இலிவர்ப்பூல்
ilivarppūl
இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் பெருந் துறைமுகப் பட்டினம்.
இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் பெருந் துறைமுகப் பட்டினம். இலண்டனின் முதற் பெருந்துறைமுகம். இலிவர்ப்பூல் நகரைக் ‘கப்பல்களின் மாநகர்’ (City of Ships) என்று குறிப்பிடுகின்றனர்.
இலிவர்பூல் (Liverpool) நகரம் இலங்காசயரில் இருக்கும் மெர்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது: ஐரிசுக் கடலிலிருந்து 5 கி.மீ. உள்நாட்டில் உள்ளது. இலங்காசயர்ப் பகுதியில் உற்பத்தியாகும் பருத்தியாடைகள், இயந்திரங்கள் போன்றவை இலிவர்ப்பூல் துறைமுகத்தின் வழியாகத்தான் வெளிநாடுகளுக்கு உணவுப் பொருள்களுக்கு ஈடாக அனுப்பப்படுகின்றன. இறைச்சி, புகையிலை, இலங்காசயருக்குத் தேவையான கச்சாப்பொருள்கள், பருத்தி, உரோமம், தோல்கள், இரப்பர், மரம் போன்றவை இறக்குமதிப் பொருள்களாகும்.
இலிவர்ப்பூல் துறைமுகம்
இலிவர்ப்பூலின் கப்பல் துறை 11 கி.மீ. தொலைவிற்கு ஆற்றின் உள்ளே சென்றுள்ளது. இங்குள்ள கப்பலில் சரக்கு ஏற்றி இறக்குமிடம் (Quay) 64 கி.மீ. நீளமுள்ளது. பயணிகளின் கப்பல்கள் ஆற்றையொட்டியுள்ள துறையில் கரையிறங்க வசதியாக நிற்கும். சுழல் அச்சில் இயங்கும் பாலங்கள் இறங்குதுறையையும் ஆற்றுச் சுவரையும் இணைக்கின்றன. ஆற்றின் மேற்குப் பக்கத்தில் கப்பல் துறைகளும் சரக்கு ஏற்றி இறக்குமிடங்களும் அமைத்துள்ளதால் இப்பகுதி சுறுசுறுப்பாக இயங்கும். இதனைப் பர்க்கென்கெடு துறைமுகம் (Birkenhead) என்பர். இது செசயரில் (Cheshire) உள்ளது.
இலிவர்ப்பூல் துறைமுகம் மெச்சி ஆற்றின் மணலால் அடிக்கடி மூடிவிடக்கூடிய நிலையில் உள்ளது. எனவே, தொடர்ந்து மணல்வாரும் இயந்திரங்களை முடுக்கித் துறைமுகத்தைத் தூர் எடுக்கிறார்கள்.
ஆற்றின் கரையிலிருந்து படிப்படியாக நிலம் உயர்ந்து செல்கிறது. நகரின் வாணிகப் பகுதியில் அழகான கட்டடங்களும், வாணிகக் கழகங்களும் இயங்குகின்றன. மக்கள் வாழும் பகுதிகளில் நன்கு கண்காணிக்கப்படும் பழைய வீடுகளைக் காணலாம். இலிவர்ப்பூல் பல்கலைக்கழகம் 1903–ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இங்குள்ள வெப்பமண்டல மருந்துகள் சிறப்புமிக்கன. வாக்கர் கலையரங்கில் (Walker Art Gallery) பல புகழ்பெற்ற படங்களைக் காணலாம். இங்கு கி.பி. 1854–இல் கட்டப்பெற்ற புனித சார்சு மன்றம் மிக்க அழகான கட்டடமாகக் கருதப்படுகிறது. இக்கட்டடம் ஏதென்சு நகரில் இருக்கும் பார்த்தினான் கலைப்பாணியைப் பின்பற்றிக் கட்டப் பெற்றதாகும்.
இந்நகரில் இருபெரும் மாதாகோவில்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றான இலிவர்ப்பூல் திருச்சபைக் கோயிலைக்கட்ட 1904–ஆம் ஆண்டில் எலிசபெத்து இளவரசி அடிக்கல் நாட்டினார். அவரே பின்னர் 1949–இல் இரண்டாம் எலிசபெத்து அரசியானார். அக்கட்டடம் புதிய கோதிக்குக் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்திலேயே மிகப் பெரிய ஆங்கிலத் திருச்சபை அதுதான்.
பிரிட்டன் நாட்டின் மிகப்பெரும் இரசாயனத் தொழிற்கூடங்கள் இலிவர்ப்பூலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குவிந்துள்ளன. மெர்சி ஆற்றின் இருமருங்கிலும் இங்கிலாந்தின் பெரும் மாவு ஆலைகள் அமைந்துள்ளன. கப்பல் கட்டும் தொழில், கப்பல் செப்பனிடும் தொழில், கப்பல் பொறியியல் பணிகள், எண்ணெய் எடுத்தல், எண்ணெய் ஆலைகள், புகையிலை, சர்க்கரை தூய்மை செய்தல், தோல் பதனிடும் தொழில், இரப்பர், உணவுப் பதப்படுத்தும் தொழில், ஆடைநெய்தல் போன்றவை இங்கு நடைபெறும் ஏனைய தொழில்களாகும். பர்க்கன்கெடு என்னும் பகுதியில் இலேயர்டு கப்பற் கட்டும் தொழிற்சாலையுள்ளது. அங்குச் சிறப்பான போர்க்கப்பல்கள் பல கட்டப்பட்டன. பின்னர்ப் பர்க்கன்கெடிற்கும் இலிவர்ப்பூலுக்கும் இடையில் குவின்சுவே சாலைச் சுரங்கம் கட்டி இரு பகுதிகளையும் இணைத்துள்ளார்கள்.
இந்நகர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில்தான் வாணிக மையமாகத் தொடங்கியது. கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் இலங்காசயரில் விசைத்தறிகள் தொடங்கப் பெற்றதால் அது உலகப் புகழ்பெற்ற பருத்திநூல் நூற்கும் மையமாகத் திகழலாயிற்று. இலிவர்பூல் இலங்காசயரின் சிறப்பான துறைமுகமாயிற்று. இரண்டாம் உலகப் போரின்போது இம்மாநகரம் செருமானியர்களின் குண்டுகளுக்கு இரையாகிப் படுநாசமுற்றது. இலிவர்ப்பூலின் மக்கள் தொகை 5,10,306 (1981).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 422)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rby7ymtc/
தமிழ்“இலிவர்ப்பூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rby7ymtc/APA
Oliyon Research. (2026). இலிவர்ப்பூல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rby7ymtc/MLA
"இலிவர்ப்பூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rby7ymtc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment