் தொலைவுக்கு இவை சென்றாலும், முடிவில் தாம் வாழுமிடத்திற்கு மீண்டும் வரும் காரணம், இவற்றிலுள்ள குறிப்பிடத் தக்க இருப்பிட உள்ளுணர்வு (homing instinct) என்றும், தாம் வாழும் பாறையில் உள்ள பள்ளத்தைக் கூட இவை மறப்பதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர். இதயம். திருகு சுழற்சியின் (torsion) காரணமாக ஏற்பட்ட வலம்புரிச் சுழற்சி (dextral coiling) அல்லது கடிகார முள் போன்ற சுழற்சியினால் (clockwise coiling) பொதுவாக, உடலின் இடப் புறத்து உறுப்புகள் தேய்வுற்று விடும். நிறமற்ற குருதி, குருதிக் குழலில் காணப் படும். சிறு நீரகங்கள். இடச் சிறுநீரகத்தை விட வலச் சிறுநீரகம் பெரியதாக உள்ளது. இது ஆணின் விந்துச் செல்களையும் தாங்கியுள்ளது. நரம்பு மண்டலம். பட்டல்லாவின் நரம்பு மண்டலம் எளிய அமைப்புடையது. இதில் மூளை நரம்புச் செல் திரள்கள் (cerebral ganglia) பாத நரம்புச் செல் திரள்கள் (Padal ganglia), உடற் சுவர் நரம்புச் செல் திரள்கள் (visceral ganglia) ஆகியவை உள்ளன. உணர்வுறுப்பு. தலையில் உள்ள இரட்டை உணர் நீட்சிகள், தொடு உணர்வுறுப்புகளாக உள்ளன. இவை நுகர்ச்சிச் செல்களையும் (olfactory cell) தாங்கியுள்ளன. கண்கள் இரண்டும், கிண்ணங்கள் போன்று நிறமிகளைக் கொண்ட உட்குழிவையும், அவற்றுடன் இணைந்த நரம்பிழைகளையும் உடையவை. பாத நரம்புச் செல் திரள்களின் அருகில், இரட்டைச் சம நிலை உறுப்புகள் (Statocysts) உள்ளன. செவுள்களின் அடிப் பகுதியும் மிகச் சிறியதாகக் காணப் படும் ஆஸ்ப்ரேடியம் நீரின் தூய்மையை அறிய உதவும் வேதி உணர்வி (chemoreceptor) ஆகும். இனப் பெருக்கமும் வளர்ச்சியும். இதில் பாலினங்கள் வேறுபட்டவை. ஒற்றை இனவுறுப்பு (gonad) மட்டுமே உள்ளது. அது வலச் சிறுநீரகத்தில் திறப்பதால், அச்சிறுநீரகமே இன உறுப்பு நாளமாகப் பணி புரிகிறது. ஆண், பெண், இனச் செல்கள் கடல் நீரில் விடப் படுவதால், புறக் கருவுறுதல் நடைபெறுகிறது. கரு முட்டையிலிருந்து ட்ரோக்கோபோர் (trochophore) என்னும் வேற்றிளவுயிரி (larva) தோன்றி, வளர்கிறது. இது கூம்பு போன்ற உச்சித் தட்டு (apical plate) மற்றும் அதிலிருந்து நீண்டுள்ள உச்சிக் குறுயிழைக் கொத்து (apical cillary tuft) மூன்று குறுயிழை வளையங்கள் (ciliated circles) ஆகியவற்றைக் கொண்ட தனித்து நீந்தி வாழும் உயிர். சில காலம் நீந்திய பின்னர், இது வெலிஜர் (Veliger) என்னும் மற்றொரு வேற்றிள உயிரியாக மாறி, பின்னர், அது முதிய சிப்பி ஆகும் போது, பாறைகளில் ஒட்டிக் கொள்ளும். —பா. சீதாராமன்