ஐரோப்பாவில் மேற்குச் சுவிட்சர்லாந்திலுள்ள வாடு (Vaud) என்னும் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். செனீவா ஏரியின் வடகரையை எதிர்நோக்கி மூன்று குன்றுகளின் மலைச்சரிவில் இலூசான் (Lausanne) அமைந்துள்ளது. இம்மலைக் குன்றுகளின் உச்சியில் திருச்சபைகள் பல கட்டப்பட்டுள்ளன. இவை கி.பி. 12, 13, 14–ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. இந்நகரம் சிறந்த வணிக மையம். இந்நகருக்குச் சாலை இணைப்புகளும், இருப்புப் பாதைத் தொடர்புகளும் உண்டு. இங்குள்ள ஏரிக்கரைக் குடில்கள் கோடையிலும் குளிரிலும் வாழ வசதி மிக்கவை. எனவே, எப்போதும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். வணிகம், வங்கி, ஆயுள் காப்பீட்டுப்பணி, உணவகம் போன்றவை இங்குப் பெருகியுள்ளன. கடிகாரத்தின் உறுப்புகள் செய்தல், உணவுப் பொருள்கள் விளைவித்தல் ஆகியவை மூலமும் இந்நகருக்கு நிறைய வருவாய் கிடைக்கிறது. இதனை உரோமானியர் லௌசானா (Loussanna) என கி.பி. 3–ஆம் நூற்றாண்டில் குறிப்பிட்டனர். அவெஞ்சசு சமய குரு கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் தம் தலைநகரை இவ்வூருக்கு மாற்றினார். அதனால், கி.பி. 1434–ஆம் ஆண்டு வரை இது சமய குருமார்களின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட நகரமாயிற்று. இக்காலத்தில் பேரரசின் தலைநகர் போன்ற நிலை இந்நகருக்குக் கிட்டியது. இது கி.பி. 1536 முதல் 1795 வரை பெர்ன் மாவட்டத்தின் பகுதியாகி, மறுப்புரையாளர் (Protestant) சமயச் சீர்திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாயிற்று. வாடு (காண்டன்) மாவட்டத்தின் தலைநகராய் கி.பி. 1803–இலிருந்து நீடிக்கும் இலுாசான், சுவிட்சர்லாந்தின் தலைமை நீதிமன்றத்தின் தலைமையிடமாகவும் திகழ்கிறது. இதுவே பன்னாட்டு ஒலிம்பிக்குக் குழுவின் தலைமைப் பீடமாகவும் இருந்து வருகிறது. இவ்வூரில் தங்கியிருந்துதான் கிப்பன் (Gibbon) என்னும் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுப் பேரறிஞர் தம்முடைய ‘உரோமானியப் பேரரசின் நலிவும் வீழ்ச்சியும்’ (Decline and fall of the Roman Empire) என்னும் நூலின் பெரும்பகுதியை எழுதி முடித்தார். இத்தாலி நாட்டிற்கும் துருக்கி நாட்டிற்குமிடையே 1912–இல் கையெழுத்தான அவுச்சி உடன்படிக்கையும் (Treaty of Ouchy, 1912) துருக்கி நாட்டிற்கும் அதன் நேசநாடுகளுக்குமிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் இங்கேதான் கையெழுத்திடப் பெற்றன. ஆடைகள் நெய்தல், வானொலிப் பெட்டிகள் செய்தல், இரசாயனப் பொருள்கள், உணவும் புகையிலையும் பதப்படுத்தும் தொழில்கள், திராட்சைச் சாராய வாணிகம் போன்றவை இங்கே நடைபெறும் சிறப்பான தொழில்கள். இலூசானின் மக்கள் தொகை 1,50,000 (1980). இவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள்.