விசயநகரப் பேரரசின் சார்பாகச் சோழநாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்த திருமலைராயன் என்பானின் அவைக்களத் தலைமைப் புலவராய் வீற்றிருந்தவர். அவ்வவையில் இருந்த 64 தண்டிகைப் புலவர்களுக்கு இவர் தலைவர். ஒருகால் காளமேகப்புலவர் அரசவைக்கு வந்த போது, அவரை இப்புலவரும் அரசனும் உரிய மரியாதையுடன் வரவேற்காமலும் அவையில் இடங்கொடாமலும் இகழ்ந்தனர். அப்போது காளமேகப்புலவர், கலைமகளைக் குறித்து “வெள்ளைக் கலையுடுத்து” என்று தொடங்கும் வெண்பாவினைப் பாடிப் பரவ, அரசனது அரியணை விரிந்து அவருக்கு இடங்கொடுத்தது. அதனைக் கண்டு பொறாத அதிமதுரகவி, அவரையழிக்கும் தீய எண்ணத்துடன் அவரை எமகண்டம் பாடுமாறு அறை கூவினார். காளமேகம் அதற்கிணங்கி எமகண்டம் பாடி வெற்றி பெற்றார். பின்னர் இருவரும் நட்புப் பூண்டு வாழ்ந்தனர். இவர் மிக இனிமையான கவிகளை இயற்றியதால் ‘அதிமதுரகவி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் கோவலூரைச் சார்ந்தவர்.ஆர்.கி.